பாகிஸ்தான், சௌதி, துருக்கி முத்தரப்பு ராணுவ ஒப்பந்தம் - மத்திய கிழக்கில் மாறும் காட்சிகள்

பட மூலாதாரம், Turkish Presidency / Murat Cetinmuhurdar / Handout/Anadolu via Getty Images
சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே முக்கியமான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை சௌதியில் உள்ள மெக்காவில் கையெழுத்தானது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அறிக்கையின்படி, சௌதி அரேபியாவின் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் ஒரு மாநாட்டின்போது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு உறுப்பு நாடு மீது நடத்தப்படும் தாக்குதலை அனைவரின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாக கருதுவதற்கும் அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மூன்று நாடுகளும் ஒப்புக்க்கொண்டன.
சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது, அதன்படி எந்தவொரு நாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் இரு நாடுகளும் பதிலடி கொடுக்கும். தற்போது அந்த ஒப்பந்தத்தில் துருக்கியும் இணைந்துள்ளது.
செளதி அரேபியாவிடம் நிதி பலம் உள்ளது. பாகிஸ்தானிடம் அணுசக்தி திறன், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் மனித வளங்கள் உள்ளன, அதே நேரத்தில் துருக்கியிடம் ராணுவ அனுபவம் உள்ளது மற்றும் வளர்ச்சியடைந்த பாதுகாப்பு துறையும் உள்ளது.
இந்தச் சந்திப்பு, இந்த மூன்று பிராந்திய சக்திகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நேரத்தில் நடக்கிறது.
மேற்கு ஆசியாவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டது. இந்தியா இஸ்ரேலின் நட்பு நாடு, அதே வேளையில் பாகிஸ்தான் இஸ்ரேல் என்ற ஒன்று இருப்பதையே ஏற்பதில்லை.
துருக்கி உடனான பாகிஸ்தானின் நட்பு இந்தியாவிற்குச் சாதகமாகப் பார்க்கப்படுவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
என்ன நடந்தது?
மூன்று நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
"சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையேயான சிறப்பு உறவுகளை ஆய்வு செய்த மெக்கா அல்-முகாரம்மா கூட்டு பாதுகாப்பு உச்சி மாநாடு நடத்தப்பட்டது. முகமது பின் சல்மான் அப்துல் அசீஸ், ரெசெப் தயிப் எர்துவான் மற்றும் ஷெபாஸ் ஷெரீஃப் மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், தங்களின் கூட்டு பாதுகாப்பை பலப்படுத்தி, பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பாலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, பாதுகாப்பான மற்றும் செழிப்பான எதிர்காலத்தை நோக்கமாக கொள்வதில் மூன்று நாடுகளின் கூட்டு அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த அறிக்கையில், "இந்த ஒப்பந்தத்தின் விதிகளின்படி, மூன்று நாடுகளின் எந்தவொரு நாட்டின் மீதும் நடத்தப்படும் ஆயுதமேந்திய தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாக கருதப்படும். மேலும் இந்த ஒப்பந்தம் மூன்று நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து பகுதிகளையும் பலப்படுத்துவதற்கும் வழிவகை செய்கிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கத்தாரின் லூசைல் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணர் முகமது மஜார் ஷாஹின் எக்ஸ் தளத்தில், ''இந்த ஊகங்கள் உண்மையாக நிரூபணமானால், மத்திய கிழக்கு ஒரு புதிய சகாப்தத்தில் நுழையக்கூடும், அங்கு பல விஷயங்கள் மாறக்கூடும்.'' என்று குறிப்பிட்டிருந்தார்.
செங்கடல், பாப் அல்-மந்தெப் நீரிணை மற்றும் ஏடன் வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளைப் பாதுகாப்பதற்காக செளதி அரேபியா ஒரு பல்தேசிய கடல்சார் பாதுகாப்பு கூட்டணியை அறிவித்த ஒரு வாரத்துக்குப் பிறகு எர்துவானின் இந்தப் பயணம் அமைகிறது. ஏமனின் இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேட்டோ (NATO) உறுப்பினரான துருக்கி மற்றும் அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் செளதி அரேபியா தலைமையிலான இந்த முயற்சிக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை தெரிவித்த 14 நாடுகளில் அடங்கும்.
கடந்த மாதம் ஹூதிகள் செளதி அரேபியாவுக்கு விடுத்த முற்றுகை அச்சுறுத்தல்களை துருக்கி கண்டித்ததுடன், செங்கடலில் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து ரியாத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
பயணத்தின் பின்னணிச் செய்தி
துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹாகான் ஃபிடான், ஜோர்டானில் எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் பத்ர் அப்தெல்அட்டி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் மற்றும் செளதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகே இந்தப் பயணம் நடக்கிறது. இது நான்கு நாடுகளின் கூட்டணியின் ஐந்தாவது சந்திப்பாகும்.
மார்ச் மாதம் ரியாத்தில் நடந்த சந்திப்புகளுக்குப் பிறகு 'ஆர்-4 வழிமுறை' (R-4 Mechanism) தொடங்கியது. இதன் நோக்கம் அமெரிக்கா-இரான் போரின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவது, ராஜீய முயற்சிகளில் ஒருங்கிணைப்பை அதிகரிப்பது மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள துருக்கி, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது ஆகும்.
இந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரிக்க விரிவான பிராந்திய ஆதரவைத் திரட்ட துருக்கி முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. பிராந்தியத்தில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதன் அதிகரித்து வரும் செல்வாக்கு நிலையற்ற தன்மையை உருவாக்குவதாக துருக்கி நம்புகிறது.
வியாழக்கிழமை அங்காராவில் சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் அசாத் அல்-ஷிபானியுடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஹாகான் ஃபிடான் கூறுகையில், "பிராந்திய ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் முக்கிய தரப்புகளில் இஸ்ரேலும் ஒன்று" என்றும், அது விரிவாக்க லட்சியங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
வளைகுடா நாடுகளுடன் பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிக்கவும் கூட்டு பாதுகாப்பு உற்பத்தியை விரிவுபடுத்தவும் துருக்கி முயன்று வரும் நேரத்தில் இந்த அதிகரித்து வரும் பிராந்திய ஒத்துழைப்பும் வெளிப்படுகிறது.
2023ஆம் ஆண்டில், துருக்கியின் பாதுகாப்பு நிறுவனமான பேகாரிடமிருந்து (Baykar) ட்ரோன்களை வாங்க செளதி அரேபியா ஒரு பெரிய ஒப்பந்தம் செய்தது. இதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே ஆளில்லா வான்வழி ஊர்தி உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் செளதி அரேபியாவில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்கள் துருக்கியின் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்றுமதித் தொகுப்பாகக் கருதப்படுகின்றன.
துருக்கியின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள், துருக்கிக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 8.5 பில்லியன் டாலர்களை எட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வேகமான முறையில் மேம்பட்டு வரும் உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒரு முக்கியமான அடித்தளமாக உருவெடுத்துள்ளது.
எர்துவான் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் செளதி அரேபியாவுக்குப் பயணம் செய்தார். அந்தப் பயணத்தின்போது, அவர் ரியாத்தில் இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்தார், அடுத்த நாள் எகிப்து பயணமாகப் புறப்பட்டார்.
துருக்கி இந்தக் கூட்டணியின் உறுப்பினராகக் கையெழுத்திட்டால், அது சுன்னி முஸ்லிம் உலகின் தலைமைக்காக முன்னதாகப் போட்டியாளர்களாக இருந்த துருக்கி மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும்.
பல ஆண்டு கசப்பான உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளிய பிறகு, இரு நாடுகளும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் பணியாற்றி வருகின்றன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































