பாகிஸ்தானில் மனித நஞ்சுக்கொடி கடத்தல் குற்றச்சாட்டு - முதுமை தடுக்கும் ஊசிக்காக கடத்தப்பட்டதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆசாத் சோஹைப் மற்றும் ஷேசாத் மாலிக்
- பதவி, பிபிசி உருது
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து மனித நஞ்சுக்கொடியை கடத்தி, அதை முதுமையைத் தடுக்கும் ஊசிமருந்துகள் தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பல் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கும்பல், பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 200 கிலோகிராம் மனித நஞ்சுக்கொடியை வாங்கியதாக பாகிஸ்தானின் மத்திய விசாரணை முகமை (எஃப்.ஐ.ஏ) குற்றஞ்சாட்டியுள்ளது. இவை உலர்த்தப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக பிபிசி உருதுவிடம் அந்த முகமை தெரிவித்தது.
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு பதப்படுத்தும் மையத்தில், 500 கிலோ எடையுள்ள மனித நஞ்சுக்கொடி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வு அமைப்பு பகிர்ந்துள்ள புகைப்படங்களில், "நஞ்சுக்கொடியைச் சேமித்து பதப்படுத்தும் மையமாக மாற்றப்பட்ட" ஒரு வீட்டின் உள்ளே, தள்ளுவண்டிகளில் உலர்த்தப்பட்ட நஞ்சுக்கொடி அடுக்கி வைக்கப்பட்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதன்கிழமை அன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வியட்நாமுக்கு அனுப்பப்படவிருந்த 100 கிலோ எடையுள்ள மனித நஞ்சுக்கொடி கடத்தலை எஃப்.ஐ.ஏ அதிகாரிகள் தடுத்தனர். இதில் பிடிபட்ட ஐந்து சந்தேக நபர்களும் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து ஒரு நஞ்சுக்கொடியை சுமார் 800 ரூபாய்க்கு வாங்கியதாக, பாகிஸ்தானின் மனித உறுப்பு மாற்று ஆணையத்தின் அதிகாரி ஹினா கன்வால் தெரிவித்துள்ளார்.
எஃப்.ஐ.ஏ-வின் தகவல்படி, இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு முதுமையைத் தடுக்கும் ஊசிகளாக மாற்றப்படவிருந்தன. அத்தகைய ஒரு ஊசியின் விலை சுமார் 7 லட்சம் ரூபாய் (2,530 அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
இந்தக் கும்பலின் செயல்பாடுகள் தலைநகரைத் தாண்டி லாகூர், பெஷாவர் மற்றும் ராவல்பிண்டி போன்ற பிற பெரிய நகரங்களுக்கும் பரவியிருப்பதாக அந்த அமைப்பு நம்புகிறது. இதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய குடிவரவு அதிகாரிகள், கழிவு மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில், வணிக நோக்கத்திற்காக மனித உறுப்புகளைச் சேகரிக்கும் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
எஃப்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் பிபிசி உருதுவிடம் கூறுகையில், "சட்டவிரோத மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். ஆனால், மனித நஞ்சுக்கொடி தொடர்பான இத்தகைய 'சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த வலைப்பின்னல்' சம்பந்தப்பட்ட வழக்கு இதுவே முதல்முறை" என்று தெரிவித்தார்.
முதலில் தாங்கள் ஆட்டு நஞ்சுக்கொடியைக் கையாள்வதாகச் சந்தேக நபர்கள் கூறியதாகவும், ஆனால் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அது மனித நஞ்சுக்கொடி என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சதாஃப் தாரிக் கூறுகையில், நஞ்சுக்கொடியை அகற்றுவது தொடர்பாகக் கடுமையான விதிமுறைகள் உள்ளன. இது "அதிக தொற்றுத்தன்மை கொண்ட மருத்துவக் கழிவாக" கருதப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், பாகிஸ்தானைப் போலவே, குழந்தை பிறந்தவுடன் நஞ்சுக்கொடி மருத்துவக் கழிவாகக் கருதப்படுகிறது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய கழிவுகளைக் கையாள அனுமதிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் இதற்கான கடுமையான பதிவுகளைப் பராமரிக்க வேண்டும்.
நஞ்சுக்கொடி என்பது கர்ப்ப காலத்தில் கருப்பையில் உருவாகி, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரமாக விளங்கும் ஒரு தற்காலிக உறுப்பாகும். பிரசவத்தின்போது குழந்தை தாயிடமிருந்து வெளியேறியவுடன் இதன் முதன்மை நோக்கம் முடிவடைகிறது.
இருப்பினும், புரதம், இரும்பு மற்றும் கொழுப்பு சத்துக்கள் நிறைந்த நஞ்சுக்கொடி பெரியவர்களுக்கும் சத்தானது என்று சிலர் நம்புகின்றனர்.
இது மாத்திரைகள் மற்றும் ஊசிகளாகத் தயாரிக்கப்பட்டு, திசுக்களை மீண்டும் உருவாக்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய நடைமுறைகளுக்குப் பின்னால் உள்ள அறிவியல் சான்றுகள் மாறுபடுகின்றன. அதற்கேற்ப உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை விதிகளும் மாறுபடுகின்றன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


























