'20,000 பட்டாம்பூச்சிகள்': மதுரை கல்லூரி வளாகத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் வருவது ஏன்?

மதுரை, பட்டாம்பூச்சிகள், இயற்கை
படக்குறிப்பு, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தின் மரங்களில் காணப்படும் பட்டாம்பூச்சிகள்
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பரபரப்பான ஒரு நகரத்தின் மையத்தில் இருக்கும் ஒரு பகுதியில், மிகப்பெரிய எண்ணிக்கையில் பட்டாம்பூச்சிகளைக் காண்பது என்பது சற்றே அரிதான ஒன்று. அத்தகைய அரிதான விஷயம் தான் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் நடக்கிறது.

இந்தக் கல்லூரியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஜூன் மாத இறுதியில் வந்து அமர்கின்றன, சில நாட்களுக்குப் பிறகு இவை வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன.

"மழைக் காலம் தொடங்கியவுடன் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து பட்டாம்பூச்சிகள் அதிகளவில் இடம்பெயரும். கல்லூரி வளாகத்தில் மரங்கள் அதிகமாக இருப்பதால், இடப்பெயர்ச்சி காலத்தில் இவ்வளாகம் அவற்றுக்கு தற்காலிக ஓய்விடமாக உள்ளது" என்கிறார் அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர், முனைவர் ஜாய் ஷர்மிளா.

பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வு

மதுரை, பட்டாம்பூச்சிகள், இயற்கை

"இந்தப் பகுதிக்கு பட்டாம்பூச்சிகள் வருவதை கடந்த 2018 முதல் ஆய்வு செய்து வருகிறோம். முந்தைய வருடங்களை விட இந்த வருடம் அதிகளவில் பட்டாம்பூச்சிகள் வந்துள்ளன" என்கிறார் முனைவர் ஜாய் ஷர்மிளா.

இந்த வருடம் ஜூன் இறுதி வாரத்தில் 20,000-க்கும் அதிகமான பட்டாம்பூச்சிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்திற்கு வந்துள்ளதாகவும், அதில் 4 வகையான பட்டாம்பூச்சிகள் அதிகளவில் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

"டார்க் ப்ளூ டைகர், ப்ளூ டைகர், காமன் க்ரோ மற்றும் டபுள் பிராண்டட் க்ரோ ஆகிய இனங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன" என்கிறார் ஜாய் ஷர்மிளா.

இந்தியாவில் இவ்வாறு பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வது என்பது சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமல்ல, 19ஆம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

"ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் பட்டாம்பூச்சிகள் வழக்கத்திற்கு மாறான எண்ணிக்கையில் தோன்றி, தொடர்ந்து வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றன" என்று பிரிட்டிஷ் இயற்கையியலாளர் ஈ.ஹெச். ஐட்கென் 1897இல் தான் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து, 'தி ஜர்னல் ஆப் தி பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

"பட்டாம்பூச்சிகள் இடப்பெயர்வை உள்ளூர் மக்கள் கவனித்துள்ளனர். பட்டாம்பூச்சிகள் வந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மழை வரும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இது எப்போதும் நடப்பதாக நான் கண்டறியவில்லை." எனக் குறிப்பிடுகிறார் ஈ.ஹெச். ஐட்கென்.

"1897இல் ஜூன் 7 அன்று இடப்பெயர்வு தொடங்கியது. வழக்கமான பருவமழை பெய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இது நிகழ்ந்தது. முதல் கனமழையால் முந்தைய பருவத்தின் கூட்டுப்புழுக்களிலிருந்து (Pupae) வெளிவரும் பட்டாம்பூச்சிகளே இவ்வாறு இடம்பெயர்கின்றன. அவை பருவமழையிலிருந்து தப்பிக்கவே இடம்பெயர்கின்றன என்று நான் கருதுகிறேன்." என்று எழுதியுள்ளார் ஈ.ஹெச். ஐட்கென்.

"அவை இடம்பெயரும்போது, ஜன்னலுக்கு வெளியே அவற்றைக் காணாமல் இருக்க முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் அவை கடந்து செல்கின்றன".

பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வது ஏன்?

மதுரை, பட்டாம்பூச்சிகள், இயற்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம் (2018, அமெரிக்கா)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் பருவமழையே பட்டாம்பூச்சிகளின் தற்காலிக இடம்பெயர்வுக்கு காரணம் என பலவேறு பட்டாம்பூச்சி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பருவநிலைகளுக்கு ஏற்றவாறு இடம்பெயர்வது அல்லது வலசை என்பது பூச்சிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களில் காணப்படும் பொதுவான ஓர் அம்சமாகும்.

"உணவு, நீர், இடம், கூடு கட்டும் வசதிகள் அல்லது பிற வளங்கள் பற்றாக்குறையாக உள்ள ஒரு வாழ்விடத்திலிருந்து, வளங்கள் அதிகமாக உள்ள பகுதிக்கு உயிரினங்கள் நகர்வது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நிகழும் ஒன்று" என இந்த இயற்கை நிகழ்வை அமெரிக்காவின் பிரபல உயிரியலாளர் ஸ்னீட் பி. கொல்லார்ட் ஒரு ஆய்வுக் கட்டுரையில் விவரிக்கிறார்.

"பல பட்டாம்பூச்சி இனங்கள் ஒரு புவியியல் பகுதியில் பிறந்து வளர்ச்சியடைகின்றன. பின்னர், அவை முழு வளர்ச்சியடைந்தவுடன் வெகு தொலைவில் உள்ள மற்றொரு புவியியல் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. அங்கு அவை புதிய சந்ததிகளை உருவாக்குகின்றன. அந்தச் சந்ததிகள் அந்த இரண்டாவது பகுதியிலேயே வளர்ச்சியடைகின்றன. இத்தகைய இடப்பெயர்வுகள் தலைமுறைகளுக்கு இடையே நிகழ்கின்றன" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழையின் காரணமாக, வெப்பநிலை குறைந்து, பனிமூட்டம் போன்ற சூழல்கள் உருவாகும். இதனால் முதிர்ந்த பட்டாம்பூச்சிகளுக்குப் பறப்பதில் சிரமம், தேன் கிடைப்பது குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே கனமழை தொடங்குவதற்கு முன்பு, பட்டாம்பூச்சிகள் வறண்ட சமவெளிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடம்பெயர்கின்றன என்பதே உயிரியலாளர்கள், ஆய்வாளர்கள் அளிக்கும் விளக்கமாக உள்ளது.

ஆண்டின் பிற்பகுதியில் (அக்டோபர்- டிசம்பர் மாதங்களில்), கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வடகிழக்குப் பருவமழை பெய்யும்போது, இந்த பட்டாம்பூச்சிகள் மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் திரும்புகின்றன, இதில் அடுத்த தலைமுறை பட்டாம்பூச்சிகளும் அடங்கும்.

பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வு எதை குறிக்கிறது?

மதுரை, பட்டாம்பூச்சிகள், இயற்கை
படக்குறிப்பு, முனைவர் ஜாய் ஷர்மிளா.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாத இறுதியில், வளாகத்தின் மரங்களில் கூட்டம்கூட்டமாக ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளைக் காண்பது மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மிகவும் வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

பட்டாம்பூச்சிகளின் வலசைக்கு குறிப்பிடத்தக்க காரணங்கள் இருந்தாலும், அவை ஏன் மதுரை போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஒரு நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் கல்லூரிக்கு சில நாட்களுக்கு வருகை தருகின்றன என்பதை இன்னும் தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறுகிறார் முனைவர் ஜாய் ஷர்மிளா.

"வளாகத்தில் அதிகளவு மரங்கள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பல வருடங்களாக பட்டாம்பூச்சிகள் இங்கு வருகை தருவதால், 2014ஆம் ஆண்டு ஒரு பட்டாம்பூச்சி தோட்டம் வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் மட்டும் சுமார் 45 பட்டாம்பூச்சி இனங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்" என்கிறார் அவர்.

கல்லூரி வளாகத்தில் திவி திவி (Divi-Divi) வகை மரங்கள் இருப்பது பட்டாம்பூச்சிகள் அதிகம் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறார் பட்டாம்பூச்சிகள் குறித்த முனைவர் ஆய்வை மேற்கொண்டுவரும் அர்ச்சனா.

காரணம், "இந்த திவி திவி மரங்களின் உச்சியில் கொத்து கொத்தாக பூக்கள் இருக்கும். பட்டாம்பூச்சிகள் தொடர்ந்து தேன் குடிக்க இது வசதியாக இருக்கும். இந்த பூக்கள் மலர்வதற்கான தட்பவெப்ப சூழலும் இப்போது நிலவும். எனவே வலசையின் போது, தங்களுக்கான ஓய்விடமாக இந்தப் பகுதியை பட்டாம்பூச்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன" என்கிறார் அவர்.

மதுரை, பட்டாம்பூச்சிகள், இயற்கை
படக்குறிப்பு, பட்டாம்பூச்சிகள் குறித்த முனைவர் ஆய்வை மேற்கொண்டுவரும் அர்ச்சனா.

"பட்டாம்பூச்சிகள் சுற்றுச்சூழல் குறிகாட்டிகள் (Sensitive bioindicators). அதாவது, ஓரிடத்தில் பட்டாம்பூச்சிகள் அதிகம் இருப்பது அந்த இடம் மாசு குறைவாகவும், அதிக பசுமையாக இருப்பதையும் குறிக்கும்."

"மறுபுறம், இந்தியாவில் பட்டாம்பூச்சிகள் இனம் அருகி வருகிறது. இதற்கு வாழ்விட இழப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை முக்கிய காரணங்கள். எனவே நகரங்களுக்குள் இத்தகைய பசுமையான வளாகங்களை அதிகம் உருவாக்க வேண்டும்" என்று கூறுகிறார் அர்ச்சனா.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி, உலகின் மொத்த விவசாய நிலத்தில் 35 சதவீத நிலங்கள், அதாவது மனிதர்களின் உணவுப்பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்களை நம்பியே உள்ளது.

"உணவுச் சங்கிலி மற்றும் மகரந்தச் சேர்க்கைகளில் பட்டாம்பூச்சிகளின் பங்கு முக்கியமானது. குறிப்பாக காடுகளின் வளர்ச்சியில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன." என்கிறார் முனைவர் ஜாய் ஷர்மிளா.

"எனவே வெறும் அழகியல் என்ற கண்ணோட்டத்தில் பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பதைத் தாண்டி அவற்றைப் பாதுகாப்பது குறித்தும், அதன் வலசை குறித்தும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.