கோர வெள்ளத்தின் பாதிப்புகளுக்கு ஐ.நா.விடம் 20 மில்லியன் டாலர் கேட்க நேபாள அரசு முடிவு

கடந்த மாதம் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, கடந்த மாதம் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்
    • எழுதியவர், கோ ஈவ்
    • பதவி,
    • எழுதியவர், நவின் சிங் கட்கா
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த மாதம் நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்துடன் காலநிலை மாற்றத்தை இணைத்துக் காட்டும் புதிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, ஐ.நா. சபையின் நிதி உதவியைக் கோர நேபாளம் திட்டமிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவும் ஐ.நா.வின் 'இழப்பு மற்றும் பாதிப்புகளுக்கான நிதியத்தில்' இருந்து சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் கோர நேபாளம் விரும்புவதாக பிபிசிக்கு தெரிய வந்துள்ளது.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்தப் பேரிடரில் சுமார் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதன்கிழமை நிலவரப்படி 6,150 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வேர்ல்ட் வெதர் ஆட்ரிபியூஷன் என்ற ஆய்வுக் குழுவின் ஆய்வறிக்கையில், கடந்த மாதம் நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தைத் தூண்டிய பாறை மற்றும் பனிப்பாறைச் சரிவில் காலநிலை மாற்றம் குறிப்பிடத்தக்க பங்கு வகித்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், லண்ட இம்பீரியல் கல்லூரியின் காலநிலை ஆய்வாளருமான முனைவர் ஃப்ரீடெரிகே ஒட்டோ, "இந்தப் பேரிடருக்கான சூழலை உருவாகுவதில் மனிதச் செயல்பாடுகளால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்திற்குப் பங்குண்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்றார்.

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், நகரங்களையும் கிராமங்களையும் கடுமையாகப் பாதித்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதுடன், மின்சார உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் மலையின் உச்சிப் பகுதிக்கு அருகே இருந்த பாறைச் சுவரும் பனிப்பாறைத் துண்டுகளும் இடிந்து விழுந்ததே இந்த வெள்ளத்திற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நேபாள பெருவெள்ளத்திற்கு பிறகு இன்னமும் 6,000-க்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேபாள பெருவெள்ளத்திற்குப் பிறகு இன்னமும் காணாமல் போன 6,000க்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர்

இந்தப் பேரிடர், அதிகரித்த வெப்பநிலை, மெலிந்து கொண்டிருக்கும் பனிப்பாறைகள், உருகும் நிரந்தர உறைமண், ஏற்கெனவே இருந்த நிலவியல் பலவீனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கிய "கூட்டு நிகழ்வு" என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

ஆய்வின்படி, அந்தப் பகுதியில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் வெப்பநிலை, "காலநிலையின் மீது மனிதர்களின் தாக்கம்" காரணமாக சராசரியைவிட சுமார் 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தது. அதேநேரம், அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் ஆண்டுக்கு சுமார் 1.6 அடி வீதம் தடிமன் குறைந்து வந்துள்ளன. இதனால் ஏற்கெனவே இருந்த பிளவுகள் மேலும் பலவீனமடைந்து, நிலைத்தன்மை பாதிக்கப்படக் கூடும்.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிக அளவில் உருகி நீரான பனியின் அளவை அதிகரித்தது. காலநிலை மாற்றம் மட்டுமே இந்தப் பேரிடருக்கான காரணமல்ல என்றாலும், ஏற்கெனவே இருந்த நிலவியல் பலவீனத்தை மேலும் மோசமாக்கி ஒரு "நிலையற்ற தன்மையை உருவாக்கும் காரணியாக" அது செயல்பட்டதாக ஆய்வு விளக்குகிறது.

வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என நேபாளத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேபாள பேரிடருக்கு காலநிலை மாற்றம் தவிர வேறு சில காரணங்களும் கூறப்பட்டுள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேபாள பேரிடருக்கு காலநிலை மாற்றம் தவிர வேறு சில காரணங்களும் கூறப்பட்டுள்ளன
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.நா.வின் இழப்பு மற்றும் பாதிப்புகளுக்கான நிதியம், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கான நிதி உதவியை வழங்குகிறது. இதற்காக விண்ணப்பிக்கும் நாடுகள், தாங்கள் சந்தித்த இழப்புகள் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிதியைப் பெறுவதற்காக செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன் காட்சிகள், ஆரம்பகட்ட மதிப்பீட்டு அறிக்கைகள் போன்றவற்றை நேபாள அதிகாரிகள் தயாரித்து வந்தனர். ஆனால், தற்போது லாங்டாங் லிருங் பகுதியில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிச்சரிவில் காலநிலை மாற்றம் முக்கியப் பங்காற்றியதற்கான வலுவான ஆதாரமாக வேர்ல்ட் வெதர் ஆட்ரிபியூஷன் அறிக்கையே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

"இந்தப் பேரிடரில் காலநிலை எந்த வகையில் தாக்கம் செலுத்தியது என்பதை இந்த அறிக்கை விரிவாக விளக்குகிறது. எனவே, எங்களது நிதிக் கோரிக்கையின் முக்கிய அடிப்படையாக இதுவே இருக்கும்," என்று நேபாளத்தின் வேளாண்மை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக செய்தித் தொடர்பாளர் மகேஷ்வர் தாகல் தெரிவித்தார்.

பசுமைக்குடில் வாயு உமிழ்வை மிகக் குறைவாகவே உமிழும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருந்தாலும், உலக வெப்பமயமாதலின் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஒன்றாக அது இருப்பதாகக் கூறி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகளாவிய முயற்சிகளுக்கு நேபாள அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக அடுத்த வாரம் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்று, சமீபத்திய பேரிடர் மற்றும் காலநிலை நீதி குறித்துப் பேசவுள்ளார்.

நேபாள வெள்ளப் பேரிடர்

ப்ளூம்பெர்க் என்.இ.எஃப் நிறுவனத்தின் காலநிலைத் தழுவல் நிபுணர் டான்யா லியூ, "மீட்பு மற்றும் மறுகட்டமைப்பிற்குத் தேவையான நிதியை விளக்குவதற்காக நேபாளம் தொடர்ந்து 'இழப்பீடு' என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவதாக" குறிப்பிட்டார்.

மேலும், "பாதிக்கப்பட்ட நாடுகளே பெரும்பாலான செலவுகளை ஏற்றுக்கொண்டு, பற்றாக்குறையை நிரப்ப உதவிகளை நம்பியிருக்கும் முறைக்கு மாறாக, மாசுபடுத்துபவர்களே பணம் செலுத்த வேண்டுமென்ற மாதிரியை இந்த வேறுபாடு சுட்டிக்காட்டுகிறது" என்றும் கூறினார்.

எனினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளை மறுகட்டமைக்க அவசரமாகத் தேவைப்படும் நிதியை நேபாளம் பெற முடியுமா, எவ்வளவு விரைவாகப் பெற முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஏறத்தாழ 120 நாடுகள் ஏற்கெனவே ஐ.நா. இழப்பு மற்றும் பாதிப்புகளுக்கான நிதியத்தின் நிதிக்கு விண்ணப்பித்துள்ளன. அவற்றின் மொத்த கோரிக்கைத் தொகை சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. ஆனால், விநியோகிக்க நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 400 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாடுகள் நேபாளத்திற்கு விரைவாக நிதி வழங்க ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பிற நாடுகள் நடைமுறைகளும் விதிமுறைகளும் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன என நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த கோரிக்கைகளை ஏற்பது என்பது குறித்தும், நேபாளத்திற்கு அவசர முடிவு எடுக்கப்படுமா என்பது குறித்தும் முடிவு செய்ய ஐநா நிதியத்திற்கான அதிகாரிகள் டிசம்பர் மாதம் கூடவுள்ளனர்.

நேபாள வெள்ளப் பேரிடர்

மேலும், வேர்ல்ட் வெதர் ஆட்ரிபியூஷன் ஆய்வில், 2015ஆம் ஆண்டு நேபாளத்தைத் தாக்கிய 7.8 அளவிலான நிலநடுக்கம், பின்னர் ஏற்பட்ட பாறை-பனிச்சரிவுகளுக்கான அடிப்படை பாறை அமைப்பை பலவீனப்படுத்தி இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய பேரிடரில் அந்த நிலநடுக்கத்தின் துல்லியமான தாக்கத்தை உறுதி செய்ய முடியவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வு இதுவரை அறிவியல் மதிப்பாய்வு (peer review) செய்யப்பட்ட ஆய்விதழில் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தீவிர வானிலை நிகழ்வுகளை ஆய்வு செய்ய தங்களது அனைத்து அறிக்கைகளும் ஒரே மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் முடிவுகள், பேரிடருக்குப் பிறகு பல நிபுணர்கள் முன்வைத்த கருத்துகளையும் உறுதிப்படுத்துகின்றன. இமயமலையில் உயர்ந்து வரும் வெப்பநிலை, பாறை-பனிச்சரிவுக்கான முக்கியக் காரணியாக இருந்திருக்கலாம் என்று சில நிபுணர்கள் ஏற்கெனவே பிபிசியிடம் தெரிவித்திருந்தனர்.

டண்டீ பல்கலைக் கழகத்தின் பனிப்பாறை ஆய்வாளரான முனைவர் சைமன் குக், "ஒரேயொரு நிகழ்வை நேரடியாக காலநிலை மாற்றத்துடன் இணைப்பது கடினம் என்றாலும் காலநிலை வெப்பமயமாதல் உயரமான மலைப் பகுதிகளின் நிலைத்தன்மையை மெதுவாகக் குலைக்கிறது" என்று கடந்த மாதம் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த வேர்ல்ட் வெதர் ஆட்ரிபியூஷன் அறிக்கை சமீபத்திய பேரிடரின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்த ஒரு "மிகவும் பயனுள்ள ஆய்வு" என்று குக் வியாழக்கிழமை பிபிசியிடம் தெரிவித்தார்.

அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, "காலநிலை மாற்றம் முக்கியக் காரணியாக இருந்ததற்கான வலுவான ஆதாரங்களை இந்த ஆய்வு முன்வைத்துள்ளது. இருப்பினும், இது துல்லியமாக எவ்வாறு நடந்தது என்பதை முழுமையாக விளக்கும் நிலையில் நாம் இன்னும் இல்லை. இதில் தொடர்புடைய இயற்கைச் செயல்முறைகள் குறித்து இன்னும் பல விஷயங்களை அறிய வேண்டியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிப்பதற்காக உயர்மலைப் பகுதிகளை எவ்வாறு சிறப்பாகக் கண்காணிக்கலாம் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது," என்று குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு