'மத காரணங்களுக்காக வந்தே மாதரம் பாடாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
வந்தே மாதரத்தின் அனைத்து சரணங்களையும் பாடாததற்கு தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மதக் காரணங்களுக்காக ஒருவர் வந்தே மாதரம் பாடவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என எதிர்பார்க்கிறோம் என்று கூறியது.
லைவ் லா தகவலின்படி , பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
1971-ஆம் ஆண்டு தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தில் 2026-ல் செய்யப்பட்ட திருத்தத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை டி.எம். கிருஷ்ணா தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தத் திருத்தத்தில், வந்தே மாதரம் என்ற தேசியப் பாடலைப் பாடாமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
இது தவிர, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களையும் பாட வேண்டும் எனக் கூறும் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களுக்கும் கிருஷ்ணாவின் மனு எதிர்க்கிறது.
விசாரணையின்போது, தேசிய கீதத்தைப் பாடாமல் இருப்பதற்கான தனிநபரின் உரிமையை அங்கீகரித்த 1986-ம் ஆண்டு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நினைவூட்டியது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
'தேசிய பாடல்' என்பது எதைக் குறிக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது என்று அமர்வு தெரிவித்தது.
எனினும், பிஜோ இமானுவேல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் போல, மதக் காரணங்களுக்காக ஒருவர் அப்பாடலைப் பாடாமல் இருப்பதற்கான உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று தெரிவித்தது.
'பிஜோ இமானுவேல்' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பின்பற்றப்படும் என்றும், மதக் காரணங்களுக்காக ஒருவர் பாடலைப் பாடவில்லை என்பதற்காக அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் என்றும் அமர்வு நம்பிக்கை தெரிவித்தது.
விசாரணையின்போது, டி.எம். கிருஷ்ணா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதரனுக்கும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
'நக்சலைட்டுகளின் விருப்பப்படி சட்டங்களை இயற்ற முடியாது'

பட மூலாதாரம், Getty Images
மனுவின் மீதான விசாரணையின்போது, "தேசியப் பாடல்" என்பதற்கு இந்தத் திருத்தச் சட்டத்தில் தெளிவான வரையறை எதுவும் வழங்கப்படவில்லை என்று முரளிதரன் கூறினார். இந்தத் தெளிவின்மை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிபதி பாக்சி, பாரம்பரியமாக 'தேசியப் பாடல்' என்பது வந்தே மாதரம் என்றே கருதப்பட்டு வருகிறது என்று கூறினார். அதற்கு முரளிதர், "இரண்டு வேறுபாடுகளுடன்" என்று பதிலளித்தார்.
மேலும், உள்துறை அமைச்சகத்தின் அலுவலகக் குறிப்பாணை அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும் முரளிதர் கூறினார்.
வந்தே மாதரம் தொடர்பான நடைமுறையில் இருந்த விதிமுறைகளை, அலுவலகக் குறிப்பாணை மூலம் அரசு திடீரென மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய அளவில் எந்தவித ஒருமித்த கருத்தும் இல்லாமல் இந்தத் திருத்தம் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நக்சலைட்டுகளின் சிந்தனைக்கு ஏற்ப சட்டத்தை உருவாக்க முடியாது" என்று கூறினார்.
இந்தக் கருத்துக்கு முரளிதர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்தக் கருத்தை சொலிசிட்டர் ஜெனரல் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தனது கருத்தைத் திரும்பப் பெற சொலிசிட்டர் ஜெனரல் மறுத்தார். "நான் கூறியதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது அரசியலமைப்புச் சட்டப்படி பின்பற்றப்படும் வழிமுறை என்றும், நக்சலைட்டுகள் விரும்பும் வழி அல்ல என்றும் நான் கூறினேன்" என்று அவர் தெரிவித்தார்.
எனினும், இந்தக் கருத்துகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாது என்று அமர்வு தெரிவித்தது.
மேலும், இந்த மனுவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் இந்த விவகாரம் "பரபரப்பாக்கப்படும்" என்றும் சொலிசிட்டர் ஜெனரல் அமர்விடம் வலியுறுத்தினார்.
நோட்டீஸ் பிறப்பிக்க அமர்வு விரும்பவில்லை என்று நீதிபதி பாக்சி தெரிவித்தார். எனினும், பிஜோ இமானுவேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்டம் இந்த வழக்குக்கும் பொருந்தும் என்று நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
தேசிய கீதம் எது என்பதில் எந்தவித சர்ச்சையும் இல்லை என்று நீதிபதி பாக்சி தெரிவித்தார். பிஜோ இமானுவேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்டம் இதுவரை சவால் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தேசிய கீதத்தின் எந்தப் பதிப்பு பயன்படுத்தப்பட வேண்டும், அதில் இரண்டு சரணங்கள் இருக்க வேண்டுமா அல்லது நான்கு சரணங்கள் இருக்க வேண்டுமா என்பதை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் தனது உரிமைகள் மீறப்படுவதாக ஒருவர் புகார் அளித்தாலோ அல்லது மனசாட்சியின் அடிப்படையில் ஆட்சேபனை தெரிவித்தாலோ, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிபதி பாக்சி தெரிவித்தார்.
மனசாட்சியின் அடிப்படையில் ஒரு சரணத்தையோ அல்லது அனைத்து சரணங்களையுமோ பாடாமல் இருப்பதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது என்றும், அதற்காக அரசு அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty Images
1971-ஆம் ஆண்டின் தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் 3-வது பிரிவை 2026-ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் மூலம் மாற்றியமைத்ததை இந்த மனு எதிர்த்து உள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 28 மற்றும் ஜூலை 9 ஆகிய தேதிகளில் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளும் இந்த மனுவில் சவால் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தத்தின்படி, தேசிய கீதம் அல்லது தேசியப் பாடலைப் பாடுவதிலிருந்து யாரையும் ஒருவர் வேண்டுமென்றே தடுத்தாலோ அல்லது அவற்றைப் பாடும் நிகழ்ச்சியை சீர்குலைத்தாலோ, அவருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவுகளையும், திருத்தப்பட்ட தண்டனை விதிகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது, அவை தேசிய நிகழ்ச்சிகளுக்கான நடைமுறைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாக இல்லை என்று கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 28 மற்றும் ஜூலை 9 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், ஆறு சரணங்களையும் உள்ளடக்கிய வந்தே மாதரத்தின் முழு வடிவத்தை "அதிகாரப்பூர்வ பதிப்பு" என அறிவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஜோ இம்மானுவேல் தீர்ப்பில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
1971-ம் ஆண்டு தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், தேசிய கீதத்தை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது.
எனினும், தேசிய கீதம் பாடப்படுவதைத் தடுப்பதை மட்டுமே இந்தச் சட்டம் வெளிப்படையாகக் குற்றமாக்கியது.
'பிஜோ இமானுவேல் எதிர் கேரள அரசு' வழக்கில், மதச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஒருவரின் செயல்பாடு பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்றாலோ அல்லது தேசியச் சின்னங்களை அவமதிக்கவில்லை என்றாலோ, அவரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, இந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி தி இந்து நாளிதழில் இந்த விவகாரம் குறித்து எழுதியிருந்தார்.
"1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவைச் சேர்ந்த பிஜோ, பினு மோல் மற்றும் பிந்து இமானுவேல் ஆகிய மூன்று குழந்தைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் யெகோவா விட்னஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தினமும் காலை நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும். அவர்கள் மரியாதையுடன் எழுந்து நின்றனர். ஆனால், அவர்களின் மதம் அனுமதிக்காததால் தேசிய கீதத்தைப் பாடவில்லை"என்று அவர் எழுதியிருந்தார்.
சஞ்சய் ஹெக்டேவின் கூற்றுப்படி, "அவர்கள் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை, யாருக்கும் இடையூறு செய்யவில்லை, நிகழ்ச்சியையும் சீர்குலைக்கவில்லை. எனினும், மாநில அமைச்சரின் தலையீட்டுக்குப் பிறகு அவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். கேரள உயர் நீதிமன்றம் பள்ளியின் முடிவை உறுதி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த முடிவு முற்றிலும் தவறானது என்று தெரிவித்தது."
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், நீதிபதி ஓ. சின்னப்பா ரெட்டி, குழந்தைகளைப் பள்ளியில் இருந்து நீக்கியது அவர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறினார்.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது அல்லது பாடப்படும்போது எழுந்து நிற்பதே மரியாதையை வெளிப்படுத்த போதுமானது என்று அவர் தெரிவித்தார். தேசிய கீதத்தைப் பாடாமல் இருப்பதை மட்டும் அவமரியாதையாகக் கருத முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில், மரியாதையுடன் எழுந்து நின்று அமைதியாக இருப்பது சட்டத்தை மீறுவதாகாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அமைதியாக இருப்பதற்கான குழந்தையின் உரிமையும் கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்றும், அது அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































