திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் அமோனியா கசிந்தது எப்படி? அமைச்சர் பேட்டி

பட மூலாதாரம், ANI
திருவள்ளூர் அருகே கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மேலும் 62 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர்.
விபத்து தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன தொழிலாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. அங்கு நேற்று (21-06-2026 ஞாயிற்றுக்கிழமை) காலை அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
அரசு தெரிவித்த தகவலின்படி, இன்று உற்பத்தி பிரிவில் வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதில், அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 60 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள்.
இந்த சம்பவத்தில் குறைந்தது 2 பெண்கள் உயிரிழந்துவிட்டனர். 15 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 23 பேர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 24 பேர் தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, காஞ்சிபுரம் சரக டிஐஜி சேஷ சாயி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், HANDOUT
சிகிச்சை பெறும் தொழிலாளர்களின் நிலை என்ன?
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் குமுதா, "சிகிச்சைக்கு வந்தவர்களில் சிலர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருப்பதாக" தெரிவித்தார்.
அத்துடன், "இங்கு சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றாலும், பெரிதும் அச்சப்படும் அளவுக்கு இல்லை. அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரேயொரு ஆண் என்றும் மீதம் அனைவரும் பெண் தொழிலாளர்கள்" என்றும் கூறிய அவர், "அவர்களும் சுமார் 20 முதல் 23 வரையிலான வயது வரம்புகளில் இருப்பதால், விரைவில் குணமாகிவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர் குமுதா தெரிவித்தார்.

பட மூலாதாரம், HANDOUT
மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?
"கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் பிரஷர் வால்வில் இருந்து அமோனியா வாயு கசிந்ததால் அங்கிருந்த தொழிலாளர்களுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டது," என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்படியாக, "மயக்கம், வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளோம். அரசு மருத்துவமனை மட்டுமின்றி சிலர் வேல்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி நல்ல நிலையில் இருப்பவர்கள் அருகில் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று ஆட்சியர் கவிதா விவரித்தார்.
மேலும் பேசிய அவர், "வாயுக் கசிவு ஏற்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று விளக்கினார்.
அமோனியா கசிந்தது எப்படி? அமைச்சர் பேட்டி

பட மூலாதாரம், HANDOUT
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் குமார், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறினார்.
வாயு கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து கூறுகையில், "சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு இறால் பண்ணை, அங்கு பதப்படுத்தி வைக்கும் சேமிப்புக் கிடங்கில் இருந்த அமோனியா மூலமாக இயங்கி வந்த குளிரூட்டியில் ஏற்பட்ட கசிவால் விபத்து நிகழ்ந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இன்னும் விரிவாக விசாரணை நடத்தி, ஆராய்ந்து முழு தகவல்களையும் தெரிவிக்கிறோம்" என்று கூறினார்.
நிறுவனத்தின் உரிமையாளர்கள் காவலில் எடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் குமார், "அவசர சிகிச்சைப் பிரிவில் 23 பேர் உள்ளனர். மற்றவர்கள் உடல்நிலை பயப்படக்கூடிய கட்டத்தைத் தாண்டி முன்னேறிவிட்டது" என்றார்.
3 நாளில் முழுமையான விசாரணை அறிக்கை - முதல்வர் உத்தரவு

பட மூலாதாரம், ANI
இதில் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலையும் ஆறுதலையும் அறிக்கை வாயிலாகத் தெரிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், இரு குடும்பங்களுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி நல்லடக்கம் செய்ய அரசு செலவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக அவரது அறிக்கை கூறுகிறது.
"வாயுக் கசிவு தொடர்பாக தொழிலகப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர், சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு முதல்கட்ட விசாரணை அறிக்கை 24 மணிநேரத்திற்கு உள்ளாக சமர்பிக்கப்பட வேண்டும், முழுமையான விசாரணை அறிக்கை மூன்று நாட்களுக்கு உள்ளாக சமர்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்" என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












