உலகை நடந்தே வலம் வரும் சாகசக்காரர் 28 ஆண்டுகளில் 48,000 கிமீ பயணம் - காடு, மலை, கடலை எப்படி கடந்தார்?

தனது சாகசப் பயணத்தின் தொடக்கத்தில் சிலியில் எடுக்கப்பட்ட கார்ல் புஷ்பியின் புகைப்படம்

பட மூலாதாரம், Karl Bushby

படக்குறிப்பு, தனது சாகசப் பயணத்தின் தொடக்கத்தில் சிலியில் எடுக்கப்பட்ட கார்ல் புஷ்பியின் புகைப்படம்
    • எழுதியவர், கெவின் ஷூஸ்மித்
    • பதவி, பெல்ஜியம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சாகசப் பயணி கார்ல் புஷ்பி கடந்த 28 ஆண்டுகளாக உலகை நடந்தே வலம் வருகிறார்; இப்போது அவரது நீண்ட பயணத்தின் இறுதிப் பகுதி நெருங்கிவிட்டது.

அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பகுதி நான் அவரைப் பற்றி எழுதியுள்ளேன். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசியிருந்தாலும், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தாலும், நாங்கள் இதுவரை நேரில் சந்தித்துக் கொண்டதில்லை.

நாங்கள் ஹாவ்ரே நகரில் இருக்கிறோம்; பெல்ஜியத்தில் உள்ள மான்ஸ் நகரை நோக்கி எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நான் கார்லுடன் இணைந்து நடக்கிறேன்.

இது கேலய்ஸ் (Calais) நகரை நோக்கிச் செல்லும் இறுதிப் பயணத்தின் ஒரு பகுதியாகும். அங்கிருந்து வரும் அக்டோபர் மாதம் ஆங்கிலக் கால்வாயைக் நீந்திக் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

பயணத்தின்போது பலமுறை தைக்கப்பட்டதற்கான அடையாளங்களைக் கொண்ட ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்திருக்கும் கார்ல், நரைத்த தாடியுடன் பெல்ஜியம் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வந்து நிற்கிறார்.

அவர் முகாமிடும் உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் நிரப்பப்பட்ட தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு வருகிறார்.

தனது 29-வது வயதில், எந்தவொரு போக்குவரத்துச் சாதனத்தையும் பயன்படுத்தக் கூடாது, பயணத்தை முடிக்கும் வரை பிரிட்டனுக்குத் திரும்பக் கூடாது என்ற இரண்டு விதிகளுக்குக் கட்டுப்பட்டு, சிலியிலிருந்து தனது சொந்த ஊரான ஹல் நகரை நோக்கி கார்ல் புறப்பட்டார்.

28 ஆண்டுகளில் 48,000 கிமீ பயணம் - காடு, மலை, கடலை எப்படி கடந்தார்?

பெல்ஜியம் நாட்டின் மான்ஸ் நகருக்குச் செல்லும் வழியில், பிபிசி நிறுவனத்தைச் சேர்ந்த கெவின் ஷூஸ்மித்துடன் வலதுபுறம் இருக்கும் கார்ல் புஷ்பி.

பட மூலாதாரம், Crispin Rolfe/BBC

படக்குறிப்பு, பெல்ஜியம் நாட்டின் மான்ஸ் நகருக்குச் செல்லும் வழியில், பிபிசியைச் சேர்ந்த கெவின் ஷூஸ்மித்துடன் வலதுபுறம் இருக்கும் கார்ல் புஷ்பி.

அவரது சட்டையில் வியர்வை கசிந்து, தோள்பட்டைப் பகுதிகளில் இறக்கை போன்ற வடிவத்தில் கறை படிந்துள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முன்னாள் வான்வழிப் படை வீரரான இவர், தனது பயணத்தை நவம்பர் 1998-ல் தொடங்கினார். தனது தாயார் இன்னும் வசிக்கும் தனது குழந்தைப் பருவ இல்லத்திற்குத் திரும்புவதற்கு சுமார் 12 ஆண்டுகள் ஆகும் என்று அவர் கணக்கிட்டிருந்தார்.

ஆனால், சுமார் 28 ஆண்டுகள் கடந்தும் அவரது பயணம் தொடர்கிறது. விசா கட்டுப்பாடுகள், ஸ்பான்சர்களை இழக்கச் செய்த 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி, கோவிட்-19 மற்றும் புவிசார் அரசியல் சிக்கல்கள் காரணமாக அவரது பயண வேகம் சற்று குறைந்துள்ளது.

அவரது பாதையில் அர்ஜென்டினா, பெரு, ஈக்வடார், கொலம்பியா மற்றும் பனாமாவை நோக்கி டேரியன் கேப் பகுதியைக் கடந்தார்.

கோஸ்டாரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ், எல் சால்வடோர், குவாத்தமாலா மற்றும் மெக்சிகோ வழியாகச் சென்று அமெரிக்கா மற்றும் கனடாவை அடைந்தார்.

அலாஸ்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட பேரிங் நீரிணையைக் கடந்த அவர், சைபீரியா, மங்கோலியா, சீனா, துர்க்மெனிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் வழியாகப் பயணம் செய்தார்.

காஸ்பியன் கடலை நீந்திக் கடந்து அஜர்பைஜானை அவர் அடைந்தார்.

பின்னர் துருக்கி வழியாக ஐரோப்பாவில் அவர் நுழைந்தார்.

தற்போது 57 வயதாகும் அவர், 48,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்துள்ளார். சுரங்கப்பாதையைப் பயன்படுத்த யூரோடன்னல் (Eurotunnel) அதிகாரிகள் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அவர் இப்போது ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடப்பது குறித்து யோசித்து வருகிறார்.

கார்ல் ஒரு கடைக்குள் சென்று, ஒரு பாட்டில் தண்ணீருடன் வெளியே வருகிறார். அந்தச் சாகசப் பயணத்தின் தொடக்கத்தில் நிகராகுவாவில் அவரே உருவாக்கிய தள்ளுவண்டியில் உள்ள ஒரு நெகிழிப் பட்டை மூலம் அந்தத் தண்ணீரைப் பத்திரப்படுத்துகிறார். "தி பீஸ்ட்" என்று அவர் அழைக்கும் அந்த வண்டியே அவரது உயிர்நாடியாகும்.

மான்ஸ் (பெல்ஜியம்) நகரை அடைந்தார் கார்ல்; அவரது சாகசப் பயணம் நிறைவை நெருங்குகிறது.

பட மூலாதாரம், Crispin Rolfe/BBC

படக்குறிப்பு, மான்ஸ் நகரை அடைந்தார் கார்ல்; அவரது சாகசப் பயணம் நிறைவை நெருங்குகிறது.

நாங்கள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறோம். வெப்பநிலை 30°C ஆக இருப்பதால் என்னால் ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை; ஆனால் கார்ல், மதிய உணவிற்கு முன்பே ஏற்கனவே 16 கிலோமீட்டர் நடந்திருந்தாலும் சோர்வின் அறிகுறியே இல்லாமல் இருக்கிறார்.

பிரெஞ்சு சாகசப் பயணி டிமிட்ரி கீஃபருடன் இணைந்து 2006-ல் உறைந்த பேரிங் நீரிணையைக் கடந்ததைப் பற்றியும், காஸ்பியன் கடலில் அவர் செய்த 300 கிலோமீட்டர் நீச்சல் பயணம் குறித்தும் நாங்கள் பேசினோம்.

கொலம்பியாவையும் பனாமாவையும் இணைக்கும் டேரியன் கேப் வழியாக அவர் பயணம் செய்தது குறித்துக் கார்ல் கூறுகையில், "நீங்கள் அடர்ந்த காட்டின் ஊடாகத்தான் உங்கள் பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

"நீங்கள் நதி அமைப்புகளையும் பல சதுப்பு நிலங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அது ஒரு போர் மண்டலம் என்ற உண்மையும் அங்குள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்ட கார்ல், ஒரு வீடற்றவரைப் போல நடிக்க முயன்றுள்ளார்.

"வீடற்றவர்கள் நடைமுறையில் கண்ணுக்குத் தெரியாதவர்கள் போன்றவர்கள்: யாரும் அவர்களைக் கவனிப்பதில்லை; அதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. நவீன 'தி நார்த் ஃபேஸ்' உபகரணங்களுடன் வலம்வரும் பொன்னிற முடி மற்றும் நீல கண்களைக்கொண்ட கிரிங்கோவாக இருக்க நான் விரும்பவில்லை" என்று அவர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் எனது முடியையும் சருமத்தையும் வண்ணம் பூசி மாற்றிக்கொண்டேன், எனது துணிகளையும் கிழிந்த நிலையில் வைத்திருந்தேன். எனது பொருட்களைச் சாக்குகளில் சுமந்து சென்றேன்" என்றார்.

"விடாமுயற்சியே மிக முக்கியமான விஷயம்"

2006-ல் ரஷ்யாவிற்குள் நுழைவதற்காகப் பெரிங் நீரிணையைக் கடந்தபோது பனிக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் கார்ல் புஷ்பி.

பட மூலாதாரம், Karl Bushby

படக்குறிப்பு, 2006-ல் ரஷ்யாவிற்குள் நுழைவதற்காகப் பேரிங் நீரிணையைக் கடந்தபோது பனிக்கு மத்தியில் போராடிக் கொண்டிருக்கும் கார்ல் புஷ்பி.

தனது வீட்டு ஜன்னல் வழியே வெளியே உற்றுநோக்கிய ஒரு பெண் , அந்த இரண்டு மனிதர்களையும் தள்ளுவண்டியையும் வியப்புடன் பார்க்கிறாள்.

சிறிது நேரம் "தி பீஸ்ட்" வண்டியைத் தள்ளுமாறு கார்ல் என்னை அழைக்கிறார். கைப்பிடியை மூடியிருக்கும் கருப்பு நாடா தேய்ந்து, உரியத் தொடங்கியுள்ளது.

நாங்கள் தொடர்ந்து நடக்கும்போது, எங்கள் உரையாடல் மிகவும் தத்துவார்த்தமான திசைக்குச் செல்கிறது. இந்த நீண்ட நடைப்பயணத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்கள் என்ன என்று நான் அவரிடம் கேட்கிறேன்.

"விடாமுயற்சியே மிக முக்கியமான விஷயம்," என்று அவர் பதிலளிக்கிறார்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் வரிசைக்கு இடையே "தி பீஸ்ட்" வண்டியை நகர்த்த கார்ல் சிரமப்படுகிறார். "இந்த ஊர்கள் ஒரு சுவாரஸ்யமான தடை ஓட்டப் பாதையாக இருக்கக்கூடும்," என்று அவர் பெருமூச்சு விடுகிறார்.

அவர் எனது கேள்விக்குத் திரும்புகையில், "ஒரு ராணுவப் பின்னணியில் இருந்து வருவதால், நீங்கள் எப்போதும் மக்களிடம் உள்ள நல்ல தன்மையை மட்டும் பார்ப்பதில்லை; எனவே, இந்த அனுபவம் எனக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது. முதல் நாளிலிருந்து, ஏனைய உலக நாடுகள் என்னை இரு கரம் நீட்டி வரவேற்றுள்ளன."

தான் எதற்காக எதைச் செய்யக் கூடியவன் என்பதைத் தனக்கும் மற்றவர்களுக்கும் நிரூபிப்பதற்காகவே தான் வெளியே வந்துள்ளதாகக் கார்ல் கூறுகிறார்.

பட மூலாதாரம், Kevin Shoesmith/BBC

படக்குறிப்பு, கார்ல் புஷ்பி

"சாலை ஓரத்தில் என்னைத் தேடிப்பிடித்து, என்னை அமரவைத்து உணவளிப்பதற்காக அவர்கள் எட்டு மணி நேரம் தொடர்ந்து வாகனம் ஓட்டி வந்துள்ளனர்," என்று அவர் நினைவுகூறுகிறார்.

கார்ல் தனது பயணத்தைத் தொடங்கியபோது, அவரது பாக்கெட்டில் வெறும் 500 டாலர் மட்டுமே இருந்ததுடன், எந்த ஸ்பான்சர்களும் இல்லை.

அதன் பின்னர், அவரது புத்தகமான "ஜயண்ட் ஸ்டெப்ஸ்" உள்ளிட்ட வெளியீடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் கிடைக்கும் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டே இந்தப் பயணம் பெரும்பாலும் தொடர்ந்தது.

நான் எனது முதுகுப்பையைத் திறந்து, கார்லின் தாயார் ஏஞ்சலா புஷ்பி எழுதிய கடிதம் ஒன்றை வெளியே எடுக்கிறேன். அந்தப் பையில் அவருக்குப் பிடித்த மிட்டாய்களும் உள்ளன.

"அம்மாவுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு," என்று சிரித்தபடியே சில கேரமல் வேபர்களைத் தேர்வு செய்கிறார்.

அவர்கள் இருவரும் கடைசியாக 2015-ம் ஆண்டுதான் சந்தித்துக் கொண்டனர்.

"நீங்கள் இப்போதும் அவரது சின்னப் பையன்தானே?" என்று நான் கேட்கிறேன்.

"அப்படித்தான் தெரிகிறது," என்று பதிலளிக்கும் கார்ல், "இந்தச் சாக்லேட்டுகளுடன் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியான ஒரு குழந்தையாக உணர்கிறேன்," என்கிறார்.

அந்தக் கடிதத்தில், கார்ல் உண்மையில் ஆங்கில கால்வாயை நீந்திக் கடக்க வேண்டுமா என்று ஏஞ்சலா கேள்வி எழுப்பியுள்ளார். தாய் மற்றும் மகன் இருவருக்குமே அதற்கான பதில் தெரியும்.

பின்னர், எல்லாவற்றையும் சொல்லிவிடும் ஒரு வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

"நீ எதற்கும் உதவாதவன் என்று நீ ஒரு காலத்தில் நினைத்தாய். ஆனால், அது தவறு என்பதை நீ நிரூபித்துவிட்டாய்," என்று ஏஞ்சலா எழுதியுள்ளார்.

கார்ல் எப்போதுமே தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் இயல்புடையவர் என்பதை நான் அறிவேன், ஆனால் இந்தக் கடிதத்தில் அது தெளிவாக வெளிப்படுகிறது.

மான்ஸ் நகரை நெருங்கிக்கொண்டிருந்த கார்லிடம் நான் வழங்கிய, அவரது தாயார் ஏஞ்சலா புஷ்பி தன் மகனுக்கு எழுதிய குறிப்பு.

பட மூலாதாரம், Kevin Shoesmith/BBC

படக்குறிப்பு, மான்ஸ் நகரை நெருங்கிக்கொண்டிருந்த கார்லிடம் நான் வழங்கிய, அவரது தாயார் ஏஞ்சலா புஷ்பி தன் மகனுக்கு எழுதிய குறிப்பு.

தன் ராணுவப் பணியின்போது தனது சக வீரர்களைப் போலத் தான் எப்போதுமே உடல் தகுதியுடன் இருந்ததாகத் தான் உணரவில்லை என்று அவர் என்னிடம் கூறுகிறார்.

ராணுவம் தனக்குத் தன்னம்பிக்கையைப் பெற உதவியதாக (பிரிட்டனின் சிறப்பு வான்வழிப் படையில் (SAS) அவரது தந்தை பணியாற்றியுள்ளார்) கார்ல் கூறுகிறார். இருப்பினும், அவரது ஆரம்ப கால குழந்தைப் பருவத்தில் கண்டறியப்படாத டிஸ்லெக்ஸியா கற்றல் குறைபாடு காரணமாக அவர் மற்றவர்களால் கேலிக்குள்ளான போது, "ஏற்கனவே சேதம் ஏற்பட்டுவிட்டது" என்று குறிப்பிடுகிறார்.

"எனக்கு என் மீதான தன்னம்பிக்கை குறைவாகவே இருந்தது. நான் குறைவாகவே செயல்பட்டேன். எனது பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டு வரை எனது டிஸ்லெக்ஸியா பிரச்னை கண்டறியப்படவே இல்லை," என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், தனது பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதில் கார்ல் எப்போதுமே சந்தேகித்தது இல்லை.

"எனக்கும் மற்றவர்களுக்கும் எதையாவது நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயமாகவே உள்ளது. மற்றவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு செயலைச் செய்வதைப் பற்றித்தான் நாங்கள் பேசுகிறோம்," என்று அவர் வாதிடுகிறார்.

"இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது"

சமூக ஊடகங்கள் காரணமாக இப்போது தான் எங்கு சென்றாலும் அடையாளம் காணப்படுவதாகக் கார்ல் கூறுகிறார்.

பட மூலாதாரம், Kevin Shoesmith/BBC

படக்குறிப்பு, சமூக ஊடகங்கள் காரணமாக இப்போது தான் எங்கு சென்றாலும் அடையாளம் காணப்படுவதாகக் கார்ல் கூறுகிறார்.

பல ஆண்டுகளாக, கார்ல் தனது பயணம் முடியும் தேதியைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் இயல்பாகவே இருந்தார். ஆனால் இப்போது அப்படி இல்லை; இதில் ஒரு உண்மையான அவசரம் ஏற்பட்டுள்ளது.

"இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் நிச்சயமாக வந்துவிட்டது," என்று அவர் கூறுகிறார். "இதை இனி நான் நீண்ட காலம் தொடர விரும்பவில்லை."

நாங்கள் மான்ஸ் நகரின் பிரமாண்டமான கிராண்ட்-பிளேஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இன்ஸ்டாகிராம் மூலமாக அவரை அடையாளம் கண்டுகொண்ட பல இளைஞர்கள் நேராக அவரிடம் ஓடி வந்தனர்.

"நீங்கள் ஒரு லெஜண்ட்," என்று ஒரு உற்சாகமான இளைஞர் கார்லிடம் கூறுகிறார்.

2001-ல் கொலம்பியாவில் கார்ல் புஷ்பி; அப்போது அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான பயணத்தைத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.

பட மூலாதாரம், Karl Bushby

படக்குறிப்பு, 2001-ல் கொலம்பியாவில் கார்ல் புஷ்பி; அப்போது அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான பயணத்தைத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.

கார்லுக்கு எதிர்காலம் குறித்து பயம் இருக்கிறதா?

"ஆம்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். "ஒரு நாள் நான் என் தாயாரின் வீட்டில் கண் விழிப்பேன். 57 வயதில், கட்டிலுக்கு அருகில் பையில் உள்ள எனது பொருட்களைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இருக்காது."

நாங்கள் ஒரு காபி கடைக்கு வந்தோம், கார்ல் ஒரு ஆரஞ்சு ஜூஸ் ஆர்டர் செய்தார்.

இந்தப் பயணத்தில் மிகக் கடினமான பகுதி எது என்று நான் அவரிடம் கேட்கையில், கால்களில் ஏற்படும் கொப்புளங்கள் அல்லது குற்ற நிகழ்வுகளை பற்றிய பயம் போன்றவற்றைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, "அது உறவுகள்தான். நான் இருமுறை காதலித்தேன், அவர்களை இழந்தேன், அது ஒரு தழும்பை விட்டுச் செல்கிறது." என்று அவர் கூறினார்.

"உடல் வலியைச் சொல்லுங்கள், அதைச் சமாளிக்க முடியும். ஆனால் காதலில் விழுந்துவிட்டு, பிறகு தொடர்ந்து நடந்தாக வேண்டும் என்பது? அது உங்களை முற்றிலும் உலுக்கிப் போட்டுவிடும்."

ஒரு நல்ல எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் தனக்கு ஒரு "உண்மையான உற்சாகத்தைத்" தருவதாக அவர் என்னிடம் கூறுகிறார்.

டோவரின் வெள்ளை பாறைகளை நீங்கள் முதன்முதலில் பார்க்கும் அந்தத் தருணத்தை நிச்சயமாக எதுவும் மிஞ்ச முடியாது.

பிரபலமான டோவரின் வெள்ளைச் பாறைகள், 28 ஆண்டுகளுக்கு முன்பு சிலியிலிருந்து அவர் புறப்பட்டதிலிருந்து கார்ல் காணும் இங்கிலாந்தின் முதல் காட்சியாக இருக்கும்.

பட மூலாதாரம், Kevin Shoesmith/BBC

படக்குறிப்பு, பிரபலமான டோவரின் வெள்ளைச் பாறைகள், 28 ஆண்டுகளுக்கு முன்பு சிலியிலிருந்து அவர் புறப்பட்டதிலிருந்து கார்ல் காணும் இங்கிலாந்தின் முதல் காட்சியாக இருக்கும்.

மான்ஸின் புகழ்பெற்ற மணிக்கோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அழகிய சதுக்கத்தில் நாங்கள் இருக்கும்போது, இயற்கை அழகை முழுமையாக ரசிப்பதற்காக கார்ல் எப்போதாவது நின்று யோசித்ததுண்டா என்று அவரிடம் கேட்கிறேன்.

"சில சமயங்களில், அதற்கான ஆற்றல் உங்களிடம் இருப்பதில்லை," என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

"இது போன்ற ஓரிடத்தில், நீங்கள் அதை உண்மையிலேயே உள்வாங்குகிறீர்கள். நான் இனி எப்போதுமே இந்த இடத்திற்குத் திரும்ப வரப் போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் சூழ்நிலைகளில், நான் எத்தனை முறை அவ்வாறு சிக்கியிருக்கிறேன் என்பதைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்."

எங்கள் பாதைகள் மீண்டும் குறுக்கிடும் என்று நம்புகிறேன்... ஆங்கில மண்ணில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு