12 வயது சிறுமி போல் நடித்து 14 மாதங்கள் ஏமாற்றிய 37 வயது பெண் - மோசடியின் பின்னணி

ஒலிவேரா, 12 வயது சிறுமி போல நடித்து 14 மாதங்கள் ஏமாற்றிய 37 வயது பெண், பிரேசில்

பட மூலாதாரம், Santa Catarina Civil Police

படக்குறிப்பு, "நான் 12 வயது சிறுமி; துன்புறுத்தலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன்; எனக்கு யாரும் இல்லை"
    • எழுதியவர், வீதோர் தவாரேஸ் மற்றும் இஆரா தினீஸ்
    • பதவி, பிபிசி நியூஸ், பிரேசில்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"நான் 12 வயது சிறுமி; துன்புறுத்தலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன்; எனக்கு யாரும் இல்லை" என்று உதவி கேட்டு வந்த அந்தச் சிறுமிக்காக, பிரேசில் மக்கள் தங்கள் வீட்டின் கதவுகளைத் திறந்து உதவினர்.

ஆனால், 'கேப்ரியல்' என்ற பெயரில் வலம் வந்த அந்தச் சிறுமியின் உண்மை முகத்தை பிரேசில் அதிகாரிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அவர் உண்மையில் 37 வயதுடைய பெண் என்றும், உதவி தேவைப்படும் ஆட்டிசம் பாதிப்புள்ள சிறுமி போல நடித்து மக்களை ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணை ஜூன் 3-ஆம் தேதி கைது செய்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் அமாண்டா மரியா சூசா டி ஒலிவேரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது மோசடி மற்றும் போலி அடையாளத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒலிவேரா போலி அடையாளத்துடன் ஒரு குடும்பத்துடன் 14 மாதங்கள் தங்கியிருந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோ, மினாஸ் ஜெரைஸ், ரியோ கிராண்டே டோ சுல் மற்றும் கோயாஸ் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற மோசடியில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகப் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்துப் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுமி வேடத்தை நம்பகமானதாக மாற்ற, சந்தேக நபர் வழக்கமாகப் பாட்டில் பால் குடிப்பது, பொம்மைகளைப் பயன்படுத்துவது மற்றும் குழந்தைகளைப் போலச் செயல்படுவது என அனைவரையும் நம்ப வைத்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"தனது முதிர்ச்சியான முகத்தை மறைக்க, சிறுவயதில் கட்டாயப்படுத்தி ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டதால் தான் உடல் வளர்ச்சி இப்படி மாறியதாகக் கூறி மக்களை நம்ப வைத்துள்ளார்" என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த மோசடி குறித்து விசாரணை அதிகாரி ரோட்ரிகோ குசோ பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறுகையில், "அவரைத் தனது வீட்டில் தங்க வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த உறவினர் இணையத்தில் தேடியபோது, இதேபோன்ற மற்றொரு மோசடி குறித்த செய்தி வெளியாகி இருந்ததைக் கண்டு, உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்" என்று தெரிவித்தார்.

மனநல மதிப்பீடு

ஒலிவேரா, 12 வயது சிறுமி போல நடித்து 14 மாதங்கள் ஏமாற்றிய 37 வயது பெண், பிரேசில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒலிவேராவின் மனநிலையை மதிப்பீடு செய்ய மனநலப் பரிசோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது (கோப்புப் படம்).
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மற்ற மாநில காவல்துறையினருடன் தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, இரண்டு மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்பதை ரோட்ரிகோ குசோ உறுதிப்படுத்தினார்.

கைது செய்யப்பட்டபோது, மோசடியில் ஈடுபட்டதைச் சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாகவும், அடிக்கடி பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பிபிசி நியூஸ் பிரேசிலிடம் அவர் கூறுகையில், "அவரது செயல்பாடுகளில் மனநலப் பாதிப்பால் குற்றம் இழைத்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவர் மிகவும் தெளிவாகவும், ஒத்துழைப்புடனும், தர்க்க ரீதியாக சிந்திப்பவராகவுமே இருந்தார்," என்று குறிப்பிட்டார்.

ஒலிவேராவின் வழக்கறிஞர் ரபேல் லூயிஸ் சிவர்ட், அவரது மனநிலையை மதிப்பீடு செய்ய மனநலப் பரிசோதனை நடத்தக் கோரியிருந்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும், அதன்பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ரியோ டி ஜெனிரோவில் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றும் ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தும் இரண்டு பெண்கள் பிபிசி-யிடம் கூறுகையில், இதே பெண் 2023-ஆம் ஆண்டு வேறொரு பெயரைப் பயன்படுத்தி தங்களையும் ஏமாற்றியதாகத் தெரிவித்தனர்.

'மாவோஸ் க்யூ அபென்ஓம் காம் அமோர்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தும் விவியன் ஹென்ரிக்ஸ், ஒலிவேராவைத் தனது நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கம் மூலமே முதன்முதலில் சந்தித்ததாகக் கூறுகிறார். அப்போது ஒலிவேரா தனது பெயரை 'டூடா' என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான சியாராவிலிருந்து துன்புறுத்தலில் இருந்து தப்பித்து வந்ததாக ஒலிவேரா தன்னிடம் கூறியதாக ஹென்ரிக்ஸ் தெரிவித்தார்.

தன் தந்தை தன்னை கட்டாய விபசாரத்தில் தள்ளியதாகவும், அதன் காரணமாக ஹார்மோன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால் தான், தனது உண்மையான வயதை விட அதிக வயதுடையவராகத் தோன்றுவதாகவும் ஒலிவேரா கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

"அவள் தன் கதையைச் சொன்னபோது, நான் மிகவும் பயந்துபோனேன். ஏனெனில், நான் ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் நேரடியாகத் தொடர்புடையவளாக இருக்கிறேன்," என்று ஹென்ரிக்ஸ் கூறுகிறார்.

'அன்பு, பராமரிப்பு மற்றும் உணவு'

ஒலிவேரா, 12 வயது சிறுமி போல நடித்து 14 மாதங்கள் ஏமாற்றிய 37 வயது பெண், பிரேசில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒலிவேராவுக்கு மனநல சிகிச்சை தேவைப்படலாம் என்று மெகலாயஸ் கருதுகிறார் (கோப்புப் படம்).

அவரது கதையால் பாதிக்கப்பட்ட ஹென்ரிக்ஸ் மற்றும் அவரது தோழி ரெனாடா மெகலாயஸ் ஆகியோர், ஒலிவேராவுக்காக ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து அவரைப் பராமரிக்கத் தொடங்கினர்.

"அவள் ஒரு பதின்ம வயது சிறுமி போலவே தெரிந்தாள். மிகவும் குழந்தைத்தனமாகப் பேசினாள். தனக்கு ஆட்டிசம் இருப்பதாகவும் கூறிக்கொண்டு, எப்போதும் ஒரு 'ஹூடி' அணிந்தே இருந்தாள்" என்கிறார் ஹென்ரிக்ஸ்.

அடுத்த ஒரு மாதத்தில் அந்த இரு பெண்களும் அவளுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போயினர். ஒலிவேரா குழந்தைகளைப் போலவே நடந்துகொள்வதாகவும், பால் பாட்டில் மற்றும் குழந்தைகளுக்கான உணவுகளைக் கேட்பதாகவும், ஆனால் ஒருபோதும் பணம் கேட்டதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மெகலாயஸின் கூற்றுப்படி, தன்னை மீண்டும் சியாராவிற்கு அனுப்பிவிடுவார்கள் என்று பயந்த அவள், தங்களைக் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டாம் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டாள்.

அவளது உடலில் இருந்த சில அச்சுறுத்தலான உடல் குறிகள், அவள் சொன்ன கதையை உண்மையென நம்ப வைத்ததாக அந்தப் பெண்கள் கூறுகின்றனர்.

அதன்படி, அவர்கள் அவளை எக்ஸ்-ரே எடுக்க அழைத்துச் சென்றனர். அதில், அவளது உடலில் 200-க்கும் மேற்பட்ட ஊசிகள் சிக்கியிருப்பது தெரியவந்தது. மந்திர தந்திர சடங்குகளின்போது தனது தந்தை இந்த ஊசிகளை உடலில் குத்தியதாக ஒலிவேரா கூறியிருந்தாள்.

"இது மிகவும் பயங்கரமாக இருந்தது," என்று மெகலாயஸ் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "நான் அவள் மீது அன்பு செலுத்தினேன், பராமரித்தேன், உணவளித்தேன். அவள் மீது சந்தேகம் கொள்ள எனக்கு எந்த காரணமும் இருக்கவில்லை," என்றார்.

ஆனால், 'டூடா' வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறு விதமாக நடந்துகொள்ளத் தொடங்கியபோதுதான் சந்தேகம் எழுந்தது.

மெகலாயஸின் கூற்றுப்படி, அவள் உணர்வுப்பூர்வமாக அதிக அளவில் மற்றவர்களைச் சார்ந்து இருந்தாள். தனியாக விடப்பட்டால், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதாக மிரட்டினாள். தொடர்ந்து மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க முயன்று கொண்டே இருந்தாள்.

"அவள் எனது மனநலத்தையும், பொருளாதார நிலையையும் சிதைத்துவிட்டாள். என் மீது அவள் கொடுத்த அழுத்தம் காரணமாக, நான் என் குழந்தைகளிடமிருந்தும் விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டது," என்கிறார் மெகலாயஸ்.

இருப்பினும், தங்களோடு இருந்தபோது ஒலிவேராவின் நடத்தை சாதாரணமாகவும் நிலையானதாகவும் இருந்ததாக ஹென்ரிக்ஸ் கூறுகிறார்.

இந்த முரண்பாடே சந்தேகத்திற்கு வித்திட்டது; இறுதியில் அந்த இரு பெண்களும் காவல்துறையை அணுகினர். விசாரணையின் முடிவில், அந்த முழு மோசடியையும் போலீசார் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர்.

ரியோ டி ஜெனிரோவில் இந்த வழக்கின் விசாரணையை வழிநடத்திய அதிகாரி மோனிகா ஏரியல் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறுகையில், ஒலிவேராவின் தொலைபேசியில் "ஆட்டிசம் பாதிப்புள்ளவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?" மற்றும் "துன்புறுத்தலுக்கு ஆளானவர் போல எப்படித் தெரிவது?" போன்றவற்றை தேடியதற்கான ஆதாரங்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

'நான் மிகவும் கையறு நிலையில் உணர்கிறேன்'

ஒலிவேரா கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது தான் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், வழக்கு விசாரணை நடைபெறும் வரை அவர் ஜாமீனில் வெளியே இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். ஆனால், அதன் பிறகு அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்தனர்.

மோசடி போன்ற வழக்குகளில் வன்முறையோ அல்லது தீவிர மிரட்டலோ இல்லாததால், நீதிமன்றங்கள் குற்றவாளிகளைத் தொடர்ந்து காவலில் வைப்பதைக் கடினமான ஒன்றாக பார்க்கின்றன என்று அதிகாரி ஏரியல் கூறுகிறார்.

மற்றவர்களும் அதே மோசடியில் சிக்கியிருப்பதைக் காணும்போது தான் மிகுந்த 'கையறு நிலையை' உணர்வதாக மெகலாயஸ் கூறுகிறார். இறுதியில் நீதி கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

இருப்பினும், "அவரை மட்டும் கைது செய்வது தீர்வாகாது" என்று அவர் கருதுகிறார். ஒலிவேராவுக்கு மனநல சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர் நம்புகிறார்.

இந்த முழு அனுபவத்திற்குப் பிறகும், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் தனது பணியைத் தொடர்ந்து செய்வேன் என்று ஹென்ரிக்ஸ் கூறுகிறார்.

அவரது வார்த்தைகளில் சொல்வதானால், "மக்களுக்கு உதவும் எண்ணத்தை நான் கைவிடப் போவதில்லை."

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு