You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வரானதும் விஜயின் முதல் 3 உத்தரவுகள் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் முன்னிலையில் விஜய் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.
'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என்று விஜய் தொடங்கவும் நேரு உள்விளையாட்டரங்கில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
விஜய்க்கு ஸ்டாலின், மோதி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், முதல்வரான பிறகு விஜய் ஆற்றிய உரையை ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விஜயைத் தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
விஜயுடன் அமைச்சர்களாக பதவியேற்ற 9 பேர் பின்வருமாறு...
- ஆனந்த்
- ஆதவ் அர்ஜூனா
- அருண்ராஜ்
- செங்கோட்டையன்
- வெங்கடரமணன்
- சிடிஆர் நிர்மல்குமார்
- ராஜ்மோகன்
- பிரபு
- கீர்த்தனா
விஜயின் முதல் கையெழுத்து
விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக தனது உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவு அமைந்தது.
இந்தச் சூழலில் 500 யூனிட்டுக்கு மேல் 100 யூனிட் இலவசம் என்ற சலுகை தொடருமா என்பது போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை அதற்குப் பதிலளிக்கும் வகையில் உள்ளது. அதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின்சார பயன்பாடு கொண்ட வீடுகளுக்கு ஏற்கெனவே உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும். இந்தத் திட்டம் இன்று (மே 10) முதலே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.1,730 கோடி செலவாகும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.
முதலமைச்சராக விஜய் தனது முதல் உரையை ஆற்றினார்.
''முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு போயுள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றிவைத்துவிட்டு சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்த பொறுப்பை நாம் எடுத்திருக்கிறோம். உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும். என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். அதைத்தான் நான் முதலில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும்'' என விஜய் பேசினார்.
பதவியேற்பு விழா நிறைவில் ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் மேடையிலேயே விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
பின்னர், தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். அங்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட விஜய் அமைச்சர்கள் சூழ முதலமைச்சர் அறைக்குச் சென்றார். முதலமைச்சர் நாற்காலியை சற்று உற்றுநோக்கிவிட்டு பின்னர் அதில் விஜய் அமர்ந்தார்.
முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும், தற்காலிக சபாநாயகரை நியமிப்பதற்கான ஆவணத்தில் விஜய் கையெழுத்திட்டார். பின்னர் அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் புதிய சட்டப்பேரவையில் தவெகவைச் சேர்ந்த சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராகிறார். நாளை சட்டப்பேரவை கூடியதும் புதிய எம்எல்ஏக்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
ஸ்டாலின், மோதி, ராகுல் கூறியது என்ன?
"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த உடனேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்க வேண்டாம். அதெல்லாம் உள்ளது. மக்களுக்குக் கொடுக்க மனதும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும்," என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லியுள்ளீர்கள். அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் தெளிவாக சொல்லியிருந்தோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதற்குப் பிறகுதான் நீங்கள் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி திசை திருப்ப வேண்டாம்," என ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், "'நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்' எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களை போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்," என பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு ஒரு புதிய தலைமுறை, ஒரு புதிய குரல், புதிய சிந்தனையை தேர்வு செய்துள்ளது. விஜய்க்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை அவர் நிறைவேற்றட்டும்," என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவிலேயே சர்ச்சை
இருபெரும் திராவிட கட்சிகளின் 69 ஆண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, புதிய அரசு அமைத்துள்ள விஜயின் பதவியேற்பு விழாவிலேயே சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வழக்கத்திற்கு மாறாக 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கண மன" பாடப்பட்டு, அதன்பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
விழா மேடையில் ராகுல் காந்தி
பதவியேற்பு விழாவில் ஆளுநர், விஜய், அமைச்சராக பொறுப்பேற்கவிருந்த 9 பேர், மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதை அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகரன், ஷோபா இருவரும் நெகிழ்ச்சியுடன் நேரில் பார்த்தனர். விஜய் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நடிகைகள் திரிஷா, சங்கீதா, பாடகர் கிரிஷ் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
மே13-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு
மே 13-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருமாறு விஜயை ஆளுநர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியமைக்கும் புதிய கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிரேமலதா வாழ்த்து
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் விஜய் அவர்களுக்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என, அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு கேப்டன் (விஜயகாந்த்) அவர்களின் சார்பாகவும், தேமுதிகவின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
தவெகவை ஆதரிப்பது யார்?
விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்றுள்ளது. அதில், இரு தொகுதிகளில் வென்ற விஜய் ஒன்றை ராஜினாமா செய்துவிட்டதால் அதன் பலம் 107 ஆகியுள்ளது.
காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகளும் தலா 2 உறுப்பினர்கள் என மொத்தம் 120 உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு