மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், Ashish Shetty/BBC

படக்குறிப்பு, காவிரி நதி
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

'மொபைல் சிக்னல் எடுப்பதில்லை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானுயர்ந்து நிற்கும் மரங்களைத் தவிர எதுவுமில்லை, ஆர்ப்பரித்து ஓடும் நதியின் ஓசை மட்டும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது'

மேகேதாட்டு என்கிற பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு நேரில் சென்றபோது நிலவிய சூழலை இப்படித்தான் விவரிக்க முடியும். காவிரி நதி நீர் பங்கீட்டை ஒட்டிய மேகேதாட்டு அணை தொடர்பான விவாதங்களை பிபிசி தமிழின் இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது.

காவிரி - இந்தப் பெயருக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லை.

இந்தக் காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. காவிரி நதி நீர் சிக்கலைத் தீர்க்க இந்த அணை அவசியம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.

"மேகேதாட்டு திட்டம் கர்நாடகாவைவிட தமிழ்நாட்டிற்குத் தான் அதிகம் உதவும்," என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் பேசியிருந்தார்.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

ஆனால் இந்தத் திட்டம் வந்தால் தங்களுக்கான காவிரி நீர் பங்கீட்டில் பாதிப்பு ஏற்படும் என்பது தமிழ்நாட்டின் குரலாக இருக்கிறது.

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாட்டில் தீவிர எதிர்ப்பு நிலவும் சூழலில் கர்நாடகாவிலும் அதற்கு எதிர்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.

இதில் பல சிக்கல்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டும் கர்நாடகாவில் உள்ள சூழலியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

கர்நாடகாவிலேயே மேகேதாட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது ஏன்? மேகேதாட்டு எங்கே உள்ளது? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன கூறுகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடி பிபிசி தமிழ் களத்திற்குச் சென்றது.

மேகேதாட்டு எங்கு உள்ளது?

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, சங்கமா மற்றும் மேகேதாட்டு இடையே தான் புதிய அணை கட்டுவதற்கான இடத்தை கர்நாடக அரசு முன்மொழிந்திருக்கிறது.

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 90 கிமீ தொலைவில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லையை ஒட்டி காவிரி வன விலங்கு சரணாலயத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மேகேதாட்டு அமைந்துள்ளது.

கர்நாடகாவில் நீண்ட தூரம் மலைப்பாங்கான இடங்களைக் கடந்து வரும் காவிரியில் சங்கமா என்கிற இடத்தில் அர்காவதி நதி இணைகிறது.

பிபிசி தமிழ் சங்கமாவிற்குச் சென்றபோது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைகளில் நீர் இருப்பு அதிகரித்ததால் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இதனால் காவிரியில் நீர் ஆர்ப்பரித்துச் சென்றதைப் பார்க்க முடிந்தது. அர்காவதி நதியில் நீரின் வேகம் குறைவாகவே இருந்தது.

சங்கமா வரை வாகனத்தில் செல்ல முடியும். சங்கமாவிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் மேகேதாட்டு காட்சி முனை அமைந்திருக்கிறது. வனத்துறையின் பேருந்து அல்லது ஜீப் மூலம் மட்டுமே அங்கு செல்ல முடியும்.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், Ashish Shetty/BBC

படக்குறிப்பு, இடதுபுறம் அர்காவதி நதி மற்றும் வலதுபுறம் காவிரி நதி இணையும் சங்கமா

சங்கமாவுக்கும் மேகேதாட்டுவுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் தான் புதிய அணையைக் கட்டுவதற்கான இடத்தை கர்நாடகா அரசு முன்மொழிந்துள்ளது.

சங்கமாவைக் கடந்து பரந்து விரிந்து பாயும் காவிரி நதி மேகேதாட்டு பள்ளத்தாக்கில் சுருங்கி ஆழமான நதியாக சிறிது தூரம் பயணிக்கிறது. இந்த இடத்தை மேகேதாட்டு நீர்வீழ்ச்சி என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

இங்கு யானைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேகேதாட்டுவில் இருந்து தமிழ்நாடு - கர்நாடகா எல்லையை ஒட்டியே பயணிக்கும் காவிரி நதி பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளைக் கடந்து காவிரி நதி தமிழ்நாட்டிற்கு வந்தடைகிறது.

"காவிரி வனவிலங்கு சரணாலயம் போன்ற உள்நாட்டு மரங்களைக் கொண்ட வனப்பகுதிகள் நீரைத் தக்க வைத்து அதிக அளவில் கார்பனை உறிஞ்சும் திறன் கொண்டவை," என்கிறார் விஞ்ஞானி டி.வி.ராமச்சந்திரா.

இவர் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் சூழலியல் அறிவியலுக்கான மையத்தில் பணியாற்றி வருகிறார்.

'ஆடு தாண்டிய பாறை'

மேகேதாட்டு பள்ளத்தாக்கு தடிமனான, உயரமான, கூர்மையான பாறைகளைக் கொண்டது. இந்த இடம் தமிழில் பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் 'மேகதாது' எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் 'மேகேதாட்டு' என்பதே இதன் சரியான உச்சரிப்பாக உள்ளது. கன்னடத்தில் 'மேகே' என்றால் ஆடு, 'தாட்டு' என்றால் தாண்டுவது என்று பொருளாகிறது. மேகேதாட்டு என்றால் 'ஆடுதாண்டி' என்று பொருள் கொள்ளப்படுகிறது.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

இந்தப் பெயர் நாட்டுப்புற மரபில் வந்ததாகக் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் இந்த வனப்பகுதிக்குள் வசித்த புலி ஒன்று ஆட்டை துரத்தியபோது அதனிடமிருந்து தப்பிப்பதற்கு இந்த ஆடு இந்தப் பாறையைத் தாண்டியதாகவும் அதனாலே இந்த இடம் மேகேதாட்டு எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதாக கர்நாடக அரசு இணையதளம் தெரிவிக்கிறது.

மேகேதாட்டு அணை திட்டம் என்றால் என்ன?

1990களில் இருந்தே மேகேதாட்டுவில் நீர் மின் திட்டம் அமைப்பதற்கான பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் 2010-க்குப் பிறகு தான் இங்கு அணையுடன் கூடிய நீர் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை கர்நாடகா அரசு அறிவித்தது.

12,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சுமார் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாக புதிய அணை கட்டப்படும் என கர்நாடக அரசு தெரிவிக்கிறது.

கர்நாடக அரசின் கூற்றுப்படி, தொடர்ந்து வளர்ந்து வரும் பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சுமார் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குமே இந்தத் திட்டம் கட்டப்பட இருக்கிறது.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

"மேகேதாட்டுவில் அணை அமைந்தால் கூடுதல் நீரைச் சேமித்து தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிற நேரத்தின் தண்ணீரைத் திறந்துவிட முடியும்," என்கிறார் சிக்பலாபூரைச் சேர்ந்த நிரந்தர பாசனப் போராட்டக் குழுவின் தலைவர் ஆஞ்சநேயா ரெட்டி.

ஆனால் இந்தத் திட்டத்தின் பலன்கள் பெங்களூரு மக்களிடமே இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகரும் செயற்பாட்டாளருமான சேத்தன் குமார்.

"சுமார் 13,000 ஏக்கர் காடுகள், 5 கிராமங்கள், யானை வழித்தடங்கள் இதனால் மூழ்கும். மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்," என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஆதரவுக் குரல்கள் என்ன?

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக கர்நாடகாவில் அவ்வப்போது பேரணிகளும் நடத்தப்படுகின்றன.

இந்தத் திட்டம் இரு மாநிலங்கள் இடையே அரசியல் விளையாட்டாக மாறிவிட்டது என்கிறார் ஆஞ்சநேயா ரெட்டி.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, சிக்பலாபூரைச் சேர்ந்த நிரந்தர பாசனப் போராட்டக் குழுவின் தலைவர் ஆஞ்சநேயா ரெட்டி.

தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் கொடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் அதைச் சரியாகப் பின்பற்ற முடியவில்லை. சில மாதங்களில் போதிய தண்ணீர் இல்லை. சில மாதங்கள் தண்ணீர் மிகுதியாகப் பாய்ந்து கடலுக்குச் செல்கிறது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கும் பலனில்லை." என்கிறார்.

மேகேதாட்டுவில் ஓர் அணை இருந்தால் தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும் என்று கூறும் அவர், "இதனால் தமிழ்நாட்டிற்கே பலன்கள் அதிகம்." என்றும் தெரிவிக்கிறார்.

காவிரி நதி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைவரான சம்பத் குமார்.

கர்நாடகாவில் உள்ள வேளாண் அமைப்பினரும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேகேதாட்டுவில் அணை அமைந்தால் பெங்களூரு மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் குடிநீர் பெறும் என்கிறார் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைவரான சம்பத் குமார்.

கர்நாடக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆணையரகத்தின் தரவுகளின்படி, 2021-இல் 1.22 கோடியாக இருந்த பெங்களூரு மக்கள்தொகை 2031-இல் 1.47 கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.

"கர்நாடகாவிற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டிற்கும் தண்ணீர் கிடைக்கும். பெங்களூருவில் வசிக்கும் மக்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனர். அவர்களுக்கும் குடிநீர் வேண்டுமல்லவா? அவர்கள் குடிநீர் பெற தமிழ்நாட்டிற்குச் செல்ல முடியுமா? கர்நாடகா மக்களுக்கும் தண்ணீர் வேண்டும். எனவே இந்தத் திட்டத்தை எந்தச் சூழலிலும் கைவிடக்கூடாது," என்கிறார் சம்பத் குமார்.

கர்நாடகாவில் எதிர்ப்புக் குரல்கள் என்ன?

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியரான சேத்தன்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேகேதாட்டு திட்டத்திற்கு கர்நாடகாவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிற குரல்களையும் கேட்க முடிகிறது.

பெங்களூருவில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது எனக் கூறும் பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியரான சேத்தன், இந்தத் திட்டத்தால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் பற்றியும் கவலை தெரிவிக்கிறார்.

மேகேதாட்டு திட்டத்திற்கான 2019-ஆம் ஆண்டு வரைவு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இத்திட்டத்திற்கு மொத்தம் 5,252.40 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில், 3,181.90 (சுமார் 7,860 ஏக்கர்) ஹெக்டேர் நிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்தது, 1,869.5 ஹெக்டேர் (சுமார் 4,620 ஏக்கர்) பாதுகாக்கப்பட்ட வன நிலம் மற்றும் 201 ஹெக்டேர் (சுமார் 490 ஏக்கர்) வருவாய்த் துறை நிலம் ஆகும்.

இந்தத் திட்டத்திற்குச் சுமார் ரூ.9,000 கோடி செலவாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"என்னுடைய கவலை எல்லாம் அங்குள்ள சூழலியலைப் பற்றியது தான். காவிரியில் வனவிலங்குகள் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும். ஆனால் அரசாங்கம் சூழலியல் மற்றும் அங்குள்ள வெள்ள சூழ்நிலை இடையே சமநிலையை உருவாக்கினால் உதவியாக இருக்கும்," என்கிறார் சேத்தன்.

இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சூழலியல் செயற்பாட்டாளர் மேதா பட்கரும் இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகரும் செயற்பாட்டாளருமான சேத்தன் குமார்.

இது கர்நாடகாவுக்குச் சாதகமான ஒன்று என்பதிலிருந்து இது உண்மையில் கர்நாடகாவின் நலனுக்கானதா என்கிற கேள்விக்குறியாக மாறியுள்ளது என்கிறார் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் சேத்தன் குமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பெங்களூருவில் குடிநீர் சிக்கல்களுக்கு மேகேதாட்டு தான் உண்மையான தீர்வு இல்லை என கர்நாடகாவிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் யத்தினஹோலே போன்ற பெரிய வளர்ச்சித் திட்டங்களில் செலவு ரூ.13,000 கோடியிலிருந்து தொடங்கி 26 முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை சென்றதோடு மட்டுமில்லாமல் தற்போதும் முடிவடையவில்லை. இது சுற்றுச்சூழலை அழிப்பதோடு சிலருக்கு மட்டும் லாபமாகவும் இருக்கிறது." என்று தெரிவித்தார்.

மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஜூன் மாதம் திருப்பி அனுப்பியிருந்தது.

'சூழலியல் பேரிடராக அமையும்'

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, விஞ்ஞானி டி.வி.ராமச்சந்திரா.

இந்தத் திட்டத்திற்கு செய்யப்படவிருக்கும் செலவு மற்றும் இதனால் சந்திக்கவிருக்கும் இழப்புக்கு நிகராக உரிய பலன்கள் கிடைக்காது என்கிறார் விஞ்ஞானி டி.வி.ராமச்சந்திரா.

மேகேதாட்டு திட்டம் 'ஒரு சூழலியல் பேரிடராகவும் நீரியல் பேரிடராகவும் அமையும்' என்றும் அவர் தெரிவிக்கிறார்.

"சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, வனவிலங்கு சரணாலயம் போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அதனை அழித்து தான் இந்த அணை கட்ட திட்டமிடப்படுகிறது," என்றார் டி.வி.ராமச்சந்திரா.

இதன் விளைவுகளாக அவர் பட்டியலிடுபவை

  • இயற்கையாக நீரைச் சேமித்து வைக்கும் திறன் குறையும்
  • மனித - விலங்கு மோதல் அதிகரிக்கும்
  • காடுகள் அழிக்கப்படுவதால் வறட்சி மற்றும் வெப்பம் அதிகரிக்கும்

பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு என்று கூறி அந்த அளவைவிட பன்மடங்கு அதிகமாக 67 டிஎம்சி கொள்ளளவில் ஏன் அணை கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பும் அவர், சில மாற்று யோசனைகளையும் முன்வைக்கிறார்.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

அவரது கூற்றுப்படி,

  • முதலில் செய்ய வேண்டியது பெங்களூருவில் உள்ள ஏரிகளை வண்டல் அகற்றுவதன் மூலம் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும். அதன் மூலம் 15 டிஎம்சி நீரைத் தேக்க முடியும்.
  • இரண்டாவது கழிவுநீரை இயற்கை சார்ந்த தீர்வுகளின் மூலம் மறுசுழற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் 16 டிஎம்சி சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்கும். 18 டிஎம்சி தேவைப்படுகிற இடத்தில் மொத்தமாக 31 டிஎம்சி கிடைக்கும்.
  • மூன்றாவதாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா நீர்நிலைகளில் வண்டல் படிந்திருக்கிறது. இரண்டு அரசாங்கங்களும் விவேகமாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் வண்டல் அகற்றுவதை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

"இந்த விஷயங்களைச் செய்தால் கூடுதலாக அணைகளைக் கட்டாமல் ஏற்கெனவே உள்ள சேமிக்கும் திறனை திறம்பட பயன்படுத்தலாம்," என்கிறார் டிவி ராமச்சந்திரா.

தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, தமிழ்நாடு பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளரான அ.வீரப்பன்.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு வழக்கமான ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் தற்போது வரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

பெங்களூருவின் குடிநீர் தேவைக்கும் மேகேதாட்டு திட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளரான அ.வீரப்பன்.

"கடந்த 30 ஆண்டுகளில் கர்நாடகாவில் பாசனப் பரப்பு இரு மடங்கு வரை அதிகரித்துள்ளது. பெங்களூருவுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பது நோக்கமில்லை. கர்நாடகாவின் பாசனப் பரப்பை 32 லட்சம் ஏக்கருக்கும் மேல் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் பின்னால் உள்ள நோக்கம்," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எந்த விதமான அனுமதியும் வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

மேகேதாட்டு அணை அமைந்தால் காவிரி பாலைவனமாகும் என எச்சரிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கர்நாடகாவிலிருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய நீரில் 177 டிஎம்சியில் சுமார் 80 டிஎம்சி கபினி மற்றும் கே.எஸ்.ஆர் அணையைத் தாண்டி இயற்கையாக பெய்கின்ற மழைப்பொழிவு மூலமாகவே கிடைக்கிறது." என்று தெரிவித்தார்.

காவிரி நீர்ப் படுகையில் கர்நாடகா எல்லைக்குள்ளே இந்த இரு அணைகளைக் கடந்து வேறு பெரிய நீர்த்தேக்கங்கள் எதுவும் இல்லை.

தொடர்ந்து பேசிய சுந்தர்ராஜன், "இந்த நீரெல்லாம் மேகேதாட்டு வழியாகத் தான் தமிழ்நாட்டுக்குள் வருகிறது. அங்கே அணையைக் கட்டினால் இயற்கையாக கிடைத்துக்கொண்டிருந்த இந்த நீரும் தடைபட்டுப் போகும்." என்றும் கூறினார்.

இரு மாநில அரசுகளின் பதில்கள் என்ன?

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

இந்தத் திட்டம் தொடர்பாக விளக்கம் பெற கர்நாடக நீர்வளத் துறையை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

அத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கௌரவ் குப்தா கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தப்படும். இரு மாநில முதலமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறபோது இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்," என்று மட்டும் பதிலளித்தார்.

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பிபிசி தமிழிடம் பேசுகையில், "மேகேதாட்டு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் சமர்ப்பிக்க இருப்பதாகப்" பதிலளித்தார்.

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், Tamil Nadu Assembly

படக்குறிப்பு, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த்

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து பெற நீர்வளத் துறையை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால் அவர்களின் கருத்தை நேரடியாகப் பெற முடியவில்லை.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு பேசினார்.

"காவிரி நதி நீரைப் பகிர்வது மற்றும் கர்நாடகா அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தவெக அரசு உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது," என்று தெரிவித்தார்.

காவிரி நதி நீர் பங்கீடு சர்ச்சை என்ன?

மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா
படக்குறிப்பு, காவிரி நதி

கர்நாடகாவில் உருவாகும் காவிரி தமிழ்நாடு வழியாகப் பயணித்து வங்கக் கடலில் சங்கமிக்கிறது. வழியெங்கும் இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீராதாரமாக மட்டுமில்லாமல் இரு மாநில மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த நதியின் நீரைப் பகிர்ந்து கொள்வது தான் நூறாண்டுகளுக்கும் மேலாக இரு மாநிலங்களுக்கும் இடையே நீடிக்கும் பிரச்னையாக இருந்து வருகிறது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் அப்போதைய மதராஸ் மாகாணம் மற்றும் மைசூரு சமஸ்தானம் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தன.

1990-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு காவிரி நதியின் நீரைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தாலும் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி, கர்நாடகா மாநிலம் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீர் கொடுத்தாக வேண்டும்.

இந்த நீர் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது தமிழ்நாட்டின் குற்றச்சாட்டாக உள்ளது.

கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்தே காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பது கர்நாடகாவின் பதிலாக உள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு