சமையல் எண்ணெய்: தன்னிறைவு பெற்றிருந்த இந்தியா உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளரானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாஸ்மின் நிஹலானி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோதி இந்தியர்களை சமையல் எண்ணெய் நுகர்வை 10% குறைக்குமாறு வலியுறுத்தினார்.
மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் அந்நிய செலாவணியை சேமிப்பதற்கான ஒரு பரந்த அழைப்பின் பகுதியாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்குமாறும் நாட்டு மக்களை பிரதமர் மோதி கேட்டுக்கொண்டார்.
மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா சுமார் 19.5 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
உலகளாவிய சமையல் எண்ணெய் இறக்குமதியில், 2025-26ஆம் ஆண்டில், சுமார் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா வகிக்கிறது. உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா திகழ்கிறது.
அமெரிக்க விவசாயத் துறையின் (USDA) புள்ளிவிவரங்கள்படி, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, அமெரிக்கா ஆகியவை மிகவும் பின்தங்கியிருந்தன. ஆனால் சூழல் எப்போதும் அவ்வாறே அமையவில்லை.
'ஏறக்குறைய தன்னிறைவை அடைந்திருந்த இந்தியா'
கடந்த 1994-95ஆம் ஆண்டில், இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலை 5% என்ற அளவில் மிகக் குறைவாக இருந்தது.
வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள், 2024-25ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா தனது சமையல் எண்ணெய் நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 56% இறக்குமதியையே நம்பியிருந்தது என்பதைக் காட்டுகின்றன.
கடந்த 2024இல் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் அறிக்கையின்படி, இந்தியா 1990களின் முற்பகுதியில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் 'ஏறக்குறைய தன்னிறைவு' அடைந்திருந்தது.
ஆனால் 1990களின் நடுப்பகுதியில் இருந்து, மலிவான இறக்குமதிகள், விரைவான பொருளாதார வளர்ச்சி ஆகியவை தேவையை அதிகரித்தன. தனிநபர் சமையல் எண்ணெய் நுகர்வு உயர்ந்தது. இந்தியா உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகமாகச் சார்ந்திருக்கத் தொடங்கியது.
விளக்கப்படம் காட்டுவது போல், இந்த இறக்குமதி சார்பு நிலை 2004-05இல் 38 சதவிகிதத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து, 2015-16இல் 63% என்ற உச்சத்தை எட்டியது. பின்னர் 2024-25இல் 56% ஆகக் குறைந்தது.
சமையல் எண்ணெய்க்காக இந்தியா இறக்குமதியைச் சார்ந்திருப்பது 'நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதிப்பதாகவும்' நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், Science Photo Library
இந்தியா எந்தெந்த எண்ணெய்களை இறக்குமதி செய்கிறது?
இந்தியாவின் பயிரிடப்படும் பரப்பளவில் எண்ணெய் வித்துகள் 14.3% பங்கைக் கொண்டுள்ளன. ஆமணக்கு, குங்குமப்பூ, எள், நிலக்கடலை, கடுகு ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது.
ஆனால் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியில் பெரும்பாலும் மூன்று எண்ணெய்கள் மட்டுமே அடங்கியுள்ளன. அவை பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்.
சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் மட்டுமே 57% பங்கைக் கொண்டுள்ளது. சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் முறையே 29% மற்றும் 14% பங்கைக் கொண்டுள்ளன.
இந்தியாவின் சமையல் எண்ணெய் நுகர்வு எவ்வாறு மாறியது?
கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் சமையல் எண்ணெய் நுகர்வு முறையும் கணிசமாக மாறியுள்ளது.
இந்திய சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் (The Solvent Extractors' Association of India) தரவுகளின்படி, 2001-02ஆம் ஆண்டிலேயே பாமாயில் தான் அதிகளவில் நுகரப்படும் சமையல் எண்ணெயாக இருந்தது, இது மொத்த நுகர்வில் 29% ஆக பங்களித்தது. 2022-23ஆம் ஆண்டுக்குள், இதன் பங்கு 37.6% ஆக உயர்ந்தது.
இந்தியாவில் ஹோட்டல்கள், உணவகங்கள், கேட்டரிங் துறையில் ஆகியவை பாமாயிலை மிக அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
தின்பண்டங்கள், துரித உணவுப் பொருட்கள், பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்ற பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் வளர்ச்சியுடன் பாமாயிலுக்கான தேவையும் அதிகரித்தது.
இதே காலகட்டத்தில், ஒரு காலத்தில் இந்தியாவில் மிகக் குறைவாக நுகரப்பட்ட சமையல் எண்ணெய்களில் ஒன்றாக இருந்த சூரியகாந்தி எண்ணெய் (3.1%), 2022-23ஆம் ஆண்டுக்குள் தனது பங்கை 11.6% ஆக உயர்த்திக் கொண்டது.
கடலை எண்ணெயின் நுகர்வு 2001-02இல் 12% என்பதில் இருந்து 2022-23இல் 3% ஆகக் குறைந்தது. கடுகு எண்ணெயின் நுகர்வும் 17%-இல் இருந்து 13.6% ஆகக் குறைந்தது.

இந்தியாவின் எண்ணெய் வித்து மகசூல் இடைவெளி
உணவு தானியங்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் எண்ணெய் வித்துகள்தான் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
உலகளாவிய எண்ணெய் வித்துகள் பயிரிடப்படும் பரப்பளவில் 15-20% பங்கை இந்தியா கொண்டுள்ளது. ஆனால், உற்பத்தித் திறனில் இது முக்கிய உற்பத்தியாளர்களைவிட பின்தங்கியுள்ளது.
நிதி ஆயோக் தரவுகள், இந்தியாவில் சோயாபீன், 2020-2022 காலகட்டத்தில் ஹெக்டேருக்கு ஒரு டன் விளைச்சலைக் கொண்டிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால், உலகின் முன்னணி சோயாபீன் உற்பத்தியாளர்களில் ஒன்றான அமெரிக்கா, ஹெக்டேருக்கு 3.4 டன் விளைச்சலைக் கொண்டிருந்தது.
இந்த இடைவெளி மற்ற எண்ணெய் வித்துகளிலும் தெளிவாகத் தெரிகிறது. கடுகு விளைச்சல் ஜெர்மனியில் ஹெக்டேருக்கு 3.7 டன்னாகவும், பிரான்சில் ஹெக்டேருக்கு 3.3 டன்னாகவும் இருக்கும் நிலையில், இந்தியாவின் அதன் விளைச்சல் ஹெக்டேருக்கு 1.5 டன்னாக மட்டுமே உள்ளது.
நிலக்கடலையின் விளைச்சல், அமெரிக்காவில் ஹெக்டேருக்கு 4.5 டன்னாகவும், சீனாவில் ஹெக்டேருக்கு 3.9 டன்னாகவும் இருக்கும் வேளையில், இந்தியாவின் அதன் விளைச்சல் ஹெக்டேருக்கு 1.8 டன்னாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












