மெஸ்ஸி புதிய சாதனை: அர்ஜென்டினாவுக்கு கடும் சவால் கொடுத்து திணறடித்த கேப் வெர்டே

பட மூலாதாரம், Matias J. Ocner/Miami Herald/Tribune News Service via Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கேப் வெர்டே அணியை 3-2 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது அர்ஜென்டினா.
மயாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டி 90 நிமிடங்கள் முடிவில் சம நிலையில் இருக்க, ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. பரபரப்பாகச் சென்ற கூடுதல் நேரத்தில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன்.
இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் முதல் கோலை அடித்த கேப்டன் லயோனல் மெஸ்ஸி, பல்வேறு சாதனைகளைப் படைத்தார். இந்தத் தொடரில் அவர் தொடக்கத்தில் இருந்து விளையாடிய 3 போட்டிகளிலுமே அவரே ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார். இந்தப் போட்டி உள்பட.
அதேசமயம், பலம் வாய்ந்த அணிக்கு திராக போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய கேப் வெர்டே அணி ரசிகர்கள், வல்லுநர்கள் என அனைவரின் மனதையும் வென்றிருக்கிறது.
ஃபிஃபா தரவரிசையில் 67வது இடத்தில் இருக்கும் கேப் வெர்டே அணி, தங்களின் முதல் உலகக் கோப்பை தொடரில் முழுவதுமே மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறது.
ஸ்பெயின், உருகுவே போன்ற பலமான அணிகளுக்கு எதிராக குரூப் சுற்றில் டிரா செய்து அசத்திய அந்த அணி, இந்தப் போட்டியில் இன்னொரு பெரிய அணிக்கும் தொடர்ந்து சவால் கொடுத்தது. இந்த உலகக் கோப்பையில் 90 நிமிடங்கள் முடிவில் அந்த அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.
அர்ஜென்டினாவுக்கு எதிராக இரு முறை பின்தங்கியிருந்த நிலையில் போராடி ஆட்டத்தை சமன் செய்தது கேப் வெர்டே. அர்ஜென்டினாவுக்கு மூன்றாவது கோல் கிடைத்த பிறகு பதில் கோல் திருப்பி ஆட்டத்தை சமன் செய்ய கேப் வெர்டே கடைசி வரை கடுமையாக போராடியது. ஆனால், அந்தப் போராட்டங்களை அர்ஜென்டினா சமாளித்துவிட, கேப் வெர்டே வெளியேறியது.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கும் அர்ஜென்டினா அணி, அந்தப் போட்டியில் எகிப்துக்கு எதிராக மோதுகிறது.
மெஸ்ஸி புதிய சாதனை

பட மூலாதாரம், Pablo Morano/BSR Agency/Getty Images)
போட்டி தொடங்கியதிலிருந்து எதிர்பார்த்ததைப் போலவே அர்ஜென்டினா தாக்குதலிலும், கேப் வெர்டே தற்காப்பிலும் கவனம் செலுத்தின. மெஸ்ஸியும் எதிர்பார்த்ததைப் போலவே களம் முழுக்க சுற்றி எதிரணிக்கு சவால் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
ஆட்டத்தின் 15வது நிமிடத்திலேயே அவர் இடது பக்கமிருந்து இருந்து ஒரு ஷாட் அடித்தார். ஆனால், அது கோல் போஸ்ட்டுக்கு வெளியே சென்றுவிட்டது. ஆனால், தொடர்ந்து கேப் வெர்டே பாக்ஸை முற்றுகையிட்டுக் கொண்டே இருந்தார் மெஸ்ஸி. 18வது நிமிடத்தில் பாக்ஸுக்கு வெளியே இருந்து அவர் அடித்த ஷாட்டை கேப் வெர்டே கோல்கீப்பர் வொசினியா தடுத்துவிட்டார்.
முதல் ஷாட் இலக்குக்கு வெளியே சென்றது, இரண்டாவது ஷாட் இலக்கை நோக்கிச் சென்றாலும் தடுக்கப்பட்டது. மெஸ்ஸியின் மூன்றாவது ஷாட் கோலானது.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில், தங்கள் பாதியில் இருந்து கேப் வெர்டேவின் டிஃபன்ஸைத் தாண்டி அவர்கள் பாக்சுக்குள் ஒரு நீண்ட பாஸ் கொடுத்தார் அர்ஜென்டினா டிஃபண்டர் லிசாண்ட்ரோ மார்டினஸ்.
அந்த பாஸ் கொடுக்கப்படுவதற்கு முன்பே அதை சரியாக யூகித்து பாக்சுக்குள் நுழைந்த மெஸ்ஸி தன் இடது காலால் அதை மிகச் சிறப்பாக பந்தைக் கட்டுப்படுத்தி உடனே போஸ்ட்டுக்குள் பந்தை அடித்தார். வொசினியாவால் அதைத் தடுக்க முடியாமல் போக, அர்ஜென்டினா அணி போட்டியில் முன்னிலை பெற்றது.
இந்த கோல் இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடிக்கும் 7வது கோல். ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பையில் அடித்த 20வது கோல். இந்த கோல் மூலம் ஃபிஃபா உலகக் கோப்பையில் தொடர்ந்து 8 போட்டிகளில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் மெஸ்ஸி.
அதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் மொத்தம் 12 கோல்களுக்கு காரணமாக (கோல்கள் + அசிஸ்ட்கள்) இருந்திருக்கிறார் மெஸ்ஸி. அந்தப் பட்டியலிலும் அவர் முதலிடம் வகிக்கிறார்.

பட மூலாதாரம், Luciano Bisbal/Eurasia Sport Images/Getty Images
ஆட்டத்தைச் சமனாக்கிய கேப் வெர்டே
முதல் பாதியில் 0-1 என பின்தங்கியிருந்த கேப் வெர்டே அணி இரண்டாவது பாதி தொடங்கியதிலிருந்து தாக்குதலில் சற்று கூடுதலாக கவனம் செலுத்தியது. 49வது நிமிடம் முதல் 59வது நிமிடம் வரை அந்த அணி அடுத்தடுத்து மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பரிசாக ஒரு கோலும் கிடைத்தது.
49வது நிமிடத்தில் கேப் வெர்டே வீரர் ஜொவானே கப்ரால் பாக்சுக்கு வெளியே இருந்து அடித்த ஷாட் அர்ஜென்டினா வீரர்களால் பாக்சுக்கு வெளியே தடுக்கப்பட்டது. ஆனால், திரும்பவும் கேப் வெர்டே பந்தை மீட்டது. வலது பக்கம் பாக்சுக்கு சற்று தூரத்திலிருந்து ஒரு பெரும் முயற்சியை மேற்கொண்டார் ரயன் மெண்டெஸ். ஆனால், அந்தப் பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே சென்றது.
அடுத்த சில நிமிடங்கள் கேப் வெர்டே நடுகள வீரர் டெராய் டுவார்டே அர்ஜென்டினாவுக்கு சவால் கொடுத்தார். 54வது நிமிடத்தில் பாக்சுக்கு வெளியே இருந்து அவர் அடித்த ஷாட்டை, அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் தடுத்துவிட்டார். ஆனால், அடுத்த 5 நிமிடங்களிலேயே அவர் அடித்த ஷாட் கோலானது. கோல் போஸ்ட்டின் வலது பக்கமிருந்து அவர் அடித்த கோல் ஆட்டத்தை சமனாக்கியது.
கேப் வெர்டேவின் அரண் வொசினியா

பட மூலாதாரம், eter Joneleit/Icon Sportswire via Getty Image
இந்த உலகக் கோப்பையில் கேப் வெர்டேவின் அரணாகத் திகழ்ந்தார் அந்த அணியின் கோல்கீப்பர் வொசினியா. 40 வயதான அவர் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியின் பல கோல் வாய்ப்புகளை முறியடித்துக் கொண்டே இருந்தார். அந்த சிறப்பான செயல்பாட்டை அவர் இந்தப் போட்டியிலும் கொடுத்தார்.
ஆப்டா தரவுகளின்படி இந்தப் போட்டியில் மொத்தம் 8 கோல் வாய்ப்புகளைத் தடுத்திருந்தார். கேப் வெர்டே அணி கோலடித்த பிறகு அர்ஜென்டினா தொடர்ச்சியாக கோலடிப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தது. பாக்சுக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் ஷாட்களை அடித்துக்கொண்டே இருந்தார்கள். அதிலும் மெஸ்ஸிக்கும் வொசினியாவுக்கும் ஒரு 1 டூ 1 யுத்தமே நடந்தது.
62வது நிமிடத்தில் கோல் போஸ்ட்டுக்கு மிகவும் பக்கத்தில் இருந்து மெஸ்ஸி அடித்த ஷாட் வொசினியாவுக்கு நேராகவே சென்றது. அதை உறுதியாக நின்று தடுத்தார் கேப் வெர்டே கோல்கீப்பர்.
அடுத்து 72வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த இன்னொரு வாய்ப்பையும் தடுத்தார் வொசினியா. கோல் போஸ்ட்டுக்கு இடது பக்கம் கிடைத்த ஃப்ரீ கிக்கை மெஸ்ஸி சரியாக வலதுபக்கம் அடிக்க, இடது ஓரத்தில் நின்றிருந்த வொசினியா மிகச் சிறப்பாக அதைத் தடுத்தார்.
அடுத்ததாக ஸ்டாப்பேஜ் டைமின் 2வது நிமிடத்தில் லியாண்ட்ரோ பெரெடஸ் பாக்சுக்கு வெளியே இருந்து அடித்த ஷாட்டையும் வொசினியா தடுத்தார்.
ஸ்டாப்பேஜ் டைமின் 4வது நிமிடத்தில் வலது பக்கம் கிடைத்த ஃப்ரீ கிக்கை கோல் நோக்கி அடித்தார் மெஸ்ஸி. அதைத் தடுக்க வொசினியா முயற்சி செய்ய, கேப் வெர்டே வீரர் கப்ரால் மீது பட்டு பந்து விலகிச் சென்றது. இருந்தாலும் வொசினியா அதைத் தடுத்து வெளியே தள்ளினார். ஆனால், பந்து வெளியே அனுப்பப்படாமல் போக, அடுத்து அர்ஜென்டினா வீரர் என்சோ ஃபெர்னாண்டஸ் தலையால் முட்டி பந்தை கோல் நோக்கி அனுப்பினார். ஆனால், வொசினியாவை அந்த முறையும் அந்தப் பந்தால் தாண்ட முடியவில்லை. அவரது சிறப்பான தடுப்பு காரணமாக இரண்டாவது பாதி முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.

பட மூலாதாரம், Pablo Morano/BSR Agency/Getty Images
கூடுதல் நேரத்தில் வென்ற அர்ஜென்டினா
கூடுதல் நேரம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணி 2வது கோலை அடித்து மீண்டும் முன்னிலை பெற்றது. முதல் கோலுக்கு அசிஸ்ட் செய்த லிசாண்ட்ரோ மார்டினஸ் பாக்சுக்கு அருகே இருந்து கோலடித்தார். இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி களத்தில் இருக்கும்போது அவரைத் தவிர்த்து இன்னொரு அர்ஜென்டினா வீரர் கோலடிப்பது இதுவே முதல் முறை.
ஆனால், அர்ஜென்டினாவின் முன்னிலை 11 நிமிடங்கள் தான் நீடித்தது. 103வது நிமிடத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார் சிட்னி லோபஸ் கப்ரால். இடது விங்கில் இருந்து பந்தோடு முன்னேறிய அவர், பாக்சின் ஓரத்திலிருந்து ஷூட் செய்தார். அந்தப் பந்து கோல் போஸ்ட்டின் வலது மேல் முனையில் சென்று விழ அர்ஜென்டினா ரசிகர்கள் உறைந்து போனார்கள். இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல்களுள் ஒன்றாக இது அமைந்தது.
இரண்டு முறை பெற்ற முன்னிலையை தவறவிட்ட அர்ஜென்டினா, 111வது நிமிடத்தில் மூன்றாவது முறையாக ஆட்டத்தில் முன்னிலை பெற்றது.

பட மூலாதாரம், Chris BrunskillFantasistaGetty Images
அந்த அணிக்குக் கிடைத்த கார்னர் வாய்ப்பை மெஸ்ஸி பாக்சுக்குள் அனுப்பினார். நன்கு மேலெழுந்த அர்ஜென்டினா வீரர் கிறிஸ்டியன் ரொமேரோ தலையில் பட்ட பந்து, அதன்பின் கேப் வெர்டே வீரர் டைனி போர்ஜஸ் கையில் பட்டு கோலுக்குள் சென்றது.
மூன்றாவது முறையாக ஆட்டத்தை சமனாக்க முயற்சி செய்த கேப் வெர்டேவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் 3-2 என வெற்றி பெற்று அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


























