சங்க இலக்கியங்கள் பேசும் பூம்புகார் துறைமுகம் உண்மையில் இருந்ததா?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள், பண்டைய துறைமுக நகரமான பூம்புகார் பற்றி விரிவாகப் பேசுகின்றன.

குறிப்பாக, பட்டினப்பாலை அதன் நகர அமைப்பு, பல்வேறு பகுதிகள், வீதிகள், துறைமுகம், வணிகப் பொருட்கள், மக்களின் வாழ்வியல் உட்படப் பல அம்சங்களை விளக்குகிறது. இவை காவிரிப்பூம்பட்டினம் பற்றிய விரிவான சித்திரத்தை வழங்குகின்றன.

பட்டினப்பாலையின் விளக்கங்கள்படி, காவிரிப்பூம்பட்டினம் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது. பகல் நேரச் சந்தை 'நாளங்காடி' எனவும், இரவு நேரச் சந்தை 'அல்லங்காடி' எனவும் அழைக்கப்பட்டன. கிரேக்கர்கள் மற்றும் பிற வெளிநாட்டு வணிகர்கள் நகரின் வெளிப்பகுதியில் வசித்து வணிகம் செய்ததாகவும் மீனவர்கள் மருவூர்ப்பாக்கம் என்ற பகுதியில் வசித்து வந்ததாகவும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

இப்படியாக, சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பு மற்றும் வரலாறு அறிவியல்பூர்வமாக எவ்வளவு தூரம் உறுதி செய்யப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தெரிய வந்தது என்ன?

பூம்புகார் துறைமுகம் உண்மையில் இருந்ததா?

பண்டைய காவிரிப்பூம்பட்டினமாக அறியப்படும் பூம்புகார், தமிழக கடற்கரையில் காவிரி ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகே அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானங்கள், வளையக் கிணறுகள், மட்பாண்டங்கள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழையூரில் கண்டறியப்பட்ட ஒரு 'ஐ' வடிவ செங்கல் அமைப்பு, மேடை, வடிகால், மரத்தூண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொல்லியலாளர்கள் அதுவொரு 'துறைமுக மேடை' என்று அடையாளப்படுத்தியுள்ளனர்.

இதுவரையிலான ஆய்வுகளின்படி, பூம்புகார் என்ற நகரம் உண்மையில் இருந்தது என்று நிரூபணமாகியுள்ளது. ஆனால், அதன் எவ்வளவு பகுதி அழிந்தது, எப்போது அந்த இழப்புகள் ஏற்பட்டன, அந்த அழிவு படிப்படியாக நிகழ்ந்ததா அல்லது ஒரே பெரும் பேரழிவால் ஏற்பட்டதா என்பன குறித்து இன்னும் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கவில்லை.

கடந்த 2020ஆம் ஆண்டில், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அசல் நகரத்தின் அமைவிடம், அதன் காலம், காலப்போக்கில் ஏற்பட்ட இடமாற்றங்கள், அதன் அழிவுக்கான காரணங்கள் ஆகியவை இன்னும் தீர்க்கப்படாத புதிர்களாகவே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

பூம்புகார் குறித்தான முதல் அதிகாரபூர்வ கடலோர ஆய்வு 1981இல் தமிழ்நாடு தொல்லியல் துறையால், கோவாவில் உள்ள தேசிய கடலியல் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில், வெவ்வேறு ஆழங்களில் அசாதாரணமான கடலடிப் பாறை அமைப்புகள் கண்டறியப்பட்டன. மேலும் கடலடியில் மூன்று அடுக்கு கற்கட்டுமானங்கள் காணப்பட்டன. தமிழ்நாடு தொல்லியல் துறை, இந்த எச்சங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவையாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறது.

கடந்த 1989ஆம் ஆண்டு முதல், தேசிய கடலியல் நிறுவனத்தின் கடல்சார் தொல்பொருள் ஆய்வாளர்களான அனிருத் சிங் கவுர், சுந்தரேஷ் ஆகியோர் பூம்புகார் மற்றும் தரங்கம்பாடிக்கு இடையே சுமார் ஏழு கிலோமீட்டர் கடற்கரையிலும், அப்பகுதியில் கடலில் பல கிலோமீட்டர் தொலைவிலும் ஆராய்ந்தனர்.

அதில், அலையிடை மண்டலம் மற்றும் சுமார் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழம் வரையிலான பகுதியில் சுடுமண் வளையக் கிணறுகள், செங்கல் எச்சங்கள், மட்பாண்டங்கள், நீரில் மூழ்கிய கற்கட்டுமானங்கள் இருந்தது பதிவு செய்யப்பட்டது.

காவிரி முகத்துவாரத்திற்கு அருகே, கடலில் சுமார் 600 மீட்டர் தொலைவில், முக்குளிப்பவர்கள் செதுக்கப்பட்ட மணற்கல் பாறைகளை ஆராய்ந்து, புதைந்திருந்த படிவங்களை வெளிப்படுத்தினர்.

அனிருத் சிங் கவுர், சுந்தரேஷ் வெளியிட்ட இந்த ஆய்வின் முடிவுகள், ஒரு மீட்டருக்கும் அதிகமான வண்டல் மண்ணுக்குக் கீழே குடியிருப்புப் பொருட்கள் இருந்ததாகவும், அந்த இடத்துடன் தொடர்புடைய ஆரம்ப நூற்றாண்டுகளைச் சேர்ந்த மட்பாண்டங்கள் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வு, பூம்புகாரின் தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 30 முதல் 40கி.மீ தூரத்தில், கடலுக்குக் கீழே 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ பரப்பில் ஒரு துறைமுக நகரம் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியது.

பண்டைய துறைமுக நகரத்தை கடல் விழுங்கிவிட்டதா?

பூம்புகார் கடலில் மூழ்கிவிட்டதன் பின்னணி குறித்தான ஆய்வுகளில், ஆழமற்ற கடல் பகுதியில் காணப்படும் எச்சங்கள், கடுமையான கடற்கரை அரிப்பு ஏற்பட்டதை உணர்த்துவதாகக் கூறுகின்றன.

அனிருத் சிங் கவுர், சுந்தரேஷ் தங்கள் ஆய்வில், "1973ஆம் ஆண்டில் அதிகபட்ச அலைக்கோட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்ட கண்ணகி சிலை, கடல் அரிப்பால் கடல் நீர் உட்புகுந்ததன் விளைவாக, 1994இல் 150 மீட்டர் உள்நோக்கி மாற்றப்பட வேண்டியிருந்ததைச் சுட்டிக்காட்டினர்.

மேலும், தற்கால கடற்கரையை, பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தரங்கம்பாடியின் வரைபடத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், கடந்த மூன்று நூற்றாண்டுகளில் சுமார் 300 மீட்டர் கடற்கரையோரப் பகுதி கடலுக்குள் சென்றுவிட்டதாகவும் அவர்கள் மதிப்பிட்டனர்.

அதேபோல, 2014இல் தேசிய கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். மணி, ஜெயகுமார் சீலம், அனிருத் சிங் கவுர் ஆகியோர் நடத்திய ஆய்வில், கடந்த 75 ஆண்டுகளில் பூம்புகாரில் சுமார் 487 மீட்டரும், தரங்கம்பாடியில் 389 மீட்டரும் கடற்கரைக்கோடு மாறி இருப்பதாகக் கணக்கிட்டனர்.

ஒரு காலத்தில் காவிரி ஆறு பெருமளவிலான வண்டல் படிவுகளைக் கடற்கரைக்குக் கொண்டு வந்தது. நவீன அணைகள் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் இந்த வண்டல் வரத்தைக் குறைத்ததாகவும், அதனால் சமீபத்திய அரிப்பு மிகவும் தீவிரமடைந்ததாகவும் ஏ.எஸ். கவுர் மற்றும் சுந்தரேஷ் வாதிட்டனர்.

இது பண்டைய குடியிருப்புப் பகுதிகள் மறைந்ததற்கான முழுமையான விளக்கமாக அமையாது என்றாலும், வண்டல் படிவு வரத்து மற்றும் வெளியேற்றத்திற்கு இடையிலான சமநிலை மாறும்போது கடற்கரைக்கோடு எவ்வளவு விரைவாக உள்வாங்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

பனியுகத்திற்குப் பிந்தைய கடல் மட்ட உயர்வு என்பது, தற்போது கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ள நிலப்பகுதிகளுடன் தொடர்புடையது. எஸ்.எம். ராமசாமி தலைமையிலான 2020ஆம் ஆண்டின் கடல்சார் நிலப்பரப்பு ஆய்வு (bathymetric study), கடந்த பனியுகத்திற்குப் பிறகு உலகளாவிய கடல் மட்டம் உயர்ந்தபோது, சுமார் 20,000 முதல் 7,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கடற்கரைக்கோடு நிலத்தை நோக்கிப் பெருமளவில் நகர்ந்ததை வெளிப்படுத்தியது.

மேலும், 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பண்டைய பூம்புகார் துறைமுகம், வடக்கு-தெற்காக 11கி.மீ நீளமும் கிழக்கு-மேற்காக 2.5கி.மீ அகலமும் கொண்டு இருந்ததாகவும் அதில், "வடக்கு-தெற்காக நீண்ட கால்வாய்கள் கப்பல்கள் போக்குவரத்துக்காக, குறுக்குக் கால்வாய்கள் கப்பல்களை திருப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும். இவை சரக்குகளை ஏற்றி-இறக்கவும், சேமித்து வைக்கவும் துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 70-80 கப்பல்களை நிறுத்த பயன்படுத்துவதற்காக இருந்திருக்கலாம்" என்று தெரியவந்துள்ளதாகவும் அப்போது பிபிசி தமிழிடம் பேசிய ஆய்வுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் எம்.ராமசாமி விளக்கினார்.

மேலும், "துறைமுகத்திற்கு 10 கி.மீ. வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. துறைமுகத்திற்கு வடக்கே, வடக்கு-தெற்காக காணப்படுகின்ற மணல்மேட்டில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு மதில் சுவற்றுக்கு உள்ளே கட்டப்பட்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. இதேபோன்று துறைமுகத்திற்கு 10 கி.மீ. தென்கிழக்கிலும் மதிலுடன் கூடிய, ஆனால் உள்ளிருக்கும் கட்டடங்கள் அழிந்த நிலையிலுள்ள குடியிருப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பூம்புகார் நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து விவரித்த பேராசிரியர் எம்.ராமசாமி, சுனாமி, கடல்மட்ட உயர்வு, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்கள் காரணமாகச் சிறிது சிறிதாக பூம்புகார் நகரம் இடம் மாறுவதற்கும் கடலுக்குள் மூழ்குவதற்கும் வித்திட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

பண்டைய பூம்புகாரின் சில பகுதிகளைக் கடல் விழுங்கியுள்ளதை இதுவரையிலான அகழாய்வு சான்றுகள் உறுதி செய்கின்றன. தொல்பொருள் எச்சங்கள் நிலத்திலும், ஆழமற்ற நீருக்கு அடியிலும் காணப்படும் அதே நேரம், நிலவியல் ஆய்வுகள் பெரும் கடற்கரைப் பரப்பு கடலுக்குள் சென்றதை ஆவணப்படுத்தியுள்ளன.

புயல்கள், பெருவெள்ளங்கள், சுனாமிகள் போன்ற பேரிடர்கள் சில மணிநேரங்களில் கடலோரக் குடியிருப்புகளை அழித்து, சிதைவுகளைக் கரைக்குக் கொண்டு சென்று, புதிய கால்வாய்களை உருவாக்கக்கூடும்.

எனவே அத்தகைய நிகழ்வுகள் பூம்புகார் கடலில் மூழ்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதேவேளையில், இதுவரை உறுதியாகக் காலவரையறை செய்யப்பட்ட எந்தவொரு படிமமும் இந்தப் பின்னணியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு