'இடதுசாரி அரசியல், கென்னடி தொடர்பு': மர்லின் மன்றோ மரணித்தது எப்படி? 64 ஆண்டு மர்மத்தில் அவிழும் முடிச்சுகள்

மர்லின் மன்றோ மரணம்: 64 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் – அன்று இரவு நடந்தது என்ன?

பட மூலாதாரம், M. Garrett/Murray Garrett/Getty Images

    • எழுதியவர், பியாட்ரீஸ் டியெஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

"உண்மையான விஷயங்கள் அரிதாகவே மக்கள் மத்தியில் பரவுகின்றன. பெரும்பாலும் பொய்களே பரவுகின்றன. நீங்கள் உண்மையில் இருந்து தொடங்கவில்லை என்றால், எங்கிருந்து தொடங்குவது என்பதை அறிவதே கடினம்."

இந்த வார்த்தைகளை, ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரமான மர்லின் மன்றோ, 1962ஆம் ஆண்டு 'லைஃப்' இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் இறப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு கூறினார்.

மர்லின் மன்றோ 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1926 ஜூன் 1ஆம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் நார்மா ஜீன் மாடென்சன். உலகின் மிகவும் பிரபலமான, பெரிதும் போற்றப்பட்ட திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக அவர் திகழ்ந்த போதிலும், அவரது வாழ்க்கை பல முரண்பாடுகளாலும் தனிப்பட்ட போராட்டங்களாலும் நிறைந்திருந்தது.

மன்றோவை லட்சக்கணக்கான மக்கள் நேசித்தனர். அவரைப் பெரிதும் போற்றினர். இருப்பினும், அவரது கவர்ச்சிகரமான பொதுத் தோற்றத்திற்குப் பின்னால், அவர் கடுமையான உணர்வுபூர்வமான, உளவியல் ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார். இந்தப் பிரச்னைகள் பலவும், தனது குழந்தைப் பருவத்தில் தான் கடந்து வந்த கடினமான அனுபவங்களுடன் தொடர்புடையவை என்று அவர் உறுதியாக நம்பினார். உலகளாவிய புகழின் காரணமாகத் தன் மீது விழுந்த அழுத்தங்களும், தனது போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியதாக அவர் உணர்ந்தார்.

மன்றோ, 1962 ஆகஸ்ட் மாதம், தனது 36வது வயதில் காலமானார். அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக "தற்கொலையாக இருக்கலாம்" (probable suicide) என்று வகைப்படுத்தப்பட்டது. இருப்பினும், அவரது மரணத்தைச் சூழ்ந்திருந்த மர்மமான சூழல்கள் பல வதந்திகளுக்கும் சதித் திட்டக் கோட்பாடுகளுக்கும் வழிவகுத்தன. இவை இன்றும்கூட தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அவரது வாழ்க்கை வரலாறு, ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் பொதுவாகக் காணக்கூடிய பல அம்சங்களைக் கொண்டுள்ளது. புகழ், பாலியல் விவகாரங்கள், அரசியல், ரகசிய உளவாளிகள், மாஃபியா கும்பல் மீதான குற்றச்சாட்டுகள் ஆகியவை அதில் அடங்கும். அத்துடன், அப்போதைய அமெரிக்க அதிபருடனும் அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் கூற்றுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

அவரது வாழ்க்கை மற்றும் மரணத்தில் இருந்த இத்தகைய நாடகத்தன்மை வாய்ந்த, மர்மமான அம்சங்களின் காரணமாகவே, நவீன வெகுஜன பண்பாட்டு உலகில், அதிகம் பேசப்படும், மிகவும் ஈர்க்கக்கூடிய ஆளுமைகளில் ஒருவராக மர்லின் மன்றோ இன்றும் நிலைத்திருக்கிறார்.

மன்றோ மரணம் குறித்த புலனாய்வு

கடந்த 1982இல், மர்லின் மன்றோவின் வழக்கை மறு ஆய்வு செய்யவும், அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை மீண்டும் ஆராயவும் லாஸ் ஏஞ்சலிஸ் அரசு வழக்கறிஞர் முடிவு செய்தார்.

அந்தக் காலத்தில், பிரிட்டிஷ் பத்திரிகையாளர் அந்தோனி சம்மர்ஸ், இந்த வழக்கை விசாரிக்கவும், அந்த மர்மத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணரவும் கலிஃபோர்னியாவுக்கு பயணம் செய்தார்.

அதுகுறித்து பிபிசி நியூஸ் முண்டோவிடம் பேசிய சம்மர்ஸ், "நான் நினைத்ததைவிட இந்தக் கதை மிகவும் பரந்துபட்டதாகவும் சிக்கலானதாகவும் இருப்பதை விரைவில் உணர்ந்தேன். அதில் அறிய வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன," என்றார்.

மர்லின் மன்றோ மரணம்: 64 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் – அன்று இரவு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Netflix

படக்குறிப்பு, அந்தோனி சம்மர்ஸ் தனது அறிக்கையை ஓரிரு வாரங்களில் நிறைவு செய்ய உத்தேசித்திருந்தார்; ஆனால், இறுதியில் அவர் கலிஃபோர்னியாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கிவிட்டார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தனது விசாரணையை மேற்கொள்வதற்காக, சம்மர்ஸ் ஒரு காரை வாங்கி, பயணம் செய்வதிலும், மக்களின் கதவுகளைத் தட்டுவதிலும், தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதிலும் தனது நேரத்தைச் செலவிட்டார். சிலர் அவரது கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தனர். மற்றவர்களோ அவருடன் பேசவே மறுத்துவிட்டனர். இந்தச் சிரமங்கள் இருந்தபோதிலும், அவர் தனது விசாரணையைத் தொடர்ந்தார்.

காலப்போக்கில், சம்மர்ஸ் 700க்கும் மேற்பட்டோரை நேர்காணல் செய்தார். அவர்களில் சிலருக்கு மர்லின் மன்றோவின் வாழ்வின் இறுதி நாட்கள் மற்றும் இறுதிக்கட்ட மணிநேரங்களைப் பற்றி மிக விரிவாகத் தெரிந்திருந்தது. அவர் பேசியவர்களில் மன்றோவின் வீட்டுப் பணிப்பெண் யூனிஸ் முர்ரே மற்றும் அவரது கடைசி மனநல மருத்துவரான ரால்ஃப் கிரீன்சனின் குடும்ப உறுப்பினர்களும் அடக்கம்.

இந்த விசாரணையின்போது திரட்டப்பட்ட தகவல்கள், பின்னர் சம்மர்ஸின் 'தேவதை: மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை' (Goddess: The Secret Lives of Marilyn Monroe) என்ற புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2022இல் இந்தப் புத்தகம் 'மர்லின் மன்றோவின் மர்மம்: கேட்கப்படாத ஒலிப்பதிவுகள்' (The Mystery of Marilyn Monroe: The Unheard Tapes) என்ற நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படம் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது.

பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, "அவர் கொலை செய்யப்பட்டார் என்று என்னை நம்ப வைக்கும் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவரது மரணத்தின் சூழ்நிலைகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை நான் கண்டறிந்தேன்," என்று சம்மர்ஸ் கூறினார்.

"அதோடு அவருக்கு கென்னடி சகோதரர்களுடன் இருந்த தொடர்பே இதற்குக் காரணம் என்று ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன" என்றார் அவர்.

மர்லினும் கென்னடி சகோதரர்களும்

மர்லின் மன்றோவின் மரணத்தைச் சுற்றியுள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்று, ஜான் எஃப் கென்னடி மற்றும் "பாபி" கென்னடி என்று பொதுவாக அறியப்படும் ராபர்ட் எஃப் கென்னடி ஆகிய சகோதரர்களுடனான அவரது உறவு.

அந்தக் காலகட்டத்தில், ஜான் கென்னடி அமெரிக்காவின் அதிபராகவும், ராபர்ட் கென்னடி நாட்டின் தலைமை வழக்கறிஞராகவும் இருந்தனர். பிரிட்டிஷ் பத்திரிகையாளர் அந்தோனி சம்மர்ஸ் திரட்டிய தகவல்களின்படி, மன்றோவும் கென்னடி சகோதரர்களும் பீட்டர் லாஃபோர்டுக்கு சொந்தமான மாலிபுவில் உள்ள ஒரு கடற்கரை மாளிகையில் தவறாமல் சந்தித்து வந்தனர். கென்னடி சகோதரர்களின் மைத்துனரான லாஃபோர்ட், மன்றோவின் நண்பராகவும் இருந்தார்.

சம்மர்ஸால் நேர்காணல் செய்யப்பட்ட சில நபர்கள், மன்றோ இரு சகோதரர்களுடனும் காதல் உறவுகளைக் கொண்டிருந்ததாகக் கூறினர். இந்தக் கூற்றுகளின்படி, அவர் முதலில் ஜான் கென்னடியுடனும் பின்னர் ராபர்ட் கென்னடியுடனும் உறவில் இருந்தார். இருப்பினும், கென்னடி குடும்பம் இந்தக் கூற்றுகளை ஒருபோதும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.

மர்லின் மன்றோ மரணம்: 64 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் – அன்று இரவு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Netflix

படக்குறிப்பு, இதுதான், கென்னடி சகோதரர்கள் மர்லின் மன்றோவுடன் இணைந்து தோன்றும் ஒரே புகைப்படம்

தனது விசாரணையின்போது, சம்மர்ஸ் தனியார் துப்பறிவார்கள் மற்றும் முன்னாள் எஃப்.பி.ஐ ஏஜென்டுகளுடனும் பேசினார். அப்போது, மன்றோவும் கென்னடி சகோதரர்களும் பல்வேறு குழுக்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்ததாக அவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் ஈடுபட்டிருந்த புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, மன்றோ, பீட்டர் லாஃபோர்ட் ஆகிய இருவரின் வீடுகளுக்கு உள்ளேயும் ஒட்டுக் கேட்கும் கருவிகளும், மறைவாக ஒலிவாங்கிகளும் வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகள் சட்ட அமலாக்க முகமைகளால் மட்டுமின்றி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறினர். அட்டர்னி ஜெனரல் ராபர்ட் கென்னடிக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தக் கூடிய, சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது அவதூறான தகவல்களைப் பெறுவதே இதன் நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மன்றோவின் இடதுசாரி அரசியல் கருத்துகள் குறித்த கவலைகளின் காரணமாக அவர் விசாரிக்கப்பட்டதாக எஃப்.பி.ஐ பதிவுகள் காட்டுவதாகவும் சம்மர்ஸ் தெரிவித்தார். அந்தப் பதிவுகளின்படி, கென்னடி சகோதரர்கள் உடனான அவரது சந்திப்புகளும் ஒரு பாதுகாப்பு குறித்தான கவலையாகவே கருதப்பட்டன.

இந்தக் கவலைகளே இறுதியில் கென்னடி சகோதரர்களை மன்றோவுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க வழிவகுத்ததாக சம்மர்ஸ் நம்புகிறார்.

மற்றொரு முக்கியமான தகவல், கண்காணிப்பு நிபுணர் ரீட் வில்சனிடம் இருந்து வந்தது. தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் பெறப்பட்ட ஒரு பதிவில், அவர் இறந்த நாளன்று, பீட்டர் லாஃபோர்டிடம் தன்னைத் தனியாக விட்டுவிடும்படி மன்றோ கூறியதாக சம்மர்ஸிடம் வில்சன் தெரிவித்தார்.

வில்சனின் கூற்றுப்படி, மன்றோ, "நான் பயன்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். நான் ஓர் இறைச்சித் துண்டு போல் உணர்கிறேன். நான் பலராலும் கைமாற்றப்பட்டதாக உணர்கிறேன்" என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"அவர் மனம் நொறுங்கிப் போயிருந்தார் என்பதல்ல விஷயம். மாறாக, தான் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் தனக்குப் பொய் சொல்லப்பட்டதாகவும் அவர் உணர்ந்ததே முக்கியக் காரணம்" என்றார் வில்சன்.

வில்சன் விளக்கத்தின்படி, ஒரு தோல்வியுற்ற காதல் உறவின் காரணமாக மன்றோ முதன்மையாக வருத்தமடையவில்லை. அதற்கு மாறாக, தான் நம்பியவர்களே தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும், தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் உணர்ந்தார்.

மர்லின் மன்றோ மரணம்: 64 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் – அன்று இரவு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மர்லின் மன்றோவின் பணிப்பெண்ணான யூனிஸ் முர்ரே (இடதுபுறம்), அந்த நடிகை உயிரிழந்த இரவில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஒரு முக்கிய நபராகத் திகழ்ந்தார்

கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதா?

மர்லின் மன்றோ, கென்னடி சகோதரர்களுக்கு ஒரு பிரச்னையாகவோ அல்லது ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாகவோ மாறிவிட்டார் என்ற நம்பிக்கை பலரும் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று ஊகிக்க வழிவகுத்தது.

இருப்பினும், பிரிட்டிஷ் பத்திரிகையாளர் அந்தோனி சம்மர்ஸ், அந்தக் கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்கிறார்.

"ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று கூற வேண்டுமெனில், அதற்குச் சில ஆதாரங்கள் தேவை. ஆனால் இந்த வழக்கில் அத்தகைய ஆதாரங்கள் ஏதுமில்லை," என்றார் சம்மர்ஸ்.

அதேநேரம், மன்றோ இறந்த இரவில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் விடையளிக்கப்படாத கேள்விகள் இருப்பதாக அவர் நம்புகிறார்.

சம்மர்ஸின் கூற்றுப்படி, "மன்றோ இறந்த இரவில் கிடைத்த ஆதாரங்கள், ஒரு புனைவு அல்லது 'கட்டுக்கதை' உருவாக்கப்பட்டு இருப்பதையும், அன்று உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன."

அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, 1962 ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3:00 மணியளவில், மன்றோ படுத்திருந்த படுக்கையறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை அவரது வீட்டுப் பணிப்பெண் யூனிஸ் முர்ரே கவனித்தார். இதனால் கவலையடைந்த அவர், மன்றோவின் மனநல மருத்துவரான மருத்துவர் ரால்ஃப் கிரீன்சனை தொடர்புகொண்டார்.

கிரீன்சன் அந்த வீட்டிற்கு வந்ததும், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். அப்போது மன்றோ தனது படுக்கையில் படுத்திருப்பதை அவர் கண்டார். அவர் இறந்துவிட்டதைப் போலவே காட்சியளித்தார். உடனடியாக, கிரீன்சன் ஜன்னலை உடைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தார். அதன் பிறகு, அவரும் முர்ரேவும் காவல்துறையைத் தொடர்புகொண்டனர்.

மர்லின் மன்றோ மரணம்: 64 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் – அன்று இரவு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மர்லின் மன்றோவின் வாழ்க்கை, அவரது தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும், நாடகத்தனமான ஏற்ற இறக்கங்களால் நிறைந்திருந்தது

மறுபுறம், சம்மர்ஸ் சேகரித்த தகவல்களில் சில, இந்த அதிகாரபூர்வ காலவரிசையுடன் ஒத்துப் போகவில்லை.

சம்மர்ஸ் நேர்காணல் செய்த நபர்களில் ஒருவரான நதாலி ஜேக்கப்ஸ், மன்றோவின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றியவரின் மனைவி. மன்றோ தொடர்பான ஓர் அவசர நிலை குறித்துத் தனது கணவருக்கு மிக முன்னதாகவே, அதாவது 1962 ஆகஸ்ட் 4ஆம் தேதி, சனிக்கிழமை இரவு சுமார் 10:00 அல்லது 11:00 மணியளவிலேயே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

மற்றொரு முக்கியமான முரண்பாடு, மன்றோவின் இறப்பை ஆய்வு செய்யும் பொறுப்பில் இருந்த மருத்துவ அதிகாரியான தாமஸ் நோகுச்சியின் கண்டுபிடிப்புகள் மூலமாகத் தெரிய வந்தது.

நோகுச்சியின் கூற்றுப்படி, மன்றோ பெரும்பாலும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு சுமார் 11:00 மணியளவிலோ அல்லது நள்ளிரவு நேரத்திலோ இறந்திருக்க வாய்ப்புள்ளது. அந்தக் கணிப்பு உண்மையாக இருக்குமேயானால், அவர் ஆகஸ்ட் 5, ஞாயிற்றுக் கிழமை அதிகாலைப் பொழுதில் இறக்காமல், அதற்கு முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் 4, சனிக்கிழமை இரவின் பிற்பகுதியில், இறந்திருக்கக் கூடும்.

இதுவொரு முக்கியமான கேள்வியை எழுப்பியது: மன்றோ எப்போது இறந்தார் என்பது குறித்து வெவ்வேறு நபர்கள் மாறுபட்ட தகவல்களை அளிப்பது ஏன்?

"மர்மத்தின் எந்தெந்தத் துண்டுகளை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது, அவை பொருந்துகின்றனவா என்பதைப் பார்க்க எனக்கு நீண்ட காலம் பிடித்தது," என்று சம்மர்ஸ் கூறினார்.

தனது விசாரணையின்போது, மன்றோவின் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ் பற்றிய தகவலையும் சம்மர்ஸ் பெற்றார். இந்தத் தகவல், நிகழ்வுகளின் "மிகவும் யதார்த்தமான காலவரிசை" என்று அவர் குறிப்பிடுவதை உருவாக்க அவருக்கு உதவியதாக நம்புகிறார்.

அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்த பிறகும், மன்றோ கொலை செய்யப்பட்டார் என்பதைத் தான் நம்பவில்லை என்று சம்மர்ஸ் கூறுகிறார்.

"நடந்ததைப் பற்றிய விவரணைகளில் ஏமாற்றம் இருந்தது. பிரேத பரிசோதனையில் எந்தவித உடல் காயங்களோ, ஊசி போடப்பட்டதற்கான அறிகுறிகளோ இல்லை" என்று சம்மர்ஸ் விளக்கினார்.

சம்மர்ஸின் கூற்றுப்படி, தூக்க மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் இரண்டு சாத்தியமான விளக்கங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒன்று, மன்றோ தற்செயலாக அதிக மாத்திரைகளை உட்கொண்டு, அளவுக்கு அதிகமான மருந்தால் உயிரிழந்திருக்கலாம். மற்றொரு சாத்தியமான விளக்கம், அவர் வேண்டுமென்றே தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கக் கூடும்.

மன்றோ இதற்கு முன்பு தற்கொலைக்கு முயன்றிருந்தார் என்றும், இதுவே சில புலனாய்வாளர்கள் தற்கொலையை ஒரு சாத்தியமாகக் கருதியதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தற்செயலாக அளவுக்கு அதிகமான மருந்தை உட்கொண்டிருப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சம்மர்ஸ் தனிப்பட்ட முறையில் நம்புகிறார்.

"இதுவொரு பயங்கரமான விபத்தாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று நான் கருதுகிறேன். அவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருந்தால், யாரிடமாவது சொல்லியிருப்பார் அல்லது ஒரு குறிப்பை விட்டுச் சென்றிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அவர் அப்படிச் செய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை."

மர்லின்மன்றோ மரணம்: 64 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் – அன்று இரவு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மர்லின் மன்றோ இன்னும் உயிரோடு இருந்திருந்தால், ஜூன் 1ஆம் தேதி தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார்

64 ஆண்டு மர்மத்தில் அவிழும் முடிச்சுகள்

தனது புத்தகத்தின் பிற்காலப் பதிப்புகளில், அந்தோனி சம்மர்ஸ் முன்பு சேர்க்காத புதிய தகவல்களைச் சேர்த்தார். அதில் ஒரு முக்கியமான இணைப்பு, மர்லின் மன்றோவின் சிகையலங்கார நிபுணரும் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவருமான சிட்னி கிலாரோஃபின் சாட்சியம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிலாரோஃப் தனது சுயசரிதையில், மன்றோ இறந்த இரவில் சுமார் 9:30 மணிக்குத் தன்னை அழைத்ததாக எழுதினார். அவரது கூற்றுப்படி, அந்தத் தொலைபேசி அழைப்பின்போது மன்றோ தூக்கக் கலக்கமாகவும் மன உளைச்சலுடனும் காணப்பட்டார்.

தன்னைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து இருப்பதாகவும், சக்தி வாய்ந்த மனிதர்களால் தான் காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் மன்றோ தன்னிடம் கூறியதாக கிலாரோஃப் குறிப்பிட்டார். அன்றைய தினத்தில் முன்னதாக ராபர்ட் கென்னடி தன்னைச் சந்தித்ததாகவும், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் அவர் கூறினார்.

மன்றோவின் வீட்டுப் பணியாளரான யூனிஸ் முர்ரேவும், அன்றைய பிற்பகலில் ராபர்ட் கென்னடி, மன்றோவின் வீட்டிற்கு வந்ததாக சம்மர்ஸிடம் கூறினார். அவரது கூற்றுப்படி, இருவருக்கும் இடையே சூடான விவாதம் நடந்தது.

தான் திரட்டிய தகவல்களின் அடிப்படையில், ராபர்ட் கென்னடி அதன் பிறகு விரைவில் லாஸ் ஏஞ்சலிஸை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று சம்மர்ஸ் நம்புகிறார். மர்லின் மன்றோவின் மரணச் செய்தி பொது மக்களுக்குத் தெரிய வருவதற்கு முன்பே, கென்னடி நகரத்தை விட்டு வெளியேறிவிட்டாரா என்பதை உறுதி செய்வதற்காகவே, அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.

இருப்பினும், சம்மர்ஸ் இதை ஒரு குற்றத்திற்கான ஆதாரமாக முன்வைக்கவில்லை. மாறாக, இந்த வழக்கைச் சுற்றியிருக்கும் பதிலளிக்கப்படாத கேள்விகளின் ஒரு பகுதியாகவும், சிலர் அரசியல் சர்ச்சையைத் தவிர்க்க விரும்பி இருக்கலாம் என்ற சாத்தியக்கூறாகவும் அவர் இதைக் காண்கிறார்.

மர்லின் மன்றோ இறந்த நாளன்று, தான் லாஸ் ஏஞ்சலிஸில் இருந்ததை ராபர்ட் கென்னடி ஒருபோதும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இந்த வழக்கின் பல சர்ச்சைக்குரிய மற்றும் விவாதிக்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

மர்லின் மன்றோ மரணம்: 64 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் – அன்று இரவு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சினிமா வரலாற்றிலேயே அதிகமாகப் புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்களில் ஒருவராக மர்லின் மன்றோ பெரும்பாலும் விவரிக்கப்படுகிறார்

நீடித்து வரும் ஆர்வம்

மர்லின் மன்றோவின் வாழ்க்கை, அசாதாரணமான வெற்றியும் ஆழ்ந்த தனிப்பட்ட துன்பமும் நிறைந்ததாக இருந்தது. அவர் பிறந்து 100 ஆண்டுகள் ஆன பிறகும், அவர் உலகெங்கிலும் உள்ள மக்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

பிரிட்டிஷ் பத்திரிகையாளர் அந்தோனி சம்மர்ஸின் கூற்றுப்படி, மன்றோவின் உருவம் இன்றும் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. "கனெக்டிகட் முதல் காங்கோ வரை அனைத்து இடங்களிலும்" அவரது முகத்தைக் காணலாம் என்றும், கோப்பைகள், பைகள், மக்கள் கற்பனை செய்யக்கூடிய வேறு எந்தப் பொருளிலேனும் அது இடம்பெறுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், இளைய தலைமுறையினர் அந்தப் புகழ்பெற்ற பிம்பத்தைத் தாண்டி, மன்றோவை வெறும் ஒரு பிரபல சின்னமாக மட்டும் கருதாமல், ஓர் உண்மையான மனிதராக நினைவில் கொள்ள வேண்டும் என்று சம்மர்ஸ் கூறுகிறார்.

"அவர் ஒரு பிம்பம் என்பதைவிட மேலானவர்" என்றார் அவர்.

மன்றோவின் உண்மையான குணங்களைப் பலர் கவனிக்கத் தவறுகிறார்கள் என்று சம்மர்ஸ் நம்புகிறார். "ஒரு புத்திசாலியான பெண், மிகச் சிறந்த நடிகை, நன்கு படித்தவர், அரசியல் விழிப்புணர்வு கொண்டவர், அறிவாளி, தாங்க முடியாத அழுத்தத்திற்கு ஆளானவர். இறுதியில், அந்த அழுத்தம்தான் அவரைக் கொன்றது என்று கூறலாம்" என்று விவரித்தார்.

மன்றோ இறப்பதற்கு முன்பு, 'லைஃப்' இதழுக்காக பத்திரிகையாளர் ரிச்சர்ட் மெரிமனுக்கு அளித்த ஒரு நேர்காணலில், மக்கள் தன்னை எப்படிப் பார்க்க வேண்டுமென அவர் விரும்பினார் என்பதை வெளிப்படுத்தினார்.

அந்த நேர்காணலின் போது மன்றோ மனபூர்வமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்: "தயவுசெய்து என்னை ஒரு கேலிப் பொருளாக்காதீர்கள். கேலி செய்வதை நான் பொருட்படுத்தவில்லை, ஆனால் நான் அப்படித் தெரிய விரும்பவில்லை. நான் ஒரு கலைஞராக, நேர்மையுள்ள ஒரு நடிகையாகவே இருக்க விரும்புகிறேன்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு