ராகுல், ஸ்டார்க் அபாரம் - 225 இலக்கை சேஸ் செய்து டெல்லி வெற்றி பாதைக்கு திரும்பியது எப்படி?

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 தொடரின் 43வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று (மே 1) எதிர்கொண்டது டெல்லி கேபிட்டல்ஸ். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கு முன் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. 9 போட்டிகளில் நான்கில் வென்றிருக்கும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. 10 போட்டிகளில், 12 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ரவி பிஷ்னாய் மற்றும் ஷுபம் துபே ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பதும் நிசன்கா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்தப் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சீசனில் ஸ்டார்க் ஆடும் முதல் போட்டி இது. முன்னணி வீரர் டேவிட் மில்லர் இந்தப் போட்டியில் ஆடவில்லை.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் விளாசியது. ரியான் பராக் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்தார். டெல்லி பௌலர்களில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த இலக்கை சேஸ் செய்த டெல்லி கேபிட்டல்ஸ், 19.1 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்தது. அந்த அணியின் ஓப்பனர்கள் பதும் நிசன்கா, கே.எல்.ராகுல் இருவரும் அரைசதம் அடித்தனர்.
நிலைத்து நின்று ஆடிய கேப்டன்

பட மூலாதாரம், ANI
வழக்கமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கம் ஏற்படுத்திக்கொடுக்கும் யஷஷ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி ஜோடி இந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்தத் தவறியது. ஆட்டத்தின் முதல் பந்தையே சிக்ஸர் ஆக்கிய ஜெய்ஸ்வால், மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார் வீசிய ஃபுல் டாஸில் அவரிடமே கொடுத்து ஆட்டமிழந்தார். 6 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஜெய்ஸ்வால். இந்த ஐபிஎல் சீசனில் முதல் முறையாகக் களமிறங்கிய ஸ்டார்க், மூன்றாவது பந்திலேயே தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கினார்.
அதற்கு அடுத்த ஓவரில் சூர்யவன்ஷி விக்கெட்டைக் கைப்பற்றினார் கைல் ஜேமீசன். தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சூர்யவன்ஷி, அடுத்த பந்தில் போல்டானார். அதனால் 12/2 என்ற நிலைக்கு வந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஆனால், அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டார்கள். இந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்தது. துருவ் ஜுரெல் 42 ரன்கள் எடுத்து அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த சீசனில் இந்தப் போட்டிக்கு முன் ஒருமுறை கூட 30 ரன்களைக் கடந்திடாத ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக், இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். களமிறங்கியது முதலே அதிரடி காட்டிய அவர், 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். வேகப்பந்துவீச்சு, சுழல் என அனைத்தைக்கு எதிராகவும் அதிரடி காட்டினார் அவர்.
சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஸ்டார்க்கை 90 ரன்களுக்கு அவுட் ஆக்கினார் மிட்செல் ஸ்டார்க். அதே ஓவரில் அவர் அதற்கு முன்பாக ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.
கடைசி கட்டத்தில் டானவன் ஃபெரீரா அதிரடி காட்டியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. 14 பந்துகள் மட்டுமே சந்தித்த டானவன் ஃபெரீரா 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் விளாசினார். கேபிட்டல்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டெல்லி கேபிட்டல்ஸ் வெற்றி

பட மூலாதாரம், ANI
226 ரன்களை சேஸ் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பதும் நிசன்கா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆரம்ப ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிவரும் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாந்த்ரே பர்கர் இருவரையுமே தங்கள் அதிரடியால் திக்குமுக்காட வைத்தார்கள் டெல்லி ஓப்பனர்கள்.
நிசன்கா ஆடிய அதிரடியான ஆட்டத்தால், பவர்பிளேவில் டெல்லி அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 70 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணிக்கெதிரான முந்தைய போட்டியில் அணியில் சேர்க்கப்படாத நிசன்கா, இம்முறை கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். 23 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பவர்பிளே வரை நிசன்காவை விட மெதுவாக ஆடிய ராகுல், அதன்பிறகு தானும் வேகமெடுத்தார். அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். நிசன்காவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் (9.3 ஓவர்கள்) சேர்த்த ராகுல், நித்திஷ் ராணாவுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தார். நித்திஷ் ராணா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே கே.எ.ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். 40 பந்துகளை சந்தித்த ராகுல் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷுதோஷ் ஷர்மா இருவரும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டப்ஸ் 18 ரன்களுடனும், அஷுதோஷ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதனால், 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது டெல்லி கேபிட்டல்ஸ்.
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியின் மிகப் பெரிய சேஸ் இதுதான்.

பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்தப் போட்டிக்கான ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் ரவி பிஷ்னாய் மீண்டும் இடம்பிடித்தார்.
பிளேயிங் லெவன்: யஷஷ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டானவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஷுபம் துபே, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னாய், நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆடம் மில்ன், தசுன் ஷனகா, ரவி சிங், யஷ் ராஜ் புஞ்சா, துஷார் தேஷ்பாண்டே.
டெல்லி கேபிட்டல்ஸ்
இந்தப் போட்டிக்கான கேபிட்டல்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டதாக அக்ஷர் பட்டேல் தெரிவித்தார்.
பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), பதும் நிசன்கா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், நித்திஷ் ராணா, அக்ஷர் பட்டேல், அஷுதோஷ் ஷர்மா, கைல் ஜேமீசன், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டி.நடராஜன்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: டேவிட் மில்லர், விப்ராஜ் நிகம், கருண் நாயர், அபிஷேக் பொரெல், ஆகிப் நபி.































