குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த இந்த 5 விஷயங்களும் ஆர்சிபியை வீழ்த்த போதுமானதா?

    • எழுதியவர், பாபா இந்திரஜித்
    • பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

2026 ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது குஜராத் டைட்டன்ஸ். குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி-க்கு எதிராகத் தோற்றிருந்தாலும், குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது அந்த அணி.

இந்த சீசன் தொடங்கியபோது குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்று உண்மையாக நான் எதிர்பார்க்கவில்லை. அந்த அணியில் சில ஓட்டைகள் இருந்தன. ஆனால், அதையும் மீறி, தங்கள் கைவசம் இருந்தவற்றை முழுமையாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி இந்த இடத்துக்கு அந்த அணியை எடுத்து வந்திருக்கிறது ஆசிஷ் நெஹ்ராவின் பயிற்சியாளர் குழு. அதற்காக நிச்சயம் அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.

இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த நிலையில், லீக் சுற்றில் அவர்கள் பெற்ற கடைசி 3 வெற்றிகளுமே 70 ரன்களுக்கும் மேல் வந்தவை. அது அவர்களை டாப் 2 இடங்களில் முடிக்க வைத்தது. அவர்களுக்கு பிளே ஆஃப் சுற்றில் 2வது வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது.

இப்படி தேவைப்படும் நேரத்தில் தேவைப்பட்ட செயல்பாடுகளைக் கொடுத்து, சரியான கட்டத்தில் எழுச்சி பெற்று தற்போது கோப்பைக்கு மிகவும் அருகில் வந்திருக்கிறது டைட்டன்ஸ்.

அவர்களின் இந்த எழுச்சி மிகு செயல்பாட்டுக்குக் காரணமாக இருந்த 5 விஷயங்கள் என்ன? இந்த இறுதிப் போட்டியில் அவர்கள் என்ன யுக்தியைக் கையாள வேண்டும்?

காரணம் 1: கில் - சாய் சுதர்ஷன் சாதனைக் கூட்டணி

சாய் சுதர்ஷன் - ஷுப்மன் கில் கூட்டணி ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த தொடக்க ஜோடிகளுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான குவாலிஃபயர் 2 போட்டியில் தங்களுடைய 11வது 100 ரன் பார்ட்னர்ஷிப்பை அவர்கள் கட்டமைத்தார்கள். ஐபிஎல் அரங்கில் அதிக 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் என்ற சாதனையையும் இவர்கள் இந்த குறுகிய காலகட்டத்தில் செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இவர்கள் இருவரும் இணைந்து 48 போட்டிகளில் 2944 ரன்கள் (சராசரி - 64) எடுத்திருக்கிறார்கள். இது முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி - ஏ.பி.டி வில்லியர்ஸ் கூட்டணியை விட 179 ரன்களே குறைவு.

அவர்களின் பலமே அவர்கள் பாரம்பரியமான கிரிக்கெட்டையே தங்களின் அணுகுமுறையாகக் கொண்டிருக்கிறார்கள். ரிஸ்க்கான ஷாட்களை அவர்கள் அதிகம் ஆடுவதில்லை. அபாயம் குறைவான ஷாட்கள் ஆடினாலும், நல்ல ரன் விகிதத்தைத் தக்கவைக்கிறார்கள். இடைவெளியைக் கண்டுபிடிப்பதிலும், பவுண்டரிகள் அடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.

அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நல்ல புரிதல் இருக்கிறது. அதனால் அவர்களால் ஓடியும் நன்கு ரன் குவிக்க முடிகிறது. அவர்களுக்குள் புரிதல் இருப்பதுபோல், தங்களின் ஹோம் கிரவுண்டான ஆமதாபாத்திலுள்ள ஆடுகளங்கள் பற்றிய புரிதலும் அவர்களுக்கு நன்றாக இருக்கிறது. அதனால், அங்கு அவர்களால் சீராக செயல்பட முடிகிறது.

என்னதான் நாம் அவர்களின் செயல்பாட்டை விளக்க நினைத்தாலும், இது அசாத்தியமானது ஒன்று. ஏனெனில், இப்படியொரு சீரான செயல்பாட்டை ஒவ்வொரு சீசனும் கொடுப்பது எளிதானதல்ல. இந்த சீசனிலும் அவர்கள் இந்த செயல்பாட்டைக் கொடுத்து தங்கள் அணியை நல்ல நிலைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.

காரணம் 2: பவர்பிளேவில் மிரட்டும் சிராஜ் - ரபாடா கூட்டணி

குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் வளங்களை சிறப்பாகவும் முழுமையாகவும் பயன்படுத்துகிறது என்பதற்கான ஒரு உதாரனம் முகமது சிராஜ் மற்றும் ககிஸோ ரபாடா ஆகியோரின் செயல்பாடு.

இந்த சீசன் பவர்பிளேவிலேயே எதிரணிகளை இவர்கள் இருவரும் பதம் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 6 ஓவர்களில் இவர்களை சமாளிப்பது எதிரணிகளுக்கு பெரும் சவாலாக இருந்திருக்கிறது.

இந்த சீசன் பவர்பிளேவில் மட்டுமே 18 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக பவர்பிளே விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்திருக்கிறார் ககிஸோ ரபாடா. சிராஜ் தன் பங்குக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதனால் பெரும்பாலான போட்டிகளில் இவர்கள் இருவரை வைத்தே பவர்பிளேவின் 6 ஓவர்களையும் முடித்தார் ஷுப்மன் கில்.

இவர்களின் இந்த சிறப்பான சீரான செயல்பாட்டுக்குக் காரணம், அவர்கள் தங்களின் திட்டங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்.

சிராஜ் தன் முதல் இரு ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்ய முயற்சி செய்கிறார். எப்போது ஸ்விங் இல்லையோ அப்போது 'ஹார்ட் லென்த்தில்' ஸ்டம்ப் லைனில் பந்துவீசத் தொடங்குகிறார். ரபாடாவோ முதல் பந்து முதலே 'ஹார்ட் லென்த்தில்' வீசுகிறார். அதுவும் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக ஸ்டம்ப் லைனில் பந்துவீசிக் கொண்டே இருக்கிறார். அது பேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

அவர்களின் மந்திரம் இதுதான் - அந்த ஹார்ட் லென்த் பந்துகளை தொடர்ச்சியாக வீசுகிறார்கள். அதை பெரும்பாலும் துல்லியமாக செயல்படுத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து சீராகவும் சரியாகவும் செயல்படுத்துவது அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

காரணம் 3: மாற்றம் தந்த ஜேசன் ஹோல்டர்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் சீசன் மாறத் தொடங்கியதே ஜேசன் ஹோல்டரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்ததன் பிறகு தான். பத்தே போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் ஹோல்டர். அதுவும் 7.54 என்ற எகானமியில். சராசரியாக ஒவ்வொரு 13 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.

பவர்பிளே, மிடில் ஓவர்கள், டெத் என அனைத்து பகுதிகளிலும் சிறப்பாகப் பந்துவீசுகிறார் ஹோல்டர். அவரது உயரத்தைப் பயன்படுத்தி நன்கு பவுன்ஸ் ஏற்படுத்துகிறார். நன்கு 'வைட் ஆஃப் தி கிரீஸ்' சென்று வீசுவதால் அவரால் பேட்டர்களுக்கு சவால் கொடுக்க முடிகிறது. இந்த சீசனில் விராட் கோலியின் விக்கெட்டை இரண்டு முறை (3 போட்டிகளில்) வீழ்த்தியிருக்கிறார்.

பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவரால் கடைசி கட்டத்தில் சில நல்ல பங்களிப்புகளைக் கொடுக்க முடியும். அவர் ஒரு நல்ல ஃபீல்டரும் கூட. அதற்கும் மேலாக களத்துகுள் அவர் நல்ல உத்வேகத்தைக் கொண்டுவருவார். ஒட்டுமொத்தமாகவே அவர் அணிக்குள் பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். அதுதான் அவர்களின் சீசன் மாறுவதற்கான காரணமாக அமைந்தது.

அவர் இல்லாமல் விளையாடிய 6 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது. அவர் ஆடத் தொடங்கிய பிறகு, 10 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்றிருக்கிறது. டைட்டன்ஸின் காம்பினேஷன், உத்வேகம், செயல்பாடு அனைத்திலுமே நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் ஜேசன் ஹோல்டர்.

காரணம் 4: பேட்டர் வாஷிங்டன் சுந்தரின் எழுச்சி

டைட்டன்ஸ் அணியின் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்பட்டது அவர்களின் மிடில் ஆர்டர் தான். இந்த சீசனின் தொடக்கத்திலும் அதை நன்றாகவே பார்க்க முடிந்தது. இந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று முன்பு குறிப்பிட்டதன் காரணம் கூட மிடில் ஆர்டரில் இருந்த பிரச்னை தான். ஆனால், அதை சீசன் செல்லசெல்ல அவர்கள் ஓரளவு நன்றாகவே கையாண்டார்கள்.

இந்த முன்னேற்றத்துக்கான முக்கிய காரணம் வாஷிங்டன் சுந்தரின் ஃபார்ம். முந்தைய சீசனில் 4வது வீரராகக் களமிறங்கிக் கொண்டிருந்தபோது அவரால் பெரிய ஸ்கோர்கள் எடுக்க முடியவில்லை. இந்த சீசனில் அவர் 5வது வீரராக ஆடிக் கொண்டிருகிறார். ஆரம்பத்தில் 4வது வீரராக விளையாடிய போதும் அவருடைய 'என்ட்ரி பாயின்ட்' அவருக்கு ஏற்றதாக இருந்தது. அது அவருடைய ஆட்டத்துக்கு உதவுவதாக இருந்தது.

இதற்கு முன் வாஷிங்டன் சுந்தர் எந்த ஐபிஎல் சீசனிலும் 150 ரன்களுக்கு மேல் எடுதத்தில்லை. ஆனால், இந்த சீசனில் 32.70 என்ற சராசரியில் 327 ரன்கள் எடுத்திருக்கிறார் அவர். 152.80 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டிலும் அதை எடுத்திருக்கிறார். தேவையான போது சில நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்தார்.

சிறு பங்களிப்புகள் மட்டும் என்றில்லாமல் வெற்றிக்கு வழிவகுத்த சில செயல்பாடுகளையும் இந்த சீசனில் கொடுத்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து தன் அணி 150 ரன்களைக் கடக்க உதவிபுரிந்தார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான சேஸில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் தன் அணியை வெற்றி பெறவைத்தார். குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இந்த சீசனில் பூர்த்தி செய்திருக்கிறார் அவர்.

அவர் மட்டுமல்ல, கடந்த சில போட்டிகளாக ராகுல் திவாதியாவும் சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். ஜேசன் ஹோல்டரும் அவ்வப்போது சில சிறு பங்களிப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். மெல்ல அந்த மிடில் ஆர்டரும் ஓரளவு நல்ல பங்களிப்பைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதேசமயம் இறுதிப் போட்டியை வெல்லவேண்டும் எனில் அனைவருமே நல்லதொரு பங்களிப்பைக் கொடுக்கவேண்டும். இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மிடில் ஆர்டருக்கு அந்த சவால் காத்திருக்கிறது.

காரணம் 5: ஆசிஷ் நெஹ்ரா

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த இடத்தில் இருப்பதற்கான காரணம் ஆசிஷ் நெஹ்ரா தான். ஷுப்மன் கில் களத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார், அணியை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ஆசிஷ் நெஹ்ரா தான் அந்த அணியின் ஆதாரமாக இருந்திருக்கிறார்.

2002ல் தொடங்கப்பட்ட அந்த அணி, 5 சீசன்களில் ஒரு முறை தான் லீக் சுற்றைத் தாண்டவில்லை. 4 முறை பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது டைட்டன்ஸ். 3 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. இப்படி சீரான செயல்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், அவர் கட்டமைத்திருக்கும் ஒரு சூழ்நிலை.

அபிஷேக் ஷர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பேட்டிங் அணுகுமுறையை மாற்றினார்கள் என்று நாம் சொல்வோம். அந்த வகையில் பந்துவீச்சு அணுகுமுறையை மாற்றியது குஜராத் டைட்டன்ஸ் தான். பெரும்பாலான போட்டிகளில் ஒரேயொரு ஸ்பின்னரைத்தான் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான ஓவர்களை வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்டே முடிக்கிறார்கள். 4 உலகத்தர வேகப்பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைத்திருக்கிறார்கள். பவர்பிளேவில் இருவரை மட்டுமே பயன்படுத்தி அச்சுறுத்துகிறார்கள். தங்கள் அணிக்கு ஏற்ப ஆடுகளங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மற்ற அணிகள் 250 ஸ்கோர்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது, தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டிருக்கும் போது, தங்கள் அணியின் பலத்தை உணர்ந்து அதற்கேற்ப மட்டுமே தன் அணியை செயல்பட வைத்திருக்கிறார் நெஹ்ரா. அவர்கள் தங்கள் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் அது இவரால் தான்.

அணிக்குள் ஒரு நல்ல சூழ்நிலையையும் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த அணியில் ஆடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதைப் பற்றி என்னிடம் பலரிடம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு அணி சீரான செயல்பாட்டைக் கொடுப்பதற்கு மிகமிக முக்கியமானது அந்த நல்ல சூழ்நிலைதான். அது அவர்களுக்கு அமைந்திருக்கிறது. நல்ல முடிவுகளையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இறுதிப் போட்டியின் முக்கிய சவால்கள்

குஜராத் டைட்டன்ஸ் தற்போது இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டது. அவர்களுக்குப் பல விஷயங்கள் சாதகமாக அமைந்தன. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் அவர்களுக்கு என்ன சவால்கள் காத்திருக்கின்றன? அவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

இந்தப் போட்டியில் நிச்சயமாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஜாஷ் ஹேசில்வுட் இருவரும் டைட்டன்ஸ் ஓப்பனர்களுக்கு சவாலாக அமைவார்கள். குறிப்பாக புவனேஷ்வர் குமார். அவர் ஸ்விங் செய்யாமல், பந்தை சீம் மூலம் உள்ளே கொண்டுவர முயற்சி செய்வார் என்று நான் நினைக்கிறேன்.

ஷுப்மன் கில்லை நன்கு செட் செய்து அப்படி உள்ளே கொண்டுவரும் பந்தின் மூலம் தடுமாறச் செய்யலாம். அதேபோல் சாய் சுதர்ஷனுக்கும் தொடர்ச்சியாக ஸ்டம்ப் லைனில் வீசப் பார்ப்பார். ஹேசில்வுட் ஹார்ட் லென்த்தில் தான் நிச்சயம் வீசப்போகிறார். ஆனால், இரண்டு பேட்டர்களுக்கும் அடிப்பதற்கான வெளியை ஏற்படுத்தாமல் ஸ்டம்ப் லைனிலேயே பந்துவீசக் கூடும்.

கில், சாய் சுதர்ஷன் இருவருமே பெரிய ரிஸ்க் எடுக்காமல் ஆடக்கூடிய பேட்டர்கள் என்பதால், அடிக்கக் கூடிய பந்துகளை வீசாமல், அந்த பேட்டர்களை ரிஸ்க் எடுக்கத் தூண்டுவதே ஆர்சிபி பௌலர்களின் திட்டமாக இருக்கும். அதை டைட்டன்ஸ் பேட்டர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அந்த அணியின் ஸ்கோரைத் தீர்மானிக்கும்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை சிராஜ், ரபாடா இருவரும் தங்களின் திட்டத்தைத் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இறுதிப் போட்டி, ஆர்சிபி என்றெல்லாம் நினைக்காமல், புதிதாக எதையும் முயற்சி செய்யாமல், அவர்கள் தங்களுடைய 'ஹார்ட் லென்த்' திட்டத்தையே நடைமுறைப்படுத்தவேண்டும். குவாலிஃபயர் 2 போட்டியில் அவர்கள் அதைத்தான் செய்தார்கள். வைபவ் சூர்யவன்ஷிக்காக அவர்கள் திட்டத்தை மாற்றி யார்க்கர், ஸ்லோயர் பால்கள் என்றெல்லாம் எதுவும் முயற்சி செய்யவில்லை. அதையே இந்த இறுதிப் போட்டியிலும் தொடரும் பட்சத்தில், அவர்களின் 'ஹோம் கிரவுண்டில்' அவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கக்கூடும்.

(கட்டுரையாளர் பாபா இந்திரஜித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர். இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு