காணொளி: ஜீரோ மதிப்பெண் கொடுத்த எதிர்க்கட்சிகள் - தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் என்ன உள்ளது?

காணொளிக் குறிப்பு, தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காணொளி: ஜீரோ மதிப்பெண் கொடுத்த எதிர்க்கட்சிகள் - தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் என்ன உள்ளது?
பிரசுரிக்கப்பட்டது

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், இந்தியாவின் முதல் ஏ.ஐ. நகரம், காமராஜர் சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன? பார்க்கலாம்.

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையைத் தொடங்கிய அவர், மூன்று மாதங்களிலேயே அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாகவும், தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கான தொலைநோக்கு இலக்குகளை அடைய இந்த பட்ஜெட் வழிகாட்டும் என்றும் தெரிவித்தார்.

சமூக நலத் திட்டங்களில் முக்கியமாக 'அண்ணன் சீர் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், திருமண நாளில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

அதேபோல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும், இதற்காக 560 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'தாய் கேர்' என்ற பெயரில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். மகப்பேறு தேதி நெருங்கும் பெண்கள் அங்கு தங்கியிருந்து, கட்டணமில்லா உணவு மற்றும் மருத்துவ சேவைகளைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கல்வித் துறையிலும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காமராஜர் சிறப்பு பள்ளிகள், பள்ளிப் பாடத்திட்ட மறுசீரமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 11ஆம் வகுப்பு படிக்கும் 'ஜென்-ஸீ' தலைமுறை மாணவர்களுக்கு, 277 கோடி ரூபாய் செலவில் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும்.மேலும், 'வெற்றி மடிக்கணினி திட்டம்' மூலம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

கூவம் மற்றும் அறடயாறு ஆறுகளில் மக்கள் படகு சவாரி செய்வது, குளிப்பது மற்றும் அனைத்து வயதினரும் நடைபயிற்சி மேற்கொள்வது போன்றவை உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான பணியில்லா கால நிவாரண உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், ரூ.16 கோடி நிதியுடன்'தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம்' நிறுவப்படும் என தெரிவித்த அமைச்சர் மரிய வில்சன், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லதுசெம்மறீ ஆடுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கில் கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2036ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 'வெற்றி தொழில்முனைவோர் திட்டம்' செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'அறிவகம்' என்ற பெயரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரம் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கான மானியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காய்தேமில்லத் பெயரில் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம், உணவு, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு ஆதரவை

வழங்குவதற்காக 5 மாவட்டங்களில் 'அரண்' தங்குமிட வசதிகள் நிறுவப்படும், போட்டித் தேர்வுகளுக்கான அரசு பயிற்சி மையங்களை விரிவுபடுத்த 3.38 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில் 'வெற்றி திறன் பயிற்சி திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக 20 ஆயிரம் இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் பெரிதாக எவ்வித அறிவிப்பும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு