You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக முதல்வர் விஜயிடம் இலங்கை தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், தற்போது இந்த விடயம் இலங்கை அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக தமிழக தேர்தல் பிரசார மேடைகளில் கச்சத்தீவை இந்தியாவிற்கு பெற்றுக்கொள்கின்றமை தொடர்பில் ஜோசப் விஜய் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
கச்சத்தீவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவிற்கு வழங்க முடியாது என இலங்கை மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உறுதியாக கூறுகின்ற அதேவேளையில், தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உதவிகளையும் இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்திடம் கோரி நிற்கின்றனர்.
குறிப்பாக இந்தியாவின் தலையீட்டில் இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த தமிழக முதலமைச்சர் விஜய் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேபோன்று, தமிழகத்திலிருந்து 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வரும் இந்திய வம்சாளி மலையக தமிழர்களின் எதிர்கால நலத்திட்டங்கள் தொடர்பில் தமிழக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் இலங்கை தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் பிபிசி தமிழ் இன்று ஆராய்கின்றது.
தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்து மலையக தமிழர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.சனத் பிபிசி தமிழிடம் பேசினார்.
தகவல் தொழில்நுட்பத்தில் மிக வேகமாக முன்னேறி வரும் தமிழகம், அங்கிருந்து இலங்கைக்கு வருகை தந்த இந்திய வம்சாளித் தமிழர்களுக்கும் அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
தமிழ்நாட்டிற்கு பயணம் செய்ய சலுகைகளை வழங்க வேண்டும் எனக் கூறும் அவர், "தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே கூடுதல் கப்பல் சேவை தொடங்குவதற்கான பேச்சுகள் இருந்து வருகின்றன. மலையக சொந்தங்கள் இருக்கின்றார்கள். மலையக சொந்தங்கள் இங்கிருந்து கப்பல் வழியாக செல்லும் போது விசேட சலுகைகளை அறிவித்தால் நன்றாக இருக்கும். அவ்வாறான திட்டத்தை முன்மொழிய வேண்டும்." எனத் தெரிவித்தார்.
அதே போல இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வோருக்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியுள்ளார்கள். அவ்வாறு புனித யாத்திரையை மேற்கொள்வோருக்கு அரச அனுசரணையுடன் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட ஆன்மீக கடமைகளை வழங்க முடியும். விசேடமாக திருப்பதி செல்வோர் தமிழகத்தின் ஏனைய வழிபாட்டு தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொள்கின்றார்கள். அதை இலகுப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும்." என்றார்.
அவரது கூற்றுப்படி, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட தருணங்களில் தமிழக அரசாங்கம் உதவிகளை வழங்கியிருந்தது.
தமிழக அரசாங்கம் மலையகத்திற்காக தனி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கும் பத்திரிகையாளர் சனத் அதற்கான கொள்கைகளை வகுத்து, மத்திய அரசாங்கத்தின் ஊடாக அந்த திட்டங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறார்.
"மலையகத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தமிழக அரசாங்கம் ஏற்கெனவே பயிற்சிகளை வழங்கியுள்ளது. அதையும் தொடரலாம். அதேபோன்று தொழில்நுட்ப புரட்சியில் தமிழகம் முன்னனியில் உள்ளது. இங்குள்ள இந்திய வம்சாளி மலையக தமிழர்களுக்கு ஏ.ஐ உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கலாம். ஓ.ஐ.சி என்ற திட்டம் தற்போது இருந்து வருகின்றது. அதையும் இலகுப்படுத்தி, மலையக மக்கள் விசா பெறும் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். தமிழகம் தகவல் தொழில்நுட்ப புரட்சியில் மாற்றமடைந்து வருகின்ற தருணத்தில், அங்கிருந்து வருகைத் தந்த நாங்களும் முன்னேற்றமடைவதற்கு உதவி செய்ய வேண்டும்.'' என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சனத் குறிப்பிடுகின்றார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உதவ வேண்டும் என வவுனியாவைச் சேர்ந்த சமூக செயற்பட்டாளரான மாணிக்கம் ஜெகன் கோரிக்கை விடுக்கின்றார்.
மீனவர்களின் பிரச்னை காலங்காலமாகவே இருக்கின்றது எனக் கூறும் மாணிக்கம் ஜெகன், இந்த மீனவர்களின் பிரச்னைகளை ஒட்டித்தான் அவர் கச்சத்தீவு தொடர்பான விடயத்தை கையாண்டிருக்கலாம் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவிக்கிறார்.
''தேர்தல் பரிப்புரைகளில் இலங்கை தமிழர் விவகாரங்கள் பரவலாக முன்னெடுக்கப்படுவதை நாங்கள் பார்த்துக்கொண்டு வருகின்றோம். குறிப்பாக கச்சத்தீவை அவர் முன்னிலைப்படுத்திய கோரிக்கை நாம் பார்த்திருக்கின்றோம். இப்போது தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்கள் தொடர்பான விடயத்தையும் அவர் கையில் எடுத்திருக்கின்றார்," என்றார்.
"ஆனால், இவற்றுக்கெல்லாம் அப்பால் விஜய் அவர்கள் செல்ல வேண்டும். குறிப்பாக 1987-ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் 13வது சட்டத் திருத்தம் மற்றும் அதன் பின்னரான இந்தியாவை நம்பி தமிழ் விடுதலை இயக்கங்கள் கையளித்த ஆயுதங்கள், முற்று முழுதாக இந்தியாவை நம்பிய தமிழர் பிரச்னைக்கான தொடக்கம் குறித்து ஆராய வேண்டும். 1987-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத்தை விடுதலை இயக்கங்கள் அரைகுறையாக ஏற்றுக்கொண்டன.
விடுதலைப் போராட்டத்தின் தொடக்க தீர்வாக அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முயன்றதும், அது பின்னர் சின்னாபின்னமாக்கப்பட்டதும் தெரிந்த விடயமே. ஆகவே, அந்த விடயத்தில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்." என்றார் அவர்.
மேலும் தொடர்ந்த மாணிக்கம் ஜெகன், "குறிப்பாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு, பின்னர் பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்டதற்கு காரணம் ஆன ஜேவிபி கட்சி தான் தற்போது இலங்கையை ஆட்சி செய்கின்றது. ஆகவே அந்த விடயத்தை கையாள்வது விஜய்க்கு சற்று இலகுவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்தியாவை முன்னிலைப்படுத்திய அந்த ஒப்பந்தம், காங்கிரஸ் கட்சியால் கிடைக்கப் பெற்றது. அந்த கட்சி தற்போது தமிழ்நாடு அரசில் பங்கு வகிக்கின்றது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஒரு நல்லுறவை, ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைத்துக் கொடுக்க வேண்டும்." என்றார்.
மீனவர் பிரச்னை தீரும் போது கச்சத்தீவு பிரச்னை இருக்காது என நாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஈழத் தமிழர் வரலாற்றில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எனக் கூறும் மாணிக்கம் ஜெகன், அந்த ஒப்பந்தம் முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "13வது திருத்தம் முழுதாகவே அமல்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதை விஜய் அவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். அதேபோன்று, முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை தொடர்பான தீர்மானம் ஒன்றையும் விஜய் அவர்கள் சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் நான் அவரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.'' எனத் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வராததை உறுதிப்படுத்தும் பட்சத்தில், மீனவ பிரச்னை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என யாழ். மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
பருத்தித்துறை நகர சபை உறுப்பினரும், மீனவ சங்கங்களின் பிரதிநிதியுமான அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், ''அவர் (விஜய்) அரசியலுக்காக பலவற்றையும் பேசலாம். ஆனால், கச்சத்தீவு எங்களுடையது. எங்களுடைய கடலில் அத்துமீறி அவர்கள் (தமிழ்நாட்டு மீனவர்கள்) வர முடியாது. தமிழக முதலமைச்சர் விஜய், அதை தடுக்கும் வேலைகளை தான் பார்க்க வேண்டுமே தவிர, எங்களுடைய மக்களுக்கு சேதங்கள் விளைவிக்கின்ற இந்திய மீனவர்களை இங்கு அனுப்பும் வழிவகைகளை அவர் செய்ய கூடாது.
இந்த எல்லையை தாண்டி வருவதால் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எங்களுடைய கடலின் எல்லையை தாண்டி வரக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு. மீனவர் பிரச்னை தொடர்பில் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை. முதலில் அவர்கள் எல்லையை தாண்டி வராமல் இருந்தால், அதன் பின்னர் பேச்சுவார்த்தை குறித்து யோசிக்கலாம்.'' எனத் தெரிவிக்கின்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு