சென்னை - மதுரை ரயிலில் ரூ.150 கோடி போதைப்பொருளுடன் சென்ற நபர் சிக்கியது எப்படி?

மெத்தம்பெட்டமைன்
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

மதுரைக்கு இன்று (வெள்ளி, மார்ச் 1) அதிகாலை வந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய நபரிடமிருந்து மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளைக் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் விலை 150 கோடி ரூபாய் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

டெல்லியில் இரு வாரங்களுக்கு முன்பு 50 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை குடோனிலிருந்து பறிமுதல் செய்த டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல ஆண்டுகளாக உணவுப் பொருட்களில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருளை கலந்து வெளிநாடுகளுக்கு கடத்திய தகவல் தெரியவந்ததாகக் கூறினர்.

மேலும், இந்தக் கடத்தல் சம்பவங்களில் திரைப்பட தயாரிப்பாளரும் தி.மு.க சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணைப் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகமால் தலைமறைவாக இருந்ததால் அவரது வீட்டில் ஆய்வு நடத்தி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதற்கிடையில் இந்திய கடல் படை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து கடந்த பிப்ரவரி 27- ஆம் தேதி குஜராத் கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,300 கிலோ போதை பொருட்கள் கடத்தலை தடுத்து 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிடிபட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் சேர்ந்தவர்களுடன் தொடர் இருக்கலாம் எனப் பத்திரிக்கை செய்திகள் வெளியாகியிருக்கிறது.

மெத்தம்பெட்டமைன்
படக்குறிப்பு, பிரகாஷ்

என்ன நடந்தது?

இந்நிலையில் சென்னையிலிருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு மார்ச் 1-ஆம் தேதி அதிகாலை வந்தடைந்த பொதிகை விரைவு ரயிலிருந்து இரண்டு பெட்டி, பேக்குடன் இறங்கிய ஒரு நபரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரக அதிகாரிகள் DRI (Directorate of Revenue Intelligence) பிடித்து அழைத்துச் சென்று அவரை சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் 15 கிலோ பவுடர், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சென்னையைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என்பது தெரியவந்தது.

மெத்தம்பெட்டமைன்

6 மணி நேரம் நீடித்த விசாரணை

மதுரை ரயில் நிலையத்தில் போதைப்பொருளுடன் பிடிபட்டவரிடம் இரயில்வே போலீசாரும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளும் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மதுரையில் இருக்கும் அவர்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கே வைத்து இருக்கும் சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா, போதைப்பொருளை எப்படி கொண்டு வந்தார் என விசாரணை செய்து வருவதாக ஒரு ரயில்வே அதிகாரி கூறினார்.

மெத்தம்பெட்டமைன்

'கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 6 கிலோ போதை பொருள் மீட்பு'

மேலும் பேசிய அவர், மதுரை ரயில் நிலையத்தில் பிடிபட்ட பிரகாஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சில போதைப்பொருள் பொட்டலங்களை சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்திருப்பதாக தகவல் அளித்து உள்ளார், என்றார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் ஆய்வு நடத்தச் சென்றனர், என்று அவர் கூறினார். ஆனால் அவரது மனைவி அந்த போதைப் பொருள் பொட்டலங்களை அருகில் இருக்கக்கூடிய குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். அது கொடுங்கையூர் குப்பைகிடங்கிற்குச் சென்றுவிட்டது.

“கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்குச் சென்ற அதிகாரிகள் அங்கு 3 பொட்டலங்களில் ஆறு கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைனை கைப்பற்றி இருக்கிறார்கள்," என வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக தனது அறிக்கையில் கூறியுள்ளது.

'இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி'

மேலும், வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக தனது அறிக்கையில் "சென்னையிலிருந்து ரயில் வழியாக மதுரைக்கு எடுத்துவரப்பட்ட இந்த போதைப் பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது பிரகாஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," எனக் கூறியுள்ளது.

மேலும், "மதுரை, சென்னையில் மொத்தமாக கைப்பற்றப்பட்ட 36 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைனின் சர்வதேச மதிப்பு 180 கோடி ரூபாய் இருக்கும்," என குறிப்பிடப்பட்டுள்ளது.

மெத்தம்பெட்டமைன்

'பொது பெட்டியில் போதைப்பொருளுடன் பயணம்'

இது குறித்து ஒரு ரயில்வே அதிகாரி கூறும்போது, இன்று அதிகாலை 4:30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்த பொதிகை விரைவு ரயிலின் பொதுப்பெட்டியில் பயணம் செய்த சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் (42) என்பவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ரயிலில் பின்தொடர்ந்து வந்து கைது செய்தனர், என்றார்.

“அவரிடம் இருந்து 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து மேலும் விசாரணை செய்வதற்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்," என்று கூறினார்.

மேலும் மெத்தம்பெட்டமைன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை தொடர்கிறது என்று கூறிய அவர்கள், அது குறித்துத் அதிகப்படியான தகவலைக் கூற மறுத்துவிட்டனர்.

மெத்தம்பெட்டமைன்

பட மூலாதாரம், Raja Soundara Pandian

படக்குறிப்பு, இராஜ செளந்தர பாண்டியன்

'மெத்தம்பெட்டமைன் உடல் உறுப்புகளைச் சிதைக்கும்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மெத்தபெட்டமைனை தொடர்ந்து பொஅயன்படுத்தினால் உடல் உறுப்புகள் செயலிழக்கும், என்கிறார் மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிக்கிசையாளர் ப இராஜ செளந்தர பாண்டியன்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர் "இந்த மெத்தம்பெட்டமைன் உடல் பருமன் (Obesity) சிகிச்சை, கவனச் சிதறல் (distraction), மற்றும் ஹைப்பர் ஆக்டிவ் (Hyperactive) குழந்தைகளுக்கு மருத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளில் இருக்கும். இது பவுடர், மற்றும் திரவ வடிவில் கிடைக்கக் கூடியது. இது மூளையின் செயல்பாட்டை தூண்டி ஒரு விதமான மயக்க நிலையை கொடுக்கும்,” என்றார்.

மேலும், இந்த போதைப்பொருளை பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை இதுபோன்ற போதைப்பொருளை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். இதனை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு செயல் இழக்க வைத்துவிடும், என்று இராஜ செளந்தர பாண்டியன் கூறினார்.

“இந்த போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர்கள் சமூகத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள துவங்கி விடுவார்கள். எனவே, பெற்றோர்கள் பதின்ம வயதில் (adolescent) உள்ள தங்களது பிள்ளைகளை கவனித்தால் மட்டுமே போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க முடியும்," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)