கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதி: 4 அணிகளின் பலம், பலவீனங்கள் பற்றிய ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிறிஸ் காலின்சன்
- பதவி, பிபிசி ஸ்போர்ட் புள்ளிவிவர நிபுணர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் உலகக் கோப்பையை வெல்வதிலிருந்து இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே தொலைவில் உள்ளன. இந்த வார இறுதியில் கோப்பையை யார் கைப்பற்றக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள, அரையிறுதிக்கு முன்னேறிய இந்த நான்கு அணிகளின் இதுவரையிலான செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
அனைத்து அணிகளும் தலா ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும், அர்ஜென்டினா அணி விளையாடிய போட்டிகள் கூடுதல் நேரத்திற்குச் சென்றதால், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட ஒரு மணி நேரம் அதிகமாக கால்பந்து விளையாடியுள்ளது. இங்கிலாந்து அணியும் அரை மணி நேரம் கூடுதலாக விளையாடியது. எனவே, துல்லியமான புள்ளிவிவரங்களைப் பெற விளையாடிய நேரத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளோம்.
தற்போதைய சாம்பியனான அர்ஜென்டினா அதிக கோல்களை (17) அடித்திருந்தாலும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியே ஒட்டுமொத்தமாக தாக்குதல் ஆட்டத்தில் சிறந்த அணியாக விளங்கியுள்ளது. அவர்கள் 90 நிமிடத்திற்கு சராசரியாக அதிக கோல்கள், சம அளவிலான அதிக ஷாட்டுகள் மற்றும் அதிக 'எதிர்பார்க்கப்படும் கோல்கள்' ஆகியவற்றை பதிவு செய்துள்ளனர்.
அர்ஜென்டினா, தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளில் 18 சதவீதத்தை கோல்களாக மாற்றி மிக நேர்த்தியான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணிக்கு இது நேர்மாறாக உள்ளது. தங்களின் அரையிறுதி எதிரணியான பிரான்ஸ் அணியைப் போலவே சமமான எண்ணிக்கையில் (110) ஷாட்களை அடித்த போதிலும், ஸ்பெயின் அடித்த 11 கோல்களுக்கு எதிராக பிரான்ஸ் 16 கோல்களை அடித்துள்ளது. இது ஒரு போட்டிக்கு கிட்டத்தட்ட ஒரு கோல் குறைவாகும்.
ஷாட்களின் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகிய இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, மற்ற மூன்று அணிகளை விட இங்கிலாந்து குறைந்த ஆக்க திறனையே வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஜூட் பெலிங்ஹாம் மற்றும் ஹாரி கேன் ஆகியோரின் நேர்த்தியான ஃபினிஷிங் காரணமாக அந்த அணி ஒரு போட்டிக்கு சராசரியாக இரண்டு கோல்களுக்கு மேல் அடித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்பெயின் தற்காப்பு ஆட்டத்தில் மிகவும் வலுவான அணியாகத் திகழ்ந்துள்ளது. பெல்ஜியத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில்தான் அந்த அணி இந்தத் தொடரில் தனது முதல் கோலை விட்டுக்கொடுத்தது. இருப்பினும், பிரான்சும் ஆறு போட்டிகளில் வெறும் இரண்டு கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.
பிரான்ஸ் அணியின் தாக்குதல் ஆட்டம் அச்சுறுத்தும் வகையில் உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறப் போவது அவர்களின் தடுக்க முடியாத தாக்குதல் திறனா அல்லது ஸ்பெயினின் அசைக்க முடியாத தற்காப்பா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அதிக கோல்கள் அடிக்கப்பட நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இரு அணிகளின் தற்காப்பு ஆட்டமும் அந்த அளவிற்கு ஈர்க்கக்கூடியதாக இல்லை.
இரு அணிகளும் இதுவரை தலா ஆறு கோல்களை விட்டுக்கொடுத்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி எதிரணிக்கு அதிக வாய்ப்புகளை விட்டுக்கொடுத்துள்ளது, மேலும் அர்ஜென்டினா அணி அவற்றைத் தடுப்பதில் மிகக் குறைந்த வெற்றியையே பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அதிகம் ஓடிய அணி எது?
அர்ஜென்டினா அணி அதிக தூரம் (706.5 கிமீ) மைதானத்தை ஓடிக் கடந்துள்ள போதிலும், அது அவர்கள் அதிக நேரம் விளையாடியதாலேயே நிகழ்ந்தது.
விளையாடிய நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, அரையிறுதிக்கு வந்துள்ள நான்கு அணிகளில் அவர்கள் மிகக் குறைந்த தூரமே ஓடியுள்ளனர் மற்றும் மிகக் குறைந்த ஸ்பிரின்ட்களையே (வேகமாக ஓடுதல்) செய்துள்ளனர். உண்மையில், அவர்கள் இதுவரை விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியினரை விட ஓட்டத்தில் பின்தங்கியே இருந்துள்ளனர்.
எனவே, நடப்பு சாம்பியன்கள் எதிரணியினரை அழுத்தம் கொடுத்து பந்தைப் பறிப்பதில் மிகக் குறைந்த தீவிரத்தையே காட்டியுள்ளனர் என்பதில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய அணிகளை ஒப்பிடும்போது, எதிரணியின் பகுதியிலேயே பந்தை மீட்கும் சம்பவங்கள் அர்ஜென்டினாவிடம் குறைவாக இருந்துள்ளன.
இதற்கு நேர்மாறாக, அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளிலேயே ஸ்பெயின் அணிதான் அதிக தூரம் ஓடி, வேகமாகப் பாய்ந்து, எதிரணியினரை கடுமையாக நெருக்கி விளையாடி, இறுதி நான்கு அணிகளில் மிகக் கடினமாக உழைத்த அணியாகத் திகழ்கிறது.

பட மூலாதாரம், Getty Images
லூயிஸ் டி லா புவென்டேவின் தலைமையிலான ஸ்பெயின் அணி, போட்டியில் எஞ்சியிருக்கும் அணிகளில் மட்டுமின்றி, இந்த உலகக் கோப்பையின் எந்தவொரு அணியையும் விட மிக அதிக அளவில் பந்தைத் தன் வசம் (66%) வைத்து விளையாடியுள்ளது.
மேலும், இந்தத் தொடரில் விளையாடிய நான்கு அணிகளுமே திறமையாகப் பந்துப் பாஸிங் செய்திருந்தாலும், ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு அணிகளும் இணைந்து மிகத் துல்லியமான பந்துப் பாஸிங் விகிதத்தை (90.4%) பதிவு செய்துள்ளன.
அர்ஜென்டினா, குறிப்பாக லியோனல் மெஸ்ஸி, பாதுகாப்பு வரிசைக்குப் பின்னால் இடைவெளிகளை நோக்கி வழங்கும் துல்லியமான த்ரூ பாஸ்களை தடுக்க இங்கிலாந்தின் தற்காப்பு வீரர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கும்.
அர்ஜென்டினாவின் கேப்டனான மெஸ்ஸி, இந்த உலகக் கோப்பையில் எந்த வீரரையும் விட அதிகமாக தனது அணித்தோழர்களுக்கு த்ரூ பாஸ்களை வழங்கியுள்ளார். அவர் இதுவரை 15 முறை இப்படிப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
ஆனால் இங்கிலாந்து அணியிடமும் அர்ஜென்டினா தற்காப்பு ஆட்டக்காரர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஒரு தனித்துவமான அச்சுறுத்தல் உள்ளது.
தாமஸ் டுஹெலின் தலைமையிலான இங்கிலாந்து அணி, அரையிறுதிக்கு முன்னேறிய நான்கு அணிகளிலேயே ஓபன் பிளேயின் போது மிகச் சிறந்த முறையில் கிராஸ்களை வழங்கியுள்ளது. அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு நான்கு கிராஸ்களிலும் ஒன்று சக வீரரைச் சென்றடைகிறது.
இந்தத் தொடரிலேயே வேறு எந்த அணியையும் விட அவர்கள் ஏன் அதிகபட்சமாக ஹெடட் ஷாட்டுகளை (24) அடித்துள்ளனர் மற்றும் கூட்டாக அதிகப்படியான ஹெடர் கோல்களை (4) அடித்துள்ளனர் என்பதற்கு இதுவே காரணமாகும்.

பட மூலாதாரம், Getty Images
இறுதி நான்கு அணிகளிலும் அர்ஜென்டினா தான் மிகவும் மோசமான ஏரியல் டூயல் வெற்றி விகிதத்தை அதாவது காற்றில் பறந்து வரும் பந்துக்கான போட்டியில் வெற்றி பெறும் விகிதத்தை கொண்டுள்ளது. இது இங்கிலாந்திற்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயம், ஏனெனில் இந்த விஷயத்தில் மேலாதிக்கத்தை அவர்கள் தொடரலாம்.
மேலும், ஒட்டுமொத்தமாக 50-50 சண்டைகளில், அதாவது இரு அணி வீரர்களுக்கும் சமமான வாய்ப்பு உள்ள பந்துச் சண்டைகளில், சிறந்த வெற்றி விகிதத்தை இங்கிலாந்துதான் கொண்டுள்ளது.
இந்த உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸியை விட வெறும் இரண்டு வீரர்கள் மட்டுமே எதிரணி வீரர்களைத் தாண்டி பந்தைக் கடத்திச் சென்றுள்ளனர். ஆனால் அவருடைய சக வீரர்கள் அவ்வாறு செய்ய அரிதாகவே முயன்றுள்ளனர்.
மறுபுறம், பிரான்ஸின் முன்கள நான்கு வீரர்கள் இந்தத் தொடரில் இதுவரை செய்ததைப் போலவே, பந்துடன் வேகமாக முன்னேறி நேரடியாக தங்களை எதிர்கொள்ள வருவார்கள் என்பதற்குத் ஸ்பெயின் தயாராக இருக்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































