"நான் தேவையில்லை என்றால்..." - 2027 உலகக்கோப்பை குறித்து கோலி கூறியது என்ன?

Cricket, India, Virat Kholi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு நேர்காணலில், 2027 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி விரிவாகப் பேசியுள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவருமான விராட் கோலி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், "எனது முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுப்பப்படும் இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, "இந்திய அணியில் எனது இடம் குறித்து விஷயங்களை நான் மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை. எனது முக்கியத்துவத்தை நான் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், அத்தகைய சூழல் எனக்கானது அல்ல," என்று கூறினார்.

தனது முக்கியத்துவம் குறித்து அடிக்கடி மாறும் கருத்துகளைத் தான் முற்றிலும் விரும்பவில்லை என்பதை இந்த நேர்காணலில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பலமுறை பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

37 வயதான டாப்-ஆர்டர் பேட்டரான விராட் கோலி, 2026 ஐபிஎல் தொடரின் 12 போட்டிகளில் 53.77 சராசரியுடன் 484 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஹென்ரிச் கிளாசென் (508 ரன்கள்) முதலிடத்திலும், சாய் சுதர்ஷன் (501 ரன்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அவர் ஆரஞ்சு தொப்பியைப் பெறுவதற்கான பலத்த போட்டியாளராகக் கருதப்படுகிறார். ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

2027 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து விராட் கோலி என்ன கூறினார்?

Virat Kholi, RCB, IPL

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த முதல் மூன்று வீரர்களில் விராட் கோலியும் ஒருவராக உள்ளார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் 2024-இல் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்தும், 2025-இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். கடந்த சில ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையும், அதில் அவரது பங்கேற்பும் கணிசமாகக் குறைந்துள்ளன.

இத்தகைய சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

2027 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்த கேள்விக்கு அவர் நேர்மறையான பதிலை அளித்துள்ளார்.

கோலி கூறுகையில், "நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்; ஏனெனில் அதுதான் எனது அன்றாட வாழ்க்கை. நான் உடற்பயிற்சி செய்கிறேன், வீட்டில் சத்தான உணவை உட்கொள்கிறேன். இது கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமல்ல, நான் இப்படி வாழவே விரும்புகிறேன். எனவே, நான் தயாரான நிலையிலேயே இருக்கிறேன். இந்த 2027 உலகக் கோப்பை குறித்தான பேச்சுகள் பற்றி என்னிடம் பலமுறை கேட்கப்பட்டுவிட்டது," என்றார்.

"அதற்கான பதில் எனக்குத் தெரியும். நான் ஏன் எனது வீட்டை விட்டு, மூட்டையைக் கட்டிக்கொண்டு எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை என்று சொல்ல வேண்டும்? நிச்சயமாக, நான் விளையாடுகிறேன் என்றால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறேன். நான் இன்னும் நீண்ட காலம் விளையாட விரும்புகிறேன். இந்தியாவிற்காக உலகக் கோப்பையில் விளையாடுவது ஒரு பெருமைக்குரிய விஷயம். ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல, அந்த முக்கியத்துவம் இருதரப்பிலும் இருக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

அணியில் நீடிக்க அவர் விருப்பம் தெரிவித்த போதிலும், கோலி மற்றும் மற்றொரு மூத்த ஒருநாள் போட்டி வீரரான ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இதுவரை எந்தவொரு தெளிவான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2026 தொடங்குவதற்குச் சற்று முன்பாக, கௌதம் கம்பீர் 'இந்தியா டுடே' இதழுக்கு அளித்த நேர்காணலில், "2027 உலகக் கோப்பைக்கான தயாரிப்புகள் ஐபிஎல் தொடருக்குப் பிறகு தொடங்கும். உலகக் கோப்பைக்கு முன்பாக நாம் 25 முதல் 30 ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது," என்று கூறியிருந்தார்.

"தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாடுவது எளிதானதல்ல. நாம் நமது அணியின் கலவையை ஆராய்ந்து, அங்குள்ள சூழலுக்கு ஏற்ப சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களைக் கண்டறிய முயல்வோம். தேர்வாளர்களும் பயிற்சியாளரும் இணைந்து இப்பணியைச் செய்வார்கள். ஐபிஎல் 2026 முடிந்த பிறகுதான், 2027 ஒருநாள் உலகக் கோப்பை குறித்த தெளிவான படம் நமக்குக் கிடைக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

விராட் கோலி இதனை வலியுறுத்திக் கூறுகையில், "எனது பார்வை மிகவும் தெளிவாக உள்ளது. நான் ஓர்அங்கமாக இருக்கும் அந்தச் சூழலில் எனக்கான முக்கியத்துவம் இருந்து, என்னால் அணிக்கு ஏதேனும் பங்களிக்க முடியும் என்று அவர்களும் கருதினால், நான் அங்கு இருப்பேன். மாறாக, எனது முக்கியத்துவத்தை நான் நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் உருவானால், அந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன்," என்றார்.

இருப்பினும், வரும் ஜூலை 14 முதல் ஜூலை 19 வரை இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவதைக் காண வாய்ப்புள்ளது.

அணி தன்னை விரும்பும் வரை தான் தொடர்ந்து விளையாடப் போவதாக கோலி தெரிவித்துள்ளார்.

"நான் எனது பயிற்சிகளிலும், ஆட்டத்தை அணுகும் முறையிலும் நேர்மையாக இருக்கிறேன். நான் கடினமாக உழைக்கிறேன். நான் விளையாடச் செல்லும்போது, மற்ற எந்த வீரரையும் விட சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ கடினமாக உழைக்கிறேன்; ஆட்டத்தை சரியான முறையில் அணுகுகிறேன்," என்றார்.

ஆட்டத்தை அணுகும் முறை குறித்துப் பேசிய கோலி, ஒரு ஃபீல்டராக "40 ஓவர்கள் வரை எல்லைக்கோடு முழுவதும் ஓடிப் பணியாற்றவும்" தான் எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

"நான் அதைச் செய்வேன், ஏனெனில் அதற்கு ஏற்பவே என்னை நான் தயார்படுத்துகிறேன். 50 ஓவர்களும் ஃபீல்டிங் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இவ்வளவு கடினமாக உழைத்த பிறகும் எனது தகுதியையும் முக்கியத்துவத்தையும் நான் நிரூபிக்க வேண்டியிருந்தால், அந்த இடம் எனக்கானது அல்ல," என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதற்காகப் பலரும் அவரைப் பாராட்டினர்.

2025-26 சீசனில், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு விஜய் ஹசாரே கோப்பைத் தொடருக்குத் தான் திரும்பியதையும் கோலி குறிப்பிட்டிருந்தார். டெல்லி அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு போட்டியில் சதமடித்தார். அத்துடன், 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் அதிவேகமாக 16,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

"நான் அங்கு யாருக்கும் எதையும் நிரூபிக்கச் செல்லவில்லை என்பதில் எனது மனதில் தெளிவு இருந்தது. இந்த ஆட்டத்தை நான் நேசிப்பதால் மட்டுமே விளையாடச் சென்றேன். இதே சிந்தனையுடன்தான் நான் விஜய் ஹசாரே தொடரிலும் விளையாடினேன். அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது," என்றார்.

"இவ்வளவு காலம் விளையாடிய பிறகும் எனக்குள் அந்த உந்துதல் இன்னும் இருக்கிறதா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், 'நான் ஆட்டத்தை நேசிப்பதால் விளையாட விரும்புகிறேன்' என்ற எண்ணம் எனக்குள் வந்தவுடனேயே, நான் பேட்டிங் செய்வதை ரசிக்கத் தொடங்கினேன். நான் மீண்டும் ஒரு குழந்தையைப் போல உணர்ந்தேன். இது வேறு எவரைப் பற்றியதும் அல்ல, எனக்கும் இந்த ஆட்டத்திற்கும் இடையிலானது என்பதை உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.

'விஷயங்களைச் சிக்கலாக்க வேண்டாம்'

Cricket, Virat Kholi, World cup

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரும் ஜூலையில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுத் தொடரில் (Away series) விராட் கோலி விளையாடுவதைக் காண வாய்ப்புள்ளது.

தான் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆனால் அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகும் கேள்விகள் எழுப்பப்படும் ஒரு சூழலில் இருக்க விரும்பவில்லை என்றும் கோலி தெரிவித்தார்.

"நீங்கள் ஒரு பணியிடத்திற்குச் செல்லும்போது, அங்குள்ளவர்கள் உங்கள் திறமை மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறிவிட்டு, ஒரு வாரத்திற்குப் பிறகு அதே நபர்கள் நீங்கள் பணியாற்றும் முறையைக் கேள்வி கேட்கத் தொடங்கினால், 'ஏன்' என்ற கேள்வி எழுகிறது."

அவர் மேலும் கூறுகையில், "ஒன்று முதல் நாளே நான் சிறந்தவன் அல்ல என்றோ அல்லது எனது தேவை இல்லை என்றோ சொல்லிவிடுங்கள். ஆனால், நான் சிறந்தவன் என்று கூறிவிட்டு வேறு எதையும் யோசிக்கவில்லை என்றால், அமைதியாக இருங்கள். போட்டிகளின் முடிவுகளுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருந்தால், உங்களால் எப்போதும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியாது," என்றார்.

ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராகக் கருதப்படும் கோலி, 311 போட்டிகளில் 58.71 சராசரியுடன் 14,797 ரன்கள் குவித்துள்ளார்.

அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 54 சதங்களையும் 77 அரைசதங்களையும் அடித்துள்ளார். நெருக்கடியான சூழலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவர் 'சேஸ் மாஸ்டர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு