You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காலணிகளை கழற்றாமல் வீட்டிற்குள்ளேயும் அணிந்தால் நோய் பாதிப்பு அபாயம் யாருக்கு அதிகம்?
- எழுதியவர், கேட்டி பௌவி
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பெட்ஜா ட்ரிஃபுனோவிச், பிற்காலத்தில் தனது மனைவியாகப் போகும் பெண்ணின் வீட்டிற்கு முதல் முறையாகச் சென்றபோது, முற்றிலும் ஆச்சரியப்பட்டார். அவர்கள் முன்வாசல் வழியாக உள்ளே நுழைந்தபோது, வீட்டிற்குள் காலணிகளை அணிந்திருக்கலாம் என்று சோஃபியா அவரிடம் கூறினார்.
"தூங்கும் இடத்தில் காலணிகளை அணிந்து இருப்பதுதான் எனக்கு அருவருப்பாகத் தோன்றியது" என்று தான் நினைத்ததாக பெட்ஜா நினைவுகூர்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த சோஃபியாவும், செர்பியாவை பூர்வீகமாகக் கொண்ட பெட்ஜா அவரது வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தனது காலணிகளைக் கழற்றியதைக் கண்டபோது குழப்பமடைந்தார்.
"அவர்களது வீட்டில் என்னுடைய பாதங்களின் வாசனை நுகரப்பட வேண்டுமா? நான் என் ஸ்னீக்கர் காலணிகளை அணிந்துகொண்டே இருக்கிறேன்" என்றே தான் அந்த நேரத்தில் உணர்ந்ததாகக் கூறினார்.
வீட்டிற்குள் காலணிகள் அணிவது குறித்த இந்தத் தம்பதியரின் மாறுபட்ட பழக்கவழக்கங்கள், உலகம் முழுவதும் பெரிய விவாதத்திற்குரிய ஒரு விஷயமாக உள்ளாது. தங்கள் விவாதத்தை இணையத்தில் பகிர்ந்த பின்னரே, இந்தக் கருத்து வேறுபாடு எவ்வளவு பொதுவானது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
பெட்ஜா தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் செருப்புகளை அணிந்திருக்க, சோஃபியா பயிற்சி காலணிகளை அணிந்து இருந்ததைக் காட்டும் ஒரு டிக்டோக் காணொளிக்கு நூற்றுக்கணக்கான கருத்துகள் வந்தன. யாருடைய அணுகுமுறை தூய்மையானது, சுகாதாரமானது என்பது குறித்து இணையத்தில் மக்கள் விவாதித்தனர்.
அப்படியெனில், உண்மையில் யார் சொல்வது சரி? வீட்டிற்குள் வெளிப்புறக் காலணிகளை அணிவது உடல்நல அபாயத்தை ஏற்படுத்துமா?
பிபிசி உலக சேவை ஒரு நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்குச் சென்று இதற்கான பதிலைக் கண்டறிய முயன்றது.
காலணி விஷயத்தில் உள்ள கலாசார வேறுபாடுகள்
ஒரு வீட்டிற்குள் நுழையும்போது காலணிகளைக் கழற்றுவதா அல்லது அணிந்திருப்பதா என்பது பெரும்பாலும் ஒருவரது கலாசாரம் மற்றும் அவர்கள் வளர்ந்த சூழலை அடிப்படையாகக் கொண்டது.
மத்திய கிழக்கு, ஆசியா, பால்கன் ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த பல நாடுகளில், ஒருவரின் வீட்டிற்குள் காலணிகளுடன் நுழைவது மரியாதையற்ற அல்லது நாகரிகமற்ற செயலாகக் கருதப்படுகிறது. மறுபுறம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில், விருந்தினரைத் தங்கள் காலணிகளைக் கழற்றுமாறு கேட்பது சில நேரங்களில் கண்ணியமற்ற செயலாகக் கருதப்படலாம்.
காலணிகள் குறித்தான மிகக் கடுமையான மரபுகளைக் கொண்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று. பெரும்பாலான ஜப்பானிய வீடுகளில் 'ஜென்கான்' (genkan) எனப்படும் ஒரு பிரத்யேக நுழைவுப் பகுதி இருக்கும். இந்தப் பகுதி வெளிப்புற உலகுக்கும் வீட்டின் உட்புறத்திற்கும் இடையே உள்ள எல்லையாக அமைகிறது. இந்தப் பகுதியைத் தாண்டி, வெளியே அணியும் காலணிகளுடன் வீட்டிற்குள் செல்ல அனுமதி கிடையாது.
ஒரு சுற்றுலாப் பயணி வீட்டிற்குள் நுழையும் முன்பாக காலணிகளைக் கழற்ற மறந்துவிட்டால், மக்கள் பெரும்பாலும் உடனடியாக எதிர்வினையாற்றுவார்கள்.
லண்டனில் உள்ள எஸ்.ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை மூத்த விரிவுரையாளரான முனைவர் ஃபேபியோ ஜிஜி இதைப் பற்றிப் பேசியபோது, "உடனடியாக ஒரு வலுவான எதிர்வினை இருக்கும். மக்கள் பதற்றத்துடன் உங்களை நோக்கி வந்து, 'வேண்டாம், நில்லுங்கள், உங்கள் காலணிகளைக் கழற்றுங்கள்' என்று கூறுவார்கள்," என்று தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்த எதிர்வினை வெறும் தூய்மை சார்ந்தது மட்டுமல்ல, இதற்கு ஆழமான கலாசார, குறியீட்டு அர்த்தம் உள்ளது.
அதாவது, "குறியீட்டு ரீதியாகப் பார்த்தால், வெளிப்புற உலகம் என்பது அசுத்தம், ஆபத்து மற்றும் மாசுகளை உண்டாக்கும் விஷயங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது" என்று அவர் விளக்கினார்.
மேலும், "வீட்டிற்குள் இருக்கும் இடத்தை மக்கள் தூய்மையாகவும் புனிதமாகவும் வைத்திருக்க விரும்புவர். தூய்மை என்பது அடைய வேண்டிய ஒரு விஷயமாக கருதப்படுகிறது. பல மத நடைமுறைகளும் இந்தக் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன" என்றும் அவர் கூறினார்.
சுருக்கமாகக் கூறுவதெனில், பல கலாசாரங்களில் காலணிகளைக் கழற்றுவது என்பது தரையைச் சுத்தமாக வைத்திருப்பதற்கான ஒரு பழக்கம் மட்டுமே இல்லை. அது, தூய்மையான, அமைதியான, தனிப்பட்ட இடத்திற்குள் நுழைவதற்கு முன், வெளி உலகின் அழுக்கு மற்றும் பிரச்னைகளை வெளியிலேயே விட்டுவிடுவதைக் குறிக்கிறது என்று முனைவர் ஜிஜி விளக்கினார்.
காலணிகளில் எத்தகைய பாக்டீரியாக்கள் இருக்கும்?
காலணிகளில் என்ன வகையான நுண்ணுயிரிகள் இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிய, பிரிட்டனின் பிரைட்டன் நகரில் ஒரு முழு வார இறுதி நாட்களில் அணியப்பட்ட ஒரு ஜோடி விளையாட்டுக் காலணிகள் நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பிரைட்டன் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலாளர் முனைவர் சாரா பிட், பஞ்சு துடைப்பான்கள் (swabs) மூலமாக காலணிகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார். பின்னர், அந்த மாதிரிகளில் உள்ள பாக்டீரியாக்கள் வளர்வதற்காக, அவை பெட்ரி டிஷ்களில் இரவு முழுவதும் அப்படியே வைக்கப்பட்டன.
மறுநாள் நுண்ணோக்கியின் கீழே அந்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது, ஆய்வாளர்கள் பல்வேறு வகையான பாக்டீரியாக்களை கண்டறிந்தனர்.
அவ்வாறு கண்டறியப்பட்ட பாக்டீரியாக்களில் ஒன்று 'ஸ்டெஃபைலோகோகஸ் ஆரீயஸ்'. இது 'ஸ்டேஃப்' தொற்றுக்குக் காரணமான பாக்டீரியாவாகும். ஆரோக்கியமான நபர்களுக்கும்கூட இந்த பாக்டீரியா மிகவும் ஆபத்தானதாக அமையக்கூடும் என்று முனைவர் பிட் விளக்கினார்.
அதோடு, "உங்கள் தோலில் கீறல் ஏற்பட்டு, அந்த இடத்தில் 'ஸ்டெஃபைலோகோகஸ் ஆரீயஸ்' நுழைந்தால், அது சீழ் நிறைந்த பெரிய கட்டியை உருவாக்கக்கூடும்," என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு, நிமோனியா, ரத்த ஓட்டத்தில் தொற்று போன்ற தீவிரமான பிரச்னைகளையும் இந்த பாக்டீரியா ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.
அந்தக் காலணிகளில் 'ஸ்டெஃபைலோகோகஸ் எபிடெர்மிடிஸ்' எனப்படும் அதனுடன் தொடர்புடைய மற்றொரு பாக்டீரியாவும் இருந்தது. இந்த பாக்டீரியா இயற்கையாகவே மனிதத் தோலில் வாழக்கூடியது. ஆரோக்கியமானவர்களுக்கு இது பொதுவாகப் பிரச்னைகள் எதையும் ஏற்படுத்தாது என்றாலும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கு இது தீவிரமான தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும். மருத்துவமனையில் தங்கியிருக்கும்போது நோயாளிகளுக்குத் தொற்றை ஏற்படுத்தக்கூடிய பொதுவான பாக்டீரியாவாகவும் இது உள்ளது.
மனித அல்லது விலங்குக் கழிவுகளில் பொதுவாகக் காணப்படும் 'ஈ. கோலை' போன்ற மலக்கழிவு சார்ந்த பாக்டீரியாக்கள் உள்படப் பலவிதமான தீங்கு விளைவிக்கும் கிருமிகளை காலணிகள் சுமந்திருக்கக் கூடும் என்பதை மற்ற அறிவியல் ஆய்வுகள் மற்றும் மதிப்பாய்வுகள் காட்டுகின்றன.
பயோமெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தின் தலைவரான முனைவர் சாரா பிட் கூற்றுப்படி, "உலகம் முழுவதும் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் இருக்கலாம்."
அதாவது, வெளியே பயன்படுத்தப்படும் காலணிகள் சாலைகள், பொது இடங்கள் மற்றும் பிற பரப்புகளில் இருந்து பலவிதமான நுண்ணுயிரிகளைச் சேகரித்து, அவற்றை நம் வீட்டிற்குள் கொண்டு வரக்கூடும்.
காலணிகளில் உள்ள கிருமிகளால் நோய் பாதிப்பு அபாயம் யாருக்கு அதிகம்?
காலணிகள் மூலம் வெளியில் இருந்து பாக்டீரியாக்கள் எளிதாக நம் வீடுகளுக்குள் கொண்டு வரப்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கிருமிகள் வீட்டிற்குள் உயிர் வாழக்கூடும் என்பதற்கும், அங்கு வசிக்கும் மற்றவர்களுக்குத் தொற்றுகளைப் பரப்பக்கூடும் என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக முனைவர் சாரா பிட் கூறுகிறார்.
குறிப்பாக, கம்பளங்கள் போன்ற வெப்பமான பரப்புகளில் சில நுண்ணியிரிகள் பல நாட்கள் அல்லது அதற்கும் மேல்கூட உயிர்வாழக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சிறிது காலம் கடந்த பிறகும், அதே மேற்பரப்பில் மீண்டும் மனிதர்கள் நடப்பது "சில பாக்டீரியாக்களை மீண்டும் செயல்படத் தூண்டலாம்." இந்தச் செயல்முறை பாக்டீரியாக்களை மீண்டும் செயல்திறன் மிக்கவையாக மாற்றி, மனிதர்களுக்குத் தொற்றை ஏற்படுத்தும் திறனைப் பெறச் செய்யலாம்.
"நீங்கள் ஒரு குழந்தையுடன் கம்பளத்தின் மீது தவழ்ந்து செல்லும்போது, கம்பளத்தை அழுத்தினால், அந்தத் தொற்றைச் சுமந்திருக்கும் பாக்டீரியா மீண்டும் செயல்பட வித்திடுகிறீர்கள்," என்று முனைவர் பிட் உதாரணத்துடன் விளக்கினார்.
குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பாற்றலை பாதிக்கும் உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டவர்கள் போன்ற பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். ஆயினும், ஆரோக்கியமான நிலையில் இருக்கும் பெரும்பாலான பெரியவர்களுக்கு இந்த ஆபத்து மிகவும் குறைவு.
சில நுண்ணுயிரிகளுடன் தொடர்புகொள்வது உடல் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்க உதவும் என்றும் முனைவர் பிட் கூறுகிறார். ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலேயே பல வகையான பாக்டீரியாக்களின் தொடர்புக்கு ஏற்கெனவே ஆளாகிறார்கள் என்பதையும், எனவே பாதுகாப்பை உருவாக்க அழுக்குக் காலணிகள் மூலம் கூடுதல் பாக்டீரியாக்களின் தொடர்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
வீட்டிற்குள் காலணியை அணியலாமா? அணியக் கூடாதா?
வீட்டிற்கு உள்ளே காலணிகளை அணியலாமா என்ற கேள்விக்கான விடையை, 'பெட்ரி டிஷ்' சோதனையின் முடிவுகள் மூலம் அறியலாம் என்றார் முனைவர் சாரா பிட்.
அதன்படி, "வீட்டிற்குள் காலணிகளை அணிவது அருவருப்பானது மட்டுமல்ல, அது உண்மையான சுகாதார அச்சுறுத்தலும்கூட என்பது தெரிய வருவதாக," அவர் கூறுகிறார். எனவே, மக்கள் வீட்டிற்கு வந்தவுடன் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
அதோடு, "உலகின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், வீட்டிற்கு வந்தவுடன் கண்டிப்பாக காலணிகளைக் கழற்றிவிட வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார்.
இருப்பினும், யாரேனும் வீட்டிற்குள் காலணிகளை அணிந்து கொண்டேயிருக்க விரும்பினால், நுழைவாயில்களில் 'டோர்மேட்' எனப்படும் கால் துடைப்பான்களைப் பயன்படுத்துவதும், தரைவிரிப்புகளைத் தவிர்ப்பதும் வீட்டிற்குள் வரும் பாக்டீரியாக்களின் அளவைக் குறைக்க உதவும் என்று அறிவுறுத்துகிறார் முனைவர் பிட்.
அதுமட்டுமின்றி, வீட்டைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டுமெனவும் அவர் பரிந்துரைக்கிறார். "வாரத்திற்கு ஒரு முறையேனும் வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்வது சிறந்தது. பாக்டீரியா, தூசி, அழுக்கு ஆகியவற்றின் தாக்கத்தைக் கட்டுக்குள் வைக்க அது போதுமானதாக இருக்கும்" என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையில், தற்போது தம்பதிகளாக இருக்கும் சோஃபியா மற்றும் பெட்ஜா, தங்கள் மாறுபட்ட பழக்கவழக்கங்களுக்கு இடையே ஒரு சமரசப் பாதையைக் கண்டறிந்துள்ளனர்.
"அடிப்படையில் நான் எப்போதும் 'ஸ்னீக்கர்' வகை காலணிகளை அணிந்து கொண்டிருக்கவே விரும்புவேன். ஆனால் செர்பியா செல்லும்போது, அங்குள்ள வழக்கப்படி, 'ஸ்லிப்பர்' வகை காலணிகளைத்தான் அணிய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்," என்று சோஃபியா கூறுகிறார்.
அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் இருக்கும்போது, சோஃபியா வீட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய, வெளியே பயன்படுத்தப்படாத சிறப்பு 'இண்டோர் ஸ்னீக்கர்களை' அணிகிறார். கால்களில் சற்று கனமான காலணிகளை அணிந்திருப்பது தனக்கு சிறப்பான உணர்வைத் தருவதாகவும், ஏனெனில் அப்படியான சூழலிலேயேதான் தாம் வளர்ந்ததாகவும் அவர் கூறுகிறார்.
பெட்ஜாவும் சோஃபியாவின் சில பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். "அவசரமான நேரங்களில், காலணிகளைக் கழற்றாமலே வீட்டிற்குள் நடந்து செல்லும் தருணங்களும் உண்டு" என்கிறார் அவர்.
தாங்கள் ஒருவருக்கொருவர் கலாசாரத்தை முழுமையாக மாற்றிக் கொள்ள முயலவில்லை என்று சோஃபியா விவரித்தார். "என்னை முழுமையாக செர்பியராகவோ அல்லது பெட்ஜாவை முழுதாக அமெரிக்கராகவோ மாற்ற நாங்கள் முயலவில்லை" என்று அவர் கூறினார்.
"நாங்கள் இருவரும் தனித்தனி அடையாளங்களைக் கொண்டவர்கள், அவற்றை ஒன்றிணைக்கவே முயல்கிறோம்" என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு