காணொளி: விளைநிலங்களில் எரிபொருள் குழாய் பதிக்க திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?

காணொளிக் குறிப்பு, விவசாய நிலங்களில் எரிபொருள் குழாய் பதிப்பு; திருப்பூர் விவசாயிகள் தீவிரமாக எதிர்ப்பது ஏன்?
காணொளி: விளைநிலங்களில் எரிபொருள் குழாய் பதிக்க திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை தமிழகம் வழியாக குழாய் மூலமாக எரிபொருள் கொண்டு செல்லும் திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஐடிபிஎல் எனப்படும் (Irugur-Devangonthi Pipeline Project) திட்டத்துக்காக கோவை மாவட்டம் இருகூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை, 70 கி.மீ. தூரத்துக்கு விவசாய விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மையான பகுதி, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

விவசாயிகளின் கூற்றுப்படி, கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, இதே விவசாய நிலங்கள் வழியாக ஏற்கெனவே பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, மத்திய அரசால் நிறைவேற்றப்படும் ரயில்வே தடங்கள், ரயில்வே பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு மாநில அரசுதான் நிலம் கையகப்படுத்தித் தர வேண்டும்.

அதேபோல இந்த திட்டத்துக்கும் தமிழக அரசால்தான் நிலமெடுத்துத் தரப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் 60 அடி அகலத்துக்கு நிலம் குறிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் கட்டடம் கட்டக்கூடாது, தென்னை வளர்க்கக்கூடாது உள்ளிட்ட ஏராளமான நிபந்தனைகளுடன் அந்த நிலங்களில் குழாய் பதிக்கப்பட்டு, நிலப்பயன்பாட்டுக்கான இழப்பீட்டுத் தொகையும் அப்போது வழங்கப்பட்டுள்ளது.

அந்த குழாய்கள் 20 அடி வரையிலான ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேல் நெல், வெங்காயம், மஞ்சள் உள்ளிட்ட பல விதமான விவசாயங்களையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகள் அனைத்தும் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டத்தின் பாலாறு படுகையில் இடம் பெற்றுள்ளதால் தண்ணீர் வசதியும் இருப்பதால் இப்பகுதியில் பரவலாகவே விவசாயம் நன்றாக நடப்பது தெரிகிறது.

இப்போது அதே நிலங்களில் மீண்டும் குழி தோண்டி, ஐடிபிஎல் திட்டத்துக்கான குழாய்களைப் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதை எதிர்த்தே திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். இதற்கான ஆயத்தப்பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டில் துவங்கியபோதே, விவசாய அமைப்புகள் இத்திட்டத்தை எதிர்த்துப் போராட்டங்களைத் துவக்கிவிட்டன.

ஏற்கெனவே குழாய் பதிக்கப்பட்ட நிலங்களின் மதிப்பு குறைந்துவிட்டது, விவசாயம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால், மீண்டும் அதே நிலங்களில் குழாய் பதிக்கும்போது இந்த பாதிப்பு மேலும் அதிகமாகும், நிலமதிப்பு மேலும் குறையும் என்பதே விவசாயிகளின் அச்சமாகவுள்ளது. இதனால் புதிய குழாய்களை பதிக்க எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், பழைய குழாய்களையும் இடம் மாற்றி, பிற பகுதிகளில் இருப்பதுபோன்று சாலையோரங்களில் கொண்டு செல்ல வேண்டுமென்பதே இவர்களின் ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது.

இதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பல்வேறு தொடர்போராட்டங்களை விவசாய அமைப்புகள் நடத்தியும் எதற்குமே பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் கடந்த சில நாட்களாக, ஏற்கெனவே குழாய் இருக்கும் பகுதிகளில் பெரிய அளவில் குழிகளைத் தோண்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பயிர்களை அழித்து குழி தோண்டும் நடவடிக்கைகள் வேகமடைந்த பின்பே, விவசாயிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அவினாசிபாளையம் அருகிலுள்ள வேலம்பட்டி டோல்கேட் பகுதியில், கடந்த ஜூலை 31 அன்று ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு, ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து சாலை மறியல் செய்தனர். காவல்துறையினர் வந்து அவர்களை அகற்ற முயன்றபோது, திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பிப் போராடினர். அப்போதுதான் ஒரு பெண் விவசாயி தீக்குளிக்கவும் முயன்றதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. 87 பேர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் தொடருமென்ற எதிர்பார்ப்பில் அடுத்த நாள் ஆகஸ்ட் 1 அன்று, காலையிலேயே டோல்கேட் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கிருந்தனர். கணவன்–மனைவியாக டோல்கேட் பகுதிக்கு வந்த விவசாயிகள் பலரையும், அங்கே நிற்கவே விடாமல் வீட்டிற்குத் திருப்பி அனுப்பிய காவல்துறையினர், தனியாக வந்த விவசாயிகள் சிலரை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஊடகங்களிடம் பேசுவதற்காக அங்கு வந்த விவசாயி பரமசிவம் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். அங்கு இப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிபிசியிடம் பேசிய புதுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி நாச்சிமுத்து, ''ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி நான். இத்திட்டத்தை எதிர்த்து 245 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், மொட்டையடித்து, நாமம் போட்டு, சட்டி எடுத்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆனால் தமிழக அரசும் செவிசாய்க்கவில்லை. மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.'' என்றார்.

''நிலத்தின் குறுக்கே போகும் இந்த குழாய்களால் நிலம் இரு புறமும் தேங்காய் பன் போலாகிவிட்டது. மற்றொரு புறத்தில் பிஏபி வாய்க்காலுக்கும் நிலமெடுக்கப்பட்டுள்ளது. எங்களால் எதையுமே செய்யமுடியவில்லை. விவசாய அமைப்புகள் 3 மாற்று வழியைக் காண்பித்தும் அதையும் ஏற்கவில்லை. 25 வருஷங்களுக்கு முன்னால் விபரம் தெரியாமல் எங்கள் அப்பா கையெழுத்து போட்டுக்கொடுத்துவிட்டார். அதில் குழாய் பதித்துவிட்டார்கள். அதை வைத்துக்கொண்டு, அது எங்கள் இடம் எங்கள் இடம் என்று இப்போது மீண்டும் குழாய் பதிக்கப்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?'' என்றும் கேள்வி எழுப்பினார் விவசாயி நாச்சிமுத்து.

நிலமதிப்பை நிர்ணயிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள் புகார்!

இவ்வாறு குழாய் பதிக்கப்பட்ட நிலங்களின் மதிப்பு குறைந்துவிடும் என்பதுடன், தென்னை விவசாயம் செய்ய முடியாது, கட்டடம் கட்ட முடியாது என்பதால், அந்த நிலத்தை பாகப்பிரிவினையில் பெறும் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதில் சிறிய அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு அதிகமாகி, வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் சிறு விவசாயிகள்.

விவசாயிகளின் போராட்டங்கள், மாற்றுவழி குறித்த கோரிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரேயிடம் பிபிசி சில கேள்விகளை முன் வைத்தது.

அதற்கு பதிலளித்த அவர், ''கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு, மாற்று வழித்திட்டம் சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. அதனால் அதே வழியில்தான் குழாய் பதிக்கப்படும் வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கான இழப்பீடும் சந்தை மதிப்பில் 100 சதவீதம் அதிகமாக உயர்த்தித் தரப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் தங்கள் இழப்பீட்டை பெற்று வருகின்றனர்.'' என்றார்.

''இதுவரை 8 விவசாயிகள் ரூ.41 லட்சத்துக்கான காசோலையைப் பெற்றுள்ளனர். ஆனால் கூடுதல் இழப்பீடு என்பதை விட மாற்றுவழியே விவசாயிகளின் முதன்மை கோரிக்கையாகவுள்ளது. நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விவசாயிகளிடம் பேசியும் வருகிறோம். நிச்சயமாக சில நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன்.'' என்றார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே.

முழு விவரம் காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு