இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் - ஹோர்மூஸ் நீரிணையில் என்ன நடக்கிறது?

    • எழுதியவர், பெர்னர்ட் டெபுஸ்மேன் ஜூனியர்
    • பதவி, வெள்ளை மாளிகை செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்றின் மீதான தாக்குதலுக்குப் பிறகு இரான் அமைதி ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரானில் உள்ள இலக்குகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது.

கடந்த வியாழன் சரக்கு கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்குப் பதிலடியாக இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் சேமிப்பு நிலைகள் மற்றும் கடற்கரை ரேடார் நிலைகளை வெள்ளிக்கிழமை தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்தது. இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் குற்றம் சாட்டியிருந்தது.

இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு சற்று முன்பு, இரானை அமெரிக்கா திருப்பித் தாக்குமா என்கிற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப் "நீங்கள் பார்ப்பீர்கள்" என்று மட்டும் தெரிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கை டிரோன் தாக்குதலுக்கான "வலுவான பதிலடி" என்று சென்ட்காம் கூறியிருந்தது.

"வணிக கப்பல்களுக்கு எதிரான இரானிய படைகளின் தேவையற்ற தாக்குதல் அமைதி ஒப்பந்தத்தை தெளிவாக மீறுகிறது," என சென்ட்காமின் அறிக்கை கூறுகிறது.

"முக்கியமான சர்வதேச வர்த்தக வழித்தடத்தில் வணிகம் அதிகரித்து வரும் சூழலில் இரானின் ஆபத்தான அணுகுமுறை கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்துகிறது," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வரும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவை அமெரிக்க ராணுவம் வழங்கும் என்றும் சென்ட்காம் கூறியுள்ளது.

இந்தச் சூழலில் அமெரிக்க தாக்குதல்கள் தனிப்பட ஒன்றா அல்லது பெரிய, தொடர் பதிலடியின் ஓர் அங்கமா என்பதில் தெளிவில்லை.

இது தொடர்பாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒப்பந்தங்களை முறிக்கும் அமெரிக்க அரசு எப்போதும் போலவே, ஹோர்மூஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் ஒரு கப்பல் சென்ற விவகாரத்தை வைத்துக் கொண்டு தனது உத்தரவாதங்களை மீறி இரான் இஸ்லாமியக் குடியரசின் கரையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது," எனத் தெரிவித்துள்ளது.

மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால் எங்களின் பதிலடி இதைவிடவும் தீவிரமாக இருக்கும் கூறியுள்ளது.

"ஜியோனிச ஆட்சி" என இஸ்ரேலைக் குறிப்பிட்டு, லெபனானில் போர் நிறுத்தத்தை மீறியதாகவும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமைதித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் லெபனானும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா இடையே சண்டை நடந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கிய பிறகு ஹோர்மூஸ் நீரிணை இரானால் மூடப்பட்டது.

எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கான இந்த முக்கியமான கடல் வழித்தடம் மூடப்பட்டதைத் தொடர்ந்து உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்தது. உரங்கள் உள்ளிட்ட இதர முக்கியப் பொருட்களின் போக்குவரத்தும் தடைபட்டது.

ஜூன் 17-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட 14 அம்ச ஒப்பந்தத்தின்படி மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் இரான் ஒப்புக்கொண்டன. வணிக கப்பல்கள் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் 60 நாட்களுக்குப் பாதுகாப்பாகச் செல்வதற்கு தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அந்த ஒப்பந்தம் இரானைக் கேட்டுக் கொண்டிருந்தது.

அமெரிக்காவின் பதில் தாக்குதல்களைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "ஒப்பந்தம் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதில் இரானுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது என்றால் அவர்கள் செல்போனை எடுக்கலாம். ஆனால் வன்முறை என்பது வன்முறையால் மட்டுமே எதிர்கொள்ளப்படும்." எனத் தெரிவித்திருந்தார்.

இரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான இப்ராஹிம் அஸிஸி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா மீண்டுமொரு முறை பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே இரானைத் தாக்கியுள்ளது." என்றார்.

மேலும் அந்தப் பதிவில், "இத்தகைய கட்டுப்பாடற்ற போர் நிறுத்த மீறல் என்பது எப்போதும் போலவே அவர்கள் வருத்தப்படுவதற்கே வழிவகுக்கும். பழி சொல்லும் விளையாட்டு இனியும் எடுபடாது." என்று குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்பிடம் டிரோன் தாக்குதல் மற்றும் போர்நிறுத்தம் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதற்குப் பதிலளித்த டிரம்ப், "நீங்கள் பார்ப்பீர்கள். அவர்கள் தாக்குதல் நடத்தியது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அதைச் செய்யக்கூடாது." என்றார்.

சமீப நாட்களாக, இரான் உடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருப்பதாக டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வரும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கும் பரிந்துரையை இரான் கைவிட்டதாகவும் கூறி வருகின்றனர்.

டிரம்ப் முன்னதாக வெளியிட்ட ட்ரூத் சோசியல் பதிவில், "சுங்கக் கட்டணம், காப்பீட்டு கட்டணம் அல்லது வேறு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது என அமெரிக்காவிடம் இரான் கூறியதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இது தவறான தகவல் என்றால் பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இரான் கட்டணம் விதிப்பதாக வரும் செய்திகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய கட்டணம் வசூலிக்கும் முறை சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது எனப் பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

கப்பல் போக்குவரத்தின் எதிர்கால மேலாண்மை தொடர்பாக இரான் மற்றும் ஓமன் அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். கட்டணம் இல்லாத பாதுகாப்பான பயணத்திற்கு இருநாடுகளும் உறுதி கொண்டிருப்பதாக ஓமன் வெளியுறவு அமைச்சர் பதர் அல்-புசாய்தி தெரிவித்திருந்தார்.

ஆனால் இரான் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான முகமது பாகர் காலிபாஃப் அந்நாட்டின் அரசு ஊடகங்களிடம் பேசுகையில், "ஹோர்மூஸ் நீரிணையின் நிர்வாகம் என்பது போருக்கு முன்பு இருந்த நிலைக்குச் செல்லாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." என்று கூறியிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூர் கொடி ஏந்திய எவர் லவ்லி என்கிற கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.

பிரிட்டிஷ் கடற்சார் பாதுகாப்பு முகமையின்படி, ஓமனின் தாஹித் துறைமுகத்திற்கு தென் கிழக்குப் பகுதியில் 7.5 கடல் மைல்கள் தொலைவில் இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.

ஹோர்மூஸ் நீரிணையில் எவர் லவ்லி கப்பல் தாக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் கடற்சார் பாதுகாப்பு முகமை பரிந்துரைத்த வழித்தடத்தில் தான் அந்தக் கப்பல் பயணித்து வந்ததாக அதன் உரிமையாளர் எவர்கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"அனைத்து குழு உறுப்பினர்கள், கப்பல் மற்றும் அதில் உள்ள சரக்குகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் போர் தொடங்கியதில் இருந்து ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மாலுமிகளை மீட்கும் திட்டத்தை ஐநாவின் சர்வதேச கடற்சார் அமைப்பு (ஐஎம்ஒ) நிறுத்திவைத்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு