மெஸ்ஸி, ரொனால்டோ முதல் 18 வயது யமால் வரை - கால்பந்து உலகக் கோப்பையில் கவனம் ஈர்க்கும் 10 வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் இந்திய நேரப்படி ஜூன் 12 அதிகாலை தொடங்குகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ என 3 நாடுகளில் நடக்கும் இந்தத் தொடரில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த 48 அணிகள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஃபிஃபா உலகக் கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்பது இதுவே முதல் முறை.
சுமார் 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவர்களாகக் கருதப்படும் 10 வீரர்கள் பற்றிய தொகுப்பு இது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
தன்னுடைய 6வது உலகக் கோப்பை தொடரில் களமிறங்கவிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கத்தாரில் நடந்த 2022 உலகக் கோப்பையே அவருக்குக் கடைசியாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தொடர்ந்து தன் போராட்ட குணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் போர்ச்சுகல் அணியின் கேப்டன்.
கிட்டத்தட்ட கால்பந்து அரங்கின் அனைத்து பெரிய கோப்பைகளையும், விருதுகளையும் வென்றுவிட்ட ரொனால்டோவின் கைகளுக்கு எட்டாமல் இருக்கும் ஒரேயொரு கோப்பை இது மட்டும்தான். அதனால் அவர் முழு வேட்கையுடன் இந்தத் தொடரில் செயல்படுவார் என்று கருதப்படுகிறது.
இதுவரை பங்கேற்ற 5 உலகக் கோப்பை தொடர்களிலுமே ரொனால்டோ கோலடித்திருக்கிறார். இந்தத் தொடரிலும் கோலடித்தால், 6 வெவ்வேறு ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோவால் படைக்க முடியும்.
அதேசமயம் ரொனால்டோவின் செயல்பாட்டின் மீது விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. அவர் முன்பைப் போல எல்லா வாய்ப்புகளையும் கோலாக்குவதில்லை. அதுமட்டுமல்லாமல், அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பதால் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியின் ஆட்டமுறையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுவதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்து ரொனால்டோ உலகக் கோப்பையை வெல்வாரா என்று பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
லயோனல் மெஸ்ஸி
கத்தாரில் சாம்பியனாகி தன் ஃபிஃபா உலகக் கோப்பை கனவை நனவாக்கிக்கொண்டார் லயோனல் மெஸ்ஸி. அதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இருப்பது போன்ற உளவியல் நெருக்கடி மெஸ்ஸிக்கு இல்லாமல் இருக்கலாம். அவர் தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது கோப்பையை வெல்வாரா என்று கால்பந்து உலகம் எதிர்பார்த்திருக்கிறது.
மெஸ்ஸி கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்புக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார். அதனால், அமெரிக்க ரசிகர்களின் ஆதரவு அவருக்கும், அர்ஜென்டினா அணிக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 உலகக் கோப்பையில் ஆடிய பெரும்பாலான அர்ஜென்டினா வீரர்கள், இந்த உலகக் கோப்பையிலும் விளையாடுவதால், அது அர்ஜென்டினா அணிக்கு சாதகமான விஷயம். அது அவர்கள் தொடர்ச்சியாக 2வது உலகக் கோப்பை வெல்ல உதவும் என்று கருதப்படுகிறது.
ஃபிஃபா உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடியவர் (26) என்ற சாதனை படைத்திருக்கும் மெஸ்ஸி, அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை முறியடிப்பதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸா 16 கோல்கள் அடித்திருக்க, மெஸ்ஸி இதுவரை 13 கோல்கள் அடித்திருக்கிறார். இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்தால் மெஸ்ஸி முதலிடத்துக்கு முன்னேறக்கூடும்.
கிலியன் எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images
ஃபிஃபா உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனை படைக்க மெஸ்ஸிக்கு கடும் போட்டியாக இருப்பார் பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே. இரண்டே உலகக் கோப்பை தொடர்களில் 12 கோல்கள் அடித்திருக்கிறார் எம்பாப்பே.
அவர் பங்கேற்ற இரண்டு உலகக் கோப்பைகளிலுமே அவருடைய செயல்பாடு பெருமளவு கொண்டாடப்பட்டது. 2018 உலகக் கோப்பையில் சிறந்த இளம் வீரருக்கான விருது வாங்கிய அவர், பிரான்ஸ் அணி கோப்பை வெல்லவும் முக்கிய பங்களித்தார். 2022ல் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் வாங்கியவர். தற்போது மூன்றாவது உலகக் கோப்பையிலும் சாதனைகள் படைக்கக் காத்திருக்கிறார்.
கடந்த 2 தொடர்களிலும் 'இளம் வீரர்' என்றே பார்க்கப்பட்ட அவர், இம்முறை கேப்டனாகக் களமிறங்குகிறார். அந்தப் பெரும் பொறுப்போடு களமிறங்குவது அவருக்கு சாதகமாகவும் அமையலாம், அல்லது நெருக்கடியாகவும் அமையலாம். அதை எம்பாப்பே எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறது.
ஹேரி கேன்

பட மூலாதாரம், PA Media
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹேரி கேன் தான் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் ஸ்டிரைக்கர். 2025-26 கிளப் கால்பந்து சீசனில் 51 போட்டிகளில் 61 கோல்கள் அடித்திருக்கிறார் அவர். அவரது அந்த சிறப்பான செயல்பாடு உலகக் கோப்பையிலும் தொடரும் என்று கருதப்படுகிறது.
கடந்த 2 உலகக் கோப்பைகளிலுமே இங்கிலாந்து அணிக்கு மிக முக்கிய வீரராக விளங்கினார் கேன். 2018 உலகக் கோப்பையின் கோல்டன் பூட் விருதை வென்ற அவர், அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார்.
அதேசமயம் கத்தாரில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் இவர் ஒரு பெனால்டியைத் தவறவிட்டார். அந்தத் தவறுதல், போட்டியின் முக்கிய தருணங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
வினிஷியஸ் ஜூனியர்

பட மூலாதாரம், Getty Images
கால்பந்து உலகக் கோப்பை என்று வந்துவிட்டாலே பிரேசில் அணியின் ஆட்டத்தைக் காண ரசிகர் கூட்டம் காத்திருக்கும். அழகியல் கலந்த அந்த அணியின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அப்படிப்பட்ட அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் வினிஷியஸ் ஜூனியர் தான்.
இடது விங்கில் விளையாடும் வினிஷியஸ் ஒரு பிரேசில் வீரரிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மாயாஜாலங்களை செய்யக்கூடியவர். அதிவேகமாக பந்தை டிரிபிள் செய்துபோகக்கூடிய அவர், வீரர்களை நன்கு ஏமாற்றி பந்தைக் கடத்துவதிலும் தேர்ந்தவர். சிறந்த கோல் ஸ்கோரரும் கூட.
கடந்த 5 உலகக் கோப்பைகளாக பிரேசில் இறுதிப் போட்டிக்குக் கூட முன்னேறாமல் இருக்கும் நிலையில், இம்முறை அவர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதை வினிஷியஸ் பூர்த்தி செய்வார் என்று அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். மேலும், நெய்மார் காயத்தால் அவதிப்படுவதால் அதிகம் பேரின் கண்கள் வினிஷியஸ் மீதே இருக்கிறது.
லமீன் யமால்

பட மூலாதாரம், Getty Images
18 வயது தான் ஆகிறது. ஆனால், உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களுள் ஒருவராக வலம் வருகிறார் ஸ்பெய்னின் லமீன் யமால். வலது விங்கில் ஆடக்கூடிய இந்த இளம் வீரரை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் 'அடுத்த மெஸ்ஸி' என்று கொண்டாடுகின்றனர். வலது விங்கில் ஜொலிக்கும் இவர், ஏற்கெனவே பல முக்கியமான செயல்பாடுகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.
யூரோ 2024 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெய்ன் அணிக்கு மிகமுக்கிய வீரராக விளங்கினார் யமால். அந்தத் தொடரின் சிறந்த இளம் வீரர் விருதையும் வாங்கினார். 2025 பாலன் டி'ஓர் விருதுப் பட்டியலில் 2வது இடம் பிடித்த அவர், 2025-26 லா லிகா சீசனின் சிறந்த வீரர் விருதைப் பெற்றார்.
இப்படி தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் அசத்திக்கொண்டிருக்கும் லமால், இந்த உலகக் கோப்பையிலும் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்து ஸ்பெய்ன் அணி 2வது உலகக் கோப்பையை வெல்ல உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எர்லிங் ஹாலண்ட்

பட மூலாதாரம், Getty Images
கால்பந்து ரசிகர்களால் செல்லமாக 'ரோபோட்' என்று அழைக்கப்படும் எர்லிங் ஹாலண்ட், கோல்கள் அடிப்பதில் வல்லவர். ஒரு ஸ்டிரைக்கருக்குத் தேவையான துல்லியம் மட்டுமல்லாது, வேகம், பலம் என அனைத்தும் கொண்டிருப்பதால் இவரைத் தடுப்பது எந்த டிஃபண்டருக்குமே கடினமான காரியம் தான்.
கடந்த சில ஆண்டுகளாகவே கிளப் கால்பந்து அரங்கில் பெரும் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஹாலண்ட், சர்வதேச அரங்கில் நார்வே அணிக்காக சோபிக்கும் வாய்ப்பை இதுவரை பெறவில்லை. 2000-குப் பிறகு யூரோ, உலகக் கோப்பை போன்ற தொடர்களுக்கு தகுதி பெறாமல் இருந்த நார்வே, இந்த உலகக் கோப்பையில் களம் காண்கிறது. அதனால், தன் முதல் தொடரிலேயே தன் அணிக்காக பெரிய பங்களிப்பைக் கொடுக்கவேண்டும் என்ற வேட்கையோடு காத்திருக்கிறார் ஹாலண்ட்.
உலகக் கோப்பைக்கு முன்பாக 'வைகிங்' கெட் அப்பில் நார்வே அணி நடத்திய ஃபோட்டோ ஷூட் ஏற்கெனவே ஹிட் ஆகியிருக்கும் நிலையில், ஹாலண்ட் மற்றும் அவருடைய குழு களத்திலும் ஜொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒஸ்மான் டெம்பெளே

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டின் பாலன் டி'ஓர் விருது வென்ற டெம்பெளே, தன்னுடைய சிறப்பான ஃபார்மை இந்த ஆண்டும் தொடர்ந்திருக்கிறார். சீசனின் ஒருபகுதியில் காயமடைந்திருந்தாலும், கடைசி கட்டத்தில் மீண்டும் வந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்ல உதவினார் அவர்.
இந்தக் காலகட்டத்தின் சிறந்த வீரர்களுள் ஒருவராக உருவெடுத்துவரும் அவர், இந்த உலகக் கோப்பையிலும் சோபிக்கும் பட்சத்தில் அவரால் நிச்சயம் இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த வீரர்கள் பற்றிய விவாதத்தில் தன் பெயரை அழுத்தமாகப் பதிக்க முடியும்.
இவர் விங்கில் மட்டுமல்லாது ஸ்டிரைக்கர் ரோலிலும் விளையாடுவார் என்பதால், எம்பாப்பே உடன் தன் பொசிஷனை மாற்றி விளையாடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் அதிக கோல்கள் அடிப்பவர்கள் பட்டியலிலும் இவரைப் பார்க்க முடியும்.
புரூனோ ஃபெர்னாண்டஸ்

பட மூலாதாரம், Getty Images
இந்த சீசனின் மிகச் சிறந்த நடுகள வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் புரூனோ ஃபெர்னாண்டஸ். 2025-26 பிரீமியர் லீக் சீசனில் 21 அசிஸ்ட்கள் செய்து, ஒரு சீசனில் அதிக அசிஸ்ட்கள் என்ற சாதனையை முறியடித்தார் அவர். இந்த சீசனின் சிறந்த பிரீமியர் லீக் வீரர் என்ற விருதையும் வென்று வந்திருக்கிறார் அவர்.
சமீப காலமாக உலக கால்பந்தில் அதிகம் பார்க்க முடியாமல் இருக்கும் 'நம்பர் 10' ரோலில் தன் மிகச் சிறந்த செயல்பாட்டைக் காட்டினார் புரூனோ. கோல்கள் அடிப்பது, கோல் வாய்ப்புகள் உருவாக்குவது என்று ஒவ்வொரு போட்டியிலும் தன் ஆட்டத்தின் மூலம் தாக்கம் ஏற்படுத்தினார்.
அந்த ஃபார்மை இந்த உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணிக்கும் அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயல்பாட்டின் மீது கேள்வி எழுப்பும் சிலரும், ரொனால்டோ தடுமாறும்பட்சத்தில் புரூனோவின் ஆட்டம் அதை ஈடுகட்டும் என்று நம்புகிறார்கள்.
யூலியன் ஆல்வரஸ்

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக உலகக் கோப்பை தொடர் நடக்கும்போது அதில் சிறப்பாக செயல்படும் ஒருசில வீரர்களை பெரிய கிளப்கள் பெரும் தொகை கொடுத்து வாங்குவது நடக்கும். அதனாலேயே சில இளம் வீரர்கள் மீது கூடுதல் கவனம் குவியும். அந்த வகையில் இம்முறை ஆல்வரஸ் அதிகம் பேரால் கவனிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த இந்த இளம் ஃபார்வேர்ட் வீரர், கிளப் சீசனில் மிகச் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தினார். அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அவர், மெஸ்ஸியுடன் இணைந்து அர்ஜென்டினாவின் முன்களத்தில் விளையாடவிருக்கிறார்.
ஆல்வரஸை வாங்க சில வாரங்களுக்கு முன் பார்சிலோனா முயற்சி செய்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் 150 மில்லியன் யூரோ கொடுத்து அவரை வாங்க முயற்சி செய்தது ரியல் மாட்ரிட். ஸ்பெய்னின் இரு பெரும் அணிகள் போட்டி போடுவது ஆல்வரஸின் மீது பெரும் எதிர்பார்ப்பையும், அதேசமயம் நெருக்கடியையும் ஏற்படுத்தும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































