'கண்களை கட்டி, காரில் ஏற்றிச் சென்றார்கள்': ஜந்தர் மந்தரில் உணவு விநியோகம் செய்த ஜுனைத் காவல்துறை மீது குற்றச்சாட்டு

- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை (ஜூலை 25) தனது பதவியை ராஜிநாமா செய்தபோது, ஜந்தர் மந்தரில் முதல் நாளில் இருந்தே இருந்த செயல்பாட்டாளரான ஜுனைத் அங்கு இருக்கவில்லை.
அந்த நேரத்தில் தான் டெல்லி காவல்துறையின் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டதாகவும், தனது கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் ஜுனைத் குற்றம்சாட்டுகிறார்.
ஜுனைத்தின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல்துறையை தொடர்பு கொள்ள முயன்றோம், ஆனால் அவர்களின் தரப்பிலிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை. காவல்துறையின் தரப்பு விளக்கம் கிடைத்தவுடன், அது இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.
ஜூன் 20ஆம் தேதி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் தொடங்கியதில் இருந்தே ஜுனைத் தொடர்ந்து அங்கு இருந்ததுடன் போராட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கான உணவு மற்றும் தண்ணீர் வசதிகளைச் செய்து தந்துகொண்டிருந்தார்.
உத்தரப் பிரதேச காவல்துறை தனது குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாக ஜுனைத் குற்றம் சாட்டுகிறார்.
காவல்துறை என்ன கூறுகிறது?

பட மூலாதாரம், Muhammad Junaid Insta
பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய காசியாபாத் காவல்துறை, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் அவரை காவலில் எடுத்ததை நிராகரித்துள்ளது.
மீரட் காவல்துறை பிபிசியின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. சட்டவிரோதமாகக் காவலில் எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு டெல்லி காவல்துறையும் பிபிசிக்கு பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில், ஜுனைத் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்த காரணத்துக்காகத் தங்களைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்ததாகவும், தனது குடும்பத்தினரை அலைக்கழித்ததாகவும், இவை அனைத்தும் எந்தவொரு சட்டப்பூர்வ நடைமுறையையும் பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தை சுதந்திரமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக எடுக்கப்படும் எந்தவொரு தண்டனை நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவங்களின் போது காக்ரோச் ஜனதா கட்சியும் (சிஜேபி) ஜுனைத்திடமிருந்து தூர விலகியிருந்தது, இருப்பினும் இப்போது சிஜேபி தனக்கு உதவி வருவதாக ஜுனைத் கூறுகிறார்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய ஜுனைத், தனக்கோ, தனது குடும்பத்துக்கோ எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என்றும், போராட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே ஜந்தர் மந்தரில் உணவு விநியோகம் செய்து வந்ததாகவும் கூறினார்.
குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதாகக் குற்றச்சாட்டு
ஜுனைத்தின் கூற்றுப்படி, ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேச காவல்துறை அவரது வீட்டுக்குச் சென்று, அவரது தந்தையை விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச் சென்றது.
வீட்டிலிருந்து வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறுகிறார்.
ஜுனைத்தின் கூற்றுப்படி நள்ளிரவில் அவர் விடுவிக்கப்பட்டார், ஆனால் அடுத்த நாளும் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.
பின்னர் மீரட்டில் வசிக்கும் அவரது சகோதரியின் மாமனார் மற்றும் அவரது மைத்துனர் ஆகியோரும் உள்ளூர் காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டதாக ஜுனைத் குற்றம் சாட்டுகிறார்.
அவரது குடும்பத்தினருக்கு இதெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது, ஜுனைத் ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்தார்.
ஜூலை 24-ஆம் தேதி இரவு ஜந்தர் மந்தரில் இருந்தபோது ஒரு நாய் தன்னைக் கடித்துவிட்டதாக ஜுனைத் தெரிவித்தார். சிகிச்சைக்காக அவர் தனது நண்பர் ஒருவருடன் டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குச் சென்றார்.
அவரது கூற்றுப்படி, மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய சில நிமிடங்களிலேயே, அவர்கள் வந்த ஆட்டோவின் முன்னால் ஒரு வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் வந்து நின்றது.
காரில் இருந்து இறங்கிய நபர்கள் தங்களை டெல்லி காவல்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டதாக ஜுனைத் குற்றம் சாட்டுகிறார்.
அவர்கள் சாதாரண உடையில் இருந்ததாகவும், வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை என்றும், தங்களுக்கு எந்தவொரு பிடியாணையோ அல்லது எழுத்துப்பூர்வ உத்தரவோ காண்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
பிபிசி-யால் இந்த கூற்றுகளைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், Muhammad Junaid Insta
'கண்கள் கட்டப்பட்டன'
அவரையும் அவரது நண்பரையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிய பிறகு அவர்களின் கண்கள் கட்டப்பட்டு இருவரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது ஜுனைத்தின் குற்றச்சாட்டாக உள்ளது.
அவர்கள் ஒரு அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அடுத்த நாள் வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜுனைத்தின் கூற்றுப்படி, விசாரணையின் போது அவரிடம், அவர் ஏன் காசியாபாத்திலிருந்து ஜந்தர் மந்தருக்கு வருகிறார் என்றும், போராட்டக்காரர்களுக்கான உணவு ஏற்பாடு செய்வதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.
பல்வேறு நபர்கள் மற்றும் அமைப்புகளின் தன்னார்வ உதவியால்தான் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று தான் பதிலளித்ததாக அவர் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, சிலர் ஆன்லைன் உணவு விநியோகம் மூலமாக உணவை அனுப்பி வைத்தனர், விவசாய அமைப்புகள் உணவைக் கொண்டு வந்தன மற்றும் குருத்வாராக்களிலிருந்தும் லங்கர் (இலவச உணவு) வந்து சேர்ந்தது.

பட மூலாதாரம், Muhammad Junaid Insta
'மாலையில் விடுவிக்கப்பட்டார்'
விசாரணைக்குப் பிறகு அவர்கள் பல மணி நேரம் தங்களை வாகனத்தில் சுற்ற வைத்ததாகவும், பின்னர் மாலை நேரத்தில் உத்தராகண்டில் உள்ள டேராடூனுக்கு அருகில் ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் இறக்கிவிட்டதாகவும் ஜுனைத் தெரிவித்தார்.
அவர்கள் செல்லும்போது, சில நிமிடங்களுக்குக் கண்ணில் உள்ள கட்டை அவிழ்க்கக் கூடாது என்றும், ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் மொபைல் போனை 'ஆன்' செய்ய வேண்டும் என்றும் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
இதேபோல் மீண்டும் அழைத்துச் செல்லப்படுவோமோ என்ற பயம் அவருக்கு இருந்ததால் ஆரம்பத்தில் அவர் இந்தச் சம்பவத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை என்பது ஜுனைத்தின் கூற்று. பின்னர் அவர் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பகிரங்கப்படுத்த முடிவு செய்தார்.
போராட்டத்துக்கான நிதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜுனைத், யாரிடமிருந்தும் ரொக்கமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நிதி உதவியைப் பெறுவதில்லை என்றும், எந்தவொரு கியூஆர் கோடையும் (QR Code) வெளியிடக் கூடாது என்றும் தாங்கள் முன்பே முடிவு செய்திருந்ததாகக் கூறினார்.
இந்த நோக்கத்துக்காகத் தனது வங்கிக் கணக்குக்கு எந்தவொரு பணமும் வரவில்லை என்றும், விசாரணை முகமைகள் விரும்பினால் தங்களது பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Muhammad Junaid Insta
தனது கூற்றுகளுக்கான ஆதாரங்கள் குறித்து ஜுனைத் என்ன கூறுகிறார்?
காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரிடம் மொபைல் போன் இல்லை என ஜுனைத் கூறுகிறார்.
விடுவிக்கப்பட்ட பிறகு, தான் இறக்கிவிடப்பட்ட இடத்துக்கு அருகில் அமைந்திருந்த ஒரு காவல் நிலையத்தை புகைப்படம் எடுத்ததாக அவர் கூறுகிறார்.
அவரிடம் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் பரிந்துரைச் சீட்டு மற்றும் டெல்லிக்குத் திரும்புவதற்காகப் பயன்படுத்திய வாடகை கார் கட்டண ரசீதும் இருப்பதாக அவர் கூறுகிறார்.
பிபிசி இந்த ஆவணங்களைப் பார்த்துள்ளது.
தான் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் அதே காலகட்டத்தில்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த செய்தியைத் தான் அறிந்ததாக ஜுனைத் கூறினார்.
தங்களது போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையுமானால், அது தங்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும் என்று கருதுவதாக அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இது போன்ற இயக்கங்களில் தான் தொடர்ந்து பங்கேற்கப் போவதாக ஜுனைத் கூறுகிறார்.
சட்டப் படிப்பு படித்து வரும் ஜுனைத், எதிர்காலத்திலும் கல்வி தொடர்பான விவகாரங்களில் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































