காணொளி: மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஜப்பான் மேயர் - விவாதமாவது ஏன்?
ஜப்பான் மேயர் மகப்பேறு விடுப்பு எடுக்கப்போவதாக அறிவித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
யவாட்டா நகர மேயரான 35 வயது ஷோக்கா கவாட்டா, வரும் செப்டம்பர் மாதம் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளார். இதற்காக பிரசவத்திற்கு முன்பு இரண்டு மாதங்களும், பிறகு இரண்டு மாதங்களும் அவர் தனது கடமைகளிலிருந்து தற்காலிகமாக விலகி மகப்பேறு விடுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த சமயத்தில் தனது பொறுப்புகளைத் தற்காலிகமாகத் துணை மேயரிடம் அவர் ஒப்படைக்க இருக்கிறார்
ஜப்பான் வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு மேயர் பிரசவத்திற்காக விடுப்பு எடுப்பது இதுவே முதல்முறை.
தன் குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்து, மற்ற பெண்கள் அரசியலில் நுழைவதை எளிதாக்குவதன் மூலம் ஷோக்கா கவாட்டா ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார் என்று சிலர் கூறுகின்றனர்.
மறுபுறம் பொதுப் பணிகளிலிருந்து விலகுவது பொறுப்பற்ற செயல் என்றும், அவர் குழந்தை பெற்றெடுக்க விரும்பியிருந்தால் இந்த பதவிக்கு வருவதற்கு முனவே செய்திருக்க வேண்டும் என்று சிலர் அவரது முடிவை விமர்சித்துள்ளனர்.
மேலும் மகப்பேறு விடுப்பின் போது ஊதியம் குறைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர்.
இந்த கருத்துக்கள் தனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளதாக கூறிய மேயர் ஷோகா கவாட்டா, மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண் அரசியல்வாதிகளை விமர்சித்தால், குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனுடைய
20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களை மக்கள் பணி செய்வதிலிருந்து தடுப்பதற்கு சமம் என்று கூறி தன்மீதான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றியுள்ளார்
ஜப்பான் உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாகத் திகழ்கிறது.உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி குறியீட்டில் ஜப்பான் 118-வது இடத்தில் உள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



