ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்கும் எனக் கூறும் டிரம்ப் - இஸ்ரேல் விதித்த நிபந்தனைகள் என்ன?

பட மூலாதாரம், @WhiteHouse
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 'ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை ஒப்படைக்கும்' என்ற அறிவிப்புக்கு இஸ்ரேல் எதிர்வினையாற்றியுள்ளது.
ஹமாஸ் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு முதலில் எதிர்வினையாற்றிய மூத்த இஸ்ரேல் அதிகாரி ஒருவர், "காஸாவில் நடந்து வரும் ராஜ்ஜீய முன்னேற்றங்கள் பற்றி வரும் வெவ்வேறு செய்திகள் தொடர்பில், ஹமாஸின் ஆயுதக் குறைப்பு உண்மையில் நடக்கும் வரை தற்போதைய மஞ்சள் கோட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என்பதை இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்துவதாக" தெரிவித்தார்.
முன்னதாகத் தனது 'அமைதி வாரியம்' ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்களுடன் ஓர் ஒப்பந்தத்தை அடைந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். அந்த ஒப்பந்தத்தின்படி, அவர்கள் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காஸாவில் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான 'அமைதி வாரியத்தின்' முன்மொழிவை ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதாக மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஹமாஸ் உடனான ஒப்பந்தத்தை அறிவித்த டிரம்ப்
ஹமாஸின் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவைத் தனது வெளியுறவு கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று டிரம்ப் குறிப்பிடுகிறார்.
ஆயுதக் குறைப்பு நடைமுறை முடிவடைந்த பிறகு இஸ்ரேல் ராணுவம் காஸாவில் இருந்து பின்வாங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தை "காஸாவில் புதிய பாலத்தீன அரசாங்கத்தை இறுதியாக நிறுவுவதற்கான முக்கியப் படி" என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா ஏற்பாடு செய்த காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டம் ஹமாஸ் அமைப்பு அதன் ஆயுதங்களை ஒப்படைக்க வலியுறுத்துவதை உள்ளடக்கியது. இந்தக் கட்டத்தில் காஸாவை மறுகட்டுமானம் செய்வதற்கான திட்டமும் அடங்கும்.
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் ஒப்புக்கொண்ட பிறகு டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில், "டிரம்பின் 20 அம்ச திட்டத்தை நிறைவேற்றுவதில் இது முக்கியமான மைல் கல். இந்த ஒப்பந்தம் தெளிவாகத் திட்டமிடப்பட்ட கட்டங்களில் செயல்படுத்தப்படும்," எனப் பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், @WhiteHouse
"ஆயுதக் குறைப்பு முழுமையடைந்த பிறகு இஸ்ரேல் ராணுவம் காஸாவில் இருந்து பின்வாங்கும். பின்னர் சர்வதேச நிலைப்படுத்தும் படையினர் புதிய காஸா காவல்துறையுடன் இணைந்து, காஸா அதன் குடிமக்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் பணியாற்றுவர்," என்றும் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும் மத்தியஸ்தராக பங்கு வகித்தமைக்காக எகிப்து, கத்தார் மற்றும் துருக்கிக்கு தனது நன்றியையும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஏ.எஃப்.பி செய்தி முகமையின்படி, "போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டத்தை விவாதிக்க காஸா மத்தியஸ்தர்களின் சந்திப்பு கெய்ரோவில் நடத்தப்படும்" என்று எகிப்து அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் அமைச்சர் கூறியது என்ன?
இருப்பினும் அமைதி வாரியம் வெளியிட்ட வரைவு ஒப்பந்தத்தை 'இஸ்ரேலால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று அந்நாட்டின் வலது சாரி தேசிய பாதுகாப்பு அமைச்சரான இடமார் பென்-கவிர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ilia YEFIMOVICH / AFP via Getty Images
"பயங்கரவாத அமைப்பின் கொலையாளிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை" நிறுத்த ஒப்புக் கொள்வது, "அடுத்த படுகொலைக்கு தயாராக மீண்டும் அணி திரள்வதற்கு ஹமாஸுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவது போல் ஆகிவிடும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
காஸாவில் தனது ராணுவ இலக்குகளை இஸ்ரேல் தொடர்ந்து பின்தொடர வேண்டுமெனத் தெரிவித்த அவர் பிராந்தியத்தில் இருந்து "வெளியேற்றத்தை ஊக்குவிக்கும்" தனது முந்தைய கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும் கட்டுமான நடவடிக்கைகள் அங்கு நீண்ட கால இருப்புக்கு இஸ்ரேல் தயாராகி வருவதைக் காட்டுவதை வல்லுநர்கள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர்.
பிபிசி செய்தியாளர் எம்மா பெங்கெல்லி வழங்கும் செய்தியின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு தொடங்கிய பெரிய மணல் தடுப்புகளை அமைக்கும் பணியை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவது இதில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக உள்ளது.

பட மூலாதாரம், Sean Gallup/Getty Images)
இந்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால் ஹமாஸின் ஆயுதக் குறைப்பு திட்டம், "அமைதியை நோக்கிய ஒரு நேர்மறையான நகர்வாக இருக்கலாம்," என்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரான காயா கல்லாஸ்.
எனினும், "இந்தத் திட்டம் வெற்றிகரமானதாக இன்னும் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இதன் வெற்றி அனைத்து தரப்பினரின் முழுமையான அர்ப்பணிப்பைப் பொறுத்தே அமையும்" என்றும் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தின் விதிகளைப் பின்பற்றுவதை ஹமாஸை உறுதி செய்ய வைப்பதுதான் முக்கியமான சவாலாக இருக்கும் என்றும் இறுதியில் காஸாவில் இருந்து இஸ்ரேலின் படைகள் பின்வாங்க வேண்டும்," என்றும் அவர் குறுப்பிட்டார்
அத்துடன், தேசிய குழுவை அனுப்பி வைப்பது மற்றும் சர்வதேச நிலைப்படுத்தும் படை உள்பட அடுத்தகட்ட நகர்வுகளை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் அமைதி வாரியம் என்றால் என்ன?
கடந்த செப்டம்பர் மாதம் அமைதி வாரியம் அமைக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். இது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான இரண்டு ஆண்டுக்கால போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுவதோடு மறுகட்டுமானத்தை மேற்பார்வையிடுவதற்கானது என்று அப்போது நம்பப்பட்டது.
ஆனால், பின்னர் பேசிய டிரம்ப், "இந்த வாரியத்தின் பங்கு காஸாவை கடந்து உலகம் முழுவதும் நடைபெறும் இதர மோதல்களையும் கையாள்வதை உள்ளடக்கும்" எனத் தெரிவித்தார்.
இந்த வாரியத்தின் முதல் தலைவராக இருக்கும் டிரம்ப், இந்தப் பதவியைத் தனது வாழ்நாள் முழுவதும் வைத்திருப்பார். அமைதி வாரியத்தின் இணையதளம் 28 நாடுகளைப் பட்டியலிடுகிறது. அதில் அமெரிக்கா, இஸ்ரேல், சௌதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை இந்த முன்னெடுப்பின் நிறுவன உறுப்பினர்களாகக் குறிப்பிடுகிறது.
அதேநேரம், அமெரிக்காவின் பாரம்பரியமான நட்பு நாடுகள் இதில் பங்கெடுக்க ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இதர நிரந்தர உறுப்பினர்களும் இதில் பங்கெடுக்க ஒப்புக் கொள்ளவில்லை.
அமைதி வாரியத்தின் நிர்வாகக் குழுவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்பின் உறவினர் ஜேரட் குஷ்னர், அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீன் விட்காஃப், முன்னாள் பிரிட்டன் அமைச்சர் டோனி பிளேர், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் இதர உறுப்பினர்கள் உள்ளனர்.

பட மூலாதாரம், Samuel Corum/Sipa/Bloomberg via Getty Images
காஸா நிர்வாகத்திற்கான தேசிய குழு என்றால் என்ன?
ஹமாஸ் அமைப்பு, தான் ஒப்படைக்கும் கனரக ஆயுதங்கள், காஸா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவின் பொறுப்பின் கீழ் வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்தக் குழு காஸாவின் தினசரி நிர்வாகத்தை டிரம்பின் அமைதி வாரிய மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளும்.
இந்தக் குழு தங்களை, "காஸாவில் உள்ள தகுதிவாய்ந்த பாலத்தீனர்களை" மட்டுமே உள்ளடக்கிய "இடைக்கால, தொழில்நுட்ப மற்றும் அரசியல் சாராத குழு" எனக் குறிப்பிட்டுக் கொள்கிறது.
அதன் நிர்வாக அமைப்பு அரசாங்கத்தின் அமைச்சரவையைப் போன்றது. நிதி, கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் நீதி என முக்கியமான 13 துறைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர்கள் இருப்பார்கள்.
அலி ஷாத் அதன் தலைமை ஆணையாளராக இருப்பார். தொழில்முறை கட்டுமானப் பொறியாளரான இவர் முன்னதாக பாலத்தீன அதிகார அமைப்பில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
தங்கள் அதிகார வரம்பு "பொது மக்கள் சார்ந்த விவகாரங்களுக்கு" மட்டுமானது என்று குறிப்பிடும் இந்தக் குழு, சர்வதேச அளவில் பாலத்தீன மக்களைத் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை எனத் தெரிவிக்கிறது.
"பாலத்தீன மக்கள் தங்களின் சொந்த முடிவுகளை எடுக்கிற நிலைக்கு வரும் வரையிலும் தேசிய அந்தஸ்தை அடைவதற்கான நம்பகமான வழிமுறை உருவாக்கப்படும் வரை தாங்கள் வகிக்கும் பங்கு 'இடைக்கால அளவில்' மட்டுமே இருக்கும்" எனத் தெரிவிக்கிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























