ஆர்சிபி மீண்டும் சாம்பியன்: மூன்று முறை தவறவிட்டதை இம்முறை சாதித்த கோலி

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி 2026 ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இதன்மூலம் அடுத்தடுத்த ஐபிஎல் கோப்பைகள் வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது ஆர்சிபி.
ராயல் சேலஞ்சர்ஸின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார் விராட் கோலி. 156 என்ற இலக்கை ஆர்சிபி சேஸ் செய்ய, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 75 ரன்கள் எடுத்து தன் அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் விராட் கோலி.
பந்துவீச்சாளர்கள் தங்கள் அணிக்கு நல்லதொரு செயல்பாட்டைக் கொடுத்து போட்டியை எளிமையாக்கிக் கொடுத்தாலும், பேட்டிங் செய்ய சற்றே கடினமான அந்த ஆடுகளத்தில் ஆட்டம் தங்கள் கையை விட்டுப் போகாமல் பார்த்துக் கொண்டார் விராட் கோலி.
இந்த சீசனில் 675 ரன்கள் எடுத்து தன் அணியின் டாப் ரன்ஸ்கோரராகத் திகழ்ந்திருக்கிறார் விராட். ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் 4வது இடத்தில் முடித்திருக்கிறார். அதுவும் 165.84 என்ற ஸ்டிரைக் ரேட்டில். விராட்டின் 19 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சிறந்த ஸ்டிரைக் கொண்ட சீசன் இதுதான்.
ஒரு பேட்டராக விராட் கோலி இம்முறை தன்னுடைய புதியதொரு பரிணாமத்தைக் காட்டியிருக்கிறார். சீரான ஆட்டத்தை வேகமாகவும் தன்னால் கொடுக்க முடியும் என்று அவர் நிரூபித்திருக்கிறார். அதன் உச்சமாக, இறுதிப் போட்டியில் 25 பந்துகளிலேயே அரைசதம் கடந்து, தன் அதிவேக ஐபிஎல் அரைசதத்தையும் அவர் பதிவு செய்தார்.
இப்படி சாதனைகளுக்காகவும், புதுமைக்காகவும் மட்டும் விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் முக்கியத்துவம் பெற்றுவிடவில்லை. இது, 19 ஆண்டுகளில் விராட் கோலியால் செய்ய முடியாமல் இருந்த ஒரு விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.
3 முறை தவறிய இம்முறை சாதித்து காட்டிய கோலி
விராட் கோலியை 'சேஸ் மாஸ்டர் என்று கிரிக்கெட் உலகம் கொண்டாடுகிறது. கடினமானதாக இருந்தாலும் இலக்குகளை துரத்தி வெற்றிகரமாகப் போட்டியை முடித்துக் கொடுப்பதில் வல்லவர் அவர். இந்தியா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி என ஒவ்வொரு மட்டத்திலும் தான் விளையாடிய அணிக்காக பல்வேறு போட்டிகளை சேஸ் செய்து வென்றுகொடுத்திருக்கிறார்.
ஐபிஎல் அரங்கில், அந்தக் கோப்பையை வென்று கொடுக்கக்கூடிய இறுதிப் போட்டிகளில் அவரால் அதைச் செய்ய முடியாமல் இருந்தது. அதுவும் 3 முறை...
2009 ஐபிஎல் ஃபைனல் - 144 என்ற இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி அணிக்காக ஆறாவது வீரராகக் களமிறங்கினார் கோலி. 34 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார் அவர். 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் இளம் விராட் கோலி. 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி.

பட மூலாதாரம், Getty Images
அப்போது அவர் பெரிய வீரராகவோ, மிகப் பெரிய ஃபினிஷராகவோ உருவெடுத்திருக்கவில்லை. அவர் போட்டியை முடித்துக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் அப்போது இருக்கவில்லை. கோலியால் போட்டியை முடித்து கோப்பையை முடித்துக்கொடுக்க முடியவில்லை.
2011 ஐபிஎல் ஃபைனல் - 206 ரன்களை துரத்திய ஆர்சிபி 20 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்தாவது பந்தில் களமிறங்கி 10வது ஓவர் வரை களத்தில் நின்ற விராட் கோலியால் 35 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒருபக்கம் கிறிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ் என்று தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருக்க, நம்பிக்கை நாயகன் கோலியால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை.
2016 ஐபிஎல் ஃபைனல் - இலக்கு 209 ரன்கள். 13வது ஓவர் வரை களத்தில் இருந்த கோலி 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் அவுட்டாகி வெளியேறியபின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிய, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஆர்சிபி. கேப்டன் கோலியால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.
அந்த இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற முடியாததற்கு எந்த வகையிலும் கோலி காரணம் இல்லை. ஆனால், சவாலான கட்டங்களில் தன் அணியைக் கரைசேர்த்த அந்த வீரரால், அந்த ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் மட்டும் அதைச் செய்ய முடியாமல் இருந்தது.
நேற்று, அதையும் கோலி சாதித்துக் காட்டியிருக்கிறார். ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் தன் ஆஸ்தான பாணியில் சேஸிங்கை அரங்கேற்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்றுகொடுத்திருக்கிறார் விராட் கோலி.
2025 சீசனில் கோப்பையை முதன் முறையாக வென்றபோது முதலில் பேட்டிங் செய்திருந்தது ஆர்சிபி. இந்த முறையோ சேஸிங் - இதற்கு முன் சேஸ் செய்திருந்த 3 ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில், தற்போது அதையும் கோலி மாற்றியிருக்கிறார்.
'சேஸ் மாஸ்டர்' என்பதற்கேற்ப, கடைசி வரை களத்தில் நின்று, தன் அதிவேக ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்து, போட்டியை முடித்து, ஆட்ட நாயகனாகவும் மகுடம் சூடியிருக்கிறார் அவர்.
கோலியின் விக்கெட் ஏன் முக்கியம்?
இந்தப் போட்டிக்கு முன்னதாகவே பல முன்னாள் வீரர்கள் இதுபோன்ற பெரிய இறுதிப் போட்டியில் கோலியின் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசியிருந்தார்கள்.
தன் யூடியூப் சேனலில் இந்த இறுதிப் போட்டி பற்றி விவாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஶ்ரீகாந்த், "இந்தப் போட்டியில் கோலியின் விக்கெட் மிகவும் முக்கியம். அவரை 15 - 20 ரன்களுக்கு மேல் எடுக்கவிட்டால் அது குஜராத்துக்கு ஆபத்து. அதற்குள் வீழ்த்திவிட்டால், அது மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்" என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், ANI
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் இயக்குநர் டாம் மூடி, "கோலி 35 ரன்களுக்கு மேல் எடுத்தாலோ, ஹேசில்வுட் 45 ரன்களுக்கும் குறைவாக கொடுத்தாலோ அது ஆர்சிபிக்கு சாதகமான முடிவையே கொடுத்திருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் போன்ற மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் வீரர்கள் இருந்தாலும், இறுதிப் போட்டி என்று வரும்போது கோலியின் விக்கெட் முக்கியம் என்று அவர்கள் கூறுவதற்கான காரணம், கடினமான சூழ்நிலைகளை சமாளித்து ஆட்டத்தை தன் அணிக்காக முன்னெடுத்துச் செல்லும் அனுபவம் கொண்டவர் கோலி. மற்ற எல்லா போட்டிகளை விடவும் இறுதிப் போட்டி அந்த நெருக்கடியை ரொம்பவே அதிகமாக ஏற்படுத்தும்.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை 156 என்பது எளிய இலக்கு தான்... ஆனால், அது எதிர்பார்த்ததைப் போல் மிகவும் எளிமையான சேஸாக இருக்கவில்லை.
ஆரம்பத்தில் 156 என்ற இலக்கு எளிதானதாகவே தோன்றியது. ஆர்சிபி தங்கள் சேஸை தொடங்கிய விதம் அது அப்படி இருக்கும் என்பதை உணர்த்தியது. ஆனால், மிடில் ஓவர்களில் அது மெல்ல மாறத் தொடங்கியது. ரஷித் கான் வீசிய ஒரு ஓவர் குஜராத் டைட்டன்ஸுக்கு நம்பிக்கை கொடுத்தது. ஆர்சிபி அணியில் சிறு கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், ஆட்டம் மாறுவதற்கான சாத்தியக்கூறு அங்கு அதிகமாகவே இருந்தது.
9வது ஓவரில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட 91/4 என்ற நிலைக்குச் சென்றது ஆர்சிபி. வெற்றிக்கு இன்னும் 65 ரன்கள் தேவை. அந்த நிலையில் போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஏனெனில், ஒருபக்கம் ரஷித் கான் தன் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். மற்றொருபக்கம் ஆர்சிபி-யின் அடுத்து வரும் பேட்டர்கள் இந்த சீசனில் பெரும் பங்களிப்பைக் கொடுக்கவில்லை.
இந்த சீசனில், இந்தப் போட்டிக்கு முன் விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் மொத்தமே 105 ரன்கள் தான் எடுத்திருந்தார் ஜித்தேஷ் ஷர்மா. ரொமாரியோ ஷெப்பர்ட் அடித்திருந்ததோ 7 இன்னிங்ஸ்களில் 83 ரன்கள். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் சுழலுக்கு எதிராக எப்படித் தடுமாறினார் என்பதைப் பார்த்தோம்.

பட மூலாதாரம், ANI
அப்படியிருக்கையில், அடுத்த ஓரிரு ஓவர்களில் இன்னொரு விக்கெட் விழுந்தாலும் அங்கே ஆர்சிபி மீதான நெருக்கடி அதிகரித்துவிடும். ரஷித் கான், ரபாடா, ஹோல்டர் போன்றவர்களுக்கு ஓவர்கள் மீதமிருக்கும்போது அது சாத்தியம். உதாரணமாக, மீண்டும் அந்த ஐபிஎல் 2016 இறுதிப் போட்டிக்கே செல்லலாம். கோலி அவுட்டான பின், ஆர்சிபி அணிக்கு 43 பந்துகளில் 68 ரன்கள் தான் தேவைப்பட்டன. 8 விக்கெட் கையிலிருக்கையில் ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவாகவே தேவை. இருந்தாலும், அந்தப் போட்டியைத் தோற்றது ஆர்சிபி. டி20 போட்டிகளில் எதுவும் சாத்தியமே.
அதனால்தான் இதுபோன்ற இடங்களில் கோலியின் விக்கெட் அதீத முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக இதுபோன்ற போட்டிகளில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிடுகிறது. அதை தன் அனுபவத்தின் மூலம் நிறைவேற்றினார் கோலி. ஆரம்பத்தில் அதிரடி காட்டியவர், அந்த இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்ததும் டிம் டேவிட் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார். இலக்கை நெருங்கிய பிறகு மீண்டும் அதிரடியைக் கையில் எடுத்து போட்டியை முடித்தார்.
அதிரடியும், கட்டுக்கோப்பும் நிறைந்த இன்னிங்ஸ்
இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை சுமந்த ஒரு இன்னிங்ஸில் நிலைத்து நின்று விளையாடியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய அதிவேக ஐபிஎல் அரைசதத்தை (25 பந்துகளில்) பதிவு செய்தார் விராட் கோலி.
இது அவருடைய மிகவும் அதிரடியான இன்னிங்ஸ்களில் ஒன்று. ககிஸோர் ரபாடா வீசிய 4வது ஓவரின் முதல் 4 பந்துகளில் மட்டும் அவர் 18 ரன்கள் எடுத்தார். அதில் மணிக்கு சுமார் 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட ஒரு பந்தை அநாயசமாக ஃபிளிக் செய்து சிக்ஸராக்கினார். பர்ப்பிள் கேப் வென்ற ரபாடாவுக்கு எதிராக இந்தப் போட்டியில் 12 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார் கோலி.
ஆனால், இதை வெறுமனே அதிரடி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அவை மிகவும் கவனமாகவும் திட்டமிட்டும் ஆடப்பட்ட ஷாட்கள். இந்த அதிரடிக்கு மத்தியில் அவருடைய கட்டுக்கோப்பான ஆட்டம் வெளியே தெரியாமல் இருந்திருக்கலாம்.
இந்த இன்னிங்ஸில் விராட் கோலி அடித்தது 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள். அவை அனைத்துமே லெக் சைடில் அடிக்கப்பட்டவை. அவர் அடித்த 75 ரன்களில் 66 ரன்கள் லெக் சைட் அடிக்கப்பட்டவையே! அரைசதம் கடக்கும் வரை வெறும் 3 ரன்கள் மட்டுமே அவர் ஆஃப் சைட் ஆடியிருந்தார். ஒட்டுமொத்தமாக அவர் ஆஃப் சைடில் அடித்த 9 ரன்களுமே கூட மிகவும் இலகுவாக அடிக்கப்பட்ட ஷாட்களே. அவையும் கூட ரஷித் கான் மற்றும் அர்ஷத் கான் இருவருக்கும் எதிராக மட்டுமே வந்தது. ஆஃப் சைட் பவுண்டரி அடிக்கும் எண்ணத்தோடு அவர் அவ்வளவாக பெரிய ஷாட்கள் ஆடவேயில்லை.

பட மூலாதாரம், ANI
இதற்குக் காரணம், பல தருணங்களில் அது கோலியின் விக்கெட்டைப் பதம் பார்த்திருந்ததுதான். குவாலிஃபயர் 1 போட்டியில் ஹோல்டர், அவுட் சைட் ஆஃப் வீசிய பந்தை அடிக்கச் சென்று இன்சைட் எட்ஜாகி போல்டானார் கோலி. சன்ரைசர்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சகிப் ஹுசைன் பந்துவீச்சில் கவர் திசையில் கேட்சானார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டக் அவுட் ஆனபோது அவர் கேட்சான இடம் மிட் ஆஃப். இப்படி எதுவும் இறுதிப் போட்டியில் நடந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் கோலி.
ரபாடா, சிராஜ், ஹோல்டர் போன்ற பௌலர்கள் பெரும்பாலும் ஸ்டம்ப் லைனில் பந்துவீசியதால் அவற்றை லெக் சைடில் ஆடுவது கோலிக்கு எளிதாக இருந்தது. ஆஃப் சைட் வீசப்பட்ட ஒருசில பந்துகளையும் அவர் கட்டுப்பாட்டோடு எதிர்கொண்டு ஆஃப் சைட் பெரிய ஷாட்கள் ஆடுவதைத் தவிர்த்தார். இடது கை பௌலரான அர்ஷன் கான் 'ஓவர் தி ஸ்டம்ப்' வந்து வீசியதால், அந்த கோணத்தைப் பயன்படுத்தி ஆஃப் சைடில் சிங்கிள்கள் எடுத்தார். அவர் ஆஃப் சைட் எடுத்த 9 ரன்களில், 5 ரன்கள் அர்ஷத்துக்கு எதிராகவும், 4 ரன்கள் ரஷித்துக்கு எதிராகவும் வந்தவை. அர்ஷர்த்துக்கு எதிராக அடிக்கப்பட்டவை அனைத்துமே சிங்கிள்கள். எதுவுமே அபாயம் இல்லாத இலகுவான ஷாட்கள்.
கோலியின் இந்த இன்னிங்ஸ் 100 சதவிகிதம் கட்டுக்கோப்பானதாக இருந்ததா என்றால் இல்லை. ஒரேயொரு ஷாட்டை மட்டும் அவர் ஆஃப் சைட் தூக்கி அடித்தார் - ஷுப்மன் கில் கேட்ச் பிடித்த அந்த ஒற்றைப் பந்து. கில் பந்தைப் பிடித்தபோது பந்து தரையில் பட்டுவிட்டதால் அவுட்டாவதில் இருந்து தப்பித்தார் கோலி. அதுவும் கூட வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட பிறகு அடிக்கப்பட்ட ஷாட் தான். ஆரம்ப கட்டத்தில் அவர் அப்படி எதையும் முயற்சி செய்திடவில்லை.
மற்றபடி இப்படித்தான் ஆடவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் கோலி. இந்த இறுதிப் போட்டியில் அதில் வெற்றியும் கண்டார். அதன் மூலம் 3 முறை தன் அணிக்காக முடித்துக்கொடுக்க முடியாததை, இம்முறை முடித்துக் கொடுத்தார் 'சேஸ் மாஸ்டர்' கோலி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































