அமெரிக்க புரட்சியை தூண்டிய சித்திரம் - 256 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?

அமெரிக்கப் புரட்சி

பட மூலாதாரம், The Metropolitan Museum of Art, New York/ Gift of Mrs Russell Sage

    • எழுதியவர், டெபோரா நிக்கோல்ஸ்-லீ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் சில வாசகர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடூரமான படம் இடம்பெற்றுள்ளது).

1770 பாஸ்டன் படுகொலையை சித்திரமாக்கிய பால் ரெவெரின் ஓவியம், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சீற்றத்தை தூண்டியது. அது அமெரிக்க வரலாற்றில், பிரசாரத்தின் மிகவும் சக்திவாய்ந்த உதாரணமாகக் கருதப்படுகிறது.

1770-ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று மாலை நேரத்தில், மாசசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகரில் பனி உறைந்து கிடந்தது. அங்குள்ள சுங்கச்சாவடியை ஒரு பிரிட்டிஷ் காவலாளி தனியாகப் பாதுகாத்துக் கொண்டிருந்தார். அந்த உறைபனி குளிரில் அவர் சுவாசிக்கும் போது மூச்சுக்காற்று வெள்ளை பனிமூட்டம் போல வெளிவந்து கொண்டிருந்தது.

அப்போது இருட்டில் இருந்து வெளியே வந்த ஒரு இளைஞன், அந்த பிரிட்டிஷ் காவலாளியை வம்புக்கு இழுத்து, கேலி செய்து, அவர் மீது பனிக்கட்டிகளை வீசத் தொடங்கினான். விரைவில் அவனுடன் ஒரு பெரிய கூட்டமும் சேர்ந்துகொண்டது.

காவலாளிக்கு உதவ வீரர்கள் அழைக்கப்பட்டபோது இருதரப்புக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்தது. கூடியிருந்த கூட்டம் அந்த சிப்பாய்கள் மீது சிப்பி ஓடுகள், நிலக்கரி மற்றும் பெரிய பனிக்கட்டிகளை வீசி எறிந்தது. இந்த அத்துமீறல் இறுதியாக ஒரு பேரழிவில் போய் முடிந்தது. பிரிட்டிஷ் சிப்பாய்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று மனிதர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர், இருவர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தனர்.

பிரிட்டனில் இந்தத் துயரச் சம்பவம், சுருக்கமாக "கிங் ஸ்ட்ரீட் சம்பவம்" என்று மென்மையாக அழைக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் இதற்கு "பாஸ்டன் படுகொலை" என்று பெயரிட்டனர்.

இந்தச் சம்பவம் அமெரிக்க சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்தது. அமெரிக்கா தனது 250வது ஆண்டு நிறைவை ஜூலை 4 அன்று கொண்டாடுகிறது. அமெரிக்கா முழுவதும் உள்ள கலாசார நிறுவனங்களால் இது நினைவுகூரப்படுகிறது.

அந்தப் கொடூரப் படுகொலை நடந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, பாஸ்டன் நகர நாளிதழ்களில் விற்பனைக்காக ஒரு சித்திரம் வெளியானது. அது, அங்கிருந்த புகழ்பெற்ற வெள்ளி வேலைப்பாடு செய்பவரான பால் ரெவிரே ன்பவரால் செப்புத் தகட்டில் செதுக்கப்பட்ட ஓர் அச்சு ஓவியமாகும்.

அதற்கு, "1770 மார்ச் 5 அன்று, பாஸ்டனின் கிங் தெருவில் 29வது படைப்பிரிவின் ஒரு குழுவினரால் நிகழ்த்தப்பட்ட ரத்தக்களரிப் படுகொலை." என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

இரத்தத்தில் நனைந்து வீழ்ந்த தேசபக்தர்கள் மீது, ஏளனமாகச் சிரிக்கும் சிப்பாய்களின் வரிசை ஒன்று சுடும் கோரமான சித்தரிப்பு, மக்களிடையே பிரிட்டிஷாருக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கும், புரட்சித் தீயை மேலும் விசிறிவிடுவதற்கும் பெரிதும் உதவியது.

"இது ஒரு சக்திவாய்ந்த பிரசார வடிவமாக இருந்தது" — மேரி டிராப்பர்

இன்று உலகளவில் எஞ்சியிருக்கும் இந்த ஓவியத்தின் 25 அச்சுப் பிரதிகளில் ஒன்று, டெக்சாஸில் உள்ள 'விசிட்டா ஃபால்ஸ் கலை அருங்காட்சியகத்தில்' வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டதன் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த அருங்காட்சியகம் "அமெரிக்கப் புரட்சியை அச்சிடுதல்" என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி, அமெரிக்க சுதந்திரத்தில் அச்சு ஊடகங்கள் எவ்வளவு முக்கியப் பங்காற்றின என்பதை ஆராய்கிறது.

பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வு, அமெரிக்கா

பட மூலாதாரம், The Metropolitan Museum of Art/ Gift of Mrs Russell Sage

படக்குறிப்பு, பால் ரெவெரின் சித்திரம், பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை பரவலாகத் தூண்டியது

"பாஸ்டன் படுகொலை குறித்த ரெவிரே-வின் சித்தரிப்பு ஒரு சக்திவாய்ந்த பிரசார வடிவமாக இருந்தது. குறிப்பாக, பிராந்தியங்கள் மற்றும் மக்கள் தொகையைப் பொறுத்து எழுத்தறிவு விகிதங்கள் மாறுபட்டுக் காணப்பட்ட அந்த காலகட்ட உலகில் இது மிக முக்கியப் பங்காற்றியது" என இந்த கண்காட்சியின் இணைப் பொறுப்பாளரும், மிட்வெஸ்டர்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியருமான மேரி டிராப்பர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பிரிட்டிஷ் சிப்பாய்களை ஒரு ஒழுங்கான வரிசையில் நிறுத்தியும், ஆயுதமற்ற குடியேற்ற மக்களின் குழப்ப நிலையைப் படம்பிடித்தும் காட்டியதன் மூலம், இதில் யாருடைய தவறு இருக்கிறது, யார் பாதிக்கப்பட்டவர்கள் என்ற தெளிவான செய்தியை அவர் கடத்தினார். இது பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதற்குக் குடியேற்ற மக்களை ஒன்றிணைத்தது."

மறைமுக செய்திகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

யாருடைய தவறு என்பதை உணர்த்தும் மறைமுகச் செய்திகளும் இந்த ஓவியத்தில் இடம் பெற்றுள்ளன: பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு மேலே "புட்சர்ஸ் ஹால்" (கசாப்புக் கடைக்கூடம்) என்ற பலகை தொங்குகிறது; அதே நேரத்தில், விசுவாசத்தின் அடையாளமான ஒரு நாய் குடியேற்றவாசிகளுக்கு மத்தியில் நின்றுகொண்டிருக்கிறது.

"பாதுகாப்பற்ற குடிமக்கள் சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்படுவதைக் காட்டுவதன் மூலம், இதைப் பார்ப்பவர்களிடம் ஒரு கடும் ஆத்திரத்தைத் தூண்டுவதையே இந்த ஓவியம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது," என நியூயார்க்கின் 'தி மெட் பிஃப்த் அவென்யூ' அருங்காட்சியகத்தில் நடக்கும் 'ரெவல்யூஷன்!' கண்காட்சியின் இணைப் பொறுப்பாளர் கான்ஸ்டன்ஸ் மெக்ஃபீ பிபிசியிடம் தெரிவித்தார்.

அமெரிக்கப் புரட்சியின் தோற்றம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் பற்றிய ஆழமான பார்வையை வழங்கும் கலைப்படைப்புகளை ஒன்றிணைக்கும் இக்கண்காட்சியின் முக்கிய அங்கமாக இந்த அச்சு ஓவியம் திகழ்கிறது.

பிரிட்டிஷார் இனிமேலும் ஒரு "நட்பான, தந்தை போன்ற சக்தி" அல்ல, மாறாக அவர்கள் ஓர் "அடக்குமுறைச் சக்தி" என்பதை அந்தப் படம் உணர்த்தியதாக அவர் கூறுகிறார். "இது மக்களின் மனங்களை மாற்றத் தொடங்கியது."

படிக்கத் தெரிந்தவர்களுக்காக, அந்த ஓவியத்திற்குக் கீழே ரெவிரே எழுதியுள்ள உணர்ச்சிப்பூர்வமான வாசகங்கள் பிரிட்டிஷாரின் கொடூரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.

அதில் அவர்கள் "கொடிய காட்டுமிராண்டிகள்" என்றும், "கொலைவெறிப் பகையுடன்" செயல்பட்டவர்கள் என்றும் விவரிக்கப்பட்டுள்ளனர். அந்த உரையின் கீழே பட்டியலிடப்பட்டுள்ள "பாதிக்கப்பட்டவர்களின் துயருற்ற ஆன்மாக்களை சாந்தப்படுத்துமாறு" தேசபக்தர்களை அது வலியுறுத்துகிறது.

வரலாற்று ஆசிரியர் ஸ்டீவன் எல். 2022-ஆம் ஆண்டு இந்த ஓவியத்தைப் பற்றி டான்வர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தப் படைப்பு "பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான குடியேற்ற மக்களின் அணுகுமுறையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது" மற்றும் "ஒரு பொதுவான நோக்கத்தின் கீழ் மக்களை ஒன்றிணைத்து, சுதந்திரத்திற்கான அவசர உணர்வை வளர்ப்பதில் வெற்றியடைந்தது."

முக்கியமான நேரம்

இந்த அச்சு ஓவியம் வெளியிடப்பட்ட தருணம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வந்த பிரிட்டிஷ் ராணுவத்தின் வருகை, சிதைக்கப்பட்ட குடிமை உரிமைகள் மற்றும் பிரிட்டனின் தேசியக் கடனை அடைப்பதற்காக அமெரிக்கர்கள் மீது திணிக்கப்பட்ட தொடர்ச்சியான வரிவிதிப்பு ஆகியவற்றால் அமெரிக்கக் குடியேறிகளிடையே பதற்றம் உச்சத்தில் இருந்தது.

நியாயமற்ற வரிவிதிப்பின் சின்னமாக விளங்கும் சுங்க அலுவலகத்திற்கு வெளியே நடந்த இந்தச் சம்பவம், அவர்கள் தவறவிடக்கூடாத ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

பிரிட்டிஷ் படை, ரெவிரே

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, 1775-இல் பிரிட்டிஷ் படைகளின் முன்னேற்றம் குறித்து தேசபக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்க ரெவிரே மேற்கொண்ட 'நள்ளிரவுப் பயணம்' காரணமாக, பின்னர் அவர் ஒரு தேசிய நாயகனாகப் போற்றப்பட்டார்

ரெவிரே, விடுதலைக்காகப் போராடும் தேசபக்தர்களின் குழுவான 'சுதந்திரத்தின் புதல்வர்கள்' (தி சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி) என்ற குழுவின் உறுப்பினராக இருந்தார். 1775-இல் அவர் மேற்கொண்ட 'நள்ளிரவுப் பயணத்திற்காக' தேசிய நாயகனாகப் போற்றப்பட்டார்.

அந்தப் பயணத்தில், பிரிட்டிஷ் ராணுவத்தின் வருகையை தேசபக்தர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்க குதிரையில் விரைந்து சென்று எச்சரித்து உதவிய பல குதிரை வீரர்களில் அவரும் ஒருவர். பாஸ்டன் படுகொலையால் ஏற்பட்ட மக்களின் உணர்ச்சிப் பெருக்கை, தனது அமைப்பின் நோக்கத்திற்குப் பேராதரவைத் திரட்ட சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

இதற்காக, ஹென்றி பெல்ஹாம் என்பவரால் வரையப்பட்ட அந்தச் சம்பவத்தின் ஓவியத்தை அப்படியே திருடி, ரெவிரே தனது அச்சுப் பதிப்பை அவசர அவசரமாகச் சந்தைக்குக் கொண்டு வந்தார்.

அவர் பெல்ஹாமுக்கு அதற்கான அங்கீகாரத்தையோ அல்லது பண இழப்பீட்டையோ வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பெல்ஹாம், ரெவிரேவின் இந்த "கண்ணியமற்ற செயலைக்" கண்டித்து வருத்தத்துடன் அவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.

'அது சீற்றத்தைக் கிளறியது'

அந்தக் கலைப்படைப்பின் தாக்கத்தின் ஒரு பகுதி அதன் அரிதான தன்மையிலிருந்து உருவானது. "இது ஒரு அமெரிக்க அச்சு ஓவியரால் உருவாக்கப்பட்ட மிகச் சில அச்சுப் பிரதிகளில் ஒன்று" என்று மெக்ஃபீ கூறுகிறார்.

இதன் பரவலான மற்றும் விரைவான விநியோகம், "மக்கள் இதை எவ்வளவு முக்கியமாகக் கருதினார்கள் என்பதைக் காட்டியது" என்றும், அந்தக் காலகட்டத்தில், "இத்தனை பிரதிகள் உருவாக்கப்பட்ட வேறு எந்தப் படைப்பும் இல்லை" என்று அவர் கூறுகிறார். இந்த அச்சு ஓவியம் படுகொலை பற்றிய செய்தியைப் பரப்பியதால், அது மக்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரு காலத்தில் தலைமறைவாக இருந்த 'சுதந்திரத்தின் புதல்வர்கள்' அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக, அதன் துண்டுப் பிரசுரங்கள் கடைகளிலும் மதுக்கடைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன அல்லது அச்சுப் பிரதிகளாக விற்கப்பட்டன. இக்குழு, தேசப்பற்றுக்கான முதன்மைப் பிரதிநிதியாக மாறியதால், இதில் இணையும் மக்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்தது.

இதற்கிடையில், ஜோனதன் முல்லிகன் போன்றோரால் ரெவிரேவின் ஓவியம் மீண்டும் திருடப்பட்டு மறுபதிப்புகளாக உலா வரத் தொடங்கியது. இது ரெவிரே செய்த தவறுக்கே அவருக்கே கிடைத்த ஒரு பாடமாக அமைந்தாலும், புரட்சிக்கான அவரது அழைப்பை இது மேலும் எதிரொலித்தது.

ஹென்றி பெல்ஹாம், ஓவியம்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, ஹென்றி பெல்ஹாம் வரைந்த ஒரு அசல் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்ட ஓவியம்

ரெவிரே-வின் இந்த அச்சு ஓவியம், 1770-ஆம் ஆண்டு வெளியான "பாஸ்டனில் நடந்த கொடூரமான படுகொலை பற்றிய ஒரு சிறு விவரிப்பு" என்ற துண்டுப் பிரசுரத்தின் முகப்புப் படமாக மாறியது.

இந்த துண்டுப் பிரசுரமும், அச்சு ஓவியத்தின் பிற வடிவங்களும் லண்டனில் அச்சிடப்பட்டபோது, இந்த அரசியல் பிரசாரம் ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து பயணித்தது.

பாஸ்டன் படுகொலையின் கொடூரமும் அநீதியும் இப்போது பிரிட்டிஷ் மக்களை அவர்களின் சொந்த நாட்டிலேயே நேருக்கு நேர் எதிர்கொள்ள வைத்தது.

'தீவிரமான உத்வேகம்'

மக்களின் மனதில் ஒரு வலுவான செய்தியை ஆழப் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்ததால், இந்த ஓவியம் முழுவதும் மிகைப்படுத்தல்களும் பொய்களும் நிறைந்திருந்தன. இது அந்தச் சம்பவத்தைப் பகல் வெளிச்சத்தில் நடப்பது போல் காட்டுகிறது.

தேசபக்தர்களின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கான ஆதாரங்களையும் மறைத்துவிடுகிறது. சிப்பாய்களை வம்புக்கு இழுப்பதற்காக அவர்கள் மீது வீசப்பட்ட பனிக்கட்டிகள் கூட இந்த ஓவியத்தில் தடயமின்றி உருகிப் போயிருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, சாட்சிகள் பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபடி, இந்த மோதலை பிரிட்டிஷார்தான் தொடங்கினர் என்றும், கேப்டன் தாமஸ் பிரஸ்டன் (வலதுபுறம் இருப்பவர்) நிராயுதபாணியான கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுகிறார் என்றும் இந்த ஓவியம் தவறாகச் சித்தரித்தது — ஆனால் கேப்டன் பிரஸ்டன் இதை மறுத்தார், பின்னர் அவர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.

"சுடு" என்ற வார்த்தை கேட்கப்பட்டது உண்மைதான் என்று சிலர் கூறினர், ஆனால் அது சிப்பாய்களை சுடுமாறு சவால் விடுத்த தேசப்பற்றாளர்களின் வாயிலிருந்துதான் வந்தது.

ஜான் சிங்கில்டன் கோப்லி, ரெவிரே

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, ஜான் சிங்கில்டன் கோப்லி வரைந்த ரெவிரே-இன் 1768-ஆம் ஆண்டு ஓவியம்

தனது தொடக்க உரையில், வழக்கறிஞர் ஜோசியா குவின்சி, அந்தச் ஓவியத்தின் செல்வாக்கு செலுத்தும் மற்றும் தவறாக வழிநடத்தும் சக்தி குறித்து நடுவர் குழுவை எச்சரிப்பது போல் தோன்றினார்.

"நம் வீடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த சித்திரங்கள் கற்பனைக்கு இறக்கைகள் முளைக்கச் செய்துள்ளன" என்று அவர் கூறினார். "நமது தீவிரமான தேசபக்தி உத்வேகத்தில், பகுத்தறிவு என்பது அழியும் அபாயத்தில் உள்ளது."

இந்த அச்சு ஓவியம் ஏற்படுத்திய பிரசாரத் தாக்கம், அது உருவாக்கப்பட்டு நீண்ட காலத்திற்குப் பிறகும் பொதுமக்களின் மனதில் நீங்காமல் நிலைத்திருந்தது. படுகொலையின் முதல் ஆண்டு நிறைவில், ரெவெரெ அதைத் தனது வீட்டின் ஜன்னல்களில் ஒரு பிரமாண்டமான ஒளிரும் காட்சியாக இணைத்தபோது, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அதைக் காணத் திரண்டனர்.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், டபிள்யூ. எல். சேம்ப்னி மற்றும் அலோன்சோ சேப்பல் போன்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அந்த நிகழ்வின் சித்தரிப்புகள் உண்மைகளை மாற்றியமைத்தாலும், முக்கியக் கதையை உயிர்ப்புடன் வைத்திருந்தன.

கில்டர் லெஹர்மன் அமெரிக்க வரலாற்று நிறுவனத்தின் கூற்றுப்படி, "பால் ரெவிரே-வின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அச்சு ஓவியம்... அநேகமாக அமெரிக்க வரலாற்றிலேயே மிகச் சிறந்த போர்க்கால பிரசார வடிவமாக இருந்திருக்கலாம்."

இது நிச்சயமாக அமெரிக்கப் புரட்சியின் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய சித்திரங்களில் ஒன்றாகும், இதன் தாக்கம் இன்றும் உணரப்படுகிறது. "அதன் சிறிய அளவையும் தாண்டி, இந்தப் படைப்பு இன்றும் பார்ப்பவர்களிடம் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது" என்கிறார் டிராப்பர்.

"அதன் ஆற்றலின் ஒரு பகுதி, அதன் தொடர்ச்சியாக பொருத்தமாக இருப்பதில் அடங்கியுள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் அதிகாரம், வன்முறை மற்றும் போராட்டம் பற்றிய தங்களின் சொந்தக் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படைப்புக்கு விளக்கமளிக்க முடியும்."

மேலும் அவர் கூறுகையில், "நிகழ்காலத்தைப் போலவே கடந்த காலமும் எப்போதும் விவாதத்திற்குரியது என்பதற்கான ஒரு அழுத்தமான நினைவூட்டல் இது," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு