"மாற இருக்கும் அரசியல் சூழல்" - மாநில அரசியலுக்கு திருமாவளவன் திரும்புவதன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், @thirumaofficial/X
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன், மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது ஏன்?
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ள திருமாவளவன், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எட்டுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த எட்டுத் தொகுதிகளில் ஆறு தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும் 2 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமூக வலைதளத்தில் நேரலை மூலம் ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் அறிவித்தார் திருமாவளவன்.
கட்சித் தலைவரான தானே வேட்பாளர்களைத் தேர்வுசெய்து அறிவிப்பது இதுவே கடைசி என்றும், இனி கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு வேட்பாளரைத் தேர்வுசெய்து, அதனை மாநில நிர்வாகக் குழு ஆய்வுசெய்து வேட்பாளரை இறுதிசெய்யும் நடைமுறையை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார் திருமாவளவன்.
மேலும், "பல நெருக்கடிகள் இருந்தாலும் வலதுசாரிகள், மதவாத சக்திகள் ஆகியோர் வலுப்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாம் தி.மு.கவோடு கைகோர்த்து நிற்கிறோம். பல வருத்தங்கள் நமக்கு இருந்தாலும்கூட, அதாவது கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறமுடியவில்லை. குறிப்பாக அரூர் தொகுதியைக் கேட்டுப்பெற முடியவில்லை. இன்னும் பல வருத்தங்கள், வலிகள் நமக்கு உண்டு. ஆனால், இதுதான் தேர்தல் அரசியல். இந்தத் தேர்தல் அரசியலை நாம் எதிர்கொண்டாக வேண்டும். இன்னும் நாம் ஒரு மகத்தான அரசியல் சக்தி என்பதை உறுதிசெய்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இந்த தேர்தல் களத்தில் களமிறங்கியிருக்கிறோம். நெடிய உளவியல் போராட்டங்களுக்குப் பின்னர், பலரோடும் கலந்தாலோசனை செய்த பின்னர், தற்போதைய அரசியல் சூழலை அறிந்து, எதிர்காலத்தில் தமிழக அரசியல் சூழலை எப்படி வழிநடத்தவிருக்கிறோம் கட்சியை வலுப்படுத்தவிருக்கிறோம் என்பதையெல்லாம் அறிந்து" வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார் திருமாவளவன்.
திருமாவளவன் சொன்ன காரணம் என்ன?

பட மூலாதாரம், Facebook
அதன்படி, செய்யூர் தனித் தொகுதியில் சிந்தனைச் செல்வன், திண்டிவனம் தனித் தொகுதியில் வன்னி அரசு, திருப்போரூர் தொகுதியில் பன்னீர் தாஸ், பெரியகுளம் தனித் தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம் தனித் தொகுதியில் எழில் கரோலின், பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரகுமான், கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் கு. மாலதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
காட்டுமன்னார்கோயில் தனித் தொகுதியில் தானே போட்டியிடப்போவதாக அறிவித்தார் திருமாவளவன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வி.சி.கவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.
தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து அந்த நேரலையில் குறிப்பிட்ட திருமாவளவன், "தமிழக அரசியலில் நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோயிலில் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன்" என்றார். சூழல் எம்மாதிரி மாறவிருக்கிறது என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பு அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பலருக்கும் ஒரு ஆச்சரியம் தரும் அறிவிப்பாகத்தான் இருந்தது.
"தேர்தலுக்குப் பிந்தைய சூழலை மனதில் வைத்து இதுபோல முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார் திருமாவளவன். தேர்தலுக்குப் பிறகு என்ன மாதிரியான சூழலை அவர் எதிர்பார்க்கிறார் என்பது புரியவில்லை. தேர்தலுக்குப் பிறகு மூன்று விதமான சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, தி.மு.க. ஆட்சியைப் பிடித்து, திருமாவும் வெற்றிபெறுவது. இரண்டாவது, தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, திருமாவளவன் வெற்றிபெறுவது, மூன்றாவதாக, தி.மு.கவும் தோல்வியடைந்து இவரும் தோல்வியடைவது.
தி.மு.க. ஆட்சியைப் பிடித்து, திருமாவளவன் வெற்றிபெற்றால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவரும். அப்போது, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். அதில் வெற்றிபெறுவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது. தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில், இவர் வெற்றிபெற்றால், அந்தத் தருணத்திலும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத்தான் ராஜினாமா செய்ய விரும்புவாரா என்பது தெரியவில்லை. மூன்றாவதாக, தி.மு.கவும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல், திருமாவும் வெற்றிபெற முடியாமல் போனால், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீடிக்கும். ஆனால், அவருடைய இமேஜுக்கு பாதிப்பு ஏற்படும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
நீண்டகால கணக்கீடுகள்

ஆனால், திருமாவளவனின் முடிவுக்குப் பின்னால், நீண்ட காலக் கணக்கீடுகள் இருக்கின்றன என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார். "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. 234 தொகுதிகளையும் மாவட்டங்களாகப் பிரித்து, மாவட்டச் செயலாளர்களை நியமித்திருக்கிறோம். மிகப் பெரிய கட்சிக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இந்தச் சூழலில், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோக வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனை மாநில அரசியலில் இருந்தபடிதான் செய்ய வேண்டும் என நினைக்கிறார் தலைவர். ஆகவே, கட்சியின் எதிர்கால வளர்ச்சி கருதி இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
இரண்டாவதாக, விஜயின் புதிய கட்சி களத்தில் இறங்கியிருக்கிறது. அதன் உண்மையான செல்வாக்கு என்ன என்பது இந்தத் தேர்தலில்தான் தெரியவரும். ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் சொல்லப்படுவதைப்போல, 15 சதவீதம் அந்தக் கட்சிக்குக் கிடைத்தால், தேர்தலுக்குப் பிறகு கூட்டணி மாற்றங்கள் (Realignment) உருவாகலாம்.
அந்தத் தருணத்தில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தீவிரமாக கால்பதிக்க முயலலாம். பல மாநிலங்களில் அவர்கள் அதனைச் செய்திருக்கிறார்கள். அப்போது எங்கள் கட்சியின் செல்வாக்கை பாதுகாக்க வேண்டியிருக்கும். அதற்கு இங்கே ஒரு தளபதி தேவை. அதனால்தான் திருமாவளவன் இங்கே செயல்பட முடிவெடுத்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டும் இங்கே செயல்படலாம் என்றாலும் முழுமையாக அவரது கவனத்தை இங்கே குவிக்க வேண்டும். அதற்காகவும் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.
மூன்றாவதாக, என்னைப் பொறுத்தவரை ஆளும் கூட்டணியைத் தவிர, எந்தக் கட்சியிலும் தற்போது ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. அ.தி.மு.க. தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை. இந்தச் சூழலில், வரவிருக்கும் சட்டப்பேரவையில் அவருக்கு என ஒரு முக்கிய இடம் இருக்கும். அவருடைய செயல்பாடு கட்சியின் நற்பெயரையும் அதிகரிக்கும். அதற்காகத்தான் இப்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்திருக்கிறார் திருமாவளவன்" என்கிறார் து. ரவிக்குமார்.
அப்படியானால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருக்கலாமே?
"திருமாவளவனைப் பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட விரும்பினார். அந்த நேரத்தில் வேறுவிதமான சூழல் இருந்தது. அதாவது, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டோம் என்றாலும் ஒன்றில் தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆகவே, கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்போது 2024ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் எங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டோம். தனியான சின்னமும் கிடைத்துவிட்டது. இந்தச் சூழலில், இம்மாதிரி முடிவை எடுப்பது சரியாக இருக்கும் எனக் கருதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் திருமா" என்கிறார் து. ரவிக்குமார்.
இருந்தபோதும், தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற சூழலை எதிர்நோக்கி திருமா இம்மாதிரி ஒரு முடிவை எடுக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்புகிறார் ப்ரியன். ஆனால், அம்மாதிரியான சாத்தியக்கூறே இல்லை என்கிறார் ரவிக்குமார். "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை 180 இடங்களைப் பெறும். தொங்கு சட்டமன்றத்திற்கான சாத்தியமே இல்லை. ஆகவே ஏதோ பதவியை எதிர்பார்த்து இதுபோல போட்டியிடுவதாகச் சொல்வது தவறு" என்கிறார் அவர்.
ஆனால், இந்த விஷயத்தை கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தி.மு.க. எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது என்பது இதுவரை தெளிவாகவில்லை. "என்னைப் பொறுத்தவரை, தி.மு.கவினர் இதனை ரசிக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்" என்கிறார் ப்ரியன்.
ஆனால், திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமான விஷயம் என்கிறார் து. ரவிக்குமார். "தி.மு.கவைப் பொறுத்தவரை, திருமாவளவன் எல்லா இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்றும், நாடாளுமன்றத்திற்கு இன்னொரு இடைத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்குமே என்று கருதலாம். ஆனால், திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது வி.சி.கவின் வேட்பாளருக்கு மட்டுமல்ல, இந்தக் கூட்டணிக்கே மிகப் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும்" என்கிறார் ரவிக்குமார்.
தி.மு.கவைப் பொறுத்தவரை இதில் தங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை என்கிறது. "இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதில் யாரைப் போட்டியிடச் செய்வதென்பது அவர்களது முடிவு. அதைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.
2001ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற திருமாவளவன், கடலூர் மாவட்டம் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2009ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமாவளவன், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதில் வெற்றிகிடைக்கவில்லை. இதற்குப் பிறகு 2019, 2024 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் மீண்டும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































