'கணவருடன் 15 ஆண்டாக ஒன்றாக வசிக்கவில்லை, ஆனாலும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தொடர்கிறோம்'

பட மூலாதாரம், Margaret Murphy
- எழுதியவர், எமிலி ஹோல்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மார்கரெட் கடந்த 15 ஆண்டுகளாகத் தனது கணவருடன் இருக்க இயலாமல் லண்டனில் வசித்து வருகிறார். அவரது கணவர் பீட்டர் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவர்கள் இருவேறு கண்டங்களில் வசிப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை அல்லது சில நேரங்களில் 18 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கின்றனர்.
அதிக தூரம் மற்றும் ஒன்றாகச் செலவிடுவதற்குக் குறைந்த நேரமே கிடைத்தாலும், தங்கள் திருமண உறவில் தாங்கள் நம்பிக்கையோடும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக மார்கரெட் கூறுகிறார்.
பிபிசி ரேடியோ-4இன் 'வுமன்ஸ் ஹவர்' நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, "நான் பல புதிய நண்பர்களைப் பெற்றுள்ளேன். லண்டனில் எனது வசதியான வீட்டில் தனியாக வசிக்கிறேன். திருமண உறவில் இருந்துகொண்டே இதையெல்லாம் செய்துள்ளேன். இது ஓர் அற்புதமான அனுபவமாக உள்ளது," என்று தெரிவித்தார்.
வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் தம்பதியர் என்பது முற்றிலும் வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல. இத்தகைய உறவுமுறை 'ஒன்றாக இருந்தும் தனித்தனியாக வசித்தல்' (living apart together) அல்லது எல்.ஏ.டி என்று அழைக்கப்படுகிறது.
ஒரே வீட்டில் வசிக்காத போதும் ஒரு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்க முடியும் என்று மார்கரெட் நம்புகிறார்.
பல பிரபல தம்பதிகளும் தனித்தனியாக வசிப்பதைத் தேர்வு செய்தது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
நடிகை க்வினெத் பேல்ட்ரோ, அவரது கணவர், எழுத்தாளரும் இயக்குநருமான பிராட் ஃபால்சுக் ஆகியோர் தங்கள் திருமணத்தின் ஆரம்பக் காலங்களில் தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனர். இது தங்கள் உறவைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவியதாக பேல்ட்ரோ கூறினார்.
மாடலிங் பிரபலமான ஆஷ்லே கிரஹாம் மற்றும் அவரது கணவர் ஜஸ்டின் எர்வின் இருவரும் நீண்ட தூர இடைவெளியில் வாழும் திருமண உறவைக் கொண்டிருந்து, பல ஆண்டுகள் தனித்தனியாக வசித்து வந்தனர்.
நடிகை ஹெலினா போன்ஹாம் கார்ட்டர் மற்றும் இயக்குநர் டிம் பர்ட்டன், தங்கள் 13 ஆண்டு கால உறவில் தனித்தனியாகவே வசித்து வந்தனர்.
சமீபத்தில், 'அபோட் எலிமென்டரி' தொடரின் நடிகையான ஷெரில் லீ ரால்ஃப், தானும் தனது கணவரும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் இருவேறு முனைகளில் வசித்து வருவதாகத் தெரிவித்தார்.
அவரது பணி அவரை ஹாலிவுட்டில் வசித்தாக வேண்டுமென்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம், பென்சில்வேனியா மாகாண செனட்டராக இருக்கும் அவரது கணவர் ஃபிலடெல்ஃபியாவில் வசிக்க வேண்டியுள்ளது.

பட மூலாதாரம், Margaret Murphy
மார்கரெட்டின் வாழ்க்கை, அவர் 15 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தபோது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அப்போது அவர் வீட்டிற்கு வெளியே வேலைக்குச் செல்லவில்லை. தனது நான்கு குழந்தைகளைப் பராமரிப்பதில் கவனத்தைச் செலுத்தினார். அதேவேளையில் அவரது கணவர் பீட்டர் மருத்துவராக முழுநேரம் பணியாற்றி குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைக் கவனித்து வந்தார்.
மார்கரெட்டுக்கு 57 வயதாக இருந்தபோது, அவர் மீண்டும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 'பயன்பாட்டு மொழியியல்' (applied linguistics) துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
படிப்பு முடிந்த பிறகு, குழந்தைகள் வீட்டை விட்டுச் சென்ற நிலையில், புதிதாக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டிய நேரம் இது என மார்கரெட் கருதினார். அதனால் அவர் லண்டனுக்கு குடிபெயர முடிவு செய்தார்.
அதுகுறித்துப் பேசிய மார்கரெட், "எங்கள் வாழ்வின் அந்தக் கட்டத்தில் பீட்டருக்கும் எனக்கும் வெவ்வேறு இலக்குகள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் எங்கள் குடும்ப வீட்டில் தங்கி, தொடர்ந்து மருத்துவப் பணியை மேற்கொள்ள விரும்பினார். ஆனால் நான் இதை ஒரு புதிய வாய்ப்பாகப் பார்த்தேன்," என்று கூறினார்.
தற்போது அவர் 'ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்' அமைப்பில் கல்வி அதிகாரியாகப் பணிபுரிகிறார்.
"பெரும்பாலான மக்கள் ஓய்வு பெறுவதைப் பற்றிச் சிந்திக்கும் வயதில் நான் என்னுடைய தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன்" என்கிறார் அவர்.
"ஆம், நீங்கள் விரும்பினால் 60 வயதிலும் முழுநேர வேலையைப் பெற முடியும், வேறொரு நாட்டில் வசிக்கவும், உற்சாகமூட்டும் பல விஷயங்களை செய்யவும் முடியும். அவ்வளவு ஏன், வேறொரு கண்டத்திற்கேகூட குடிபெயரலாம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், தனித்தனியாக வாழ்வது இருவருக்கும் எப்போது எளிதாக இருந்ததில்லை என்கிறார் மார்கரெட்.
"தனிப்பட்ட ரீதியில் பார்த்தால், பீட்டர் இன்னும் பிரிஸ்பேனில் தனியாக அதே குடும்ப வீட்டிலேயே வசிக்கிறார். அவர் தனியாக இருக்கும்போது மற்றவர்களுடன் அதிகம் பழகுவதில்லை என்பதால் அவர் தனிமையாக உணரக்கூடும். என்னைப் பொறுத்தவரை, எனக்குள்ள பிரச்னை துணையின்மைதான். அவரின்றி அது எனக்குக் கிடைப்பதில்லை," என்று கூறினார்.
தொடர்ச்சியான தகவல் தொடர்பு தங்கள் உறவைத் தக்கவைக்க உதவியதாக மார்கரெட் குறிப்பிட்டார்.
"லண்டனில் எனது வாழ்க்கை, வேலை, புதிய நண்பர்கள், பயணங்கள் என அனைத்தையும் தான் பீட்டரிடம் பகிர்ந்து கொள்வதாக" விவரித்தார்.
"இது அவருக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. எனக்கும் அப்படித்தான். அவர் லண்டனுக்கு வரும்போது அந்த இடத்தை மிகவும் விரும்புகிறார்," என்று தனது கணவர் குறித்து விவரித்தார் மார்கரெட்.
வுமன்ஸ் ஹவர் நிகழ்ச்சியின் நேயரான கெர்ரியும் தான் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது இணையுடன் காதல் உறவில் இருந்து வருவதாகவும், தங்கள் "சுதந்திரத்தையும் தனித்துவத்தையும்" பாதுகாத்துக் கொள்ள விரும்பியதால், தாங்கள் ஒருபோதும் ஒரே வீட்டில் இணைந்து வசிக்கப் போவதில்லை என்று அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே முடிவெடுத்து இருந்ததாகவும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"நாங்கள் அருகருகே வீடுகளை வாங்கினோம், வீட்டுக் கடன்களுக்கு உதவும் வகையில் எங்களுடன் வசிப்பவர்களும் இருக்கிறார்கள்" என்று கெர்ரி கூறினார்.
கெர்ரியும் அவரது காதலரும் தற்போது திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குத் தங்கள் வசிப்பிட முறையை மாற்றிக் கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லையென்று கெர்ரி கூறுகிறார்.
"இது எங்கள் இருவருக்கும் நம்ப முடியாத அளவுக்கு நன்றாகப் பொருந்துகிறது. இதன் விளைவாக எங்கள் இருவருக்கும் இடையே மிகவும் வலுவான உறவு இருப்பதாக உணர்கிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஃபேமிலி ஆக்ஷனில் உள்ள ரிலேட் அமைப்பின் மருத்துவத் தர இயக்குநரான அம்மாண்டா மேஜர், தனித்தனியாக வாழ்வது அனைத்து தம்பதியருக்கும் ஏற்புடையதல்ல என்கிறார். இருப்பினும், இந்த ஏற்பாட்டைத் தேர்வு செய்யும் திருமணமான தம்பதிகளுக்கு இது சில நன்மைகளையும் அளிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
"இது ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஆர்வங்களையும், தங்கள் சுய அடையாள உணர்வையும் தக்க வைத்துக் கொள்ள வித்திடும் இடத்தை வழங்குவதுடன், தாங்கள் ஒருவரிடம் ஒருவர் திரும்பி வருவதற்கான ஓர் இடத்தையும் வழங்குகிறது," என்று அவர் விவரித்தார்.
"ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்திருந்தபோதிலும், எனக்கெனத் தனிப்பட்ட இடமும் ஆர்வங்களும் உள்ளன என்பதை, எங்களுக்குப் பொருத்தமானதாகத் தோன்றும் தருணங்களில் மட்டுமே நான் என் இணையுடன் சேர்கிறேன் என்பதை உணர்வதற்கு இதுவொரு பயனுள்ள வழியாக அமையலாம்," என்றும் கெர்ரி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கணவன் - மனைவி விலகியிருந்தாலும் சேர்ந்தே இருப்பது எப்படி?
தனித்தனியாக வாழும் முடிவை எடுக்கும் தம்பதியர், முதலில் இருவருக்குமே இந்த ஏற்பாட்டில் உண்மையாகவே விருப்பம் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒருவருக்கு இது வசதியாக இருக்கிறது என்பதற்காக மட்டுமே மற்றொருவர் இதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பது போன்ற அழுத்தத்தை உணரக்கூடாது.
முடிவெடுப்பதற்கு முன்பாக, அவர்கள் தெளிவான அடிப்படை விதிகளைப் பற்றி விவாதித்து ஓர் உடன்பாட்டிற்கு வர வேண்டும். இந்த ஏற்பாடு தங்களுக்கு நன்றாகப் பொருந்தக் கூடியதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள, இருவரும் ஒருவருக்கொருவர் தவறாமல் கலந்தாலோசிக்க வேண்டும்.
இந்தக் கலந்துரையாடல்களில், அவர்கள் எத்தனை நாட்களை ஒன்றாகச் செலவிடுவார்கள், தங்கள் பாலியல் உறவை எவ்வாறு நிர்வகிப்பார்கள், குழந்தைகள் இருந்தால் அவர்களைக் கவனித்துக் கொள்வது எப்படி என்பன போன்றவற்றை ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
எல்லா நேரங்களிலும் தெளிவான, நேர்மையான தகவல் பரிமாற்றம் விலகியிருக்கும் கணவன், மனைவியிடையே இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
இந்த ஆலோசனையை, உறவுமுறை ஆலோசனை சேவையான ரிலேட் நிறுவனத்தின் மருத்துவத் தர இயக்குநர் வழங்கியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































