கன்னி மேரியை கண்டதாக கூறிய 3 குழந்தைகளின் தீர்க்க தரிசனங்கள் சோவியத் வீழ்ச்சிக்கு வித்திட்டதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கடந்த 1917ஆம் ஆண்டு மே மாதம், போர்ச்சுகலைச் சேர்ந்த மூன்று குழந்தைகள், ஃபாத்திமா நகருக்கு அருகிலுள்ள ஒரு வயல்வெளியில் கன்னி மேரியின் தரிசனத்தைக் கண்டதாகக் கூறினர். காலப்போக்கில், இந்த நிகழ்வு உலகின் மிகவும் பிரபலமான மதரீதியான கதைகளில் ஒன்றாக மாறியது. மேலும் பனிப்போர் காலகட்டத்தில் அரசியலிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த 1917ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதியன்று, 10 வயதான லூசியா டோஸ் சான்டோஸ் மற்றும் அவரைவிட வயதில் குறைந்த உறவினர்களான பிரான்சிஸ்கோ மார்டோ, ஜசிந்தா மார்டோ ஆகியோர் ஒரு வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு ஓக் மரத்துக்கு அருகில் பிரகாசமாக ஒளிரும் ஓர் உருவத்தைக் கண்டதாக அவர்கள் கூறினர்.
அந்த உருவம் கன்னி மேரியினுடையது என்று அந்தக் குழந்தைகள் தெரிவித்தனர். அவர்களது கூற்றுப்படி, அடுத்த ஐந்து மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 13-ஆம் தேதியன்று அதே இடத்துக்குத் திரும்பி வருமாறு கன்னி மேரி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அந்தக் குழந்தைகள் மூன்று இறை வாக்குகளையோ அல்லது "ரகசியங்களையோ" பெற்றதாகவும் கூறினர். அவற்றில் இரண்டு இறைவாக்குகள் பிற்காலத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டன. ஆனால் "ஃபாத்திமாவின் மூன்றாவது ரகசியம்" என்று அறியப்படும் மூன்றாவது ரகசியம் மட்டும், எழுதப்பட்டு, சுமார் 2000-ஆம் ஆண்டு வரை பல வருடங்களாக வாடிகனுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இந்த மூன்றாவது வெளிப்பாடு குறித்த ரகசியத்தன்மை மற்றும் அதைச் சூழ்ந்திருந்த மர்மம் காரணமாக, ஃபாத்திமா மீதான ஆர்வம் உலகம் முழுவதும் பெருகியது. அந்தச் சிறிய கிராமப்புற மதத் தலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. மேலும், சிலர் அந்த இறைவாக்குகளை கம்யூனிச எதிர்ப்பு கருத்துகளுடன் தொடர்புபடுத்தியதால், பனிப்போர் காலகட்டத்தில் அது அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றது.
கடந்த 1917ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதியன்று நிகழ்ந்த கன்னி மேரியின் இறுதி தரிசனத்தைக் காண, ஆயிரக்கணக்கான மக்கள் ஃபாத்திமாவில் திரண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்று பலர் நேரில் கண்டதாகக் கூறிய அந்த நிகழ்வு, பிற்காலத்தில் "சூரியனின் அதிசயம்" (Miracle of the Sun) என்று புகழ்பெற்றது.
அந்த நிகழ்வை நேரில் கண்டதாகக் கூறும் சாட்சிகளில் ஒருவரான பிரான்சிஸ்கோ ஃபெர்ரைரா ரோசா, 1992-ஆம் ஆண்டில் பிபிசியின் 'நியூஸ்நைட்' நிகழ்ச்சியில் தான் கண்ட காட்சிகளைப் பற்றிப் பேசினார்.
அப்போது அவர், "நான் கண்டதெல்லாம், வானத்தில் பல வண்ணங்களில் ஒளிரும் வான்பொருட்களை மட்டுமே. அது உண்மையிலேயே ஓர் அதிசயமாக இருந்தது," என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "அதன் பிறகு, வானத்தில் இருந்து பூக்களின் மழை பொழிவது போன்ற ஒரு காட்சி தோன்றியது. அது பனிமழை பொழிவது போலவே இருந்தது. பின்னர், சூரியன் ஒரு நெருப்புச் சக்கரம் போல மிக வேகமாகச் சுழலத் தொடங்கியது. அந்த சுழற்சி சுமார் அரை நிமிடம் நீடித்தது. இறுதியில், சூரியன் மிக மிக வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது," என்றும் அதை விவரித்தார்.
அன்று அங்கு கூடியிருந்த மக்களில் பலர், மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள் குணமடைந்ததாகவும், பார்வையற்றவர்கள் தங்கள் பார்வையை மீண்டும் பெற்றதாகவும் பிற்காலத்தில் சாட்சியம் அளித்தனர்.
பிரான்சிஸ் ஜான்ஸ்டன் 1980-இல் எழுதிய 'ஃபாத்திமா: தி கிரேட் சைன்' (Fatima: The Great Sign) என்ற புத்தகத்தின்படி, போர்ச்சுகீசிய நாளிதழான 'ஓ செக்யூலோ' அந்த நிகழ்வு குறித்து, "திகிலூட்டும் நிகழ்வு! ஃபாத்திமா வானில் நடுப்பகலில் சூரியன் எவ்வாறு நடனமாடியது!" என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்தி, அங்கு குறைந்தது 50,000 பேராவது கூடியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இன்றும்கூட, உண்மையில் அங்கு என்னதான் நடந்தது என்பது குறித்து மக்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். சிலர் அதை ஓர் அதிசயம் என்று நம்புகின்றனர். மறுபுறம், அது ஒரு கூட்டுப் பிரமை (mass hallucination) அல்லது வானிலை சார்ந்த ஏதேனும் ஓர் அரிய நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
இருப்பினும், அந்த நிகழ்வை நேரில் கண்ட பலருக்கும், அந்த அனுபவம் அவர்களுடைய நம்பிக்கையை ஆழமாக வலுப்படுத்தியது.
"எனக்கு ஏற்கெனவே நம்பிக்கை இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிறகு, நான் இன்னும் உறுதியாக நம்பத் தொடங்கினேன்" என்று பிரான்சிஸ்கோ ஃபெர்ரைரா ரோசா 1992-இல் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதோடு, "எனக்கு அச்சம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் சூரியன் அவ்வாறு சுழல்வதைக் கண்ட பலரும் அஞ்சினர். இது போன்றதொரு நிகழ்வு நடக்கையில், அதை நம்பித்தான் ஆக வேண்டும், நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்," என்றார் அவர்.
முதல் இரண்டு இறைவாக்குகள்
ஃபாத்திமாவில் கன்னி மேரி காட்சியளித்ததாகக் கூறிய மூன்று குழந்தைகளில், இருவர் அடுத்த சில ஆண்டுகளில் ஸ்பானிய காய்ச்சல் பெருந்தொற்றுப் பரவலின்போது உயிரிழந்தனர்.
இதனால், லூசியா டோஸ் சான்டோஸ் மட்டுமே உயிர் பிழைத்த ஒரே குழந்தையாக எஞ்சியிருந்தார். அவர் அந்த தரிசனங்களுடன் தொடர்புடைய செய்திகளையும், தீர்க்கதரிசனங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.
அவரது கூற்றின்படி, முதல் "ரகசியம்" நரகத்தைப் பற்றிய ஒரு இறைவாக்கை உள்ளடக்கியிருந்தது. மேலும், அது இரண்டாம் உலகப் போரை முன்னறிவிப்பதாகப் பின்னர் சிலரால் நம்பப்பட்டது.
இரண்டாவது "ரகசியம்" ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கு சற்று முன்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைகளின் கூற்றுப்படி, மக்கள் கன்னி மேரியிடம் பிரார்த்தனை செய்தால், ரஷ்யா ஒரு நாள் கம்யூனிசத்தின் பிடியில் இருந்து மீட்கப்படும் என்று அந்த இறைவாக்கு கூறியது.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பத்தில், ஃபாத்திமாவின் வளர்ந்து வந்த பிரபலம் குறித்து வாட்டிகன் சங்கடமாக உணர்ந்தது. பிறகு 1930-இல்தான், வாட்டிகன் ஃபாத்திமா தீர்க்கதரிசனங்களை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.
போர்ச்சுகலில் அன்டோனியோ டி ஒலிவேரா சாலசாரின் சர்வாதிகார ஆட்சியின்போது, 20-ஆம் நூற்றாண்டு கத்தோலிக்கத்தில் கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான மதத் தலங்களில் ஒன்றாக ஃபாத்திமா விளங்கியது. இன்றும்கூட, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தத் திருத்தலத்துக்கு வருகை தருகின்றனர்.
பல பக்தர்கள், தரிசனங்கள் நிகழ்ந்ததாக நம்பப்படும் சிற்றாலயத்தை அடைவதற்காக, 'வியா பெனிடென்சியல்' எனப்படும் பளிங்குப் பாதையில் மண்டியிட்டு ஊர்ந்து செல்கின்றனர். கன்னி மேரியின் ஆறு தரிசனங்களில் ஐந்து அங்கே நிகழ்ந்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.
மேலும், காலப்போக்கில் ஃபாத்திமா நகரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
ரஷ்யாவில் கம்யூனிசம் பரவி பின்னர் வீழ்ச்சியடையும் என்ற முன்னறிவிப்புகள் அந்தத் தீர்க்கதரிசனங்களில் இடம்பெற்று இருந்ததால், பனிப்போரின்போது ஃபாத்திமா கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் வலுவாக இணைக்கப்பட்டது.
கடந்த 1992-ஆம் ஆண்டு பிபிசியிடம் பேசிய இறையியலாளர் மைக்கேல் வால்ஷ், "ஃபாத்திமாவுடனான உண்மையான பிரச்னை, 1920களில் உருவான கன்னி மேரி பற்றிய செய்தியும், ஃபாத்திமாவின் கம்யூனிச எதிர்ப்பும்தான். அது திருச்சபையில் கிட்டத்தட்ட ஒரு பிளவுபடுத்தும் சக்தியாக மாறிவிட்டது," என்று கூறினார்.
போலந்தில் பிறந்த போப் இரண்டாம் ஜான் பால், 1981-இல் ஃபாத்திமாவின் தீவிர ஆதரவாளராக மாறிய பிறகு, ஃபாத்திமாவின் கம்யூனிச எதிர்ப்பு பிம்பம் மேலும் வலுப்பெற்றது. 1981 மே 13-ஆம் தேதியன்று ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. அது ஃபாத்திமாவில் நிகழ்ந்த முதல் தீர்க்கதரிசனத்தின் ஆண்டுதினத்தில் நடந்தது.
வாட்டிகன் நகரிலுள்ள புனித பேதுரு சதுக்கத்தில் தனது "போப் வாகனத்தில்" பயணித்துக்கொண்டிருந்தபோது, போப் இரண்டாம் ஜான் பால் மிக அருகில் இருந்து இரண்டு முறை சுடப்பட்டார்.
துப்பாக்கி ஏந்தியிருந்த நபர் கைது செய்யப்பட்ட போதிலும், இந்தக் கொலை முயற்சியில் வேறு சிலருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்று பின்னர் பல கோட்பாடுகள் எழுப்பப்பட்டன.
கடந்த 2005-ஆம் ஆண்டு தனது நினைவுக் குறிப்பில், "வேறு யாரோ ஒருவர் இதற்கு மூளையாகச் செயல்பட்டார்" என்று போப் எழுதியிருந்தார். இந்தச் சதித் திட்டத்தில் சோவியத் ஒன்றியத்துடன் தொடர்புடையவர்கள் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று சிலர் சந்தேகித்தனர்.
அந்தக் காலத்தில், போலந்தின் ஒற்றுமை இயக்கத்தை அவர் ஆதரித்ததால், சோவியத் தலைவர்கள் போப்பை ஓர் அரசியல் அச்சுறுத்தலாகக் கருதியதாகக் கூறப்படுகிறது. 2005-ஆம் ஆண்டில் முன்னாள் கிழக்கு ஜெர்மன் உளவு நிறுவனங்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள், சோவியத் ராணுவ உளவுத் துறையே இந்த கொலை முயற்சிக்கான சதித் திட்டத்தைத் தொடங்கியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டின. இருப்பினும், ரஷ்ய அதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
முத்திரையிடப்பட்ட உறையில் இருந்த ரகசியம்
ஃபாத்திமாவில் கன்னி மேரியின் முதல் தரிசனம் காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட அதே தேதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால், ஃபாத்திமாவின் கன்னி மேரி தனது உயிரைப் பாதுகாத்துக் காப்பாற்றியதாக போப் இரண்டாம் ஜான் பால் நம்பினார்.
இந்த நம்பிக்கை, ஃபாத்திமா தீர்க்கதரிசனங்களைப் பின்பற்றுவோர் பலரை அவர்களுடைய கம்யூனிச எதிர்ப்பு கருத்துகளில் மேலும் வலுப்படுத்தச் செய்தது.
பின்னர் ஃபாத்திமா ஆலயத்துக்கு போப் இரண்டு முறை சென்றார். கொலை முயற்சிக்குப் பிறகு அவரது உடலில் இருந்து அகற்றப்பட்ட தோட்டாக்களில் ஒன்று, அந்த ஆலயத்தில் உள்ள மடோனா சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கிரீடத்துக்குள் வைரங்களுடன் வைக்கப்பட்டது.
மதப்பற்று மற்றும் கம்யூனிச எதிர்ப்பு நம்பிக்கைகள் தவிர, ஃபாத்திமா மிகவும் பிரபலமடையக் காரணமாக இருந்த மற்றொரு விஷயம், "மூன்றாவது ரகசியம்" தொடர்பான மர்மம்.
லூசியா டோஸ் சான்டோஸ் இந்த ரகசியத்தை 1944-இல் எழுதினார். 1960க்கு முன்பு அதை வெளியிடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக, அடுத்தடுத்து வந்த போப்கள் அந்த ரகசியத்தைப் பகிரங்கப்படுத்த மறுத்துவிட்டனர்.
அந்த ரகசியம் வாட்டிகனில் ஒரு முத்திரையிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், அது ஒவ்வொரு போப்புக்கும் ஒரு சிறிய நெருங்கிய ஆலோசகர்கள் குழுவுக்கும் மட்டுமே தெரிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ரகசியத்தன்மையின் காரணமாக, பல சதிக் கோட்பாடுகளும் உலக அழிவு பற்றிப் பேசும் குழுக்களும் ஃபாத்திமாவின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கின.
சில தீவிர விசுவாசிகள், அந்த ரகசியத்தை வெளிப்படுத்தும்படி வாட்டிகனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக உண்ணாவிரதப் போராட்டங்களில்கூட ஈடுபட்டனர். ஒருவர் இதை வலியுறுத்தி விமானம் ஒன்றைக் கடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இறுதியாக, 2000-ஆம் ஆண்டில், வாட்டிகன் "மூன்றாவது ரகசியத்தை" அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இந்த அறிவிப்பைக் கேட்பதற்காக சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் ஃபாத்திமா ஆலயத்தில் கூடினர். ஆனால், அதில் கூறப்பட்டிருந்த இறைவாக்கைக் கேட்ட பிறகு பலர் ஏமாற்றமடைந்தனர்.
அந்த நேரத்தில், தி நியூயார்க் டைம்ஸ், இந்த அறிவிப்பு "எல்விஸ் உண்மையிலேயே இறந்துவிடார் என்று எஃப்.பி.ஐ அறிவிப்பதைப் போன்றது" என்று குறிப்பிட்டது. அதாவது, இந்த இறைவாக்கு எதிர்பார்த்ததைவிடக் குறைவான அதிர்ச்சியையே ஏற்படுத்துவதாகப் பலர் உணர்ந்தனர்.
அங்கிருந்த சில சாட்சிகளும் விமர்சகர்களும் இதைக் கேலி செய்து, "இது குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு விளக்கம்" என்று வர்ணித்தனர். மேலும், பொது மக்களின் எதிர்வினைக்காக வாட்டிகன் இந்த இறைவாக்கை கவனமாக வடிவமைத்து இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பல ஆண்டுகளாக, சதிக் கோட்பாட்டாளர்கள், "மூன்றாவது ரகசியம்" என்பது மூன்றாம் உலகப் போர் அல்லது மனித குலத்தை அழிக்கக்கூடிய மற்றொரு பேரழிவு குறித்து எச்சரிப்பதாகக் கணித்து வந்தனர்.
இருப்பினும், அந்த இறைவாக்கு உண்மையில் 1981-இல் போப் இரண்டாம் ஜான் பால் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியுடன் தொடர்புடையது என்று வாட்டிகன் விளக்கியது.
வாட்டிகனின் கூற்றுப்படி, அந்த இறைவாக்கில் "வெள்ளை ஆடை அணிந்த" ஒருவர் "இறந்தது போலத் தரையில் வீழ்வதாக" விவரிக்கப்பட்டு இருந்தது. இதைப் பலரும், போப் சுடப்படுவதைக் குறிக்கும் ஒரு குறிப்பாகவே விளக்கினர்.
அந்த ரகசியம் வெளியிடப்பட்ட பின்னரும்கூட, ஃபாத்திமா தரிசனங்களுக்கும் பனிப்போர் காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கும் இடையிலான சாத்தியமான தொடர்புகள் குறித்து மக்கள் தொடர்ந்து விவாதித்து வந்தனர்.
கடந்த 1984-ஆம் ஆண்டில், போப் இரண்டாம் ஜான் பால் கிழக்கு ஐரோப்பாவை "அன்னையின் மாசற்ற இதயத்துக்கு" அர்ப்பணித்த பிறகுதான், மிகைல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவரானார் என்றும், 'பெரஸ்ட்ரோய்கா' எனப்படும் சீர்திருத்தங்கள் தொடங்கியதாகவும் கூறும் சில நம்பிக்கையாளர்கள் இவை வெறும் தற்செயல் நிகழ்வல்ல என வாதிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், அந்தத் தீர்க்கதரிசனங்களுக்கு அளிக்கப்பட்ட நாடகத்தன்மை வாய்ந்த விளக்கங்களையும், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் அவற்றை அணுகிய விதத்தையும் பல விமர்சகர்கள் கேள்விக்கு உள்ளாக்கினர்.
2005-ஆம் ஆண்டில் போப் பதினாறாம் பெனடிக்ட் ஆன ஜோசப் ராட்சிங்கர், அந்த "மூன்றாவது ரகசியத்தை" வெளியிடும்போது, "இதில் எந்தப் பெரிய ரகசியமும் வெளிப்படுத்தப்படவில்லை, எதிர்காலம் வெளிப்படுத்தப்படவில்லை" என்று கூறினார்.
இந்தக் கூற்றின் மூலம், பேரழிவுகள் அல்லது உலகின் முடிவு குறித்த கணிப்புகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களுடைய அச்சத்தைப் போக்க அவர் முயன்றார்.
'தி கல்ட் ஆஃப் தி விர்ஜின் மேரி: சைக்காலஜிக்கல் ஆரிஜின்ஸ்' (The Cult of the Virgin Mary: Psychological Origins) என்ற நூலின் ஆசிரியரான மைக்கேல் கரோல், "ஆரம்பக்கால செய்திகள் கன்னி மேரி மக்களிடம் 'உலகின் மாற்றத்துக்காக' பிரார்த்திக்குமாறு மட்டுமே" கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டு இருந்ததாகத் தெரிவித்தார்.
மேலும் விளக்கிய அவர், "பிற்காலத்தில், அதாவது 1920-களின் இறுதியில்தான், அப்போது ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் இருந்த, லூசியா என்பவர் அந்தக் கதையைத் திருத்தி அமைத்து, கன்னி மேரி மக்களிடம் 'ரஷ்யாவின் மதமாற்றத்துக்காக' பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்," என்றார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், கம்யூனிசத்துக்கு எதிரான தனது போராட்டத்தில் கத்தோலிக்க திருச்சபை ஃபாத்திமா தரிசனங்களை மிகத் தீவிரமாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் கரோல் வாதிட்டார்.
"குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உடனடி காலகட்டத்தில், கம்யூனிசத்துக்கு எதிரான தனது போராட்டத்தில் திருச்சபை ஃபாத்திமா தரிசனங்களைப் பயன்படுத்திக்கொண்டது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வேறு பல அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களும் பங்களித்து இருந்ததாகக் கூறிய அவர், இருப்பினும் ஃபாத்திமா தரிசனங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார்.
கடந்த 2005ஆம் ஆண்டில், தனது 97வது வயதில் லூசியா காலமானபோது, போர்ச்சுகல் நாடு அவர் இறந்த நாளை தேசிய துக்க நாளாக அறிவித்தது. அந்நாட்டில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கான அரசியல் பிரசாரங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இன்றும்கூட, அந்தத் திருத்தலம் பெருந்திரளான மக்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. 2025 மே 13 அன்று, பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் குழந்தைகள் கன்னி மேரியின் முதல் தரிசனத்தைக் கண்டதாகக் கூறிய நாளின் ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில், சுமார் 2,70,000 பக்தர்கள் ஃபாத்திமாவில் ஒன்று கூடினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































