தாயைத் தேடும் 2 வயது மகள், புதிதாக மணமான மகனை இழந்த குடும்பம் - ஆமதாபாத் விமான விபத்தின் ஆறாத சோகங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜூன் 12, வியாழக்கிழமை, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒரு பயணியைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த விமான விபத்து பல குடும்பங்களை மீள முடியா அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்த சில குடும்பங்களுடன் பிபிசி பேசியதுடன், அவர்களின் துயரத்தையும் கேட்டறிந்தது.

அப்படிப்பட்ட ஒரு குடும்பம் குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த பாவிக் மகேஸ்வரியின் குடும்பம். இந்தக் குடும்பம் தங்கள் இளம் மகனை விமான விபத்தில் இழந்துள்ளது. பாவிக் மகேஸ்வரி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிபிஏ படிக்க லண்டனுக்குச் சென்றார். இரண்டு வருட படிப்பை முடித்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கால் சென்டரில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். ஜூன் 1 ஆம் தேதி, அவர் 15 நாள் விடுப்பில் வதோதரா வந்தார்.

'தீபாவளிக்குப் பிறகு மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தோம்'

மகன் பாவிக்கை நினைத்து அவரது தந்தை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். பிபிசியிடம் கண்ணீருடன் பேசிய அவர், "பாவிக் 15 நாள் பயணமாக இங்கு வந்தார். வழக்கமாக இங்கு வந்தால், ​​முடிந்தவரை தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார். அதிகமாக எங்கும் வெளியே செல்லமாட்டார். இந்த முறை வந்தபோது பாவிக்கிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது" என்று கூறினார்.

"அவர் இங்கு வந்தபோது, ​​ஜூன் 10 அவருக்கு பதிவுத் திருமணம் நடந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் லண்டனுக்கு புறப்பட்டார். மதியம் 1 மணிக்கு அவர் விமானத்தில் ஏறிய பிறகு, அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. 'அனைத்து போர்டிங் செயல்முறைகளும் முடிந்துவிட்டதாகவும், கவலைப்பட வேண்டாம்' என்றும் கூறினார்." என்கிறார் பாவிக்கின் தந்தை.

பின்னர் விமான விபத்து பற்றிய செய்தி வந்தது, அந்தக் குடும்பம் பெரும் துயரத்தில் ஆழ்ந்தது.

"டிஎன்ஏ மாதிரி செயல்முறைக்காக மூன்று நாட்கள் காத்திருக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம்.அதன் பிறகு எந்த தகவலோ பதிலோ இல்லை..." என்று பாவிக்கின் தந்தை கூறுகிறார்.

இதைச் சொல்லிமுடித்தவுடன், பாவிக்கின் தந்தை அழத் தொடங்குகிறார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை.

தீபாவளிக்குப் பிறகு பிரமாண்டமான முறையில் பாவிக்கின் திருமணத்தை நடத்த அவரது குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். தங்கள் இளம் மகனை இழந்துள்ளதால், ஆறுதல்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். தங்கள் மகன் இப்போது உயிருடன் இல்லை என்ற கசப்பான யதார்த்தத்தை அந்தக் குடும்பத்தினரால் எளிதில் ஜீரணிக்க முடியாது.

பாவிக்கின் தாத்தா தனது பேரனை நினைத்து, வார்த்தைகளற்று தவிக்கிறார். "தீபாவளிக்குப் பிறகு அவனது திருமணத்தை ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் நடத்த நினைத்தோம் ஆனால்..."

பாவிக்கின் தாத்தாவால் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியவில்லை.

'அம்மா எங்கே?' எனக் கேட்கும் இரண்டு வயது சிறுமி

வதோதராவைச் சேர்ந்த இந்த மகேஸ்வரி குடும்பம் விபத்தில் ஒரு மகனை இழந்த நிலையில், ஒரு படேல் குடும்பம் தனது மருமகளை இழந்துள்ளது.

வதோதராவைச் சேர்ந்த படேல் குடும்பத்தின் மருமகள் நான்சி படேல், தனது இரண்டு வயது மகள் அன்சியை லண்டலிருந்து வதோதராவுக்கு அழைத்து வந்திருந்தார். குழந்தையை தனது குடும்பத்தினருடன் விட்டுவிட்டு, நான்சி மட்டும் லண்டனுக்குத் திரும்புவதற்காக ஏர் இந்தியா 171 விமானத்தில் பயணித்துள்ளார்.

விமான விபத்தில் நான்சி உயிரிழந்த சம்பவம் முழு குடும்பத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளனர். அதிகம் பேச முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

இந்த விஷயம் குறித்து நான்சியின் குடும்ப உறுப்பினர் ஜெயேஷ்பாய் படேல் பிபிசியிடம் கூறுகையில், "நான்சி தனது வேலையில் சிரமங்களைச் சந்தித்து வந்தார், மேலும் தனது மகளுக்கான வரி தாக்கல் செயல்முறைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனவே, அவர் குஜராத்திற்குப் பயணம் செய்தார். இங்கு தனது பணிகளை முடித்துவிட்டு, அவர் லண்டனுக்குத் திரும்பினார் - அப்போதுதான் அந்த துயரச் சம்பவம் நடந்தது" என்கிறார்.

"அவரது இரண்டு வயது மகள், நாள் முழுவதும் 'அம்மா எங்கே?' என கேட்டுக்கொண்டிருக்கிறார். அம்மா அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார், விரைவில் திரும்பி வருவார் என்று சாக்குப்போக்கு கூறி நாங்கள் அவளை சமாளித்துவருகிறோம். தற்போது, ​​உடலை அடையாளம் காணும் செயல்முறைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். 'தகவல் சொல்கிறோம்' என்று மட்டுமே எங்களிடம் கூறியிருக்கிறார்கள். நாங்கள் முறையான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்." என்கிறார் ஜெயேஷ்பாய் படேல்.

'எங்களை அன்பாக கவனித்துக்கொண்ட மகள் இப்போது இல்லை'

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பணியாளர்களில் ஒருவரான 34 வயதான சைனிதா சக்ரவர்த்தி மும்பையைச் சேர்ந்தவர். மும்பையில் அவரது குடும்பத்தினரை பிபிசி செய்தியாளர் அர்ச்சனா சுக்லா சந்தித்து பேசினார்.

"என் அன்பு மகளே. தயவுசெய்து திரும்பி வா, அம்மா காத்திருக்கிறேன்," என்று சைனிதாவின் அம்மா ரேமா சக்ரவர்த்தி அழுது கொண்டிருந்தார்.

சைனிதாவின் தந்தை அபின் சக்ரவர்த்தி ரேமாவின் அருகில் அமர்ந்திருக்கிறார், தனது மனைவியை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறார்.

"சைனிதா உண்மையிலேயே எங்களை மிகவும் அன்பாக கவனித்துக்கொண்டார். குடும்பத்தை பார்த்துக்கொண்டார், அவரது தாயின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவினார்," என்று அபின் சக்ரவர்த்தி பிபிசியிடம் கண்ணீருடன் கூறினார்.

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானம்

ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, இந்த AI 171 விமானம் ஆமதாபாத்திலிருந்து மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. அது ஒரு போயிங் 787-8 விமானம்.

"ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது.

இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24 இன் படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் அப்போது 175 நாட்ஸ் (மணிக்கு 324.1 கிமீ) வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு