இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார் - விஜய் உள்பட தலைவர்கள், திரையுலகினர் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தவர் பாக்யராஜ். தமிழ் திரை உலகில் நடிகர்கள் இயக்குநராகவும், இயக்குநர்கள் நடிகர்களாவும் அவதாரம் எடுத்தாலும் இரு கலைகளும் ஒருசேர செய்து இரண்டிலும் சாதித்த வெகு சிலரில் பாக்யராஜும் ஒருவர்.

சமீபத்தில் மறைந்த முதுபெரும் பாரதிராஜாவின் சீடராக இருந்தவர் பாக்யராஜ். பாரதி ராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஶ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். இயக்குநர் என்பதையும் கடந்து நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ்.

பாரதிராஜா இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள்' படத்துக்கு வசனமும், 'ஒரு கைதியின் டைரி' படத்துக்கு கதை, வசனமும் எழுதியவர் பாக்யராஜ் தான்.

பாரதிராஜாவிடம் பணியாற்றியது குறித்து பிபிசி தமிழிடம் முன்பு பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ''எங்க டைரக்டர் எப்பவுமே சீரியஸ் டைப். எல்லா விஷயத்தையும் அழுத்தமாக சீரியஸ் ஆக சொல்வார். நான் எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் அதை எளிமையாகவும், காமெடி, சென்டிமென்ட் கலந்தும் கொடுக்கணும்னு நினைப்பேன்'' என்று கூறியிருந்தார்.

உதவி இயக்குநர் டூ நடிகர்

பாக்யராஜை நடிகராக அறிமுகம் செய்ததும் பாரதிராஜாதான். தன்னுடைய பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்கள் கொடுத்து பாக்யராஜை நடிகராக்கிய பாரதிராஜா, தன்னுடைய ''புதிய வார்ப்புகள்'' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

அப்படத்தில் பாக்யராஜை நடிக்க வைத்தது பற்றி கூறிய அவர், ''பாக்யராஜை நான் ஹீரோவாக்கும் போது, பெரும்புள்ளிகள் பல பேர், 'ஏன் இந்த விஷப்பரிட்சை' என்று கேட்டார்கள். 'இல்லை. என் கற்பனையில் தோன்றுகிற வாத்தியார் இப்படித்தான் இருக்கவேண்டும். நடிப்பதற்கு எவ்வளவோ பேர் வந்து போகிறார்கள். இவன் தான் சொல்லிக்கொடுக்கிறான். என் வாத்தியார் மாதிரியே இருக்கிறான். ஒரு கண்ணாடி மட்டும் போட்டுவிட்டால், என் வாத்தியார்தான்' என்று நினைத்தேன்.'' என்று கூறியிருந்தார் பாரதிராஜா.

முதலமைச்சர் விஜய் இரங்கல்

பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்." எனத் தெரிவித்துள்ளார்.

அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜின் இல்லத்திற்கு வருகை தந்த அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவரின் மறைவு செய்தி கேட்டு நிலை குலைந்து போய் உள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தொலைபேசியில் என்னுடன் பேசினார். ஒட்டுமொத்த கலை உலகிற்கும் இது மாபெரும் இழப்பு. குருநாதரை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள்ளாக அவருடைய சீடனையும் இழந்துள்ளோம். இந்த துக்கத்தில் அவர் குடும்பத்தினருடன் நாங்கள் பங்கெடுக்கிறோம்." என்றார்.

பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் கூறியது என்ன?

பாக்யராஜின் இல்லத்திற்கு வருகை தந்த நடிகை சுஹாசினி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாக்யராஜ் சமீபத்தில் எங்களுடன் நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் திரும்பி வந்திருந்தார். இன்று காலை நடைபயிற்சி சென்றுவிட்டு நெஞ்சு வலி எனக் கூறியதால் மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அவருடைய உயிர் பிரிந்தது. சிரித்துக் கொண்டே இருந்தவர் சிரித்துக்கொண்டே மறைந்திருக்கிறார்." என்றார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கண்ணீர்மல்க செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னுடைய வாழ்க்கையின் மிகவும் துக்கமான நாள். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு தேவை." என்றார்.

தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்

பாக்யராஜ் மறைவுக்கு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மூத்த தமிழ் திரை இயக்குநர் மற்றும் எழுத்தாளர் கே.பாக்யராஜின் மறைவு திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரின் தனித்துவமான கதைசொல்லும் பாணி, படைப்பாற்றல் மேன்மை தனது தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு மக்களின் மனதில் அவருக்கு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொடுத்தது." எனத் தெரிவித்துள்ளார்.

ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், "இந்திய சினிமாவில் முடிசூடா திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.

தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு." என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது எக்ஸ் பதிவில், "மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்."

பாக்யராஜின் மறைவுக்கு கே.அண்ணாமலை இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். "சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது," என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்த்துள்ளார்.

மேலும் அவர், "தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்." என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் திரையுலகின் "திரைக்கதை மன்னன்" என்று போற்றப்பட்ட இயக்குநர் திரு. பாக்யராஜ் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்." என்றும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் சாதித்த பாக்யராஜ்

1980- களின் திரைக்கதை மன்னன் என்று திரையுலகினரால் போற்றப்படும் கே.பாக்யராஜ் 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழாம் தேதி கோவையில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி நாயுடு. தாயார் அமராவதி அம்மாள்.

1978-ஆம் ஆண்டு பதினாறு வயதினிலே படத்தை இயக்குநர் பாரதிராஜா இயக்கிய போது, அதில் உதவியாளராக சேர்ந்த பாக்யராஜ். பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் நடித்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்தவர், அப்படத்திற்கு வசனமும் எழுதினார். தனது நான்காவது படமான 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.

கதாநாயகனாக வெற்றி பெற்ற பின்னர் சுதாகர், சுமதி நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் அதில் ஒரு குணச்சித்திரப் பாத்திரத்திலும் நடித்திருந்தார். பாக்யராஜை இயக்குநராக அறிமுகப் படுத்தியவர் பிரபல தயாரிப்பாளரான கே ஆர் ஜி அவர்களின் சகோதரர் கோபிநாத்.

ராஜேஷ் அறிமுகமான 'கன்னிப்பருவத்திலே' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி அப்படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்த இவர், ஒரு கை ஓசை' என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இவரே இயக்கிய இந்தத் திரைப்படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்

அடுத்து இவர் இயக்கிய 'மௌன கீதங்கள்' 'இன்று போய் நாளை வா', படங்கள், மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு பேச்சு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு என இவரது படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது குருநாதர் பாரதிராஜாவுடன் இணைந்து இவர் பணியாற்றிய படம் 'ஒரு கைதியின் டைரி' கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது

ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பை பாக்யராஜ் ஏற்றார். ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் வெளியான அந்தப் படம்தான் பாக்யாராஜ் இயக்கிய முதல் இந்திப் படம்.

பாக்யராஜின் எண்ணற்ற வெற்றிப் படங்கள் இந்தி மொழியில் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் இவரது கதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தன் முத்திரையைப் பதித்த இவர் கடந்த இருபது ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் என்கிற சிறந்த புத்தகத்தை எழுதிய இவரது கைவண்ணத்தில் 'நீங்க நெனச்சா சாதிக்கலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி - பதில் என பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன

புதிய வார்ப்புகள் படத்தின் சிறந்த வசனத்திற்காகவும், தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் சிறந்த திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருது பெற்ற இவர், 'ஒரு கை ஓசை' படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதினைப் பெற்றார்.

பிலிம்பேர் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப் பலமுறை பெற்றுள்ள கலைஞர் இவர்.

தமிழ்த் திரையின் கதாநாயகர்கள் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் அடுத்த வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் தனது இயல்பான நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர் இவர்

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்று போன திரைப் படமான 'அண்ணா நீ என் தெய்வம்' திரைப்படத்தில் எம்.ஜி. ஆர். நடித்திருந்த காட்சிகளை வைத்துக் கொண்டு அதற்கு புதிய திரைக்கதை எழுதி "அவசர போலீஸ் - 100" என்ற பெயரில் அந்த படத்தை வெளியிட்டது பாக்யராஜின் தனித் திறமை.

இவர் உதவி இயக்குநராக இருந்த போது இவருக்கு உதவியவர் பிரவீணா என்ற நடிகை. அப்போது முதலே இவர்கள் இருவருக்குமிடையே காதல் இருந்தது. கதாசிரியராக அறிமுகமாகி இயக்குநராக உயர்ந்து வெற்றிகரமான கதாநாயகன் என்ற இடத்தைப் பிடித்த பிறகு, 1981-ஆம் ஆண்டில் பிரவீணாவை மணந்தார்.

"இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மிணி" போன்ற பலபடங்களில் இவருடன் நடித்த பிரவீணா, மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983ஆம் ஆண்டில் மறைந்தார்.

முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவரும் டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.

தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் தன் இயக்கத்திலேயே கதாநாயகியாக இவர் அறிமுகம் செய்தார். சரண்யா பாரிஜாதம் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை.

சாந்தனு "சக்கரக்கட்டி" படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஒரு கால கட்டத்தில் குணச்சித்திர வேடங்களுக்கு மாறிய இவர், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன், வாகை சூட வா என எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

உதவி இயக்குநராக வாழ்க்கையைத் துவங்கி தமிழ்த் திரையின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு அற்புதமான கலைஞர் பாக்யராஜ். இவர் கடைசியாக ஒரு விளம்பரப் படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு