தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 85% வாக்குப் பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் வாக்கு செலுத்திய வாக்காளர் ஒருவர்
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தேச வாக்குப்பதிவு தரவுகளின்படி 85% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு

அதிகமாக பதிவான 5 மாவட்டங்கள்

கரூர் 92%

சேலம் 90%

தர்மபுரி - 90%

ஈரோடு - 90%

நாமக்கல் 89%

குறைவாக பதிவான 5 மாவட்டங்கள்

கன்னியாகுமரி 75%

சிவகங்கை - 76%

ராமநாதபுரம் - 76%

திருநெல்வேலி - 77%

நீலகிரி 78%

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
படக்குறிப்பு, 6 மணி நிலவரப்படி உத்தேச வாக்குப்பதிவு தரவு

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு

அதிகமாக பதிவான 6 தொகுதிகள்

வீரபாண்டி - 93%

குமாரபாளையம் - 92%

கிருஷ்னராயபுரம் - 92%

குளித்தலை - 92%

பாலக்கோடு - 92%

பெருந்துறை - 92%

குறைவாக பதிவான 6 தொகுதிகள்

குளச்சல் - 74%

காரைக்குடி - 73%

மதுரை மத்திய - 73%

மதுரை வடக்கு - 72%

கிளியூர் - 71%

பாளையங்கோட்டை - 68%

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு, சென்னையில் வாக்கு செலுத்திய வாக்காளர் ஒருவர்

முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் நிலை (உத்தேச தரவுகளின்படி)

முதலமைச்சர் ஸ்டாலின் - கொளத்தூர் தொகுதி - 86%

தவெக தலைவர் விஜய் - பெரம்பூர் - 89%, திருச்சி கிழக்கு - 81%

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி - 91%

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - காரைக்குடி தொகுதி - 73%

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் - முதலமைச்சர் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

திருவண்ணாமலை அருகே ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் முகவர் சேதப்படுத்தியதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி தர்ப்பகராஜ், தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது இரு முகவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

தலைவர்கள் வாக்களிப்பு

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். நடிகர் அஜீத், சென்னையின் திருவான்மியூரில் 7 மணிக்கு முன்னதாகவே தனது வாக்கைச் செலுத்திவிட்டுச் சென்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையின் நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையின் 16 தொகுதிகளில், 1 மணி நிலவரப்படி 54.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை

'தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென' பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று காலை பதிவிட்டுள்ளார்.

காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்தவர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.

தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோவையில் அமைக்கப்பட்ட தனித்துவமான வாக்குச் சாவடிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் வாக்குச் சாவடியில் தனித்துவமான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது.

பெண்கள் மட்டும் பணிபுரியும் பிங்க் வாக்குச் சாவடி, இளைஞர் வாக்குச் சாவடி, பசுமை வாக்குச் சாவடி மற்றும் மாதிரி வாக்குச் சாவடி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களின் குழந்தைகள் விளையாட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த 4 விதமான வாக்குச் சாவடிகளும் ஓரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன. வாக்களிப்பவர்கள் வாக்குச் சாவடி வாயிலில் இருந்து செல்பி எடுத்துக்கொள்ள பிங்க் வாக்கு சாவடியில் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பசுமை வாக்கு சாவடியில், வாக்காளர்களை கவரும் விதமாக தென்னை ஓலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் வாக்களிக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாட தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகள் படம் வரையவும், விளையாடவும் உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தது.

வாணியம்பாடியில் தவெக- திமுக இடையே மோதல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு, வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் இடையேயான மோதல் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

'கள்ள ஓட்டு போடப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் தலைமையிலான நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, 'கள்ள ஓட்டு போட்டவர் யார் என்பது சிசிடிவி பதிவு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.

ராமநாதபுரம்: வாக்காளர்களின் செல்போன்களை சேகரித்த அதிகாரிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு, ராமநாதபுரம் நகர் பகுதி

ராமநாதபுரம் நகர் பகுதியில் வாக்களிப்பதற்கு முன்பாக வாக்காளர்களிடம் செல்போன்களை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர் திரும்ப வழங்கப்பட்டது.

தேர்தலில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் மையத்துக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வாக்குப் பதிவு செய்வதை வீடியோவாக பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் அலுவலர்கள் தன்னார்வலர்களைப் பணியில் அமர்த்தி வாக்கு மையத்துக்கு செல்வதற்கு முன்பு வாக்காளர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துவிட்டு வாக்கு செலுத்த அனுமதித்தனர்.

வாக்கு செலுத்திய பின்னர் அவர்களுடைய செல்போன் நம்பரை கூற சொல்லி, அதனைச் சரிபார்த்து செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

'கடைசி வாய்ப்பு'

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் இன்பன் உதயநிதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் மனைவி துர்கா, மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்பன் உதயநிதியுடன் வந்து, சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமத்துவம், சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் மக்களின் வாக்குகள் அமைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு, நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சிதம்பரம் வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஒரு நிலையான அரசு, வளர்ச்சி, நலத்திட்டங்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணியே ஆட்சியை தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அமையும் புதிய அரசு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள், அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள். தமிழகத்துக்கு தேவையான கடனை வாங்கி பட்ஜெட் போடுவார்கள். வருவாய் இருந்தால் கடன் வாங்கலாம், தவறில்லை" என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மனைவி கயல்விழியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார். சீமான், இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஒற்றை விரலால் பெரும் மாறுதலை ஏற்படுத்த முடியும். வாக்களிப்பது, நம்மிடம் இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை. தலைமையை தேர்ந்தெடுக்க நம்மிடம் இருக்கும் கடைசி வாய்ப்பு. மக்கள் அதை தவறவிடக் கூடாது." என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார்.

அரசியல் கட்சிகளின் நிலவரம்

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடுவதுடன், விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. அதுதவிர ராமதாஸ்-சசிகலா கூட்டணியும் களத்தில் உள்ளது.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு, சென்னை, மயிலாப்பூரில் வாக்களித்த தமிழிசை சௌந்தரராஜன்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திமுக 166 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தலா இரண்டு தொகுதிகள், மனிதநேய எஸ்டிபிஐ மற்றும் தமிழர் தேசம் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி என திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8, தேமுதிகவுக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்களும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 இடங்களும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 5 இடங்களில் போட்டியிடுகின்றது. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஒரு தொகுதி), புதிய நீதிக் கட்சி (ஒரு தொகுதி), புரட்சி பாரதம் (ஒரு தொகுதி) உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் போட்டியிடுகின்றன.

புதிதாகக் களமிறங்கி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. எடப்பாடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தற்போது அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாருக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியில் ஆண்கள் 117 பேரும், பெண்கள் 116 பேரும், திருநங்கை ஒருவரும் போட்டியிடுகின்றனர்.

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

பட மூலாதாரம், ANI

வாக்களிப்பது எப்படி?

முதலில் வாக்குச்சாவடி அலுவலர் உங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் அடையாள அட்டையைப் பரிசோதிப்பார். பின்னர், அடுத்த அலுவலர் இடது ஆட்காட்டி விரலில் நீல நிற மை வைத்து, ஸ்லிப் ஒன்றைக் கொடுத்து, பிறகு வாக்குப் பதிவுக்காக கையெழுத்து பெறுவார்.

மூன்றாவது அலுவலரிடம் நீங்கள் அந்த ஸ்லிப்பை கொடுத்து, விரலில் மை வைக்கப்பட்டதைக் காண்பிக்க வேண்டும். பின்னரே வாக்களிக்க முடியும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர் தாம் விரும்பும் வேட்பாளருக்கான பொத்தானை (நீல நிற பொத்தான்) அழுத்துவதன் மூலம் வாக்குப்பதிவு கருவியில் வாக்களிக்கும்போது, குறிப்பிட்ட வேட்பாளரின் பொத்தானுக்கு நேராக சிவப்பு விளக்கு ஒளிரும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

வாக்களித்ததை சரிபார்ப்பது எப்படி?

வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் கருவி, அச்சுப்பொறியில் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னம் அடங்கிய ஒரு சீட்டு அச்சிடப்பட்டு சுமார் 7 விநாடிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் சாளரம் வாயிலாக கண்களுக்குப் புலப்படும்.

அதன் பின், இந்த அச்சிடப்பட்ட சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு அக்கருவியின் முத்திரையிடப்பட்ட சீட்டு சேகரிப்புப் பகுதியில் விழும்.

வாக்களிப்பு வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்ய கட்டுப்பாட்டுக் கருவியில் இருந்து 'பீப்' ஒலி கேட்கும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் அலுவலர் சரவண மூர்த்தி பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்த விவரங்கள் இனி...

1. வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கலாமா?

வாக்கின் ரகசியம் என்பது முக்கியமானது. அதை மீறி வெளிப்படுத்துவது தீவிரமான குற்றமாகும்.

2. வாக்குச் சாவடிக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்லலாமா?

மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாக்குச் சாவடிகளுக்கு வெளியே மொபைல் போன்களை வைக்க பூத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கே ஒப்படைத்துவிட்டு வாக்களிக்கச் சென்று திரும்பி வந்து பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

3. அரசியல் கட்சிகளின் சின்னத்தை எடுத்துச் செல்வது அல்லது முழக்கங்களை எழுப்புவது போன்றவற்றை மேற்கொள்ளலாமா?

வாக்குச் சாவடியைச் சுற்றி 100 மீட்டர் வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. அதற்குள் எந்தவிதமான பரப்புரைகளையும் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

4. அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான வரையறை என்ன?

முகவர்கள் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பேட்ஜ் கொடுக்கப்படும். அங்கு தொப்பி போன்ற பரப்புரை செய்யக்கூடிய எந்தப் பொருட்களையும் எடுத்து வரக் கூடாது. வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு வெளியே அவர்களுடைய பூத்தை அமைத்துக் கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு