மாணவர் விசாவில் டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள் - இந்திய மாணவர்களுக்கு என்ன சிக்கல்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்தியா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து செல்லும் மாணவர்களுக்கு டிரம்ப் அரசாங்கத்திடமிருந்து மற்றொரு மோசமான செய்தி வந்தது.

சமீபத்திய மாதங்களில், ஹார்வர்ட் உட்பட அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக் கழகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பல்கலைக்கழகங்களை 'அரசியல் சண்டைகளுக்கான தளமாக' மாற்றக்கூடாது என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. அமெரிக்க விழுமியங்களை எதிர்க்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

இப்போது டிரம்ப் நிர்வாகம் இந்த திசையில் மற்றொரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான நேரம் ஒதுக்குவதை நிறுத்துமாறு உலகெங்கிலும் உள்ள அதன் தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆழமாக ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் செயல்பட்டு வருவதாக டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்வது அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் அரசாங்கத்தின் இந்த முடிவு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர முயற்சிக்கும் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே சமூக ஊடகங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விமர்சிக்கும் மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்று அர்த்தமா?

சமூக ஊடகங்கள் எவ்வாறு சரிபார்க்கப்படும்? புதிய கட்டுப்பாடுகள் மாணவர் விசா நேர்காணல்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த எல்லா கேள்விகளுக்குமான பதில்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய மாணவர்களை பாதிக்குமா?

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படிக்கச் செல்கின்றனர்.

சர்வதேச கல்வி பரிமாற்றத்திற்கான ஓபன் டோர்ஸ் 2024 அறிக்கையின்படி, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 3.30 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வந்தனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் புதிய வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. புதிய வகுப்புகளுக்கு விசா பெற முயற்சிக்கும் மாணவர்கள் இந்த முடிவால் பாதிக்கப்படலாம்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் குறிப்பை பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் பார்த்துள்ளது.

விசா கோரி விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நேர்காணலுக்கான நேரம் ஒதுக்குவதை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க தூதரகங்களுக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த முடிவால் ஏற்கனவே விசாவுக்கு நேர்காணல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடக கணக்குகளால் விசா விண்ணப்பம் எப்படி பாதிக்கப்படும்?

ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பு ஒருவரது சமூக ஊடக கணக்குகளால் பாதிக்கப்படலாம்.

கடந்த மாதம், அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் விசாக்களை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்தது.

அவர்களில் பெரும்பாலானோர் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக சமூக ஊடக கணக்குகளிலும் பதிவிட்டனர்.

மாணவர்களுக்கு படிப்பதற்காக விசா வழங்கப்படுகிறது, அரசியல் செயல்பாட்டிற்காக அல்ல என்று அமெரிக்க நிர்வாகம் கூறியது. அமெரிக்க அரசின் இந்த முடிவால் பல இந்திய மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடக சோதனை மற்றும் சரிபார்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ரூபியோ தனது உத்தரவில் தூதரகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை அனைத்து மாணவர் விசா விண்ணப்பங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையில் என்னென்ன சோதிக்கப்படும், ஆய்வு செய்யப்படும் என்று அந்த செய்தியில் கூறப்படவில்லை.

சமூக ஊடக சோதனை என்றால் என்ன?

சமூக ஊடக சோதனை அல்லது சரிபார்ப்பு என்பது அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களின் சமூக ஊடக கணக்குகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று தெரிந்துக் கொள்வதாகும்.

இந்த சோதனைக்குப் பிறகே அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க மாணவர்களுக்கு விசா வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

முகநூல், எக்ஸ் தளம், லின்க்டு இன், டிக் டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் இந்த ஆய்வுக்கு உட்பட்டவை.

ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களையும் இது பாதிக்குமா?

விசா நடைமுறையை கடுமையாக்கியதோடு, ஏற்கனவே அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் விசாக்களையும் பாதிக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் விதிகளை அமல்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு வரவில்லை அல்லது கல்லூரியில் படிப்பை கைவிட முடிவு செய்தால், அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் வெளியிடும் பதிவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

மாணவர்களின் சமூக ஊடக கணக்குகளில் இருந்து 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் வெளியிடக் கூடாது என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா?

வெளிநாட்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்னை, டிரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கும் இடையே நடந்து வரும் சர்ச்சையின் விளைவாகும்.

டிரம்ப் நிர்வாகம் பல்கலைக்கழகங்களுக்கு மில்லியன்கணக்கான டாலர்கள் நிதியளிப்பதை நிறுத்தியுள்ளதுடன், பல மாணவர்களை அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவிர, ஆயிரக்கணக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் சில நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்களும் தடை விதித்துள்ளன.

சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தங்களது வளாகத்தில் பாலத்தீனத்திற்கான ஆதரவை யூத எதிர்ப்பாக மாற்ற அனுமதிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

டிரம்ப் நிர்வாகம் கருத்து சுதந்திரத்தை மீறுவதாக கல்லூரிகள் குற்றம் சாட்டியுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கும் இடையில் நடந்து வரும் இந்த சர்ச்சைகள் தீர்க்கப்படும் வரை இந்த பிரச்னை தீர்க்கப்படாது என்று தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு