"நேரடியாக மக்களை பாதிக்கும் 2 பிரச்னைகள்" - முதலமைச்சராக 30 நாட்களில் விஜய் சந்தித்த சவால்கள் என்ன?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"ஆட்சி வந்து ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்து அரைமணி நேரத்திலேலே தொடங்கிவிட்டார்கள்"

திருச்சி கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய், தி.மு.க தலைமையை விமர்சித்து மேற்கண்டவாறு பேசினார்.

த.வெ.க அரசு பொறுப்பேற்ற ஒரு வாரத்திலேயே 'குதிரை பேர அரசு' என பலவித விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆட்சி அமைவதற்கு ஆதரவு கொடுத்த இடதுசாரிக் கட்சிகளும் அ.திமு.க எம்.எல்.ஏக்களின் ஆதரவை த.வெ.க ஏற்றுக் கொண்டதை விமர்சித்தன.

ஜூன் 10 ஆம் தேதியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 30 நாட்களை எட்டுகிறது. இந்தக் காலகட்டத்தில் முதலமைச்சர் பதவியை ஜோசப் விஜய் எதிர்கொண்டது எப்படி?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது. ஆனால், ஆட்சியமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கையை அக்கட்சி பெறவில்லை.

திருச்சி கிழக்குத் தொகுதியில் பெற்ற வெற்றியை த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததன் மூலம் சட்டமன்றத்தில் த.வெ.கவின் பலம் 107 என்பதாக இருந்தது.

ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரி தமிழ்நாடு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை த.வெ.க தலைவர் விஜய் இரண்டு முறைக்கு மேல் சந்தித்தும், பெரும்பான்மை பலம் இல்லை எனக் கூறி ஆளுநர் நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து, காங்கிரஸ், இ.கம்யூ கட்சி, மா.கம்யூ கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவை த.வெ.க கோரியது. காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவைக் கொடுத்தது.

இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் தங்கள் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தைக் கூட்டி த.வெ.கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன. பிறகு வி.சி.கவும் தனது ஆதரவை த.வெ.கவுக்கு வழங்கியது.

மே 13 ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

சர்ச்சையை ஏற்படுத்திய சந்திப்பு

இதற்கிடையில் அ.தி.மு.கவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் இயங்கிய ஒரு பிரிவை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று சந்தித்தார். இது அரசியல்ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டபோதும் த.வெ.க அரசை ஆதரித்து எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.கவினர் வாக்களித்தனர்.

நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். முன்னதாக, சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக எஸ்.பி.வேலுமணி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதியளித்தது பேசுபொருளாக மாறியது.

தலைமை உத்தரவை மீறி வாக்களித்த உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்தனர்.

நம்பிக்கை கோரும் வாக்கெடுப்புக்கு முதல்நாள் (மே 12) முதலமைச்சரின் சிறப்பு அலுவலராக (அரசியல்) ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார்.

மறுநாள் சட்டப்பேரவையில் இதனை விமர்சித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா, "முதலமைச்சரின் ராஜகுருவாக இருப்பவரை அரசுப் பணியில் அமர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்" எனக் கூறினார்.

இந்த நியமனத்துக்கு இடதுசாரிக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை த.வெ.க அரசு ரத்து செய்தது.

'தலைமைச் செயலகமா... த.வெ.க அலுவலகமா?'

"தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்" எனக் கருதி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் த.வெ.கவில் இணைந்தனர்.

ராஜினாமா கடிதம் கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை அவரது அறையில் சந்தித்துப் பேசியது விவாதப் பொருளாக மாறியது.

'கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை கொடுத்து, உறுப்பினர் அட்டை கொடுத்து வரவேற்பதே இணைப்பு போன்றது தான். இது தலைமைச் செயலகமா... த.வெ.க தலைமை அலுவலகமா?' என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை விமர்சனம் செய்தார்.

நான்கு பேர் ராஜினாமாவை விமர்சித்த மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் த.வெ.கவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை" என விமர்சித்தார்.

'ஆரோக்கியமான அரசியல் அல்ல' - பெ.சண்முகம்

"இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்" எனவும் அவர் கூறினார்.

த.வெ.க ஆட்சிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்ததை மேற்கோள்காட்டிய பெ.சண்முகம், "சட்டரீதியான நடவடிக்கைக்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர். அவர்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை த.வெ.க ஊக்குவிப்பதாக கருத வேண்டிய நிலை ஏற்படும்" என தெரிவித்தார்.

தலைமை உத்தரவை மீறி வாக்களித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் தங்கள் வருத்தத்தைக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, ஜூன் 9 ஆம் தேதியன்று சபாநாயகர் அறிவித்தார்.

மற்ற நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் தொடங்கிவிட்டதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையைப் பெறுவதற்காக இடதுசாரிக் கட்சிகள், வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவை த.வெ.க கோரியது.

இக்கட்சிகளின் தலைமையை த.வெ.க நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமார் சந்தித்தபோது, 'நாங்கள் முற்போக்கு அரசை அமைக்க விரும்புகிறோம்' எனக் கூறியே ஆதரவு கோரினார்.

அதற்கு மாறாக, அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவைக் கோரி அவர்களின் வீட்டுக்கே முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் (மே 13) பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குதிரை பேரத்தில் த.வெ.க அரசு ஈடுபட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

தூய ஆட்சியை நடத்தப் போவதாக கூறிய த.வெ.க, புஷ்பா திரைப்பட பாணியில் ஆட்சி நடத்தி வருவதாகவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஆட்சி நடத்தாமல் இனி ரியலாக ஆட்சி நடத்த வேண்டும் எனவும் அவர் பேசினார்.

உதயநிதியின் விமர்சனத்துக்குப் பதில் அளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், "இது குதிரை பேர அரசு அல்ல. குதிரை வேகத்தில் செயல்படும் அரசு" எனக் கூறியிருந்தார்.

'குதிரை உள்ளது... வேகம் இல்லை'

"குதிரை வேக அரசு என்று முதலமைச்சர் கூறினார். குதிரை உள்ளது. ஆனால் வேகம் இல்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

மே 10 ஆம் தேதியன்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கும்போது, பெண்களின் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மாலன், "இதன் துவக்க விழா ஜூன் 9 அன்று தான் நடைபெறுகிறது. ஒரு மாதம் காலம் ஏன் தேவைப்பட்டது எனத் தெரியவில்லை" என்கிறார்.

தவிர, முதலமைச்சராகப் பதவியேற்கும்போது போதைப் பொருள்களை ஒழிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். "717 மதுபானக் கடைகளை அகற்றுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டாலும் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை" எனக் கூறுகிறார்.

அதேநேரம், ஆட்சியின் நோக்கங்கள் நன்றாக உள்ளதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

"கடந்த தி.மு.க ஆட்சியின் திட்டங்களான காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்றவை தொடர்கின்றன. மக்களுக்கு நல்லது நடக்கும் விஷயங்களைத் தடுக்காமல் இருப்பது நல்லது" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய மாலன், "எம்.ஜி.ஆர் தொடங்கிய சத்துணவு திட்டத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி மேம்படுத்தினார். அது ஜெயலலிதா மற்றும் ஸ்டாலின் ஆட்சியில் தொடர்ந்தது. தற்போதைய த.வெ.க அரசு அதைத் தொடர்வது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்" என்கிறார்.

'லஞ்சம், கட்சி நிதி ஒழிப்பு'

த.வெ.க ஆட்சியில் துறைரீதியாக லஞ்சம் மற்றும் கட்சி நிதி பெறுவது தவிர்ப்பு , பத்திரப்பதிவுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவை வரவேற்கப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"லஞ்சம் தவிர்க்கப்படுவது அரசுத் துறைகளுக்குள் உள்ள அதிகாரிகளுக்கு அதிர்ச்சியூட்டக் கூடிய ஒன்றாக இருக்கும். சில காலம் அமைதியாக இருப்பார்கள். வேறு வழியில்லை என்ற நிலைக்குக் கொண்டு வரும்போது மக்களும் காசு கொடுப்பதற்கு பழகிவிடுவார்கள்" என்கிறார் மாலன்.

இதே கருத்தை மாற்றுக் கோணத்தில் விவரித்த மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "அடுக்குமாடி கட்டடங்களுக்கு அனுமதி கொடுப்பதில் பணம் பெறுவதில்லை. டாஸ்மாக் மதுபானப் பெட்டிகளுக்கு என தனியாக வசூலிக்கப்பட்ட பணத்தை அரசுக்கு வரவேண்டிய வரியாக கொண்டு வந்துவிட்டனர்" எனக் கூறுகிறார்.

"லஞ்சத்தை முற்றாக ஒழிக்கிறார்கள் என்றால் மதுபானங்களுக்கு விலைக் குறைப்பை அமல்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழிமுறைகளை வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

"வீடு, வணிக கட்டடங்களுக்கு சதுர அடிக்கு என வசூலிக்கப்பட்ட லஞ்சம் தவிர்க்கப்பட்டால் அதன் பயன் மக்களுக்குச் சென்று சேர வேண்டும்" என்கிறார் குபேந்திரன்.

அதிகாரிகள் பயப்படத் தொடங்கியுள்ளதாகக் கூறும் குபேந்திரன், " பணம் வாங்காமல் இருப்பதை வரவேற்கலாம். ஆனால் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு அனுப்பப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்" எனக் கூறுகிறார்.

'இரண்டு பிரச்னைகள்'

சட்டம்-ஒழுங்கு பிரச்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவை த.வெ.க அரசு தினந்தோறும் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய பிரச்னைகளாக உள்ளன. இதனை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

"ஆட்சி அமைந்த பிறகு சில விஷயங்களுக்கு அவகாசம் கேட்கின்றனர். திட்டங்களுக்காக காத்திருக்கலாம். ஆனால், மக்களைப் பாதிக்கும் சட்டம் ஒழுங்கு, மின்சாரம் ஆகியவற்றுக்காக காத்திருக்க முடியாது. அவை தினந்தோறும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன" என்கிறார் மாலன்.

இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "நிர்வாகரீதியான விவகாரங்களுக்கு அவகாசம் கொடுக்கலாம். சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மின்வெட்டு உள்ளது" என்கிறார்.

"மின்மாற்றிகள் வெடிப்பது, அதீத மின் பயன்பாடு தான் காரணம் என்றால் அதனை சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மாறாக, மின்சார கேரியரை திருடுவதாக எவ்வளவு காலத்துக்குச் சொல்ல முடியும்?" எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

'செய்தியாளர் சந்திப்பு' சர்ச்சை

கட்சியைத் தொடங்கிய நாளில் இருந்து முதலமைச்சராக பொறுப்பேற்றது வரை செய்தியாளர்களை ஜோசப் விஜய் சந்தித்தது இல்லை. பிரதமர் நரேந்திர மோதியை சந்திப்பதற்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் சென்றபோதும் செய்தியாளர்களை அவர் சந்திக்கவில்லை.

"காலம்காலமாக பின்பற்றப்படும் மரபை உடைக்க வேண்டாம்" என செய்தியாளர்கள் கோரிக்கை வைத்தபோதும் அதனை ஜோசப் விஜய் பொருட்படுத்தாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், "செய்தியாளர்களை சந்திக்காமல் செல்வது மக்களின் கவலை இல்லை. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அரிதாகவே செய்தியாளர்களை சந்திப்பார். ஜெயலலிதாவும் அப்படியே நடந்து கொண்டார். பிரதமர் மோதியும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை" என்கிறார்.

ஊடகங்களில் செய்தி வெளிவர வேண்டும் என்ற காலம் போய்விட்டதாகக் கூறும் மாலன், "கேள்வி கேட்க முடியாது என்பது தான் ஊடகங்களின் கவலையாக உள்ளன. பல ஊடகங்கள் எதாவது ஒரு கட்சியின் சார்பு நிலையுடன் இயங்குகின்றன. அதற்காகவே இந்தச் சந்திப்புகளை த.வெ.க தலைமை தவிர்ப்பதாக எடுத்துக் கொள்ளலாம்" எனக் கூறுகிறார்.

அமைச்சர் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவதாகக் கூறும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், " எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு இவர்கள் பதில் அளிக்கின்றனர். அவ்வாறு பேசாவிட்டால் ஆட்சிக்கு எதிரானதாக மாறும்" என்கிறார்.

'கட்சியில் சவால் இல்லை... ஆனால்?'

த.வெ.க வருகை அரசியல்ரீதியாக பிரதான கட்சிகளுக்கு சவாலானதாக மாறியுள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

"சில கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதத்துக்குப் பிறகு விமர்சிப்போம் எனக் கூறிய தி.மு.க, 'மூன்று மாதத்துக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்கிறது" என அவர் குறிப்பிட்டார்.

அ.தி.மு.க இரு அணிகளாக பிரிந்து மோதியது, பா.ஜ.கவில் இருந்து விலகி தனியாக கட்சி தொடங்கும் முடிவில் அண்ணாமலை இருப்பது ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய மாலன், "இவ்விரு கட்சிகளும் பிளவுபட்டுள்ளன. வி.சி.க உள்ளிட்ட கட்சிகளிலும் இதே நிலையே உள்ளது" என்கிறார்.

"த.வெ.கவுக்கு கட்சியில் சவால்கள் இல்லை" எனக் கூறும் மாலன், "ஆட்சியில் உள்ள சவால்கள் தான் முக்கியமானவையாக உள்ளன. அரசிடம் நிதி இல்லாததால் வேறு யார் வந்திருந்தாலும் இதே சவால் தான் நீடித்திருக்கும்" எனக் கூறுகிறார்.

அதேநேரம், ஆட்சியில் உள்ள சவால்களை விஜய் சமாளித்துவிடுவார் என்றே தான் நம்புவதாகக் கூறும் மாலன், "இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. முன்னதாக இடைத்தேர்தல் வரும். இவற்றில் வெற்றி பெற்றுவிட்டால் அரசியல்ரீதியாக விஜய்க்கு பெரிதாக சவால்கள் இருக்காது" என்கிறார்.

"தொலைநோக்குத் திட்டங்களுக்காக அமைச்சரவைக் கூட்டத்தை ஜோசப் விஜய் கூட்டினர். அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகள் மத்தியில் சிக்கல் வரலாம். தற்போது அதற்கான நேரம் தற்போது வரவில்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

"முதலமைச்சராக பதவிக்கு வந்தபோது போதுமான எண்ணிக்கை இல்லாமல் எப்போதும் உடையக் கூடிய நாற்காலியாக இருந்தது. அதை ஜோசப் விஜய் சரிசெய்துவிட்டார்" என்கிறார், மாலன்.

செஸ் வீரர் பிரக்ஞானந்ததாவுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆடிய சதுரங்கத்தை மேற்கோள் காட்டிப் பேசிய மாலன், "அந்த ஆட்டத்தின் மூலம் விஜயின் அரசியல் ஆட்டத்தை சிம்பாலிக்காக உணர முடிந்தது. தான் தோற்பது போல தோற்பார். ஆனால் அது தோல்வியில்லை" என தான் புரிந்து கொள்வதாகக் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு