அமைதியை விட அமெரிக்காவுடன் ஒரு வரையறுக்கப்பட்ட போர் இரானுக்கு ஏன் சிறந்தது?

அமெரிக்கா - இரான், ஹோர்மூஸ் நீரிணை, சௌதி அரேபியா, மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமை சமீப நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
    • எழுதியவர், அமீர் அசிமி
    • பதவி, பிபிசி பாரசீக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா - இரான் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் சமீப நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது இரான் நடத்திய எதிர்பாராத ஏவுகணைத் தாக்குதலை, முதல் பார்வையில் விளக்குவதற்குச் சற்றே கடினமானதாகத் தோன்றியது.

இந்தத் தாக்குதல், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நேரடியாக நடந்து வந்த சண்டையில் நிலவிய தற்காலிக அமைதியை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு, இரானுக்குள் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதற்கும் அமெரிக்காவைத் தூண்டியது. இது ஒரு அசாதாரணமான சம்பவமாகவும் இருந்தது.

இரானின் முன்னுரிமை போர் நிறுத்தமாக இருந்திருந்தால், அந்தத் தாக்குதலை விளக்குவது கடினம். ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மோதல் அதிக மூலோபாய முன்னிலையை வழங்கக்கூடும் என்று இரானியத் தலைவர்கள் கருதினால், அந்த முடிவு புரிந்து கொள்ளக் கூடியதாகிறது.

இதற்கான ஒரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், அதில் அபாயங்கள் இருந்தாலும், வரையறுக்கப்பட்ட போர் தனது நலன்களுக்கு மேலும் சாதகமாக இருக்கும் என்று இரான் நம்புகிறது.

தற்போது, இரு தரப்பினரும் முழு அளவிலான போருக்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய, மேலும் பல நாடுகளை இந்த மோதலுக்குள் இழுக்கக்கூடிய, கச்சா எண்ணெய் விலையை உயர்த்தக்கூடிய மற்றும் அமெரிக்காவின் இராணுவ வளங்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விரிவான பிராந்திய மோதலில் ஈடுபடுவதற்கான விருப்பம் அமெரிக்காவுக்கு குறைவாகவே உள்ளது.

இரானும் ஒரு முழு அளவிலான போரைத் தவிர்க்க முயலலாம்.

ஏனெனில் அதன் பலவீனமான வான் பாதுகாப்பு அமைப்பு, பாதிக்கப்படக்கூடிய தொழில்முறை கட்டமைப்புகள் மற்றும் தடைகளால் முடங்கியுள்ள பொருளாதாரம் ஆகியவை, வரவிருக்கும் இழப்புகளைச் சரிசெய்வதை மேலும் கடினமாகவும் செலவு மிகுந்ததாகவும் மாற்றுகின்றன.

ராணுவ வெற்றியை அடிப்படையாகக் கொள்ளாமல், தொடர்ச்சியான அழுத்தத்தைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு உத்தியைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என்று இரான் முடிவு செய்திருக்கலாம்.

தற்போதைய சூழலில் நீண்டகால போர் நிறுத்தம், உண்மையில் இரானை மேலும் பலவீனமான நிலையில் தள்ளக்கூடும்.

இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும். தடைகள் நீடிக்கும். சர்வதேச எரிசக்தி சந்தைகளில் இருந்து இரான் பெருமளவில் விலக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

அமெரிக்கா - இரான், ஹோர்மூஸ் நீரிணை, சௌதி அரேபியா, மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் பெரும் ராணுவ மற்றும் பொருளாதார விலையைச் செலுத்திக் கொண்டிருந்தாலும், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் சிக்கல் தொடர்ந்து உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கிடையில், இரான் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நாடுகள் தங்களின் வழக்கமான ஏற்றுமதியைப் படிப்படியாக மீண்டும் தொடங்கக்கூடும்.

வரையறுக்கப்பட்ட மோதல், இரானுக்கான இந்தச் சூழலை மாற்றக்கூடும்.

ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக இரான் பெரும் விலையைக் கொடுத்துவந்தாலும், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் இடையூறுகளும், ஹூத்திகள் மூலம் பாப் அல்-மாண்டேப் பகுதியைச் சுற்றி உருவாக்கப்படும் அழுத்தமும், உலகளாவிய கப்பல் போக்குவரத்து, காப்பீட்டுச் செலவுகள் மற்றும் எரிசக்தி சந்தைகளைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன.

குறைந்த அளவிலான நிச்சயமற்ற தன்மை கூட, அரசுகள், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இரானின் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.

இதன் மூலம், தன்னிடம் அழுத்தம் செலுத்தும் திறன் இன்னும் இருப்பதாக இரான் நம்பக்கூடும்.

ராஜ்ஜீய விவாதத்தின் திசையை மாற்றவும் இரான் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

கட்டுப்பாடற்ற சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இரானால் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது நிர்வகிக்கப்படும் விதிகளின் கீழ் தான் கப்பல் போக்குவரத்து இயங்க வேண்டும் என்பதை அது தொடர்ச்சியாக உணர்த்தி வருகிறது.

இந்த மதிப்பீடு சரியானதாக இருந்தால், எதிர்காலத்தில் ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதை அல்லாமல், இரானின் செல்வாக்கைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே இரானின் நோக்கமாக இருக்கலாம்.

தொடர்ந்து நீடிக்கும் வரையறுக்கப்பட்ட மோதல், இந்த இலக்கை அடைவதற்காக அழுத்தத்தைத் தொடர்ந்து தக்கவைக்க இரானுக்கு வாய்ப்பளிக்கக்கூடும்.

எனவே இரானின் பார்வையில், தடைகள், முற்றுகை மற்றும் பொருளாதாரத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை மாற்றாமல் அப்படியே விட்டுவிடும் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதை விட, இந்த நெருக்கடியை உயிர்ப்புடன் வைத்திருப்பது விரும்பத்தக்கதாக இருக்கலாம்.

இதில் உள்நாட்டு அரசியல் கணக்கீடுகளும் இருக்கலாம்.

உயர்ந்த பணவீக்கம், வேலையின்மை, பொருளாதாரச் சிரமங்கள் மற்றும் பொதுமக்களின் அதிருப்தியை இரான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

வெளிப்புற மோதல்கள் நீடிக்கும் காலங்களில், உள்நாட்டு எதிர்ப்பை ஒடுக்கவும், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், தேசியப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு ஆதரவைத் திரட்டவும் அரசுகளுக்கு பொதுவாக எளிதாக இருக்கும்.

அது இரானின் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்காது. ஆனால் அவற்றால் உருவாகும் உடனடி அரசியல் அழுத்தத்தைக் குறைக்கக்கூடும்.

அமெரிக்கா - இரான், ஹோர்மூஸ் நீரிணை, சௌதி அரேபியா, மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவுடனான மோதல், அந்நாடு எதிர்கொள்ளும் உள்நாட்டு அழுத்தங்களை நீக்காது, ஆனால் அவற்றால் உருவாக்கப்படும் உடனடி அரசியல் அழுத்தத்தைக் குறைக்கக்கூடும்.

இவை அனைத்தும் இந்த உத்திக்கு குறிப்பிடத்தக்க இழப்புகள் இல்லை என்பதைக் குறிக்கவில்லை.

இரான் தொடர்ந்து பல ராணுவத் தாக்குதல்களையும், பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொண்டு வருகிறது; தற்போதைய இந்தச் சமநிலையைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இரான் எதிர்கொள்ளும் முக்கிய முரண்பாடே இதுதான்.

ஒரு முழுமையற்ற அமைதியை விடக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மோதல் தற்போது அதிக நன்மையைத் தரக்கூடும், ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மோதல்களுக்குக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் இயல்பு உண்டு.

முழு அளவிலான போரைத் தவிர்த்துக்கொண்டே, அமெரிக்கா, உலகளாவிய எரிசக்தி சந்தைகள் மீது அழுத்தத்தைத் தக்கவைக்கத் தேவையான அளவுக்குப் போரின் தீவிரத்தை கவனமாகக் கையாள முடியும் என்று இரான் நம்பக்கூடும்.

ஆனால் அந்தக் கணக்கீட்டில் கணிசமான அபாயங்களும் அடங்கியுள்ளன.

ஒரு விரிவான போர் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளைத் தாண்டி, தெளிவான முடிவே இல்லாத ஒரு நீண்டகால மோதல், இரானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சர்வதேச ஆதரவைப் படிப்படியாக வலுப்படுத்தக்கூடும்.

இந்த மோதல் விரிவடைந்து வருவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படுகின்றன.

ஆரம்பத்தில் இதில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்க்க முனைந்த சௌதி அரேபியா, இராக்கில் உள்ள இரானுக்கு ஆதரவான ஷியா அமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு, ஹூத்திகளுக்கு எதிராகவும் ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தைகளுக்கான இடையூறுகள் தொடர்ந்தால், இதுவரை ஒதுங்கியிருக்க முயன்ற பிற நாடுகளும் இரானுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வரக்கூடும்.

சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் தொடர்ச்சியான நெருக்கடிகளுடன் வாழ்வதை விட, வலுவான நடவடிக்கையின் செலவுகளை ஏற்பதே சிறந்தது என சில அரசாங்கங்கள் முடிவு செய்யலாம்.

மேலும் பல நாடுகள் நேரடியாக ஈடுபடுவது உட்பட மேலே விவரிக்கப்பட்ட சாத்தியக்கூறுகள் சரியானவையா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவக் கணக்கீடுகளை முழுமையாக மாற்றியமைக்கும் வகையிலான ஒரு பதிலைத் தூண்டாமல், கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இரானால் பராமரிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே பல விஷயங்கள் அமையும்.

அடுத்து நடக்கும் எதிர்பாராத ஒரு தாக்குதல், இந்த மோதல் எந்தப் பாதையில் செல்லும் என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு