பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் - நீட் விவகாரத்தில் மோதி கூறியது என்ன?

பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் - நீட் விவகாரத்தில் மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், பிரதமரின் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சிஜேபி போராட்டத்தைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை எதிர்த்து விவசாய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள மகாபஞ்சாயத்தும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் பெருமளவிலான காவல் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, காகர் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிமெண்ட் தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் விவசாயிகள் தலைவர் சர்வன் சிங் பாந்தர், செவ்வாய்க்கிழமை காலை ஷம்பு எல்லையில் விவசாயிகளைத் தடுத்ததற்காக ஹரியாணா அரசைக் கடுமையாகச் சாடினார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறவுள்ள கிசான் மகாபஞ்சாயத்தில் பங்கேற்கச் செல்லும் விவசாயிகளைத் தடுப்பதற்காகவே, ஷம்பு எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

டெல்லி சிஜேபி போராட்டம், விவசாயிகள் குற்றச்சாட்டு
படக்குறிப்பு, பஞ்சாப்-ஹரியாணா எல்லையான ஷம்புவில் விவசாயிகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், "தேஷ் பச்சாவோ மோர்ச்சா" அமைப்பின் கீழ் டெல்லியில் விவசாயிகள் மகாபஞ்சாயத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த மகாபஞ்சாயத்தில் பங்கேற்பார்கள் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பேருந்துகள் மூலம் டெல்லி செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லி செல்ல விரும்புவதாகவும், ஆனால் ஹரியாணா அரசு அவர்களை ஷம்பு எல்லையிலேயே தடுப்பதாகவும் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்தார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் பெருமளவிலான காவல் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஷம்பு எல்லையில் பெருமளவிலான காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பதேகர் சாஹிப்பில் செய்தியாளர்களிடம் பேசிய பாந்தர், ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனியையும் கடுமையாகச் சாடினார்.

முதல்வர் அடிக்கடி பஞ்சாபிற்கு வந்து மக்களுக்குப் பெரிய வாக்குறுதிகளை அளித்தபோதிலும், ஷம்பு எல்லையில் விவசாயிகளைத் தடுத்ததன் மூலம் அவரது "உண்மை முகத்தை" வெளிப்படுத்திவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

"முன்மொழியப்பட்ட இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் விரும்புகிறார்கள்.

ஷம்பு எல்லையை அடைந்த பிறகு, மற்ற விவசாயத் தலைவர்களுடன் பேசிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்" என்று பந்தேர் கூறினார்.

திங்களன்று, கிசான் மகாபஞ்சாயத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்று கொண்டிருந்த பாரதிய கிசான் யூனியன் (சாதுனி) தலைவர் குர்னம் சிங் சாதுனியை, குருக்ஷேத்ராவில் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டார்.

போராட்டத்தில் பங்கேற்க முடியாதபடி, ஹரியாணா காவல்துறை தங்களது ஏராளமான தொண்டர்களைக் கைது செய்து வருவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிரின்ஸ் வாரைச் குற்றம் சாட்டியிருந்தார்.

காங்கிரஸ் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், @INCIndia

படக்குறிப்பு, ராகுல் காந்தி தலைமையில் 7 காங்கிரஸ் எம்பிக்கள், லோக் கல்யாண் மார்க் சென்றடைந்துள்ளனர்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் எம்.பிக்கள் நடத்திய போராட்டம் குறித்துத் தெரிவித்தார்.

"நேற்று இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்துப் பிரதமரிடம் பதில்களைக் கோரி நாங்கள் பிரதமர் மோதியின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றுள்ளோம். இந்த அரசு எந்தப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை அல்லது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கத் தயாராக இல்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைத்ததற்காகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்." என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போராட்டக் களத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் கட்சி எம்பிக்களுடன் இருந்தார்.

அவரது தனது பதிவில், "காங்கிரஸ் கட்சியானது மாணவர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அவர்களுடன் துணை நிற்கிறது. நாங்கள் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் அமர்ந்துள்ளோம்." என குறிப்பிட்டுள்ளார்.

அபிஜித் தீப்கே மன்னிப்பு கேட்டது ஏன் ?

 அபிஜித் திப்கே

பட மூலாதாரம், Sanjeev Verma/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, டெல்லி காவல்துறையின் நடவடிக்கையிலிருந்து போராட்டக்காரர்களைப் பாதுகாக்க இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று அபிஜித் திப்கே கூறினார் (கோப்புப் படம்).

காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே, டெல்லி காவல்துறையின் தடியடியிலிருந்து போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதில் தான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று கூறி தனது ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அபிஜித் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஆண் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். டெல்லி காவல்துறையின் இந்த மனிதநேயமற்ற செயல்களிலிருந்து உங்களைக் காப்பாற்ற நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் இறப்பிற்கு காரணமான தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக, இன்னும் பல இளம் மாணவர்களை ரத்தம் சிந்த வைக்க அரசு தயாராக இருந்தது. நீங்கள் காயமடைந்திருந்து இந்தப் பதிவைப் பார்த்தால், எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்புங்கள். நான் உங்களுடன் நேரில் பேசி மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று எழுதியுள்ளார்.

தங்களது ஆதரவாளர்களுக்காக கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தீப்கே தெரிவித்துள்ளார்.

திங்களன்று சிஜேபி ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்றப் பேரணியின் போது பல போராட்டக்காரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் பலரை அபிஜித் தீப்கே சந்தித்தார்.

போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு தொடர்பான பல வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இருப்பினும், காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து இரு தரப்பினரும் வெவ்வேறுவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியது என்ன?

தற்போது, ​​சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், திங்களன்று காக்ரோச் ஜனதா கட்சி போராட்டக்காரர்களால் நடத்தப்பட்ட 'நாடாளுமன்றப் பேரணியின்' போது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு குறித்து கவலை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Kabir Jhangiani/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, காவல்துறையின் நடவடிக்கை குறித்து விசாரிக்கவும், போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்திய அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது (கோப்புப் படம்).

தற்போது, ​​சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, திங்களன்று காக்ரோச் ஜனதா கட்சி போராட்டக்காரர்களால் நடத்தப்பட்ட 'நாடாளுமன்றப் பேரணியின்' போது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு குறித்து கவலை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தவும், போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்திய அதிகாரிகளுக்கு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

"டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் தடிகளையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்" என்று அதன் ஆசிய பிராந்திய துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமையைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியது என்ன?

இந்தியாவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், போராட்டக்காரர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமாகப் படைபலம் உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Sajjad HUSSAIN/AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது (படம்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர்)

திங்களன்று காக்ரோச் ஜனதா கட்சி போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு பயன்பாடு குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், போராட்டக்காரர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமாகப் படைபலம் உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

"ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இருந்து வெளிவரும் படங்களும் செய்திகளும், இந்தியாவில் அமைதியான முறையில் எழுப்பப்படும் எதிர்ப்புக் குரல் ஒடுக்கப்படுவதையே காட்டுகின்றன" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் வாரியத் தலைவர் ஆகார் படேல் தெரிவித்துள்ளார்.

"செய்திகளின்படி, அமைதியாகப் போராடியவர்கள் மீது காவல்துறையினர் அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தியுள்ளனர், அவர்கள் நாடாளுமன்றத்தைச் சென்றடைவதைத் தடுக்கத் தடுப்புகளையும் அமைத்துள்ளனர். அதிகாரிகள் மெட்ரோ ரயில் சேவைகளையும் இணையத்தையும் முடக்கி, அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை மேலும் கட்டுப்படுத்தியுள்ளனர்"என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது அதிகாரிகளின் வேலை அல்ல. மாறாக அவற்றைப் பாதுகாப்பதும் அனுமதிப்பதுமே அவர்களின் கடமையாகும். அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

சர்வதேச மனித உரிமைகள் விதிகளின்படி டெல்லி காவல்துறை சரியான, தேவையான மற்றும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

"டெல்லி காவல்துறை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமாகப் பலத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

காவல்துறையினரின் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு மற்றும் கல்வீச்சு போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாகவும், நடுநிலையாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்றும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?

 பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Ajay Aggarwal/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்த அரசின் நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோதி முன்வைத்தார் (கோப்புப் படம்).

மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் 'மங்கள் மிலன்' கூட்டத்தில், வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்தார்.

அந்த கூட்டத்திற்குப் பிறகு, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிரதமரின் உரை குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அதுகுறித்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நீட் தேர்வு தொடர்பாக, முறைகேடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்" என்றார்.

"மாணவர்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளித்து, மறுதேர்வு நடத்தப்பட்டு, எவ்வித தாமதமுமின்றி முடிவுகள் வெளியிடப்பட்டதாகப் பிரதமர் மோதி கூறினார். வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்" என்று ரிஜிஜு தெரிவித்தார்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வரும் நேரத்தில், பிரதமர் மோதி கூறியதாக இந்த கருத்து வெளியாகியுள்ளது.

கார்கே, பிரியங்கா காந்தி கூறியது என்ன?

மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவல்துறை நடவடிக்கைக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தனர் (கோப்பு படம்)

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சிஜேபி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் குரல் எழுப்பும் மாணவர்களைத் தாக்குவது கண்டனத்திற்குரிய விஷயம் என்று மல்லிகார்ஜுனா கார்கே மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய மல்லிகார்ஜுனா கார்கே, "நமது நாட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு அவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது. அவர்கள் தாக்கப்பட்டனர், அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இது மிகவும் கண்டனத்திற்குரிய விஷயம் " என்றார்.

அவைக்கு வெளியே ஊடகங்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோதி 'இளைஞர்களுக்கு எதிரானவர்' என்று கூறினார்.

"வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு, தடியடிக்கும் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கும் ஆளாக்கப்படும் அந்த இளைஞர்களுக்கே இந்த அவை சொந்தமானது. அவர்கள் தான் நம்மை இந்த அவைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, "மோதிஜி இளைஞர்களுக்கு எதிரானவர், ஏழைகளுக்கு எதிரானவர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரானவர். 12 ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் அதைப் பார்க்கிறீர்கள். நீங்கள் குழந்தைகளின் குரலுக்குச் செவிசாய்த்து, அமைச்சரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். முந்தைய காலத்தில் அமைச்சர்கள் பொறுப்பேற்கும் வழக்கம் இருந்தது. நீங்களும் பொறுப்பேற்று இந்த முறையைச் சீரமைக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு