You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பால் பாக்கெட்டுகளின் வண்ணமயமான நிறங்கள் எதைக் குறிக்கின்றன? - எளிய விளக்கம்
- எழுதியவர், வீரம்மாதேவி
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பால் என்பது மக்கள் அதிகம் யோசிக்காமல், இயல்பாகவே வாங்கும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகும். ஆனால், பாலை பொறுத்தவரை பெரும்பாலும் நிறுவனங்கள் பல்வேறு வண்ண பாக்கெட்டுகளில் பாலை விற்பனை செய்கின்றன.
ஏன் வெவ்வேறு நிற பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது? அந்த நிறங்கள் உணர்த்துவது என்ன?
ஒவ்வொரு பால் பாக்கெட்டிலும் அதிலுள்ள பாலின் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்களின் விகிதத்தை வேறுபடுத்திக் காட்டவே வெவ்வேறு வண்ண பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகின்றது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் மேலும் விரிவாக விளக்கினார், ஆவின் தர உறுதிப் பிரிவு துணை பொது மேலாளரும் மருத்துவருமான கே. அன்பரசு.
ஏன் பால் பாக்கெட்டுகளுக்கு வெவ்வேறு நிறங்கள் உள்ளன?
நுகர்வோர் தங்களுக்கு தேவையான பால் வகையை எளிதாக அடையாளம் காணும் வகையில் பால் நிறுவனங்கள் நிற அடையாள முறையைப் பயன்படுத்துகின்றன. பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கருத்து என்னவென்றால், பிரகாசமான நிறமானது 'சிறந்த' தரமான பாலைக் குறிக்கிறது என்பதாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பால் பாக்கெட் மற்றொன்றை விட உயர்ந்தது என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, அந்த நிறம் முதன்மையாக பாலின் வகையையும் அதற்கேற்ற கொழுப்புச் சத்தையும் குறிக்கிறது.
இது குறித்து ஆவின் தர உறுதிப் பிரிவு துணை பொது மேலாளரும் மருத்துவருமான கே. அன்பரசு கூறுகையில், "ஓராண்டுக்கு 200 டன்னுக்கும் மேலாக பால் உற்பத்தி செய்த உலகின் முதலாவது நாடாக இந்தியா விளங்குகிறது." என்றார்.
மேலும், பாலில் கிருமிகள் எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதையும் அவர் விளக்கினார். அதன்படி,
முதலாவதாக, மொத்த விற்பனை பண்ணைகளிலிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு கெட்டுப் போகாமல் இருப்பதற்காக குளிர்விக்கப்படுகிறது. பிறகு பாலில் கொழுப்பு அளவு, தண்ணீர் கலப்பு இருக்கிறதா, கிருமிகள் உள்ளனவா என்று பாலின் தரம் பரிசோதிக்கப்பட்டு பாலில் உள்ள தூசி, அழுக்கு போன்றவை வடிகட்டப்படுகிறது.
பாஸ்ச்சுரைசேஷன் (Pasteurization) என்ற செயல்முறையின் மூலம் பால் சுமார் 72 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்டு கிருமிகள் அழிக்கப்பட்டு உடனே 5 டிகிரிக்கு குளிர்விக்கப்படுகிறது.
பின் ஹோமோஜனைசேஷன் (Homogenization) முறை மூலம் பாலின் மேல் கிரீம் பிரியாமல் இருக்க கொழுப்பு துகள்கள் சிறியதாக உடைக்கப்பட்டு சமநிலைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டோன்டு பால் (toned), ஸ்டாண்டர்டைஸ்டு, ஃபுல் கிரீம், டபுள் டோன்டு பால் போன்ற வகைகள் தயாரிக்கப்படுகிறது.
பிறகு, இயந்திரம் மூலம் பால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் நிரப்பப்பட்டு பாக்கெட்டுகள் வெப்பத்தால் மூடப்படும்.
பொதுவாக இந்த வகைகள் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லது சத்துகளின் (எஸ்.என்.எஃப் - Solids not Fat) அளவுகளில் உள்ள வேறுபாட்டைக் காட்டுவதற்காகப் பிரிக்கப்படுகின்றன. என விளக்கினார்.
ஒவ்வொரு நிறமும் எதைக் குறிக்கிறது?
ஆவினில் விற்பனையாகும் பலவகை வண்ணப் பால் பாக்கெட்டுகள் எதைக் குறிக்கின்றன என்பதை கே. அன்பரசு விளக்கினார். அவரின் கூற்றுப்படி,
நீல நிற பாக்கெட் – ஆவின் நைஸ் (டோன்டு பால்)
கொழுப்பு அளவு: 3%
எஸ்.என்.எஃப் அளவு: 8.5%
மெஜந்தா நிற பாக்கெட் - ஆவின் டயட் (டபுள் டோன்ட்)
கொழுப்பு அளவு: 1.5%
எஸ்.என்.எஃப் அளவு: 9%
ஆரஞ்சு நிற பாக்கெட் – ஆவின் ப்ரீமியம் [ஃபுல் கிரீம் மில்க்]
கொழுப்பு அளவு: 6%
எஸ்.என்.எஃப் அளவு: 9%
பச்சை நிற பாக்கெட் - ஆவின் க்ரீன் மேஜிக்
கொழுப்பு அளவு: 4.5%
எஸ்.என்.எஃப் அளவு: 8.5%
ஊதா நிற பாக்கெட் - ஆவின் டிலைட் பால்
கொழுப்பு அளவு: 3.5%
புரதம் அளவு: 3.2%
இவ்வாறு அவர் ஆவின் பால் பாக்கெட் விவரங்களை வழங்கினார்.
மேலும் சில நிறுவனங்களின் பால் பாக்கெட் விவரங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
அமுல் - டாஷா டோன்ட் மில்க் (நீல நிற பாக்கெட்)
கொழுப்பு: 3.5%
புரதம்: 3.0%
அமுல்: சக்தி மில்க் (பச்சை நிற பாக்கெட்)
கொழுப்பு: 4.5%
புரதம்: 3.0%
மதர் டெய்ரி - டோன்ட் மில்க்
கொழுப்பு: 3%
எஸ்.என்.எஃப் : 8.5%
மதர் டெய்ரி- ஸ்டான்டர்டைஸ்டு மில்க்
கொழுப்பு: 4.5%
எஸ்.என்.எஃப்: 8.5%
அனைத்து நிறுவனங்களும் ஒரே நிறத்தைப் பயன்படுத்துகின்றனவா?
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பாலில் உள்ள சத்துகளின் அடிப்படையில் அவற்றை வெவ்வேறு நிறப் பாக்கெட்டுகளாகப் பிரிக்கிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் தேவைகளை இது ஒழுங்குப்படுத்தினாலும் சில பால் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இதனைப் பின்பற்றுகின்றன.
எனவே, பால் வாங்கும் முன் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கொழுப்பின் விகிதம் மற்றும் பாலின் வகை விவரங்களைப் படிப்பது அவசியம். அதன்படி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள், அதிக ஆற்றல் தேவைப்படும் விளையாட்டு வீரர்கள், மற்றும் கடினமான உடல் உழைப்பு உள்ளவர்கள் ஆகியோர் தங்களுக்கு ஏற்ற பால் வகை எது என்பதையறிந்து இதன்மூலம் பயன்படுத்த முடியும்.
பாக்கெட் பாலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
அன்பரசுவின் கூற்றுப்படி, "பாக்கெட் பாலை தண்ணீர் கலக்காமல் 40 டிகிரி முதல் 45 டிகிரி வெப்பத்தில் சூடுபடுத்தி குடிக்க வேண்டும்."
"ஏனெனில், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கும்போது அதிலுள்ள புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவு குறைக்கப்படுகிறது. மேலும் 60 கலோரிகள் கிடைக்கக் கூடிய ஒரு பால் பாக்கெட்டில் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கப்படும்போது வெறும் 30 கலோரிகள் மட்டுமே கிடைக்கின்றன." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு