காணொளி: முன்னாள் காதலரின் கட்டாயத்தால் குத்திக்கொண்ட 250 டாட்டூகளை அகற்றிய பெண்
தனது கொடுமைக்கார முன்னாள் காதலர், தன் உடல் முழுக்க டாட்டூ குத்த கட்டாயப்படுத்தியதாக ஜோக் கூறினார். வேறு ஆண்கள் தொட்டதாக அவர் சந்தேகித்த இடங்களில் எல்லாம் அவர் தனது பெயரைப் பச்சை குத்த வைத்துள்ளார்.
அதுகுறித்துப் பேசிய ஜோக், "உளவியல் பிறழ்வுகொண்ட, அதீத சுயமோகம் பிடித்த நபரின் பிடியில் சிக்கிக் கொண்டேன். அவர் முதலில் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து என்னைப் பிரித்தார். உடல் முழுக்க டாட்டூ குத்த வைத்தது மட்டுமின்றி, என் பணத்தையெல்லாம் செலவழித்தார். என்னை கேரவன், கொட்டகை போன்றவற்றில் அடைத்து வைத்தார்" என தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்தார்.
தற்போது ஸ்பெய்ட் வான் டாட்டூ என்ற அமைப்பு, டாட்டூ அகற்றும் சிகிச்சையை இலவச சேவையாக வழங்கி அவருக்கு உதவுகிறது.
ஸ்பெய்ட் வான் டாட்டூ நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்டி ஹான், "அவரது மார்பு, முகம், கண்கள், மூக்கு என எல்லா பக்கமும் அந்த நபரின் பெயர் இருந்தது. பொதுவாக, டாட்டூவாக குத்தப்பட்ட ஒரு பெயரை அல்லது வாசகத்தை மட்டும்தான் நீக்க விரும்புவார்கள். ஆனால் ஜோக்கின் உடல் முழுவதும் அந்த நபரின் பெயரே நிரம்பியிருந்தது" என்று ஜோக் அவரிடம் வந்தபோது இருந்த நிலையைப் பற்றி குறிப்பிட்டார்.
"உடல் முழுக்க டாட்டூ இருந்ததால், எங்கிருந்து தொடங்குவது என்றே புரியாமல் இருந்தது. ஜோக் எத்தகைய சூழலில், எத்தகைய கட்டாயத்தில் சிக்கியிருந்தார் என்பதை அவரது உடலை மூடியிருந்த நூற்றுக்கணக்கான டாட்டூகள் பறைசாற்றின" என்று கூறினார் ஆண்டி ஹான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



