2050ல் காவிரியில் நீரோட்டம் குறையும் என்று எச்சரிக்கும் புதிய ஆய்வு - எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"காவிரி ஆற்றின் நீரோட்டம் 2026- 2050-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 3.5% அளவுக்கு குறையக்கூடும்" என்று காந்திநகர் ஐஐடி (IIT) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இதனால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில விவசாயப் பகுதிகள் மட்டுமல்லாது, தனது குடிநீரின் கணிசமான பகுதியை காவிரியிலிருந்து பெறும் பெங்களூரு போன்ற நகரங்களும் தீவிர தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக் கூடும் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனால், காவிரி டெல்டாவில் பாதிப்பு ஏற்படுமா? இதற்கு தீர்வாக அந்த ஆய்வு பரிந்துரைப்பது என்ன?

ஐஐடி ஆய்வு கூறுவது என்ன?

கடந்த மார்ச் 21ஆம் தேதி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர்கள் விமல் மிஸ்ரா மற்றும் தீபேஷ் சிங் சுபால், 'இந்திய நதிகளில் நீரோட்டம் வலுவாக அதிகரித்துள்ளது' தொடர்பாக ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர்.

அதில், "எதிர்காலத்தில் பெரும்பாலான இந்திய நதிகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், காவிரிப் படுகை போன்ற சில பகுதிகளில் குறுகிய காலத்தில் நீர்வரத்து குறையக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற நதிகள் உபரி நீர்வரத்து மற்றும் வெள்ளப்பெருக்குகளைச் சந்திக்கக்கூடும் என்ற நிலையில், காவிரி நதியில் வரும் காலங்களில் நீர்வரத்து குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் பத்தாண்டுகளில் இந்தியாவில் புவி வெப்பமயமாதலால் அதிக மழைப்பொழிவு ஏற்படும் என்று காலநிலை மாதிரிகள் கணித்தாலும், காவிரிக்கு எந்தப் பயனும் ஏற்படாது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே காவிரி நீர் பகிர்வில் நிலவும் பதற்றமான வரலாற்றைக் கருத்தில் கொண்டால், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் போன்ற நதிகளை இணைக்கும் முயற்சிகள் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காந்திநகர் ஐஐடி-யின் பேராசிரியரும், இந்த ஆய்வில் ஈடுபட்டவருமான விமல் மிஸ்ரா, "பேயேசியன் (Bayesian) புள்ளியியல் முறை என்ற முறையைப் பயன்படுத்தி காலநிலை கணிப்புகளை மேம்படுத்தி, கடந்தகால நதி நீரோட்டத் தரவுகளையும், எதிர்கால காலநிலை மாதிரிகளின் கணிப்புகளையும் சேர்த்து ஆய்வு செய்தோம்" என்று கூறுகிறார்.

"எல்லா மாதிரிகளும் ஒரே மாதிரி முடிவுகளை அளிக்காததால் (குறிப்பாக இந்திய மழைக்காலத்தை சரியாக கணிக்காததால்), கடந்தகால தரவுடன் பொருந்தும் மாதிரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சரியாக செயல்படாத மாதிரிகளின் தாக்கம் குறைக்கப்பட்டது. இதனால் கணிப்புகளில் இருந்த குழப்பம் (Uncertainty) சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது" என்று அவர் விளக்கினார்.

இந்த முறையை காவிரி ஆற்றுக்கு பயன்படுத்தியபோது, 2026- 2050 காலகட்டத்தில் காவிரி நதியின் மொத்த ஆண்டு நீர்வரத்தில் சுமார் 3.5% குறையலாம் என்று தெரியவந்ததாக அவர் கூறுகிறார்.

காவிரி, கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து, கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, நர்மதா மற்றும் தப்தி, ஆகிய ஒன்பது நதிகள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

"ஆய்வு செய்த 9 பெரிய இந்திய நதிகளில் காவிரி மட்டுமே விதிவிலக்கு. காரணம், கடந்த காலத்தில் நீரோட்டம் ஏற்கனவே சுமார் 28% (1951- 2012) குறைந்துள்ளது. எதிர்காலத்தில் மழை அதிகரிப்பால் கிடைக்கும் பலனும் மற்ற நதிகளை விட குறைவாக இருக்கும்" என்று கூறுகிறார் விமல் மிஸ்ரா.

கங்கை, கிருஷ்ணா, சிந்து போன்ற நதிகளில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும், அதனால் அவற்றின் நிலை சற்றுப் பாதுகாப்பாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"எங்கள் ஆய்வு காலநிலை, சமிக்ஞையை மையப்படுத்தி இருப்பதால், காவிரியின் கணிக்கப்பட்ட சுமார் 3.5% சரிவானது, மாறிவரும் மழைப்பொழிவு முறைகளாலேயே ஏற்படுகிறது. விவசாயம், நகர பயன்பாடு, நிலத்தடி நீர் உறிஞ்சுதல் போன்ற மனித காரணிகள் இதில் சேர்க்கப்படவில்லை. அதனால், காவிரியில் நீர் பற்றாக்குறை 3.5% என்பதை விடவும் அதிகமாக இருக்கலாம்." என்றும் அவர் கூறுகிறார்.

எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?

காவிரியின் பாதையில் கீழே இருக்கும் தமிழ்நாட்டின் பகுதிகள், குறிப்பாக காவிரி டெல்டா இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என ஐஐடி-யின் ஆய்வு கூறுகிறது.

"கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் மழைநீர் மற்றும் கால்வாய்ப் பாசன விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். ஏனெனில், ஒட்டுமொத்த நீரோட்டத்தில் ஏற்படும் ஒரு சிறிய சரிவு கூட, முக்கியமாக வறண்ட காலங்களில் கணிசமான பற்றாக்குறையாக மாறிவிடுகிறது" என்கிறார் விமல் மிஸ்ரா.

கடந்த 2024இல் பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெங்களூருவில் தினமும் தேவைப்படும் குடிநீரில் சுமார் 20 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்காதது தான் அப்போதைய குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணமாக இருந்தது.

பெங்களூரு நகரில் உள்ள சுமார் 1.5 கோடி மக்களுக்கு தினமும் 145 கோடி லிட்டர் தண்ணீர் 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மீதம் உள்ள 60 கோடி லிட்டர் தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படுகிறது (2024 தரவுகளின்படி).

"தனது குடிநீரின் பெரும்பகுதியை காவிரியிலிருந்து பெறும் பெங்களூரு போன்ற நகரங்களும் தீவிரமான நீர் நெருக்கடியை சந்திக்க நேரிடும்" என்று எச்சரிக்கிறார் விமல் மிஸ்ரா.

தீர்வு தான் என்ன?

காவிரியின் நீர்வரத்து குறைவது தொடர்பான பிரச்னைக்கு இந்த ஆய்வு சில தீர்வுகளை முன்வைக்கிறது.

  • காவிரி நீரின் சுமார் 80% விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால், நீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் முறைகள் மிகவும் முக்கியம். டிரிப், ஸ்பிரிங்க்ளர் போன்ற மைக்ரோ பாசன முறைகள் பயன்படுத்த வேண்டும்.
  • குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களுக்கு மாற வேண்டும் (வறட்சி காலங்களில்)
  • அணைகள் மற்றும் நீர் சேமிப்பை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும்
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காடுகளை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் வேண்டும். (இது காவிரிக்கு மழை மற்றும் நீரோட்டம் கிடைக்கும் முக்கிய பகுதி)
  • நிலத்தடி நீர் சேகரிப்பு திட்டங்கள், மழைநீர் சேகரிப்பு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
  • ஆற்றின் நீரோட்டத்தை கண்காணிக்கும் முறைகளை மேம்படுத்த வேண்டும்.

"இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒன்று, கோதாவரி–காவிரி இணைப்பு திட்டம். நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் படுகைகளில் உள்ள உபரி நீரை, நீர் பற்றாக்குறையுள்ள காவிரிப் படுகைக்குத் திருப்பிவிடுவது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்" என்கிறார் விமல் மிஸ்ரா.

டெல்டா பகுதி பாதிக்கப்படுமா?

"காவிரி டெல்டா பகுதியில் பாசன பகுதிகள் கணிசமாக குறைந்துவிட்டன. அடுத்த 20-30 வருடங்களில் இந்தப் பாசனப் பகுதிகள் இன்னும் குறையும், அப்படியிருக்க இந்த ஆய்வின் முடிவுகள் கூறுவது போல காவிரியின் நீர்வரத்து குறைவது பெரிய பிரச்னை கிடையாது. பாசனப் பகுதிகள் குறைவது தான் முக்கிய பிரச்னை" என்கிறார் முனைவர் எஸ். ஜனகராஜன்.

நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை வல்லுநரும், சென்னையில் உள்ள மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) முன்னாள் பேராசிரியருமான ஜனகராஜன், "மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. அங்கு காடழிப்பு வேகமாக நடந்து வருகிறது, குறிப்பாக காவிரி உற்பத்தி ஆகும் குடகு பகுதியில். அதனால் மழைப் பொழிவு குறைகிறது" என்கிறார்.

இந்த தாக்கம் காவிரியில் மட்டுமல்லாது, மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகும் வைகை, தாமிரபரணி போன்ற நதிகளிலும் இருக்கும் என்கிறார் அவர்.

கோதாவரி–காவிரி இணைப்பு திட்டம்

காந்திநகர் ஐஐடி-யின் ஆய்வு முன்வைக்கும் தீர்வுகளில் பிரதானமானது கோதாவரி–காவிரி இணைப்பு திட்டம்.

ஆனால், "கோதாவரி - காவிரி, காவிரி- கங்கை உள்ளிட்ட நதிகள் இணைப்புத்திட்டம் குறித்து வாஜ்பாய் ஆட்சிக் காலம் முதல் பேசப்பட்டு வருகிறது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்ட அறிவிப்பை முந்தைய பட்ஜெட்டுகளிலும் அறிவித்தனர். இன்னும் நடைமுறைக்கு வராமல், அறிவிப்பாக மட்டும் தொடர்கிறது" என்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்.

கோதாவரி -பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஜனவரி, 2024-ல் நிறைவடைந்து விட்டது என்றும், நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு, ஏப்ரல் 2024-ல் மாநிலங்களுக்கிடையே விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் ஜல் சக்தி அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

"இங்கு பிரச்னை நதிகள் இணைப்பு அல்ல, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா நமக்கான நீரை முறையாக தர வேண்டும் என்பதே." என்கிறார் பெ. மணியரசன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு