'தூத்துக்குடி அருகே சுமார் 200 ஏக்கரில் பழங்கால சங்கு ஆலை' - புதிய கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுவது ஏன்?

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology
தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில், அப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான பண்டைய சங்கு தொழிற்சாலை ஒன்று இயங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள பட்டணமருதூரில் சங்குகள், வளையல்கள், மணிகள் போன்ற சங்கு ஆபரணங்கள், சீன செலாடன் மட்பாண்டங்கள், பாண்டிய மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் நாணயங்கள் ஆகிய பொருட்கள் கிடைத்துள்ளன என்றும் தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் பட்டணமருதூர் தான் மிகப்பெரிய பண்டைய சங்குத் தொழிற்சாலை தளமாகும் என்றும் தொல்லியல் துறை கூறுகிறது.
8 இடங்களில் அகழாய்வு செய்ய அனுமதி
சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூர், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மாவட்டம் மணிக்கொல்லை, விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர், கோவை மாவட்டம் வெள்ளலூர், சேலம் மாவட்டம் தெலுங்கனூர் -மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ), தமிழக அரசின் தொல்லியல் துறைக்கு கடந்த மார்ச் மாதம் அனுமதி அளித்திருந்தது.
இதையடுத்து பட்டணமருதூரில் நடத்தப்பட்ட அகழாய்வில், சங்கு ஆபரணத் துண்டுகள், நாணயங்கள், பீங்கான் மட்பாண்டத் துண்டுகள் மற்றும் சிறு சிலைகள் உள்ளிட்ட சுமார் 1,500 கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக கடந்த மே மாதம் தமிழக தொல்லியல் துறை தெரிவித்திருந்தது.
தற்போது, 200 ஏக்கர் பரப்பளவில் அங்கு ஒரு சங்கு தொழிற்சாலை இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
"அந்தத் தொல்லியல் தளத்தைச் சுற்றி கடலும் உப்பளப் பகுதிகளும் உள்ளன. சில வருடங்களுக்கு முன் இந்தத் தளமும் உப்பளமாக இருந்துள்ளது" என்று கூறுகிறார் பட்டணமருதூர் தொல்லியல் தளத்தின் இயக்குநர் அஜய் குமார்.
சங்கு தொழிற்சாலை

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology
பட்டணமருதூரில் சங்குத் தொழிற்சாலை இயங்கியது எப்படி உறுதி செய்யப்பட்டது என விளக்கிய அஜய் குமார், "இங்கு முழு சங்குகள் கிடைக்கின்றன. அதேபோல, படிப்படியாக ஆபரணங்களுக்காக அறுக்கப்பட்ட சங்குகளும், ஆபரணத் துண்டுகளும், சங்கு வளையல் துண்டுகளும், மணிகளும் கிடைக்கின்றன. இதுவரை 10 குழிகளில் அகழாய்வுகள் செய்துள்ளோம். அனைத்திலுமே சங்கு தொழிற்சாலைகள் குறித்த ஆதாரங்களே கிடைத்துள்ளன" என்கிறார்.
இங்கு சங்கு உற்பத்தியில் ஈடுபட்ட மக்களின் குடியிருப்புகள் எங்கிருந்தன என்பதே அடுத்தகட்ட தொல்லியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அஜய் குறிப்பிடுகிறார்.
"மிகப்பெரிய அளவிலான சங்கு தொழிற்சாலை எனும்போது, இங்கு வேலை செய்த மக்களின் குடியிருப்புகளும் அருகிலேயே இருந்திருக்கலாம்" என்கிறார் அவர்.
"தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த அழகன்குளம், கொற்கை, அரிக்கமேடு மற்றும் கொடுமணல் ஆகிய இடங்களில் சங்குத் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் பட்டணமருதூர் தான் மிகப்பெரிய பண்டைய சங்குத் தொழிற்சாலை தளமாகும்," என்று தமிழக தொல்லியல் துறையின் ஆலோசகரான பேராசிரியர் கே. ராஜன் கூறினார்.

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology
பட்டணமருதூரில் கிடைத்துள்ள பொருட்களின் துல்லியமான காலம் கார்பன் காலக்கணிப்பு (Carbon dating) எனும் அறிவியல்பூர்வமான முறையில் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் ரிலேடிவ் டேட்டிங் (Relative dating) என்ற முறையில் இது கொற்கை பகுதியில் கிடைத்த பொருட்களுடன் ஒப்பிடலாம் என தமிழக தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கையிலிருந்து பட்டணமருதூர் சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் கொற்கை அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் தாமிரபரணி ஆறு இப்பகுதி வழியாக பாய்ந்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும், சங்க காலத்தில் பாண்டியர்களின் கடற்கரைத் துறைமுகப் பட்டினமாக கொற்கை விளங்கியது என்றும் தமிழக தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
கொற்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள்

பட மூலாதாரம், TNDIGITALLIBRARY
கொற்கையில் 1968 முதல் 1969 வரை அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சங்குகள் மற்றும் சங்கு வளையல் துண்டுகள் கிடைத்தன. முத்துச் சிப்பிகள் மற்றும் சங்குகள் தொடர்பான தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவை கொற்கையில் சங்குத் தொழில் இருந்ததைக் குறித்தன.
2020 முதல் 2021 வரை கொற்கையில், 17 குழிகள் தோண்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முழுமையாகவும், அறுக்கப்பட்ட நிலையிலும் சங்குகள் கிடைத்தன. வளையல்கள் செய்வதற்காக சங்குகளை அறுத்த எஞ்சிய பகுதிகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டன. சங்கினால் செய்யப்பட்ட வளையல்களின் துண்டுகள் பெருமளவில் கிடைத்தன.
கொற்கையில் கிடைத்த பொருட்கள், தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவை என உறுதிசெய்யப்பட்டன. தமிழ்நாட்டின் பண்பாட்டு காலவரிசையின்படி தொடக்க வரலாற்றுக் காலம் என்பது கிமு 700 முதல் கிபி 300ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
இந்த அகழாய்வுகளுக்கு முன்பே, 1870களில் கொற்கை பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு சங்குகள் உள்பட தொல்பொருட்கள் கிடைத்ததாகவும் 'தின்னவேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' (1881) நூலில் ராபர்ட் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.
கொற்கைக்கு அருகே பட்டணமருதூர் அமைந்திருப்பதும், கொற்கை போலவே இங்கும் சங்குத் தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளதும் இதனால் தான் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அதேபோல, இந்த பட்டணமருதூருக்கு அருகேயுள்ள பனையூர் கடற்கரை பகுதியில் கடந்த ஜனவரி மாதத்தில் கடல்சார் புதைபடிமங்கள் கண்டெடுக்கப்பட்டதும், 'அவை 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தங்களது ஆய்வில் தெரியவந்ததாக' இந்திய விலங்கியல் ஆய்வு மையம் அறிக்கை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
"கீழடியிலும் கூட சங்கு ஆபரணங்கள் கண்டறியப்பட்டன. கடலிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் கீழடி போன்ற பகுதிகளுக்கு கொற்கை அல்லது பட்டணமருதூர் போன்ற பகுதிகளில் இருந்தே சங்கு ஆபரணங்கள் மற்றும் சங்குகள் வணிகம் செய்யப்பட்டிருக்கலாம்" என்கிறார் தமிழக தொல்லியல் துறையைச் சேர்ந்த அஜய் குமார்.
சங்கு ஆபரணங்களின் முக்கியத்துவம்

பட மூலாதாரம், keeladimuseum
சங்க இலக்கியம், அக்காலத்து ஆண்களும் பெண்களும் அணிந்த பல்வேறு வகையான வளையல்கள் மற்றும் இதர சங்கு ஆபரணங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
"கடற்கோடு செறிந்த வளைவார் முன்கை" என்று ஐங்குறுநூறு பாடலில் (191) குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள், கடற்கரையில் கிடைக்கும் சங்குகளை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களைத் தன் வளைந்த முன்னங்கையில் அணிந்திருப்பவள்.
வழிபாட்டுப் பொருளாக விளங்கும் வலம்புரி எனப்படும் வலஞ்சுழிச் சங்கு கிடைப்பது அரிதாக இருந்த வேளையில், இடம்புரி அல்லது இடஞ்சுழிச் சங்கு சாதாரணமாகக் கிடைத்தது. குறிப்பாக இவ்வகைச் சங்கு கொற்கையில் கடலிலிருந்து பெறப்பட்டதாக அகநானூறு குறிப்பிடுகிறது.
கி.பி. ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்ட தமிழ்க் கவிதைகளின் தொகுப்பான முத்தொள்ளாயிரம், பெண்கள் சங்கு வளையல்களை அணிந்ததையும், சங்கிலிருந்து முத்துகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் குறிப்பிடுகிறது.
மதுரைக் காஞ்சியில், கொற்கையில் சங்கு அறுப்பவர்களின் குடியிருப்பு பற்றிய குறிப்புகள் உள்ளன.
"முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை…" என்ற மதுரைக்காஞ்சி பாடல் கடல் தந்த முத்துகளையும், அறுத்துச் செய்யப்பட்ட சங்கு வளையல்களையும் குறிப்பிடுகிறது.
அதேபோல, சிலப்பதிகாரத்தில் காவேரிப்பட்டினத்தில் இருந்த சங்கு தொழிற்சாலை தொழிலாளிகளின் குடியிருப்பு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
நற்றிணை, கலித்தொகை, புறநானூறு, மற்றும் பட்டினப்பாலை ஆகியவற்றிலும் சங்கு ஆபரணங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology
"கொற்கை பகுதி சங்க காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இங்கு சங்கு மற்றும் முத்து எடுத்தல் தொழில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இங்கிருந்த தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட சங்கு ஆபரணங்கள் மற்றும் இப்பகுதியின் முத்துக்கள், பாபிலோன், எகிப்து, கிரேக்கம், ரோம் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு கடல் வழியே ஏற்றுமதி செய்யப்பட்டன" என்று பண்டைய தமிழ்நாட்டின் சங்குத் தொழில் குறித்த ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.
ஹரப்பா காலம் முதல் முத்து மற்றும் சங்கின் பரவலான பயன்பாடு குறித்து தொல்பொருள்கள், கல்வெட்டுகள் மற்றும் இலக்கியப் பதிவுகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, ஹரப்பா காலத்தில் சங்குகள் பரவலாக பயன்படுத்தப்பட்டன என்பதற்கு நாகேஷ்வர் என்ற தொல்லியல் தளம் சான்றாக உள்ளது. ஹரப்பா அகழாய்வுகளில் கிடைத்த அதிகளவிலான சங்கு வளையல்களும் அவற்றின் கழிவுகளும், நாகேஷ்வர் ஒரு வளையல் உற்பத்தி மையமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தியது.
"சங்குத் தொழிற்சாலை அகழாய்வுகளில் கண்டறியப்படுவது அங்கு கடல் வணிகம் நடந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். பட்டணமருதூரில் கிடைத்துள்ள சீன மட்பாண்ட பொருட்கள் அதை உணர்த்துகின்றன. இருப்பினும் அடுத்தடுத்த கட்ட ஆய்வுகளில் இது தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைக்கும்" என்று கூறுகிறார் பட்டணமருதூர் தொல்லியல் தளத்தின் இயக்குநர் அஜய் குமார்.
(இந்தக் கட்டுரையில் இருக்கும் தகவல்கள் தமிழக தொல்லியல் துறையின் இணையதளம் மற்றும் தமிழ் டிஜிட்டல் நூலகத்தின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































