You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாக்யராஜ் இசையமைத்த படங்கள் பற்றி தெரியுமா? இளையராஜாவுடன் முரண்பட்டதால் இசையமைப்பாளரான கதை
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ், சனிக்கிழமையன்று (ஜூன் 27) சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகங்கள் கே.பாக்யராஜுக்கு இருந்தாலும் இசையமைப்பாளராகவும் தனி முத்திரையைப் பதித்தார்.
இளையராஜாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தான் இசையமைப்பாளரானதாக நேர்காணல் ஒன்றில் கே.பாக்யராஜ் குறிப்பிட்டிருந்தார். அது என்ன மோதல்? அவர் இசையமைத்த பாடல்கள் எவை?
இயக்குநர் பாரதிராஜாவுடன் '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்' உள்பட பல படங்களில் உதவி இயக்குநராக கே.பாக்யராஜ் பணிபுரிந்தார். 1979 ஆம் ஆண்டு வெளியான 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அவர் அறிமுகம் ஆனார்.
அதே ஆண்டு வெளியான பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புகள்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். 1981 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக இருந்தன.
'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'அந்த 7 நாட்கள்', 'விடியும் வரை காத்திரு' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாயின. 1983 ஆம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கத்தில் 'முந்தானை முடிச்சு' படம் வெளியானது.
1984 ஆம் ஆண்டு வெளியான 'தாவணிக் கனவுகள்' படம் மற்றும் 1985 ஆம் ஆண்டு வெளியான 'சின்ன வீடு' ஆகிய படங்கள் வரை கே.பாக்யராஜின் படங்கள் பலவற்றுக்கும் இளையராஜா இசையமைத்திருந்தார்.
இளையராஜாவுடன் என்ன மோதல்?
இதன்பிறகே இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கே.பாக்யராஜுக்கு மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி 2022 ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கே.பாக்யராஜ் விரிவாக கூறியிருந்தார்.
"என்னுடைய 'சின்ன வீடு' படம் வரையில் எனக்கு இளையராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு படத்தின்போதும் அடுத்த திரைக்கதை எப்போது தயாராகும் என்பதை முன்பே கூறுமாறு இளைராஜா சொல்வார்" எனக் கூறியுள்ளார்.
"அந்தவகையில் அடுத்த திரைக்கதை தயாரானதும் ஸ்டூடியோவுக்குச் சென்று இளையராஜாவின் உதவியாளரிடம் இதைப் பற்றி கூறினேன். அவரோ, வீட்டில் இளையராஜாவைப் பார்க்குமாறு கூறினார்" என்றார் பாக்யராஜ்.
இதனால் குழப்பமடைந்து, "இது என்ன புதுசா இருக்கு?" என தான் கேட்டதாகக் கூறியுள்ள கே.பாக்யராஜ், "ஸ்டூடியோவில் தான் எப்போது இருப்பார். வீட்டில் பார்ப்பது புதிதாக இருக்கிறது. வீட்டில் விசேஷம் இருந்தால் சென்று பார்க்கலாம். நான் வந்துவிட்டுப் போனதாகக் கூறுங்கள் எனத் தெரிவித்துவிட்டு வந்தேன்" எனக் கூறியுள்ளார்.
'சொந்த ஊர்... ஆர்கெஸ்ட்ரா குழு'
ஆனால், இதன்பிறகு இளையராஜாவிடம் இருந்து தனக்கு போன் எதுவும் வரவில்லை கூறியுள்ள கே.பாக்யராஜ், தான் பிறந்த ஈரோடு மாவட்டம் (அன்றைய கோவை) வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள ஆர்கெஸ்ட்ரா குழு குறித்துப் பேசியுள்ளார்.
"ஊரில் கேரம் போர்டு ஆடும்போது எதிரில் ஆர்கெஸ்ட்ரா குழு ஒன்று இருக்கும். இவர்கள் கல்யாண கச்சேரிகளில் வாசிக்கும்போது பெரிதாக தெரியவில்லை. கேரம் ஆடிட்டு சுத்திட்டு இருந்த காலத்தில் இசையைக் கற்றுக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என பின்னாளில் தோன்றியது" எனக் கூறியுள்ளார்.
அப்போது இசையில் நிபுணத்துவம் வாய்ந்தவரும் தனக்கு நன்கு அறிந்த ஆங்கில பேராசிரியருமான சுதாகர் ஓய்வுகாலத்தில் சென்னையில் இருந்ததாகக் கூறியுள்ள கே.பாக்யராஜ், "அவரிடம் சென்று ஆர்மோனியம் கற்றுக் கொள்ள விரும்பினேன்" எனத் தெரிவித்துள்ளார்.
'நல்லாயிருக்கு. இது ஹிட் ஆகும்'
சென்னை பாண்டிபஜாரில் ஆர்மோனிய பெட்டி ஒன்றை வாங்கி வந்து விரல்களை வைத்து அவர் கற்றுக் கொடுத்ததாகக் கூறியுள்ள கே.பாக்யராஜ், " எனக்கு சுதி வந்ததும் ட்யூன் மனதில் வந்தது. பாடுங்கள் என அவர் கூறினார். நான் பாடினேன்" என்கிறார்.
"இரண்டு முறை பல்லவியை ஹம் செய்துவிட்டு மறுபடியும் சரணம் பிடித்தேன். எல்லாம் சரியாக வருகிறது என அவர் கூறினார். உங்களுக்கு இசை எளிதாக வருகிறது. நீங்கள் 'ஹம்' பண்ணும்போது வாசிப்பதாக அவர் கூறினார்" எனப் பேசியுள்ளார்.
'நேரடியாக இசையை வாசிக்கலாம்' என சுதாகர் கூறியபோதும் சந்தேகத்துடன் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வந்து ஆலோசித்ததாகக் கூறியுள்ள கே.பாக்யராஜ், "அவரிடம் ஒரு பாட்டு பாடிக் காட்டினேன். 'நல்லாயிருக்கு. இது ஹிட் ஆகும்' என்றார். அப்போது சங்கர் கணேஷிடம் ஒரு டியூன் கொடுத்தேன். அதில் நம்பிக்கை வந்ததால் 'இது நம்ம ஆளு' படத்தில் இசையமைத்தேன்" என்கிறார்.
"இயக்கத்தில் இருந்து இசையமைப்பாளராக மாறியபோது மற்றவர்கள் எவ்வாறு பார்த்தனர்?" என்ற கேள்விக்கு கே.பாக்யராஜ் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, "நான் இசையமைப்பதாகக் கூறியதும் எல்லோருக்கும் ஆர்வம் தான் வந்தது. சந்தேக பார்வையில் பார்த்தவர்களும் உள்ளனர். இதைவிட பெரிய காமெடி என்னவென்றால் நான் இசையமைக்கும்போது அமிதாப் பச்சன் வந்து பார்த்து வாழ்த்தினார்" எனக் கூறினார்.
'வாலியிடம் விசாரித்த இளையராஜா'
"இசையமைக்கும்போது பின்னணி பாடகர்கள் ஜானகி, சித்ரா என யார் வந்தாலும் நான் பாடிக் காட்டுவேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஆனது குறித்து இளையராஜா விசாரித்தது குறித்தும் கே.பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார். "வாலி அவ்வப்போது வருவார். ஒருமுறை இளையராஜாவிடம், 'பாக்யராஜ் மியூசிக் போட்டுக் கொண்டிருப்பதால் போய்ட்டு வருகிறேன்' என வாலி கூறியுள்ளார். அதைப் பற்றி இளையராஜா விசாரித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
தான் இசையமைக்கும் விதம் குறித்து இளையராஜாவிடம் வாலி விளக்கியதாகவும் அந்தப் பேட்டியில் கே.பாக்யராஜ் கூறியுள்ளார். இசையைக் கற்றுக் கொண்ட பிறகு வெகு சில படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்துள்ளார்.
கே.பாக்யராஜ் இசையமைத்த முதல் படமே வேறு ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான 'இது நம்ம ஆளு' படம் தான்.
'நான் ஆளான தாமரை...'
1988 ஆம் ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' படத்தை பாலகுமாரன் இயக்கியிருந்தார். அவர் இயக்கிய முதல் படம் இது. கே.பாக்யராஜ், ஷோபனா, மனோரமா, குமரிமுத்து ஆகியோர் நடித்த இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டது.
படத்துக்கு கே.பாக்யராஜ் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'நான் ஆளான தாமரை... ரொம்ப நாளாக தூங்கலை' என்ற பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். எஸ்.ஜானகி குரலில் வெளியான இந்தப் பாடல் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.
படத்தில் இடம்பெற்ற, 'காமதேவன் ஆலயம்... அதில் காதல் தீபம் ஆயிரம்' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.
அடுத்து, 'அம்மாடி இது தான் காதலா... அட ராமா இது என்ன வேதமோ....நெஞ்சுக்குக்குள்ள ஏதோ ராகம் கேட்குது. கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது..' என்ற பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியிருந்தார். பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியியிருந்தனர்.
படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற 'பச்சை மலை சாமி ஒன்னு உச்சி மலை ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம்... கொஞ்சம் எதமா போடு தாளம்...' என்ற பாடலை கே.பாக்யராஜ் பாடியிருந்தார். பாடலின் வரிகளை புலவர் புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.
படத்தில் இடம்பெற்ற 'சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்... அரை குறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர் மேடை ஏறலாமோ?' என்ற பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் பாடலைப் பாடியிருந்தனர்.
'என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்'
1989 ஆம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கத்தில் 'ஆராரோ ஆரிராரோ' படம் வெளியானது. கே.பாக்யராஜ், பானுப்பிரியா உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
கே.பாக்யராஜ் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் பலவும் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றன.
'என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்... உன் நெஞ்சுக்கொரு உறவா என்னைப் படைச்சான்' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.
படத்தில் இடம்பெறற 'ஓடைப்பக்கம் ஒரு குருவி வா... வாங்குது' என்ற பாடலையும் இருவரும் இணைந்து பாடியிருந்தனர்.
'ஆவாரம்பூ ஒன்னு துணை தேடுது'
என்.முருகேஷ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு 'பொண்ணு பாக்க போறேன்' என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் பிரபு, சீதா உள்பட பலர் நடித்திருந்தனர்.
கே.பாக்யராஜ் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா, மலேசியா வாசுதேவன், மனோ உள்பட பலர் பாடியிருந்தனர்.
படத்தில் இடம்பெற்ற, 'ஏரப்பூட்டி நிலத்தை உழுகிறோம்... ஆடிப்பட்டம் தேடி விதைக்கிறோம்..', 'ஆவாரம்பூ ஒன்னு துணை தேடுது... அதன் காதோரம் பூங்காத்து கவி பாடுது', 'ஒரு நிலா உலா வருது... அதன் நிழல் என்னைத் தொடுது' ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
'தேதி ஒன்னு பாத்திருக்கேன்'
1991 ஆம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கத்தில் 'பவுனு பவுனுதான்' படம் வெளியானது. கே.பாக்யராஜ், ரோஹினி, குலதெய்வம் ராஜகோபால் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
கே.பாக்யராஜ் இசையில் வெளியான இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றை புலவர் புலமைப்பித்தன், கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.
'மாமா ஒரு மாலை சூட்டு... மார்பில் எனை ஊஞ்சல் ஆட்டு' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் சித்ராவும் இணைந்து பாடியிருந்தனர்.
அடுத்து, 'மாமா உனக்கு அச்சு வெல்லம் வச்சிருக்கிறேன்...' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். 'உச்சாணிக் கொம்பேறி... உட்கார்ந்திருக்கு ஒரு பெட்டைக் குருவி...' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
படத்தில் இடம்பெற்ற 'தேதி ஒன்னு பாத்திருக்கேன்... சேதி சொல்லக் காத்திருக்கேன்' என்ற பாடலை சித்ரா பாடியிருந்தார்.
'யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்'
ஆர்.பி.விஸ்வம் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு 'ஞானப்பழம்' படம் வெளியானது. கே.பாக்யராஜ், சுகன்யா, கவுண்டணி, செந்தில் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
கே.பாக்யராஜ் இசையில் வெளியான இந்தப் படத்தில் பாடல்கள் பலவும் வரவேற்பைப் பெற்றன. படத்தில் இடம்பெற்ற 'மணிமாடக் குயிலே நீ... கொஞ்சம் நில்லு... வனவாசக் குயிலுக்கு சந்தம் சொல்லு' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
சுஜாதா, உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடிய 'யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்' என்ற பாடல் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் பா.விஜய் எழுதியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு