விண்வெளிக்கு 'டாக்ஸி சேவை' வழங்கும் இலக்கு: விக்ரம்-1 ராக்கெட்டின் முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமையன்று 'விக்ரம்-1' ஏவப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமையன்று 'விக்ரம்-1' ஏவப்பட்டது.
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது, ஒரு டாக்ஸியை அழைப்பது போல எளிதானதாக இருந்தால் எப்படி இருக்கும்?

இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, சனிக்கிழமை தனது முதல் சுற்றுப்பாதை ஏவுதலை வெற்றிகரமாக முடித்ததன் பின்னணியில் இந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது.

சமீபத்தில் 1.1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டி, இந்தியாவின் முதல் விண்வெளித் தொழில்நுட்ப 'யூனிகார்ன்' நிறுவனமாக மாறிய 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து 'விக்ரம்-1' ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

ஏழு அடுக்கு மாடி உயரமுள்ள இந்த ராக்கெட், இந்திய நேரப்படி மதியம் 12:05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிட பயணத்தில் 280 மைல்கள் (450 கி.மீ) பயணம் செய்து, அது பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையை அடைந்தது.

சுற்றுப்பாதையில் ராக்கெட்டைச் செலுத்திய முதல் இந்திய தனியார் நிறுவனம் ஸ்கைரூட் ஆகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, சுற்றுப்பாதையில் ராக்கெட்டுகளைச் செலுத்தக்கூடிய தனியார் நிறுவனத்தைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது.

"விக்ரம்-1 டெஸ்ட் ஃப்ளைட்-1 சுற்றுப்பாதையை அடைந்துவிட்டது... வரலாறு படைக்கப்பட்டுள்ளது" என்று அந்த நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த 'விக்ரம்-1' ராக்கெட்டின் வெற்றி, "விண்வெளிக்கான டாக்ஸி சேவை" என்ற தனது இலக்கை அடைய ஸ்கைரூட்டை இன்னும் நெருக்கமாக்கியுள்ளது. இந்தச் சேவையின் மூலம், நிறுவனங்கள் ஒரு ராக்கெட்டை வாடகைக்கு எடுத்து, "செயற்கைக்கோளை நிலைநிறுத்த அல்லது விண்வெளி நிலையத்திற்குச் செல்ல, சுற்றுப்பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல முடியும்."

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் விக்ரம் சாராபாயின் பெயர் இந்த ராக்கெட்டுக்குச் சூட்டப்பட்டது.

பட மூலாதாரம், Skyroot Aerospace

படக்குறிப்பு, இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் விக்ரம் சாராபாயின் பெயர் இந்த ராக்கெட்டுக்குச் சூட்டப்பட்டது.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாரபாயின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட், சிறிய அளவிலானதாகும். இது 350 கிலோ வரையிலான சுமைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று, ஏவுதலுக்கு முன்பு பிபிசியிடம் ஸ்கைரூட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தனா தெரிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இன்றைய சூழலில் விண்வெளிக்கான அணுகல் என்பது ஒரு "பெரிய தடையாக உள்ளது, செயற்கைக்கோள் இயக்குபவர்கள் ஏவுதலுக்கான வாய்ப்பிற்காக மாதக்கணக்கிலும் அல்லது ஆண்டுகணக்கிலும் காத்திருக்க வேண்டியுள்ளது" என்றும், இந்த நிலைமையை தங்கள் நிறுவனம் மாற்றும் என்று சந்தனா கூறுகிறார்.

சிறிய அளவிலான சுமைகளுக்காக பிரத்யேக ஏவுதல் பயணங்களை மேற்கொள்வதன் மூலம், செயற்கைக்கோள் ஏவுதலுக்கான நீண்ட காத்திருப்பு காலத்தைக் குறைக்க ஸ்கைரூட் இலக்கு வைத்துள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.

குறிப்பிட்ட கால அட்டவணையில் பறக்கும் பெரிய ராக்கெட்டுகளில் இடத்தைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் செயற்கைக்கோள் மற்றும் அதற்குத் தேவையான சுற்றுப்பாதைக்கு ஏற்ப ஒரு பயணத்தை முன்பதிவு செய்யலாம் - இது ரயிலுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக டாக்ஸியைப் பயன்படுத்துவது போன்றது.

"நீங்கள் ஒரு நண்பரின் வீட்டிற்குச் செல்ல விரும்பினால், உங்களுக்கு ரயில் தேவையில்லை, நீங்கள் ஒரு டாக்ஸி அல்லது ஊபரை முன்பதிவு செய்கிறீர்கள். நாங்கள் விண்வெளிக்கான டாக்ஸி சேவையை வழங்குகிறோம். இதை ஒரு செயற்கைக்கோளை நிலைநிறுத்த அல்லது விண்வெளி நிலையத்திற்குச் செல்ல, சுற்றுப்பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பயணம் செய்யப் பயன்படுத்தலாம்," என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் 'ராக்கெட் லேப்' நிறுவனத்தைப் போலவே ஸ்கைரூட்டின் இந்த மாதிரி உள்ளது; அந்த நிறுவனமும் சிறிய அளவிலான ஏவுதல் வாகனங்களை வழங்கி வருகிறது.

'ஆக்மன்' (சமஸ்கிருதத்தில் 'வருகை' என்று பொருள்) என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் இந்த சோதனை ஏவுதல் பயணம், ஆறு சுமைகளைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.

அவற்றில் விண்வெளிக் குப்பைகளை அகற்றுவதற்கான ரோபோட்டிக் கை, புவி கண்காணிப்பு கேமரா மற்றும் ஜெர்மன் நிறுவனத்தின் செயற்கைக்கோள் உள்ளிட்ட அறிவியல் கருவிகள் அடங்கும்.

ஆனால், இந்த ஏவுதலின் சுமைகளில் இந்தியாவில் அதிக கவனத்தை ஈர்த்த இரண்டு குறியீட்டு பொருட்களும் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் ஒன்று, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களால் செய்யப்பட்ட தாமரை மலர். மற்றொன்று, நுண்ணிய தங்க ராக்கெட் வடிவம், அதில் இந்தியாவின் மூன்று புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் மிகச் சிறிய சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அரிசி மணியை விடச் சிறியதான இந்தச் சிற்பங்கள், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சி.வி. ராமன், விண்வெளிப் பொறியாளரும் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் விக்ரம் சாரபாய் ஆகியோருக்கு மரியாதை செலுத்துகின்றன.

"நாங்கள் இந்திய விண்வெளித் திட்டத்தால் தான் இருக்கிறோம். எங்கள் ஆரம்பகால தொலைநோக்காளர்களின் தோள்களில் நின்றுதான் நாங்கள் வளர்ந்துள்ளோம். இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை உருவாக்கிய மூன்று சிறந்த விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இதைச் செய்துள்ளோம்," என்று சந்தனா விளக்கினார்.

'காஸ்மிக் ப்ளூம்' என்று அழைக்கப்படும் இந்த வைரத் தாமரையை 'காஸ்மோஸ் டைமண்ட்ஸ்' நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது விண்வெளிக்கான ஒரு கலைஞரின் மரியாதை என்றும், இந்தியாவின் படைப்பாற்றலைக் கொண்டாடுகிறது என்றும் அவர் கூறினார்.

பிரபலமான குழந்தைகள் பாடலான 'ட்விங்கிள், ட்விங்கிள்' வரிகளில் வரும் "வானத்தில் வைரத்தைப் போல" (like a diamond in the sky) என்ற வரியை இது நம் அனைவருக்கும் நினைவூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம்-1 ராக்கெட் எடுத்துச் சென்ற பொருட்களுள் 'வைரத் தாமரை' ஒன்றும் அடங்கும்.

பட மூலாதாரம், Skyroot Aerospace

படக்குறிப்பு, விக்ரம்-1 ராக்கெட் எடுத்துச் சென்ற பொருட்களுள் 'வைரத் தாமரை' ஒன்றும் அடங்கும்.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஏவுதல், அடுத்த ஆண்டு வணிக ரீதியாகச் செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன்பாக, இந்த ஆண்டு ஸ்கைரூட் திட்டமிட்டுள்ள இரண்டு சோதனை ஏவுதல்களில் முதலாவதாகும்.

"எங்கள் தொழிற்சாலை ஹைதராபாத்தில் உள்ளது, அங்கு மாதத்திற்கு ஒரு ராக்கெட்டை உருவாக்கும் திறன் எங்களிடம் உள்ளது," என்று சந்தனா தெரிவித்தார்.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது, இஸ்ரோவில் சக ஊழியர்களாக இருந்த பவன் குமார் சந்தானா மற்றும் நாகா பரத் டாகா ஆகியோர் தங்கள் பணியை விட்டு விலகி, செயற்கைக்கோள்களுக்கான ராக்கெட் உதிரிபாகங்களை உருவாக்கும் நோக்கில் இந்த விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினர்.

2020-ஆம் ஆண்டில், விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா திறந்துவிட்டது. ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்கவும், இஸ்ரோவின் ஏவுதளங்களைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கியது. இதன் மூலம், உலகளாவிய வணிகச் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பைத் தற்போதுள்ள 2 சதவீதத்திலிருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் 10 சதவீதமாக உயர்த்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்பிறகு, இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால், அவற்றில் மிகவும் வெற்றிகரமான நிறுவனமாகவும், இந்தத் துறையில் உள்ள ஒரே 'யூனிகார்ன்' நிறுவனமாகவும் ஸ்கைரூட் நீடிக்கிறது.

நவம்பர் 2022-இல், இந்தியாவிலேயே தனியாரால் உருவாக்கப்பட்ட முதல் துணை சுற்றுப்பாதை ராக்கெட்டை ஏவியபோது, இந்த நிறுவனம் முதன்முதலில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

இந்தப் பயணத்தில் எடுத்துச் செல்லப்படும் கருவிகளில், விண்வெளிக் குப்பைகளை அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ கரம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், Skyroot Aerospace

படக்குறிப்பு, இந்தப் பயணத்தில் எடுத்துச் செல்லப்படும் கருவிகளில், விண்வெளிக் குப்பைகளை அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ கரம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரோ மேற்கொண்ட சந்திரன், செவ்வாய் மற்றும் சூரியன் குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் விண்வெளித் திட்டம் கவனத்தைப் பெற்றுள்ள சூழலில் சனிக்கிழமை இந்த ஏவுதல் நடந்துள்ளது.

அடுத்த ஆண்டு விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பவும், 2028-ஆம் ஆண்டிற்குள் வெள்ளி கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்பவும், 2035-ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஸ்கைரூட்டின் இந்த 'டாக்ஸி சேவை' இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களுக்கும் பயன்படக்கூடும். ஆனால், ''எங்களுடைய வாடிக்கையாளர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய சந்தையில் இருந்தே வருவார்கள்" என்று சந்தனா கூறுகிறார்.

"விவசாயம் மற்றும் மீன்வளம் முதல் பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு, இணைப்பு, வழிசெலுத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு என கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் சார்ந்திருக்கும் சேவைகளுக்கு ஆதரவளிக்கும் செயற்கைக்கோள்கள் இதில் அடங்கும். எனவே, இதில் உள்ள பொருளாதார வாய்ப்பு மிகப்பெரியது."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு