இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து 'பருவமழை இடைவேளை' வர எல்நினோ காரணமா?

இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து 'பருவமழை இடைவேளை' வர எல்நினோ காரணமா?

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, நீண்ட பருவமழை இடைவேளை மழைக் குறைபாட்டை மேலும் கவலைக்குரியதாக மாற்றக்கூடும் (சித்தரிப்புப் படம்)
    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒருபுறம் இந்தியாவின் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது, ஆனால் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 'மான்சூன் பிரேக்' (பருவமழை இடைவேளை) காரணமாக பல நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வானிலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், குறிப்பாக, நாட்டில் பருவமழை ஏற்கனவே சராசரியை விட மிகவும் குறைவாக பெய்துள்ள நேரத்தில் நிகழ்ந்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த 6-7 நாட்களுக்குள் வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகள், மேற்கு-மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய தீபகற்பத்தில் பருவமழை பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையமும் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

பருவமழை காலத்தில் ஏற்படும் இந்த வகையான மாற்றம் எவ்வளவு தீவிரமான நிகழ்வு மற்றும் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த செய்தியில் அறிய முயல்வோம்.

'லைவ் வெதர் ஆஃப் இந்தியா' என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனர் நவ்தீப் தஹியா, "ஜூலை இரண்டாவது வாரத்தின் செயற்கைக்கோள் படங்கள் மிகவும் கவலைக்குரிய சூழலைக் காட்டுகின்றன" என்று எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

"மேற்குத் தொடர்ச்சி மலை முதல் நாட்டின் உள்பகுதிகளின் முக்கிய பருவமழைப் பகுதிகள் வரை எங்குமே மழைக்கான அறிகுறிகள் இல்லை. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய இரண்டிலும் மேகங்களின் இருப்பு மிகக் குறைவாக உள்ளது. இந்த நிலைமை ஜூலை 12 என்பதைவிட ஏப்ரல் 12 காலையைப் போல காட்சியளிக்கிறது."

அவரது கூற்றுப்படி, "ஜூலை 18-க்கு முன் பருவமழை சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை."

டெல்லி என்சிஆர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் வானிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மான்சூன் பிரேக் எனப்படும் பருவமழை இடைவேளை காரணமாக நிகழ்கிறது. இது ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும், இந்த ஆண்டு இது அசாதாரணமானதாக உள்ளது.

காலநிலை மாற்றம் எவ்வளவு பெரிய நிகழ்வு

இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து 'பருவமழை இடைவேளை' வர எல்நினோ காரணமா?

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, வானிலை ஆய்வு மையம் இந்தியாவின் செயற்கைக்கோள் படத்தை ஜூலை 11 ஆம் தேதி வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் ஒரு பெரிய பகுதியில் மேகங்கள் இல்லை என்பதைக் காண முடிகிறது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேற்கு-வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஜூலை 19-20 வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்று ஸ்கைமெட் வெதர் அமைப்பின் தலைவரும் வானிலை நிபுணருமான மகேஷ் பஹலாவத் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக டெல்லி என்சிஆர் உட்பட பல பகுதிகளில் மழை கடுமையாக பாதிக்கப்படும், அத்துடன் டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.

"பருவமழை இடைவேளை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒன்று அல்லது இரண்டு முறை நடப்பது வழக்கம்தான். கடந்த சில ஆண்டுகளாக முழுமையான பருவமழை இடைவேளை ஏற்படவில்லை. இப்போது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வறட்சி நிலவுகிறது. ஆனால் கிழக்கு இந்தியாவில் மழை பெய்து வருகிறது," என மகேஷ் பஹலாவத் கூறுகிறார்.

இது காரிஃப் பருவம், பெரும்பான்மை விவசாயம் பருவமழையை நம்பியே உள்ளது. எனவே விவசாயிகளின் கவலையும் அதிகரித்து வருகிறது.

பருவமழை மீண்டும் தீவிரமடைந்த பிறகுதான் இப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மகேஷ் பஹலாவத் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, "இந்த சூழ்நிலையில் மலைகளின் அடிவாரத்தில் அதிக மழை பெய்யும், ஆனால் மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் வானிலை கிட்டத்தட்ட முற்றிலும் வறண்டுவிடும். ஈரப்பதம் குறைந்துவிடும். மழை பெய்யாதது மற்றும் ஈரப்பதம் இல்லாததால் வானம் கிட்டதட்ட தெளிவாகிவிடும்."

"இந்த பருவமழை தெற்கு நோக்கி வரும்போது, அதாவது ஜூலை 19-20 வாக்கில், இந்த பகுதிகளில் மீண்டும் மழை தொடங்கலாம்."

இது எவ்வளவு பெரிய கவலை?

இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து 'பருவமழை இடைவேளை' வர எல்நினோ காரணமா?

பட மூலாதாரம், Firdous Nazir/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, இது நெற்பயிர் நடவு செய்யும் காலம், இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது

பருவமழை இடைவேளை காரணமாக பலரும் கவலை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகரிகா கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "இது மிகவும் கவலைக்குரிய சூழ்நிலை. ஜூலை மாதத்தில் பலவீனமான பருவமழையால் விவசாயம், தண்ணீர் பாதுகாப்பு மற்றும் கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோதி அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? நான் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை எழுப்புவேன்" என்று எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பருவமழை கூட்டத்தொடர் ஜூலை 20 தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறும். அதற்குள் பருவமழை மீண்டும் தொடங்கக்கூடும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேச்சு எழக்கூடும்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சராசரியை விட சுமார் 40 சதவீதம் குறைவாக மழை பெய்தது. பிறகு ஜூலை 9 வரை நாட்டில் நல்ல மழை பெய்துள்ளது.

அனால் ஜூலை 9 வரை மழையின் சராசரி பற்றாக்குறை 12 சதவீதமாகக் குறைந்தது. ஆனால் பருவமழை இடைவேளை காரணமாக மழை பற்றாக்குறை மீண்டும் மிகவும் கவலைக்குரிய நிலையை எட்டக்கூடும்.

"பருவமழை இடைவேளை ஒவ்வொரு முறையும் நடக்கும், ஆனால் இந்த முறை எல் நினோவின் தாக்கம் உள்ளது. பருவமழை ஏற்கனவே பலவீனமாக உள்ளது. இது நீண்ட இடைவெளியாகும். பருவமழை இடைவேளை இவ்வளவு நீளமாக இருக்காது," என்கிறார் மகேஷ் பஹலாவத்.

"மழை 4-5 நாட்கள் மேல் பகுதிகளை நோக்கி நகரும், பின்னர் சமவெளிப் பகுதிக்கு வரும். ஆனால் இந்த முறை இது பத்து நாட்கள் நீடிக்கும் என்பதால், இது நீண்ட இடைவெளியாக மாறும். இவ்வளவு இருக்கக்கூடாது."

இதனால் பருவமழை புள்ளிவிவரங்கள் மேலும் கவலை தரக்கூடியதாக மாறலாம் என்று அவர் கூறினார்.

எல் நினோ என்பது வானிலை தொடர்பான ஒரு இயற்கை மற்றும் சிக்கலான நிகழ்வு ஆகும். இது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் கடல் நீர் சராசரியை விட அதிகமாக வெப்பமடையும் போது தீவிரமடைகிறது.

இதன் தாக்கத்தால் உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்கிறது, இது உலகம் முழுவதும் உள்ள மழைச் சுழற்சியைப் பாதிக்கிறது.

எல் நினோ காரணமாக இந்திய துணைக் கண்டத்தில் காற்றின் அழுத்தம் பாதிக்கப்படுகிறது, இதனால் பெரும்பாலும் பருவமழை பலவீனமடைந்து நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலை ஏற்படலாம்.

பருவமழை இடைவேளை ஏன் ஏற்படுகிறது?

இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து 'பருவமழை இடைவேளை' வர எல்நினோ காரணமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வானிலை மாற்றத்தின் காரணமாக, பல பகுதிகளில் மக்கள் மழையிலிருந்து அல்லாமல், வெயில் மற்றும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம் (சித்தரிப்புப் படம்)

பருவமழை இடைவேளை என்பது பொதுவாக ஒரு சாதாரண வானிலை நிகழ்வு ஆகும். அதிக சக்தி வாய்ந்த காற்றின் தாக்கத்தால் பருவமழையில் இடைவேளை ஏற்படுவது ஒன்றும் விசித்திரமான நிகழ்வு அல்ல.

"காற்றின் திசை காரணமாக பருவமழை இடைவேளை ஏற்படுகிறது. மேற்கு காற்று அதிக பலம் பெற்றால், அது பருவமழையின் அழுத்தப் பாதையை மேல் நோக்கி கொண்டு செல்கிறது," என்கிறார் மகேஷ் பஹலாவத்.

புதிதாக ஏதேனும் வானிலை அமைப்பு உருவானால், அதாவது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சுழற்சி குறைந்த அழுத்தப் பகுதி உருவானால், அது பருவமழையைக் கீழ் நோக்கி இழுக்கும் என்று அவர் கூறுகிறார்.

"வங்காள விரிகுடாவில் ஏதேனும் சுழற்சி அமைப்பு உருவாகி அது உள்பகுதியை நோக்கி வரும்போது, அது பருவமழையை ஈர்க்கும். இதனால் மீண்டும் மழை தொடங்கும்," என்று அவர் கூறினார்.

"தற்போது கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மழை நீடிக்கும். ஆனால் பல பகுதிகள் வறண்ட நிலையிலேயே இருக்கும்."

எல் நினோவின் தாக்கம் 2027 வரை நீடிக்கலாம்

இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து 'பருவமழை இடைவேளை' வர எல்நினோ காரணமா?

பட மூலாதாரம், Kevin Carter/Getty Images

படக்குறிப்பு, எல் நினோவின் தாக்கம் அடுத்த ஆண்டு வரை நீடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

இந்த ஆண்டு இதுவரை மழை குறைவாக இருப்பதற்கு எல் நினோ விளைவுதான் காரணம் என்று கருதப்படுகிறது.

ஜூன் 11 அன்று வெளியான பிபிசி செய்தியில், அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் 2026 ஆம் ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் எல் நினோவின் நிலை மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பல கணிப்புகளின்படி, இது இதுவரை பதிவான மிக சக்தி வாய்ந்த எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கலாம்.

மனித நடவடிக்கைகளால் பல தசாப்தங்களாக அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலைக்கு மத்தியில், 2027 ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக மாறக்கூடும். இதன் தாக்கம் வானிலை, உணவு விநியோகம் மற்றும் பொருளாதாரங்களில் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக பதிவானதை அடுத்து, எல் நினோவின் புதிய கட்டம் தொடங்குவதை தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

விஞ்ஞானிகள் வளிமண்டல நிலைகளிலும் மாற்றத்தைக் கண்டனர். மேற்கு பசிபிக் பகுதியுடன் ஒப்பிடும்போது மத்திய பசிபிக் பகுதியில் காற்றின் அழுத்தம் குறைவாகப் பதிவாகியுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு முகமையும் எல் நினோ நிலை நிலவுவதாகக் கூறியுள்ளது.

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கூற்றுப்படி, இந்த எல் நினோ 'மிகவும் சக்தி வாய்ந்ததாக' மாறுவதற்கு 63 சதவீத வாய்ப்பு உள்ளது.

இது நடந்தால், 1950 முதல் இதுவரை பதிவான மிகப்பெரிய எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது இருக்கும் என்று அந்த முகமை தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை குறைந்தபட்சம் 2027 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு