இலங்கையில் யுத்தம் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தீராத காணிப் பிரச்னை - தீவிரமடையும் போராட்டங்கள்

- எழுதியவர், ஜெ.பரணீதரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
''எங்கள் காணிகள் எமக்கு வேண்டும்.... காணிகளை விடுவிக்கும் வரை ஓயமாட்டோம்... போராடுவோம், போராடுவோம் உயிருள்ள வரை போராடுவோம்…''
இவ்வாறான முழக்கங்கள் கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் வடக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் வாரந்தோறும் கேட்கும் வழக்கமாகி உள்ளன.
யாழ்ப்பாணத்தின் முக்கிய கடற்கரைச் சாலையான பொன்னாலை - பருத்தித் துறை வீதியிலுள்ள மயிலிட்டி, பலாலி ஆகிய பகுதிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களால் பரபரப்பாக மாறியுள்ளன. தற்போது பலாலியின் அயல் கிராமமான வயாவிளான் பகுதி மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போராட்டங்களின் பின்புலம் என்ன?
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. போர் முடிவுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் இடம் பெயர்ந்திருந்த தமிழ் மக்கள் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். பல கட்டங்களாக ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த பொது மக்களின் காணிகள் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தச் செயற்பாடு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்குப் பகுதியில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமது வீடுகளையும், விவசாய நிலங்களையும், பொது இடங்களையும் அணுக முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த நீண்டகாலப் பிரச்னை தற்போது மீண்டும் தீவிரமான மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

1990இல் தொடங்கிய இடப்பெயர்வு
வலிகாமம் வடக்கின் பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களால் தமது வீடுகளையும் காணிகளையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தப் பகுதியே முதன் முதலில் இடப்பெயர்வை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மக்கள் வெளியேறிய பின்னர் இந்தப் பகுதிகள் ராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வளையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அவர்களின் வீடுகள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள் மற்றும் பிற சொத்துகள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னரும், பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி இந்தப் பகுதிகளில் அநேகமானவை தொடர்ந்து பொது மக்கள் அணுக முடியாதவையாகவே இருந்தன.
கடந்த 2018 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சுமார் 900 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக அப்போதிருந்த அரசுகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 2025 மே மாதம் யாழ்ப்பாணத்தில் 40.70 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதில் தற்போது மக்கள் போராடும் வயாவிளான் பகுதிக்கு உரிய 20 ஏக்கர் நிலமும் அடங்கும். அத்துடன் யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியில் 35 ஆண்டுகளாக ராணுவத் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த வயாவிளான் தொடக்கம் பலாலி வரையான பகுதி மக்கள் பாவனைக்காக 2025 ஏப்ரலில் திறந்துவிடப்பட்டது.

வலி வடக்கில் மட்டும் இன்னும் விடுவிக்கப்படாத சுமார் 2,500 ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் வெளிநாடுகளிலும் சிதறுண்டு வாழ்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு நினைவுகளும் கனவுகளும் ஆசைகளும் கதைகளும் இருக்கின்றன.
''கடந்த 36 ஆண்டுகளாக, இருப்பதற்குச் சொந்த வீடின்றி இன்று வரை அகதிகளாகவே ஊர் ஊராக அலைந்து தற்காலிக இடங்களில் வாழ்கிறோம். இடப்பெயர்வுக்குப் பிறகு பிறந்த எமது பிள்ளைகளுக்கு எமது காணிகள் தெரியாது. நாம் உயிருடன் இருக்கும்போது அவற்றை விடுவித்தாலேயே எமது பிள்ளைகளுக்கு காணிகளை அடையாளம் காட்டிவிட்டுச் செல்ல முடியும்," என்கிறார் மயிலிட்டி போராட்டக் களத்தில் இருந்த அன்ரன் பிரேமலதா.
அத்துடன், "எமக்கு நிலம் மட்டுமல்ல, கோவிலும் சுடுகாடும் முக்கியம். எமது இறப்புக்குப் பிறகு சொந்தக் கிராமத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென விரும்புகிறோம்'' என்றார் அவர்.

பலாலியை பூர்வீகமாகக் கொண்ட செல்வராஜா சுதாகர், தனது 9வது வயதில் பூர்வீக நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தபோது, தனது நினைவுகளில் தேங்கியுள்ள மகிழ்ச்சியான தருணங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
சொந்த வீடு காணியுடன், விவசாயம், கடை வியாபாரம் என வசதியான மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகவும், தற்போது கடந்த 36 ஆண்டுகளாக அகதிகள் என்ற அடைமொழியுடன், வீடற்றவர்களாக இருப்பதாகவும், இடப் பெயர்வால் சொந்த நிலம் வீடற்ற தனது உறவினர்கள் நண்பர்கள் பலர், இதனாலேயே இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
2013ஆம் ஆண்டின் வர்த்தமானியும் நீடிக்கும் சட்டச் சிக்கலும்
வலிகாமம் வடக்கின் காணிப் பிரச்னையில் 2013ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு வர்த்தமானி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தச் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு மூலம் வலிகாமம் வடக்கில் 6,317 ஏக்கர் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கையின் சட்டநிலை மற்றும் அதற்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமை தொடர்பாகவும் நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது.
இந்த 6,317 ஏக்கர் நிலத்தில், ராணுவத் தேவைகளுக்கான 1661 ஏக்கரும், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு தேவையான 774.98 ஏக்கரும் அடக்கம். ஆனால் இந்த விமான நிலைய விஸ்தரிப்புக்காக கையகப்படுத்தும் 774.98 ஏக்கர் நிலம் ஏற்கெனவே 1980ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட பழைய திட்டம். இவை போக கையகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட மிகுதிக் காணிகள் எவ்வாறான பயன்பாடுகளுக்காக என்பது குறித்து தெளிவான விளக்கம் அறிவிக்கப்படவில்லை.
இந்த வர்த்தமானி அறிவிப்புக்குப் பின்னர் மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள், மனித உரிமைகள் ஆணைக் குழு மற்றும் வெளிநாடுகளின் அழுத்தங்கள் காரணமாக இன்றுவரை படிப்படியாக பகுதியளவில் காணிகள் விடுவிக்கப்பட்டு தற்போதுள்ள சூழ்நிலையில் 2,506 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன.

இந்த நிலையில் விமான நிலைய விஸ்தரிப்புக்காக பயன்படுத்தப்படவுள்ள 774.98 ஏக்கருக்கும் காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உடன்பாடு ஒன்று பேச்சுவார்த்தை அளவில் எட்டப்பட்டுள்ளது.
இங்கு ஒரு முக்கியமான சட்டச் சிக்கலைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. வர்த்தமானி அறிவிப்புக்குப் பிற்பட்ட காலங்களில் விடுவிக்கப்பட்ட காணிகள் ராணுவப் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், அரச வர்த்தமானி அறிவிப்பின்படி இன்னமும் அந்தக் காணிகளின் சட்டபூர்வ உரிமை அரச நிர்வாகம் வசமே உள்ளது. எனவே மீண்டும் சட்டபூர்வமாக வர்த்தமானி மூலம் காணி உரிமையைத் தனிப்பட்ட உரிமையாளர்களுக்கானதாக வரையறுத்தால் மட்டுமே அவை குறித்த காணி உரிமையாளர்களைச் சேரும்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வலியுறுத்தி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகள் சேர்ந்து வடமாகாண ஆளுநரைச் சந்தித்து கடந்த மே மாதம் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பின்னர் நடந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், குறித்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கு இணக்கம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். ஆனாலும் இது எப்போது சாத்தியப்படுமென இதுவரை தெரியவில்லை என்று போராடும் மக்கள் கூறுகின்றனர்.
இதுவே பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்னையின் நிர்வாக மற்றும் சட்டச் சிக்கல்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இந்தக் காணி விடுவிப்புப் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு உரித்தான யாழ் வலி வடக்கு உள்ளூராட்சி சபையின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான சோ.சுகிர்தன், ''2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக 2,176 காணி உரிமையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள்" என்றார்.
இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்து வரும் நிலையில், "2025 டிசம்பர் மாதம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நில அளவீட்டு அறிக்கையில், எதிர்காலத்தில் விடுவிக்கத் திட்டமிட்டுள்ள காணிகளாக, ஏற்கெனவே கடந்த ஆட்சிக் காலங்களில் விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவீடுகளும் சேர்த்து, அரச தரப்பு வழக்கறிஞர்களால் கடந்த வாரம் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, விடுவிக்கப்படவுள்ள சரியான நிலங்களின் வரைபடங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது," என்று அவர் விளக்கினார்.

மீண்டும் போராட்டம் ஏன்?
தற்போதைய அரசாங்கம் தமது நிலங்களைத் தமக்கு மீண்டும் ஒப்படைக்கும் என்று நம்பி இம்முறை தமிழ்த் தேசியக் கட்சிகளைப் புறக்கணித்து ஒரு சிங்களக் கட்சிக்கு ஆதரவு கொடுத்ததாக, போராட்டத்தில் இருந்த மக்கள் கூறுகிறார்கள். அப்படியிருந்தும், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமது எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.
வலுவான காரணங்கள் எதுவுமின்றி விடுவிக்கப்படாமல் உள்ள சுமார் 2,500 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி பல முறை முறையிட்டும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்பதே போராட்டத்தில் ஈடுபடும் காணி உரிமையாளர்களின் முக்கியக் குற்றச்சாட்டு.
மயிலிட்டியை பூர்வீகமாகக் கொண்ட தேவாரத்தினம் அன்ரனி சுபாஷ் பிபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில், "மயிலிட்டி போராட்டக் களத்திற்கு நேர் எதிராக உள்ள காணியில் பிரதான வீதியோடு அப்பகுதி மக்களின் வழிபாட்டுத் தலமான காணிக்கை மாதா கோவிலும், அதிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வரசித்தி விநாயகர் ஆலயமும் இருந்ததாக" கூறுகிறார்.
மேலும், "கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுற்ற பிறகு 2010இல், முதன்முதலாக மயிலிட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது இடங்களைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டபோது, நானும் எனது கிராம மக்களுடன் வந்திருந்தேன்" என்கிறா அவர்.
அப்போது பகுதியளவில் சேதமடைந்திருந்தாலும் முழுமையான கட்டடங்களாக இருந்த தமது கோவிலில் அவர்கள் பூசை வழிபாடுகளைச் செய்ததாகவும், மீண்டும் 2013ஆம் ஆண்டில் வரும்போது அங்கு கோவில் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லாமல் முற்றாக அழிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகக் கூறுகிறார். அதோடு, "முழு ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த தமது கிராமத்தில், ராணுவம் தவிர வேறு யார் தமது ஆலயங்களை அழித்திருக்க முடியும்?" என்று அன்ரனி சுபாஷ் கேள்வி எழுப்பினார்.

போராட்டம் நடாத்தும் பொது மக்கள் வழங்கிய தரவுப்படி, 2010ஆம் ஆண்டு தமது கிராமங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டபோது சிறு சேதங்களுடன் முழுமையாகக் காணப்பட்ட 21 வழிபாட்டுத் தலங்கள் (இந்து கோவில்கள் மற்றும் கத்தோலிக்க ஆலயங்கள்) ஐந்து பாடசாலைகள், ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள், மூன்று ஆண்டுகளின் முற்றாகக் காணாமல் போய்விட்டதாகக் கூறுகின்றனர். ஆனாலும் இந்தத் தரவுகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
மக்களின் காணிகளை நிச்சயம் முழுமையாக விடுவிப்போம் எனத் தற்போதைய அரசாங்கம் கூறி வந்தாலும், மக்களின் காணிகளுக்குள் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எழுபது வயதாகும் வசந்தநாதன் சிவபாக்கியம், பலாலியில் உள்ள தனது காணியை சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்வையிட அனுமதித்தபோது தனது வீட்டை ராணுவம் இடித்துவிட்டு அவ்விடத்தில் வாழைத் தோட்டம் அமைத்து இருந்ததைத் தான் கண்டதாகவும், தற்போது தனது காணியினுள் அனுமதியற்ற பாரிய கட்டடம் ஒன்றைப் புதிதாக அமைத்து இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

போராடும் மக்களுக்கு ஆதரவாக வந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், "ஆளும் தரப்பில் இருக்கும் எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பது ஏமாற்றமாக உள்ளது'' என்றார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து யாழ் மாவட்ட அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனிடம் பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேட்டபோது, ''எமது அரசாங்கம் பதவிக்கு வந்த பின் சில மாதங்களிலேயே சில பகுதிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட்டன. அதே போல மிகுதி இடங்களை விடுவிப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன் பலாலி விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டை, இன்றைய பெறுமதிக்கு ஏற்றவாறு வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது" என்றார்.
'தேசியப் பாதுகாப்பு' - அரசின் முக்கிய வாதம்
ராணுவத் தரப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான ராணுவ முகாம்கள் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகள் உள்ள காணிகளை உடனடியாக விடுவிக்க முடியாது எனக் கூறுகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு நடந்த உயர்மட்டக் கலந்துரையாடல்களில், யாழ்ப்பாணம்-பலாலி பகுதிகளில் ராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளைப் படிப்படியாக விடுவிப்பது, புதிய எல்லைகளை நிர்ணயிப்பது, இழப்பீடு வழங்குவது மற்றும் நிர்வாகத் தடைகளை நீக்குவது குறித்துப் பேசப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. அதேநேரம், அத்தியாவசிய பாதுகாப்புக் கட்டமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காணி விடுவிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு ராணுவத்தின் கூற்றுப்படி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஆரம்பத்தில் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட 3,204 ஏக்கர் அளவிலான காணிகள் இன்னும் பாதுகாப்புத் தேவைகளுக்காக இருப்பதாகவும், அது முந்தைய அளவுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த பகுதி என்றும் தெரிவித்திருந்தது.

1,661 ஏக்கர்: புதிய பதற்றத்தின் மையம்
இந்தப் பிரச்னைக்கு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் புதிய பரிமாணம் ஒன்று ஏற்பட்டது.
நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பலாலி பகுதி தேசிய பாதுகாப்பு நோக்கில் முக்கியமான உயர் பாதுகாப்பு வளையமாக இருப்பதாகவும், அங்கு 1,661 ஏக்கர் காணிகளை ராணுவ உட்கட்டமைப்புக்காக நிரந்தரமாகக் கையகப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தனியார் காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையும் சட்ட நடைமுறையின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Sri Lanka Army Website
மேலும், பலாலி விமான நிலையத்தின் எதிர்கால விரிவாக்கத்தை முன்னிட்டும் கூடுதல் காணிகள் தேவைப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உரைதான் காணி உரிமையாளர்களிடையே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயாவிளானை பூர்வீகமாகக் கொண்ட ராமநாதன் ஐங்கரன், தமது சொந்தக் காணியில் சட்டவிரோதமாக புதிய ராணுவ மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தமது குடும்பம் உள்படத் தமது உறவினர்களான 15 குடும்பங்களின் 27 ஏக்கர் காணி ராணுவ மருத்துவமனைக்காக கையகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக "தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வரும் ராணுவ மருத்துவமனைக் கட்டடம் உள்ள நிலம், தனது மற்றும் தனது சகோதரனின் காணி" எனக் கூறினார்.
அரசின் அணுகுமுறையில் மாற்றம் உள்ளதா?
2025 ஜனவரி மாதம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்களுக்குச் சொந்தமான காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என்றும், வடக்கின் காணிப் பிரச்சினைகள் மீளாய்வு செய்யப்பட்டு அவற்றை உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
காணி விடுவிப்புத் தொடர்பில் மே மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல் (புகைப்பட உதவி: வடமாகாண ஆளுநர் அலுவலகம்)
2026 ஆகஸ்ட் 20 ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடைபெற்ற, காணி விடுவிப்புத் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல். (புகைப்பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
அதே நேரத்தில், எந்தக் காணிகள் தேசியப் பாதுகாப்புக்கு அவசியம், எவை விடுவிக்கப்படலாம் என்பதைத் தீர்மானிப்பது முப்படைகள், காவல்த்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
35 ஆண்டுகால இராணுவக் கட்டுப்பாடுகளுக்குப் பின் ஏப்ரல் 2025 இல் திறந்துவிடப்பட்ட பலாலி வீதி.

"காணி விடுவிப்பு" மட்டுமல்ல — காலக்கெடுவும் தேவை
போராட்டக்காரர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று தெளிவான காலக்கெடு.
"எந்தக் காணி விடுவிக்கப்படும்? எந்தக் காணி விடுவிக்கப்படாது? எந்த வீதிகள் திறந்துவிடப்படும்? விடுவிக்கப்படாத காணிகள், வீதிகள் ஏன் தேசிய பாதுகாப்புக்கு அவசியமானவை? அதற்கான சட்ட ஒழுங்கு என்ன? உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? அவ்வாறாயின் எப்போது? விடுவிக்கப்படும் காணிகள் எப்போது சட்டபூர்வமாக கையளிக்கப்படும்?"
இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இல்லாததே நம்பிக்கையின்மையை அதிகரிப்பதாக காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
''எமது பகுதி மக்களுக்குப் பிரதானமான தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் செல்லும் வீதியை ராணுவம் மூடி வைத்துள்ளது. அதனால் நோயாளர்கள் சுமார் 4 கி.மீ. அதிக தூரம் சுற்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ராணுவத் தேவைக்காக எமது மக்களின் காணிகளில் அனுமதியற்று மருத்துவமனை அமைக்க முடியுமானால், பொது மருத்துவமனைக்குச் செல்லும் வீதியை ஏன் திறக்க முடியவில்லை?" என்று வினவுகிறார் வயாவிளானை சேர்ந்த விமலதீசன்.
காணி விடுவிப்பு என்பது வெறுமனே ஒரு ராணுவ முகாமை அகற்றுவதற்கான முடிவல்ல என்றும், தேசியப் பாதுகாப்பு, மாற்று ராணுவக் கட்டமைப்புகள், நில அளவீடு, நிர்வாக நடைமுறைகள், இழப்பீடு, சட்ட நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டம் என்றும், அதற்குப் போதிய அவகாசம் வேண்டுமென்றும் அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு தரப்பினரிடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு வெளிப்படைத்தன்மை மிக முக்கியமானதாகிறது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், "ஜனாதிபதி, தான் முப்படையினரிடம் எந்தெந்த காணிகளை விடுவிக்கலாம் எனக் கோரியுள்ளதாகவும், அவர்கள் பட்டியலைக் கொடுத்தவுடன் அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் எனவும் கூறினார். எந்தக் காணிகளை விடுவிக்கலாம் எவற்றை விடுவிக்க முடியாது என்பதில் தெளிவற்ற நிலையிலேயே ஜனாதிபதி இருப்பதாகக் கருதுகிறேன். முப்படைகளின் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி, ராணுவத்திற்கு உத்தரவிடப் போகிறாரா அல்லது ராணுவத்தின் சொற்படி நடக்கப் போகிறாரா? மக்களின் இடங்களை விடுவிக்காமல் இழுத்தடிப்பதால் இந்த அரசாங்கம் கூறும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் எவ்வாறு ஏற்படும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களை பிபிசி தமிழ் வினவியபோது, ''அண்மையில் நடந்த காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியது, பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, நிகழ்கால பெறுமதியின் அடிப்படையிலேயே இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களது நிலங்களைப் பயன்படுத்த முடியாமற்போன இதுவரை காலத்திற்குமான ஒரு தனி இழப்பீடும் சேர்த்து ஒரு பொறிமுறையின் ஊடாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.

இன்று போராடும் மக்கள் இறுதியாகக் கேட்பது ஒரே கேள்விதான்: "எங்கள் காணி எப்போது எங்களுக்குத் திரும்பும்?"
இந்தக் கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்காததே, யுத்தம் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தப் போராட்டங்கள் தொடர முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
அந்த மக்களின் கூற்றுப்படி, "ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு முக்கியமானது. அதேபோல, அந்த நாட்டின் குடிமகனுக்குத் தனது சட்டபூர்வமான பூர்வீக நிலத்தில் வாழ்வதற்கும், தனது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும் உள்ள உரிமையும் முக்கியமானது."
இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரானவையாக அல்லாமல், இரு தரப்பும் புரிந்து கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதுதான் வடக்குக் கிழக்கின் நீண்டகால காணிப் பிரச்னைக்கு நிலையான தீர்வாக அமையும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































