You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தினமும் பல சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்கிறீர்களா? மறைந்திருக்கும் ஆபத்து
- எழுதியவர், ரூத் க்ளெக்
- பதவி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுச் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நான் அதிகம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளும் நபர் என நினைக்கவில்லை, ஆனால் எனது அலமாரியை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறியது.
என்னை அறியாமலே அதிக அளவிலான கிரியேட்டின், வைட்டமின் டி, மெக்னீசியம், கொலாஜன், கிரீன் சப்ளிமென்ட் மற்றும் பெரிமெனோபாஸ் காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களை சமாளிக்க உதவும் சில மாத்திரைகள் ஆகியவற்றை வாங்கி வைத்துள்ளேன்.
சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களால் நான் பாதிக்கப்படவில்லை என நினைத்திருந்தேன், ஆனால் உண்மை வேறாக இருந்தது.
"இந்த சப்ளிமெண்ட்களை எடுத்த பிறகு நான் உணர்ந்த மாற்றத்தை நம்பவே முடியவில்லை!" போன்ற கருத்துகள் என்னை மிகவும் பாதித்திருந்தன
'விச்' என்கிற நுகர்வோர் குழு சமீபத்தில் நடத்திய ஆய்வில் கலந்து கொண்டவர்கள் 76% பேர் குறைந்தபட்சம் ஒரு சப்ளிமென்டை எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஒமேகா-3, புரோபயாடிக்குகள் மற்றும் மூளிகை சப்ளிமென்டுகள் அடங்கும். ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 20% பேர் தினமும் நான்குக்கும் மேற்பட்ட சப்ளிமென்ட் எடுத்துள்ளனர்.
தேவைப்படுகிற நேரங்களில் நம்முடைய உடல்நலனை மேம்படுத்த சப்ளிமென்ட் உதவினாலும், நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற அளவுக்கு நாம் அவற்றை பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வெவ்வேறு வகை மற்றும் அதிக எண்ணிக்கையிலான சப்ளிமென்டுகளை எடுத்தவர்கள் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இரைப்பை-குடல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படுவதை அதிகளவில் பார்க்க முடிவதாக மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.
மக்கள் சப்ளிமென்டுகள் பயன்படுத்தும் அளவு மிகவும் 'தீவிரமானதாக' உள்ளது என ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
"சிலர் உணவருந்துவதை விட மாத்திரை எடுத்துக் கொள்வது சிறந்தது என நினைக்கத் தொடங்கிவிட்டனர்," என்று கூறிய அவர் "உண்மை அதுவல்ல" என்றும் தெரிவித்தார்.
ஜிஞ்சர் ஸ்மித் என்பவர் மூண்டு ஆண்டுகளுக்கு முன்பு சப்ளிமென்டுகள் எடுக்கத் தொடங்கியபோது தனது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நினைத்திருந்தார்.
சியாட்டிலைச் சேர்ந்த பிரான்ட் இன்ஃப்ளுயன்சரான ஜிஞ்சருக்கு நிறைய மருந்துகள் கிடைப்பது வழக்கமாக இருந்தது. 30 வயதான ஜிஞ்சர் மருந்துகள், பவுடர்கள், ஜெல்கள் பயன்படுத்தி இணையத்தில் அதன் பலன்களைப் பற்றி பேசி வருகிறார்.
"நான் வைட்டமின் சி, வைட்டமின் டி, மஞ்சளை அதிக டோஸிலும், வீக்கத்திற்கு உதவும் சிறப்பு மருந்தையும் எடுத்துக் கொண்டு எலக்ட்ரோலைட் கலந்த தண்ணீரைப் பருகி வந்தேன்," என்று விளக்கினார் ஜிஞ்சர்.
சில ஆண்டுகளுக்கு, ஆரோக்கியமானவராகவும் ஆற்றல்மிக்கவராகவும் உணர்ந்தார் ஜிஞ்சர். ஆனால் தனது சிறுநீரகங்களைத் தீவிர அழுத்தத்திற்கு உட்படுத்தி வருகிறார் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
முதுகின் கீழ் பகுதியில் தீவிர வலியை உணர்ந்த பிறகு மருத்துவரைச் சென்று பார்த்துள்ளார். சில பரிசோதனைகளைச் செய்து பார்த்த மருத்துவர் ஜிஞ்சருக்கு அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துளார்.
"நான் சற்று கவலைப்பட்டாலும் எனக்கு சிறுநீரகத்தில் மிகப்பெரிய கல் இருக்கிறது எனக் கூறுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. எந்த அளவிற்கு பெரியது என்றால் அதனை ஆபரேஷன் செய்து தான் நீக்க முடியும் என்றனர்," என்கிறார் ஜிஞ்சர்.
அந்த சிறுநீரக் கல் இரண்டில் இருந்து மூன்று சென்டிமீட்டர்கள் வரை இருந்துள்ளது. அது அவர் அன்றாடம் எடுத்துக் கொண்ட சப்ளிமென்ட் மருந்துகளால் தான் வந்தது என ஜிஞ்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
"என்னுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற முயற்சி இவ்வளவு மோசமாக முடியும் என நினைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக எனக்கு காப்பீடு இருந்தது," என்றார் ஜிஞ்சர்.
காப்பீடு இல்லையென்றால் தனக்கு 35,000 டாலர் செலவாகியிருக்கும் எனக் கூறும் அவர் தற்போது 6,000 டாலர் செலவானதாகத் தெரிவிக்கிறார்.
மேட்ரிட்டில் உள்ள லா பாஸ் மருத்துவமனையைச் சேர்ந்த இரைப்பைக் குடல் மருத்துவரான பெட்ரோ டி மரியா பல்லாரெஸ், மூலிகை சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் பிரச்னைகள் ஏற்படும் நோயாளிகள் அதிகளவில் தன்னைப் பார்க்க வருவதாக தெரிவிக்கிறார்.
"முதலில் ஏதாவது மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்களா என நோயாளிகளிடம் கேட்போம், இல்லை என்று கூறுவார்கள். பல கட்ட கேள்விகளுக்குப் பிறகு மீண்டும் கேட்டால் தான் வெவ்வேறு விதமான சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்வதை ஒப்புக்கொள்கிறார்கள்," என்கிறார் பெட்ரோ.
அமெரிக்காவில் மாத்திரையால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளில் 20 சதவிகிதமானவை மூலிகை மற்றும் உணவு சப்ளிமென்டுகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிக டோஸில் எடுத்துக் கொண்டால் கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளின் வைட்டமின் ஏ, குளுட்டமைன், அஸ்வகந்தா மற்றும் கிரீன் டீ சாறு ஆகியவை அடங்கும்.
கல்லீரல் அதிலிருந்து குணமடையலாம். ஆனால் நீடித்த பயன்பாடு நாள்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பிரிட்டனில் பாதிப்புகள் குறைவாகவே இருந்தாலும் சப்ளிமென்டுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளும் பதிவாகி வருவதாக பிரிட்டிஷ் கல்லீரல் அறக்கட்டளை தெரிவிக்கிறது.
இந்தச் சூழலில் இதனால் கிடைக்கும் பலன்களைவிட பாதிப்புகள் அதிகமாக இருக்கிறதா என்பதை ஆராயுமாறு மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறக்கட்டளை தெரிவிக்கிறது.
தேசிய மருத்துவ சேவையில் பணியாற்றிய முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் கரன் ராஜன் கூறுகையில், "சப்ளிமென்டுகளால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் எந்த ஒரு சப்ளிமென்டும் வெற்றிகரமாக நிருபிக்கப்படும் வரை சந்தேகத்துடனே அணுகப்பட வேண்டும்." என்றார்.
சமீப ஆண்டுகளில் சப்ளிமென்ட் மருந்துகளைத் திறந்த மனதுடனே பார்ப்பதாக ராஜன் கூறுகிறார். எந்த அளவிற்கு என்றால் அவர் தனது சொந்த நார்ச்சத்து சப்ளிமென்ட் பிராண்டை தொடங்கியுள்ளார். அவை கவனமாகப் பயன்படுத்தப்பட்டால் மக்களின் உணவிலும் இடம்பெறலாம் எனத் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "வெவ்வேறு சப்ளிமென்டுகள் தொடர்பான ஆதாரங்கள் பெருகி வருவதை நான் பார்த்திருக்கிறேன். நமது நிலங்களும் பல பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல தற்போது ஊட்டச்சத்து நிறைந்தவைகளாக இல்லை. எனவே 1950களில் இருந்த கேரட், 2026-இல் கிடைக்கும் கேரட்டைவிட ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும்," என்றும் தெரிவித்தார்.
புரோபயாடிக், புரதம், நார்ச்சத்து, கிரியேடின் மற்றும் வைட்டமின் டி-ஐ ராஜன் எடுத்துக் கொள்கிறார். அவருக்கு குறைபாடு இருக்கக்கூடிய பகுதிகளுக்காக அதனைப் பயன்படுத்துகிறார்.
இந்தச் சமநிலை தனக்கு வேலை செய்வதாக அவர் கூறுகிறார். ஆனால் சப்ளிமென்டுகளைக் கலந்து எடுத்துக் கொள்வதால் ஆபத்துகள் இருக்கவே செய்கின்றன. அதிக எண்ணிக்கையிலான சப்ளிமென்டுகளை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் தற்போது எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கேட்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
"நோயாளிகள் தாங்கள் ஒரே ஊட்டச்சத்துக்களை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எடுப்பதையும், மற்ற மருந்துகளுடன் எதிர்வினையாற்றும் பொருட்களை எடுத்துக் கொள்வதையும் உணராமல் இருக்கலாம்." என பொது மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரியின் தலைவரான பேராசிரியர் விக்டோரியா ஸோர்ட்ஸியோ பிரவுன் தெரிவிக்கிறார்.
அதிகமாக எடுத்துக் கொள்வது எல்லாக் காலத்திலும் சிறப்பாக இருக்காது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
உதாரணமாக, வைட்டமின் பி6 சப்ளிமென்ட் உடன் மல்டிவைட்டமின் எடுத்துக் கொள்வது இரட்டை டோஸ் எடுத்துக் கொள்வதற்கு வித்திடலாம். மேலும் நீண்ட காலத்திற்கு அதிக அளவிலான வைட்டமின் பி6 மருந்துகளை எடுத்துக் கொள்வது நரம்பு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றை ஒன்றாக உட்கொள்வது, அவை உடலில் உறிஞ்சப்படும் விகிதத்தைக் குறைக்கலாம்.
அதே போல ஏ, டி, ஈ, கே போன்ற சில வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை என்பதால் உடலின் நீண்ட காலத்திற்கு தங்கும். எனவே அவற்றை தினசரி எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
"ஆரோக்கியமாக இருக்க சப்ளிமென்டுகள் அவசியம் என சமூக ஊடகங்கள் மக்களை நம்ப வைப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான கிறிஸ்டன் ஸ்டாவ்ரிடில் தெரிவிக்கிறார்.
தோல்வியுறப்போகும் ஒரு போராட்டத்தை நடத்துவதாக உணரும் அவர், "பெரும்பாலான நேரங்களில் அது உண்மையில்லை." என்றும் தெரிவிக்கிறார்.
அடிப்படை உடல்நலப் பிரச்னைகள் இல்லாத வயது வந்தவர்கள் சமநிலையான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவிக்கிறார். குளிர் காலங்களில் வைட்டமின் டி சப்ளிமென்டும், ஒருவேளை தேவைப்பட்டால் மல்டிவைட்டமின் மற்றும் மீன் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.
இரும்புச்சத்து குறைபாடு இருக்கக்கூடிய சில பெண்கள்களுக்கு சப்ளிமென்டுகள் உதவலாம். ஆனால் அந்தச் சத்துக்கள் பழைய நிலையை அடைகிற வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே ஸ்டாவ்ரிடிஸின் முக்கியமான செய்தியாக உள்ளது. ஒருவர் தனக்குச் சில ஊட்டச்சத்துகளில் குறைபாடு இருக்கிறது என நினைத்தால் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்றும் சப்ளிமென்டுகளால் அதனைச் சரி செய்ய முடியும் என நினைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கிறார்.
"பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு என்னவென்பதை லேபிலைப் பார்த்து உறுதி செய்ய வேண்டும். மேலும் உங்களின் சப்ளிமென்டுகள் மற்ற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் முரண்படவில்லை என்பதையும் சரிபார்க்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
சிறுநீரகக் கல்லை நீக்க மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைய ஜிஞ்சருக்கு பல மாதங்கள் ஆனது. தற்போது மீண்டும் ஆரோக்கியமாக உணரும் அவர் வேலை செய்யவும் தொடங்கிவிட்டார்.
"இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் நான் வெவ்வேறு சப்ளிமென்டுகளை எடுத்துக் கொண்டபோது எவ்வளவு ஆற்றல் மிக்கவராக, உணர்ந்தேனோ அவ்வாறே உணர்கிறேன். தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு மல்டிவைட்டமின் மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். அதுவே போதும் என நினைக்கிறேன்," என்கிறார் ஜிஞ்சர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு