You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிலநடுக்க பலி 188-ஆக உயர்வு: மதுரோ கைதுக்குப் பிந்தைய அமெரிக்கா - வெனிசுவேலா புதிய உறவுக்கு சோதனை
- எழுதியவர், வனேசா புஷ்ஷ்லூட்டர்
- பதவி, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி ஆசிரியர்
- எழுதியவர், லெய்ரே வென்டாஸ்
- எழுதியவர், கிளேர் கீனன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
வெனிசுவேலாவின் தலைநகருக்கு அருகே ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 188 பேர் உயிரிழந்தனர், 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்; இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கராகஸ் மற்றும் அருகிலுள்ள கடற்கரை நகரமான லா குவைராவில், இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மக்கள் உதவி கேட்டு அலறும் சத்தம் கேட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, 7.2 அளவு கொண்ட முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில வினாடிகளிலேயே, அதைவிட வலிமையான 7.5 அளவு கொண்ட மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது; இவை இரண்டும் பூமிக்கு மிக அருகில் ஏற்பட்டதால் சேதத்தின் அளவு மிகக் கடுமையாக இருந்தது.
இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; பலர் வீடுகளை இழந்தும், சேதமடைந்த மற்றும் பாதுகாப்பற்ற கட்டடங்களில் தங்க அஞ்சியும் வீதிகளில் உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வெனிசுவேலாவில் தேசிய விடுமுறை நாளான புதன்கிழமை, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 4 நிமிட அளவில் (GMT நேரம் 22:04) அடுத்தடுத்து இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன; விடுமுறை நாள் என்பதால், வழக்கமான வேலைநாட்களை விட அதிக மக்கள் தங்கள் வீடுகளில் இருந்திருப்பார்கள்.
USGS-இன் தகவலின்படி, இரண்டு நிலநடுக்கங்களுமே பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகில் (குறைந்த ஆழத்தில்) ஏற்பட்டவை; முதலாவது நிலநடுக்கம் மேற்பரப்பிலிருந்து 20.3 கி.மீ ஆழத்திலும், இரண்டாவது 10 கி.மீ ஆழத்திலும் மையம் கொண்டிருந்தன.
நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அவசரநிலையை அறிவித்துள்ளார். உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெனிசுவேலா நாடாளுமன்ற தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மீட்புப் பணிகளுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன; இதில் அமெரிக்கா 150 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,416 கோடி) மதிப்பிலான நிதியுதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
லா குவைராவில் 250 கட்lடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலுமாக அழிந்துள்ளன என்று ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் கூறினார். அங்கு, 10 மாடி ஹோட்டல் ஒன்று தரைமட்டமாகியிருந்த காட்சிகளை பிபிசி உறுதி செய்தது. வியாழக்கிழமை, மக்கள் அங்கு தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிக் கொண்டிருந்தனர்.
தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாகவும், கடலோரப் பகுதியில் வசிக்கும் தனக்குத் தெரிந்த சுமார் 20 பேரைக் காணவில்லை என்றும் ஜுவான் ஓர்டிஸ் பிபிசியிடம் கூறினார்.
"நான் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கிறேன், என்னால் உதவ முடியவில்லையே என்ற விரக்தியிலும் இருக்கிறேன்," என்று கராகஸில் உள்ள அந்த மருத்துவ மாணவர் கூறினார்.
தலைநகரிலும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன என்றும், ட்ருஜில்லோ, யாராகுய், கராபோபோ, அரகுவா மற்றும் மிராண்டா ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ கூறினார்.
கராகஸ் பெருநகரப் பகுதியின் ஒரு அங்கமான சாகாவோவின் மேயர் குஸ்டாவோ டியூக், வியாழக்கிழமை இடிந்துபோன ஒரு கட்டடத்திற்கு வெளியே நின்று, அங்கு 11 பேர் உயிரிழந்ததாகவும், 23 பேர் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளிப் பதிவில், "இன்னும் உயிருடன் இருக்கும் மக்களைச் சென்றடைவதற்காக" நிபுணர்கள் உள்ளே செல்ல ஏதுவாக, குழுவினர் இடிபாடுகளை அகற்றி வருவதாக அவர் கூறினார்.
"முடிந்தவரை அதிகமானோரை உயிருடன் மீட்க நாங்கள் முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
கராகஸின் புறநகர்ப் பகுதியான மைக்கெட்டியாவில் உள்ள வெனிசுவேலாவின் பிரதான சர்வதேச விமான நிலையம், கடுமையான சேதம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் தெரிவித்தார். முனையத்தின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட காணொளியில், கூரையிலிருந்து தூசியும் இடிபாடுகளும் விழுவது காட்டப்பட்டது.
கராகஸிலிருந்து சுமார் 250 கி.மீ (155 மைல்கள்) வடமேற்கில், கடற்கரையோரத்தில் உள்ள டுக்காகாஸ் என்ற இடத்தில், ஒரு ஹோட்டல் எனக் கூறப்படும் பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததை மற்றொரு சரிபார்க்கப்பட்ட காணொளி காட்டியது.
இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு குறைந்தது 30 நில அதிர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், அப்பகுதியில் நில அதிர்வுகள் தொடர்ந்து இருப்பதாக டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனலான வெனிசுவேலானா டி டெலிவிஷனிடம் தெரிவித்தார்.
"அதிக அளவிலான உயிரிழப்புகளும் பரவலான சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது; இந்த பேரிடர் பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்" என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முந்தைய இதேபோன்ற நிலநடுக்கங்கள் மற்றும் அப்பகுதியின் மக்கள் தொகை அடர்த்தி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், இந்த நிலநடுக்கங்களால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க 42% வாய்ப்பும், 1,00,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க 33% வாய்ப்பும் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.
அவசரகால மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளனவே தவிர, இவை துல்லியமான கணிப்புகள் அல்ல. ஒத்த பண்புகளைக் கொண்ட முந்தைய நிலநடுக்கங்கள் மற்றும் ஒவ்வொரு நிலநடுக்கத்தின் அளவு, ஆழம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இவை கணக்கிடப்பட்டுள்ளன.
கட்டடங்களின் தரம் மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் உள்ளிட்ட பிற காரணிகளும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மின்சாரம் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் நிலைமை சிக்கலாகியுள்ளது என்றும், இதனால் சேதத்தின் உண்மையான அளவை மதிப்பிடுவது கடினம் என்றும் கராகஸைச் சேர்ந்த பத்திரிகையாளர் லூயிஸ் ஹெர்னாண்டஸ் பிபிசி நியூஸ்டே (BBC Newsday) நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
"நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பாதிப்பை மதிப்பிடுவது எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
கராகஸின் அல்டமிரா மற்றும் லாஸ் பாலோஸ் கிராண்டேஸ் ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கபெல்லோ (Cabello) விடிவி (VTV) தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
வெனிசுவேலா தலைநகரில் கடைசியாக ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தின்போதும் (1967-ல், 200 பேர் உயிரிழந்தனர்) இந்தப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
1900-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெனிசுவேலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களிலேயே இதுதான் மிக வலிமையானது என்று USGS-ன் பதிவுகள் காட்டுகின்றன.
"என் வாழ்நாளில் நான் உணர்ந்ததிலேயே மிக வலிமையான நிலநடுக்கம் இதுதான்," என்று பிபிசி முண்டோவின் (BBC Mundo) நிக்கோல் கோல்ஸ்டர் கூறினார்.
லாஸ் பாலோஸ் கிராண்டேஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் வசிக்கும் கோல்ஸ்டர் மேலும் கூறிறுகையில் "அதன் தீவிரம் எந்தளவுக்கு இருந்ததென்றால், அந்தக் கட்டடம் என் மீது இடிந்து விழுந்துவிடுமோ என்று நான் நினைத்தேன்." என்றார்.
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவிலும் (Bogotá) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ எக்ஸ் தளத்தில் எழுதிய பதிவு ஒன்றில், "இந்தத் துயரமான தருணங்களில், என் இதயம், என் எல்லையற்ற அரவணைப்பு மற்றும் என் பிரார்த்தனைகள் ஒவ்வொரு வெனிசுவேலா இல்லத்துடனும் உள்ளன." என குறிப்பிட்டுள்ளார்.
உயிர் பிழைத்தவர்களைச் சென்றடைய மீட்புக் குழுவினர் பணியாற்றி வருவதாகவும், அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார், மெக்சிகோ மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து உதவிகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறினார்.
அமெரிக்கா - வெனிசுவேலா புதிய உறவுக்கு சோதனை
ஜனவரியில் அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய உத்தரவிட்டதிலிருந்து, அமெரிக்காவுடனான வெனிசுவேலாவின் புதிய உறவுக்கு இந்தப் பேரழிவு முதல் சோதனையாக அமைந்துள்ளது.
"விரைவாகச் செயல்படத் தயாராக இருக்குமாறு" தனது அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக டிரம்ப் கூறினார்.
"வெனிசுவேலாவின் மக்களைத் தாக்கிய இரண்டு பெரிய நிலநடுக்கங்களும் அளவில் மிகப் பெரியவை, மேலும் பேரழிவை ஏற்படுத்தும் எண்ணிக்கையிலான மரணங்களை ஏற்படுத்தியுள்ளன," என்று அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார்.
"அமெரிக்கா உதவ தயாராகவும், விருப்பமாகவும், திறமையாகவும் உள்ளது!" என்றும் அவர் மேலும் கூறினார்.
"தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவ வளங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா உடனடியாக அனுப்பி வருகிறது" என்று வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ கூறினார்.
அமெரிக்காவின் நீண்டகால விமர்சகரான மதுரோ கைது செய்யப்பட்டதிலிருந்து, டிரம்ப் நிர்வாகம் வெனிசுவேலாவுடனான உறவுகளை மறுகட்டமைக்க முயன்று வருகிறது. மதுரோவின் அரசில் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸுக்குத் தனது ஆதரவை அமெரிக்கா வழங்கியது.
எஸ்மே ஸ்டாலர்ட் மற்றும் கேப்ரியலா பொமெராய் ஆகியோரின் கூடுதல் பங்களிப்புடன்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு